Wednesday, August 3, 2016

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை
                                                     கோ.புண்ணியவான்

               காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.
               மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.
              மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின் மேல் பாறைச் சுமை கனத்து நீடித்தது. உள் உடல் நடுங்கியது. மனம் அமைதி பெறாமல் நிலைத்தது. கிளை நுனியில் பழுத்த பழம் காற்றில் ஆடுவதுபோல எந்நேரத்திலும் என் மனம் விழுந்து நசுங்கி சிதறிவிடக் கூடும்.
            “தீர்க்கமா முடிவெடுத்துதான அம்மாவ விட்டுட்டு வந்தோம். நாம் ரெண்டு பேரும் பல நாள்  பேசி முடிவெடுத்த ஒன்னு இது.. இப்போ ஏன் இந்த....?.” கார் புல்தரையிலிருந்து  மேலேறி தார் சாலையில் ஊர்ந்து வேகம் பிடித்தது.
              ஆமாம் முடிவெடுத்ததுதான். அப்போதுள்ள பிரச்னைகள் விஸ்வரூப மெடுத்து  அம்மாவை ஆதரவற்றோர் இல்லத்தில் விடத்தூண்டியது உண்மைதான். விடும் வரை ஒன்றும் நேரவில்லை எனக்கு. ஆனால் அது  நிஜத்தில் நடந்துவிட்ட பிறகே அதன் பிரதிபலன் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது. அம்மா  ஒவ்வொரு நாளும் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவள். ஆனால், அவள் வயிற்றில் பிறந்த ஒரே மகனை எப்போதாவது ஒருமுறைதான் பார்க்கப் போகிறாள் இனி. என் முகம் இனி நனவில் தோன்றும் பிம்பம் மட்டுமே அவளுக்கு!
          “பிள்ளைய போய்த் தூக்கணும். நான் இல்லாம் துடிச்சுப் போவான்,” என்றாள் மனைவி..
            நான் இழைத்தது பெருந்தவறு. திரும்பப் போய் அழைத்து வந்து விடலாமா? மனைவி கண்டிப்பாய் நிராகரிப்பாள். இந்த முடிவில் அவளின் பங்கு என்னைவிட இரட்டிப்பானது.
           மங்கிய விளக்கொளியில் அம்மா அறையில் அவள் மட்டுமே மரவட்டை போல சுருண்டு கிடப்பாள் எந்நேரமும். கைகால்கள் சூம்பி, உடல் இளைத்து, குரல் ஒடுங்கி, நடப்பது குறைந்து படுத்துக் கிடப்பதே கதையானது. அவள் அறையைக் கடக்கும் போதெல்லாம் திரும்பி ஒருக்கலித்துப் படுத்துக் கிடக்கும் அவள், ‘குமாரு...” என்பாள். நடையின் அதிர்வையும், கடக்கும் மெல்லிய நிழலையும் வைத்தே  இந்த ஒலியெழல். மனைவியும் கடந்து போவாள். ஆனால் அவளைக் கூப்பிட்டதில்லை. என் நிழல், என் அசைவு அவளுக்குள் அத்துப்படியான மனப் பதிவாகிப் போயிருக்கிறது.
          “பாத்து ஓட்டுப்பா....வேலவுட்டு வந்துட்டியா? போய் சாப்பிடு, கொஞ்ச நேர கால நீட்டிப் படு “ .என்று தினமும் அவள் ஓதும் வார்த்தைகள். என் முகம் பாராமலேயே இந்த கரிசனங்கள்.  பிரதி தினமும் அவள் கண்ணயர்ந்து தூங்கியிருக்க வாய்ப்பில்லை. நான் அறையைக் கடக்கும் பின்னிரவிலும் ‘ குமாரு...’ என்பாளே! காலன் முதலில் தூக்கத்தைத்தான் சாகடித்து விடுகிறான் முதலில், பின்னர்தான் நெடுந்தூக்கத்தை!  நடமாட்டத்தை நிறுத்தியதால் நினைவில் மட்டுமே அவளை இயங்கி  வைக்கிறான் போலும்.  சுழித்து சுழித்து ஓடும் நதியின் ஒழுக்கு போல நினைவுகளில் நிலைகொள்ளாமையில் அவள். பெருங்காட்டில் தன்னந்த் தனியாய் விடப்பட்டு வழி தெரியாமல், விழிபிதுங்கும் நிலையில் நான்.
