Friday, July 8, 2016

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்


ஹாட் யாய் நகரத்தை அடைய பசியும் பற்றிக்கொண்டது.

               இது பினாங்கில் உள்ளதைவிடப் பத்து மடங்கு பெரிய சயன புத்தர் சிலை


ரோபின்சன்' பேரங்காடிக்குப் போனால் அங்கே மலேசியாவில் கிடைப்பது போல சிக்கன் ரைஸ் கிடைக்குமென்றார். ஆனால் வழியை மறந்துவிட்டிருந்தார். ரேய்லவே ஸ்டேசன் ரோடு வழியாகச் சென்றால் ரோபின்சனைப் பிடித்துவிடலாம் என்றார். நகரம் நெரிசலில் திணறியது. நாளை மறுநாள் ஹரிராயா கொண்டாட்டப் பெருநாள். ஹாட்யாயும் சொங்க்லாவும், பட்டாணியும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நிரம்பிய ஊர். எனவே நகரம் திணறிக்கொண்டிருந்தது. அலைந்து அலைந்து ரேய்ல்வேய் ஸ்டேசன் சாலையைக் கண்டுபிடித்து ரோபின்சனை அடைந்தோம். மதியம் மணி 3.00. தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். ரோபின்சனின் கார் நிறுத்துமிடத்தில் இலவசமாகக் காரை நிறுத்த்லாம். மற்ற இடங்களில் கட்டணச் சிட்டை இல்லாமல் நிறுத்தினால் கிளேம்பிங்தான். இரண்டு முறை அலைந்து ஒரு கார் வெளியானது இடம் கிடைத்தது. ரோபின்சன் கீழ்த் தளத்தில் உணவு சிற்றங்காடிகள் இருந்தன. கட்டணம் கட்டி டோக்கன் வாங்கிக்கொண்டு உணவை வாங்கினேன். சுவை நம் நாட்டு சிக்கன் ரைஸ் போல அல்ல. கொஞ்சம் கவிச்சி வாடை வீசியது. பசிக்கும் கவிச்சிக்கும் சம்பந்தம் உண்டா தோழர்களே?

பியரின் விலை மிக மலிவு. இங்கே அரை லிட்டர் டின் ஆறு ரிங்கிட். அங்கே மூன்றரை ரிங்கிட்தான். வெயிலுக்கு இதமாக இருந்தது.

"வாங்க உங்களை முக்கியமான இடதுக்கு கொண்டு காட்டுகிறேன்," என்றார்.
காரை வேறெங்கும் நிறுத்தமுடியாது. அங்கே இருப்பதே பாதுகாப்பு. எனவே நாங்கள் நடந்தே சென்றோம். ரொம்ப தூரமில்லை. அதுவும் ஒரு தினசரி சந்தைதான். அவர் கொண்டு சென்று காட்டிய இடம் பலான பலான உபயோகத்துக்குப் பாவிக்கும் பொருட்கள். செயற்கை ஆண் குறி, செயற்கை பெண் குறி. வீர்ய மருந்து வகைகள். போலி வயாக்ரா, நீல பட கேசட்டுகள் இன்னும் என்னென்ன எளவெல்லாம் விற்கிறார்கள்.  ஆண்களதான் நம்மை கூப்பிட்டு விளக்கி வனிகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் பெண்களும் ஈடான எண்ணிக்கையில் கூச்சமே இல்லாமல் பலான பலான பொருட்களை விற்கிறார்கள். அந்த இடம் முழுதுமே அதற்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். பார்த்ததோடு சரி. அது பெரிய ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. ஆனால் பெண்களும் அவ்வியாபாரத்தில் ஈடுபடுவது அந்நாட்டின் ஏழ்மையைப் பறை சாற்றுவதாக இருந்தது. வயிறு எல்லாருக்கும் உண்டுதான். ஆனால் பசிக்கும் மனிதர்கள் வயிறுக:ளுக்காகத்தான் இந்த கீழ்மை வேலையெல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. இருந்தும குடிமக்களின் ஏழ்மையைப் போக்க வரி வசூலிக்கிறோம் என்று ஜி எஸ் டி யோ, சாலை டோல் கட்டணமோ பிடுங்குவதில்லை.அங்கிருந்து மீண்டும் சொங்க்லாக் பயணம்.மாலையாகிவிட்டால்  ரூம் புக்கிங் கேன்சலாக வாய்ப்புண்டு. பெருநாள் சமயம் என்றார். எனவே சுணங்காமல் புறப்பட்டோம். வெயில் கொலுத்திகொண்டிருந்தது.