           ஒருநாள் நான் மழையில் நனைந்து, ஆடை மாற்ற குளியலறைக்குள் விரைந்தேன். ‘குமாரு..” என்றவள். ஒடனே வெது வெதுன்னு சுடுதண்ணியில் குளிச்சிட்டு ஈரமில்லாம தலை தொவட்டிடு...ஈரம் நல்லா காயட்டும்,” என்றாள். நான் அதிர்ந்தேன். படுத்துக் கிடப்பவளுக்கு நான் அறையைக் கடப்பதும், அதுவும் ஈர உடலோடு கடப்பதையும் எப்படி அறிந்தாள்.  ஒடிந்து உதிரும் உடல் அந்திம காலம்...நினைவு தப்பல்... என சுய நினவு அகலல் என் எண்ணற்ற பின்வாங்கல்கள் இருந்தும் என் நிழல் அவளினுள் உறைந்தே கிடக்கிறது. ஆவளின் உள் உடலுக்குள், ஆழ் மனதுக்குள் என் உயிர் சதா துடித்தபடியே நிலைக்கிறது. அம்மா என்று கதறி அழவேண்டும் போலிருந்தது. என் கண்கள் ஈரம் படிய நான் நான் கட்டுப்படுத்த முயன்றேன்.
     “ஏன் பேசாம வறீங்க? அம்மாவ விடமும் நான் மட்டும் முடிவெடுக்கல நீங்களும்தான் ஒத்துக்கிட்டீங்க. ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். வேந்தன பேபி சிட்டிங்கல் விட்டுறோம்...அவங்க ஒண்டியா இருக்காங்க. நாம இல்லாத நேரத்துல ஒன்னு கெடக்க ஒன்னு நடந்திடக் கூடாதுன்னு... பயந்துதான அங்க கொண்டு போய் விட்டுட முடிவெடுத்தோம்.. இப்போ அத நெனச்சி என்ன புண்ணியம்?  வாய் விட்டுப் பேசுங்க .....உங்க மனம் சாந்தமடையும். இப்படிப் பேசாம வந்தா என்னா அர்த்தம்? நான் எப்படி உங்க மௌனத்த மொழி பெயர்க்கிறது.”
      என் மன அழுத்தமே என் மௌனத்தை அடி ஆழத்தில் கட்டமைத்திருக்கிறது.  அம்மாவை அங்கே விட்டு விட்டு வந்த குற்றமதான் , என் வாயை இறுக்க் கட்டிவிட்டிருக்கிறது .
      விடிகாலை வேளை. அம்மா வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். வாலியில் வறக்கோப்பியும், பழைய சோறும் சாய்பானையில் இருந்தது. பிரட்டில் பேர் கொட்டுதுவிட்டு, நேராக வேலைக் காட்டுக்குப் போகவேண்டும். நான் திடுக்கிட்டு எழுந்து அம்மாவிடம் ஓடினேன். அம்மா இன்னிக்கி பஸ்ஸுக்கு மாச காசு கட்டிடணும், இல்லாட்டா பஸ்ஸுல ஏத்த மாட்டேன்னு சொல்லிட்டாரு,” என்றேன்.
     “நான் மத்தியானம் வந்து வாங்கித் தரேன்னே.. வேலைக்கு நேரமாச்சே.. தாமசமானா, கங்காணி வாய்க்கு வந்தபடி திட்டித் தீப்பான்..” என்றாள்.
     “இல்லம்மா இன்னிக்கி பரீட்ச இருக்கு.. கண்டிப்பா போய் ஆகணும்.”
     “பரீட்சியா.....” என்று திடுக்கிட்டாள்.  எழதப்படிக்கத் தெரியாதவள். சொந்தப் பெயரைக்கூட ஏதோ கட்டாயத்துக்காக என்னிடம் கேட்டு எழுதி எழுதிப் பழகியவள். அந்த எழுத்துக்களின் ஓசைகூட அறியாதவள். மண் புழு போல வடிவம் மாறி நெளியும் அவள் எழுத்துகள். எழுத்தின் அனாவசிய சுழிப்புகளில் அவளின் கல்லாமை அடையாளமிடும். ஆனால் நான் படித்துத் தேறுவதில் சிரத்தையாக இருந்தாள்.
       தூக்கிய காண்டாவை கீழே வைத்து விட்டு, தாவணியைத் தேடி மேலே போட்டுக்கொண்டு..அந்த இருள் மண்டிய நேரத்தில் எங்கோ ஓடினாள். அவள் உருவம் சில அடிகளே தெரிந்து பின்னர் இருளின் அடர்த்தியில் மறைந்துவிட்டிருந்தது. அம்மாவுக்கு இருள் புதிதல்ல. அவள் வாழ்க்கையே இருளால் ஆனதுதான். என் மேலும் அந்த இருள் படர்ந்து விடக்கூடாது என்பதற்காக இருளுக்குள் ஓடுகிறாள். இருளுள்ளிருந்து எனக்கான வெளிச்சத்தைக் கொண்டு வர.
       பத்து இருபது நிமிட நேரம் கழித்து திரும்பி வந்தாள். கையில் ஒற்றை ஒற்றையாய்ப் பத்து வெள்ளியை உள்ளங்கையில் திணித்தாள். ”போய் நல்லபடியா பரீச்ச எழுது,” என்று சொல்லிவிட்டு. மீண்டும் பிரட்டுக்கு ஓடினாள்.
     “இந்த கருக்கல்ல எங்கமா ஓடிப்போய் வாங்கியாந்த?” என்றேன்.
     “ரெண்டு நாள்ள பிலாஞ்சா. போட்றுவான்.. கட்டிடலாம்,” என்றாள்.
     அவள் கடன் வாங்குவது முதல் முறையல்ல. நாணயமாய்த் திருப்பி அடைத்து விடுவதால், கேட்டவுடன் கடன் கொடுக்க ஆள் இருந்தது.
      கங்காணி காத்திருப்பான். அவன் கரிசமற்ற வார்த்தைகள் என் காதுகளைத் துளைத்தன.
      விடிந்து பள்ளிக்குக் கிளம்ப வாசல் வந்தபோது  ரத்ததால் பெருவிரல் அச்சு சிமிந்து தரையில் உறைந்து போயிருந்தது. என் காலைப் பார்த்தேன் காயம் என்னுடையதல்ல!
       அம்மா, வீட்டுக்கு வந்தவுடன் பார்த்தேன். தாவனியின் முனையைக் கிழித்து புகையிலையை வைத்துக் இடதுகால் பெருவிரலில் கட்டுப் போட்டிருந்தாள். கட்டிலிருந்து காய்ந்த குருதியும் கருகிய புகையிலையின் நிறமும் வெளியே விம்மித் தெரிந்தது. ரப்பர்க் காட்டு மண் விரல் இடுக்கிலும் சுற்றி கட்டப்பட்ட துணியிலும் ஒட்டியிருந்தது. ஈரம் பிசு பிசுத்து கழண்டு போகும் நிலையில் கட்டு.
   “வாம்மா ஆஸ்பத்திருக்குப் போலாம், சைக்கில்ல ஒக்காரு,” என்றேன்.
   “அது தானா சரியாப் போயிடும் குமாரு..”என்றாள். அன்றைக்கு அவளின் உடல் வலிமை அதனைத் தன்னிச்சையாக ஆற்றிவிடும் சக்தியைப் பெற்றிருந்தது.  இன்றைக்கு  நலிந்த நைந்துபோய் தன்னிச்சையாய் இயங்காமையின் நிலையில் நான் தவிக்க விட்டு வந்திருக்கிறேன். உள் மனம் ‘அம்மா’ என்று குமுறியது. உள்ளே இதயத்தின் நடுக்கம். என் விழிகள் பிர்க்ஞையற்றும், அசைவற்றும்  நிலைகுத்தியிருந்தது.
    என் மீது அவ்வப்போது பார்வையைத் திருப்பியவாறு சாலையில் முழு கவனம் செலுத்தினாள்.
     சாலையைப் பார்த்தவாறே..” வேலக்காரி வச்சுப் பாத்தாச்சுஸ அவள் போக்கு நல்லாலேன்னு  ரெண்டு வருஷம் தவண முடிஞ்சதோட  அனுப்பி விட்டுட்டோம். நாம் இல்லாத நேரத்துல அம்மாவ அடிக்கிறான்னு புகார் வந்த கையோட, இனி வேலக்காரி சவகாசமே வேணான்னு விட்டுட்டோம். அவங்களால தானா டோய்லட் போக முடியும், போட்டு சாப்பிட முடியும் நெல இருந்தவரைக்கும் பிரச்னையில்ல. ஆனால் சுய நெனவு தப்பிப் போனதானாலதான் இந்த முடிவுக்கு வந்தோம். அவங்களுக்கு நம்ம நினைவுதான் மெல்ல மெல்ல இல்லாமப் போச்சே! இப்போ ஏன் கலங்கறீங்க?”
      என்னால் மறுவினையாற்ற முடியவில்லை. அவள் சொல்வதில் உண்மை இருந்தது. ஆனால் இது நடந்துவிட்ட இந்த கணத்திலிருந்துதான் துயரின் வடிவம்  விஸ்வருபமெடுத்திருந்தது. அதுவரை எடுத்த முடிவு சரியென்று சொன்ன மனம், விட்டு விட்டு வந்த தருணத்திலிருந்து உள்நெஞ்சு அடித்துக் கொள்கிறது. மனதறிந்து நான் செய்த செய்கையால் விடுபட முடியாத வேலிச் சிறைக்குள் சிக்கிய  வேதனையைச் சுவீகரித்துத் துடித்தேன்.
    “பேசாம வரதீங்க..நீங்க எப்பியும் இப்படி இருந்ததில்ல! பேசுங்க பிலீஸ். நாம செஞ்ச பெரிய தப்பு இவ்ளோ பெரிய வீட வாங்குனது. ரெண்டு பேருக்கும் கார் வாங்கினது. வீடு நெறைய எல்லாமே புதுசா சாமான் வாங்கிப் போட்டது. வீட்டுக்கும் ரெண்டு காருக்கான  கடன பேங்குல வெட்டிக்கிறான். மிஞ்சுன வருவாய்ல குடும்ப நடத்த வேண்டியிருக்கு. நான் வேலை விட்டு நின்னுட்டா வருமானம் கம்மியாகி கடன் தொல்ல அதிகமாயிடும். கொஞ்சம் வருஷத்துக்கு நான் வேலைக்குப் போயே ஆகணும்ங்கிற கட்டாயத்துலயும் அம்மாவ அங்க விடணும் ஆகிப்போச்சு..இதுல யாரு மேல தப்பு இருக்கு? நீங்க பேசாம வர்ரது என்ன உறுத்துது. பேசுங்க..ஒங்க வருத்தம் கொஞ்சம் தணியும்ஸபிலீஸ்.”
     எனக்கும் பேசாமல் இருக்கவே தோணியது. என் மீது எனக்கே உண்டான சினமும், என் பிற்போக்குத்தனமும் பேசாமல் இருக்கச் செய்தது. மெல்ல மனம் சாந்தமாகும் என்று நினைத்தேன். ஆனால் அதன் அலைபாய்தல் புகை போல மேலெழுந்தபடியே  இருக்கிறது.
     நான் சைக்கிளில் பள்ளிக்குப் போய்விட்டுத் திரும்புவது வழக்கம். மதியம் இரண்டுக்கு வீட்டை அடைவேன். அம்மா ஐம்பத்தைந்தில்  ஓய்வுபெற்று ஒரு சீனர் செம்பனைக் காட்டுக்கு வேலைக்குப் போக திட்டமிட்டாள். “இவ்ளோ கால ஒழைச்சது  போதும் வீட்ல இரும்மா,” என்றேன்.
    “நீ மேக்கொண்டு படிக்கணுமே.. நீ வேலைக்காவதை நான் கண்ணாறப் பாக்கணும், பெறவு நான் நின்னுடுவேன்” என்று எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அந்த வயதிலும் மண்வெட்டியைச் சுமந்து கொண்டு நடந்தே போய் திரும்ப நடந்தே வருவாள், அடர்த்தியான பனி கொட்டும் விடிகாலையிலும் தார் இளகும் மதியத்திலும்.
     நான் பள்ளி முடிந்து வீடு வந்த களைப்பு ஒரு பக்கம், அம்மா நடந்து வருவாளே என்ற கவலை ஒரு பக்கம். மனம் கேட்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவள் திரும்பும் திசையை நோக்கி மிதித்துக் கிளம்பினேன். நான் கார் ஸ்டெரிங்கை பிடிப்பதற்காக, அவள் மண்வெட்டி பிடித்தே வாழ்க்கையின் விளிம்புவரை நீடித்திருக்கிறாள்.
     ,மூன்று கிலோ மிட்டர் போயிருப்பேன். தணல் தெறிக்கும் உஷ்ணத்தில்  அம்மா மண்வெட்டியைச் சுமந்து நடந்து வந்துகொண்டிருந்தாள். தார் சாலையில் அனல் என் முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வெய்யிலைக் இமைகளைக் குறுக்கிப் பார்க்க முடிந்தது. விடாமல் மேனியில் பாய்ந்து பரவும் சூடு வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் நான் தரையில் கால்படாமல் சைக்கிளைச் செலுத்திக் கொண்டிருந்தேன். சைக்கிளை நிறுத்தி ,”ஏறிக்கம்மா” என்றேன்.
      அம்மா என்னைக் கண்டதும், “ஏன்டா இந்த வேகாத வெய்யில்ல வர. இப்பத்தான் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த. நான் செத்த நேரத்துல வந்துட மாட்டானா? ஒனக்கு ஏன் இந்த செரமம்?” என்றாள். அம்மா தணலின் மழையில் நனைந்திருந்தாள். முகம் கருத்து தோள் சுருங்கி இருந்தாள், சைக்கிளில் ஏறி அமர்ந்தாள். அவள் மூச்சின் சூடு என் முதுகில் பாய்ந்தது.
     வீட்டுக்குப் போனால் அவள் இருந்த அறை காலியாகக் கிடக்கும். ‘குமாரு......” என்ற மெலிந்து உடைந்த குரல் ஒலிக்காது. பாத்து கார ஓட்டு, வந்துட்டியா? சாப்பிட்டியா? எனும் குரல் ஒலிப்பது நின்றிருக்கும்...என்னுடைய நிழலின் ஓசையற்ற அசைவை, மொசைத் தரையில் சப்தமற்ற என் காலடியில் துணுக்குற்று உடனடியாகக் கவனமுறும் அவள், நானில்லாமல் எப்படி இருக்கப்போகிறாள்? என் காலடி ஓசையை, என் நிழலை நான் எப்படி அங்கே விட்டுவிட்டு வரமுடியும்? நினைவுகள் தப்பிக் கிடந்தாலும், அவள் மூளையில் நான் நிரந்தரமாய்ப் நடமாடிக் கொண்டிக்கிறேன். இரை தேடும் குருவியைப்போல அது என்னைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும்.
     நான், “அம்மா.. “ என்று கூச்சலிட்டுக் குமுறி பீறிட்டேன். மனைவி திகிலடைந்து காரை சடாரென ஓரங்கட்டி நிறுத்தினாள். “காரைத் திருப்பு..தப்பு பண்ணிட்டேன்.” என்று கதறி அழுதேன்.
    “வேந்தன் காத்துக்கிட்டிருப்பாங்க...” என்றாள்.
    “நீ மொதல்ல அம்மாகிட்ட போ!” என்று உக்கிரமாகக் கத்தினேன்.
   “ உங்களுக்கென்ன பைத்தியமா? அம்மாவ யாரு பாத்துக்கிறது?” அவங்க தனியா கெடந்து செத்துப் போகாவா? என்றாள்.
    “நான் இல்லாத நேரத்திலும், என் நிழல் படிந்து நிறைந்த எண்ணத்தில், என் காலடியின் நிசப்தம் ஒலி எழுப்பி அவளை கவனப்படுத்தும் நினைவில்., என் அதிர்வுகள் அவள் மனதில் அலையும் வீட்டில், என் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் அவள் செவிப்புலனில், நான் இருப்பதாய் நினைக்கும் அந்த வீட்டில் அவள் அவள் உயிர் பிரியட்டும் சுதா... நான் இல்லாத அங்கே வேண்டாம் சுதா...காரைத் திருப்பு.” என்றேன் குரலை உயர்த்தி.