நெடுக்க கடல் போல விரிந்தி நிறைந்திருந்தது ஏரிகள்.  இது கடலா ஏரியா என்ற சந்தேகத்தில் கேட்டேன். ஏரி என்றார். அது மேடான் ஏரியைவிடப் பெரியது.சுவிட்சர்லாந்தில் பார்த்த ஏரிகள் நினைவுக்கு வந்ததன. ஆனால் சிவிட்சர் லாந்தின் ஏரிகளின் கரை யோரங்களில் உல்லாசம் கொப்பளித்துக் கொண்டிருந்தன.    ஆறுகளையும் ஏரிகளையும்   அற்புதங்களாக, சுவர்க்க பூமியாக மாற்று வித்தை தெரிந்தவர்கள். இங்கே அப்படியில்லை. அவற்றை  இன்னும் பெரிய சுற்றுலாத்தளமாக ஆக்க முடியும். பெரும்பாலும் மீன்பிடி கிராமங்களே உருவாகி வந்திருக்கின்றன.
.

அரை மணி நேரப் பயணம்தான். நெடுக்க சுற்றுலா தளங்கள் இருந்தன. அவற்றில் மிதக்கும் சந்தையைப் பார்க்க ஆவல் தூண்டியது. மெக்கோங்க் நதிக் கரைகளில் இந்த மிதக்கும் சந்தை பெரும் கவர்ச்சியான சுற்றுலாத் தளம். படகுகளில் இருந்தபடியே விதம் விதமான வணிகம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சொங்லாவிலும் அதனைப் பார்க்கமுடியும் என்றால் மகிழ்ச்சிதான். சரி வரும்போது பார்த்துக்கொள்ளாலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. 
அசல் கடல்பெண் சிலை

அவர் ஏற்பாடு செய்த விடுதி 4 நட்சத்திர விடுதி. விருந்தினர் அறை கப்பல் போல விசாலமாக இருந்தது. திரும்பும் இடமெல்லாம் கடல் பரந்து கிடந்தது. மெர்மேய்ட் என்று சொல்லக் கூடிய கடல்கன்னி சிலை விருந்தினர் அறையிலிருந்து பார்க்கலாம். கடல்பெண் அங்கே கறைக்கு  வந்தாள் என்ற தொன்மக் கதையொன்று உண்டு. இப்போதும் கடல்பெண்கள் கடற்கறைக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்- கிராபிக்கில். ஹாட்யாய் சொங்க்லாக் முழுவதும் கடல்கன்னி பொம்மைகள் விதம் விதமாக விற்பனைக்குக் கிடந்தன்.

விடுதி அறையை மூன்று இரவுகளுக்கு புக் செய்து வைத்திருந்தார். அவருக்கு வீட்டை விட்டு வெளியே கிளம்பி ஊர் சுற்றுவது மிகப் பிடித்தமான விஷயம்.  தனி ஆள். ஆளற்ற வீடு. சூன்ய உலகம் அவருடையது. மூன்று நாளைக்கு

முன்பணம் கட்டுங்கள் என்று அடம்பிடித்தாள். நான் இருண்டு நாளைக்குப் போதும் என்றே  ஒற்றைக் காலில் நின்றேன். இரண்டு நாளைக்கு நீங்கள் தங்களாம். ஆனால் மூன்று நாளைக்குப் பணம் கட்டவேண்டும் என்றாள் பணிப்பெண். வேறு விடுதிக்குப் போக முடியாது. எல்லாம் நிறைந்திருக்கும் என்ற பயம் வேறு. நான் கேட்டேன் எந்த விடுதியில் இப்படியான சட்டம் அமலில் உண்டு என்று. நான் இரண்டு நாட்களுக்குத் தான் தங்குவேன் என்றேன். பின்னர் சற்று இறங்கிவந்து நான் மேலிடத்தில் பேசுகிறேன் என்று பேசி இரண்டு நாடக்ளுக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டாள்.

விடுதி விருந்தினர் அறையில் ஆள் நடமாட்டமே குறைந்து இருந்தது. சொங்லாக் விடுதிகள் எப்போதுமே நிறைந்திருக்கும். பெருநாள் காலங்களில் இன்னும் மோசமாக இருக்கும். ஆனால் அன்று அப்படியில்லை. வெளியே கார்களும் அதிகம் இல்லை. நம்மிடம் பணம் பிடுங்கத்தான் அவள் நாடகமாடியிருக்கிறாள். கொஞ்சம் மிரட்டவே சமரசத்துக்கு வந்திருக்கிறாள்.
மற்ற விடுதிகளும் சுற்றுப் பயணிகள் குறைவாக இருப்பதான அடையாளமே தென்பட்டது. வெறிச்சோடிக் கிடந்தது விடுதி வளாகம். கடலின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏன் இந்த அமைதி? என்ன காரணம்?

முதல் முக்கியக் காரணம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சொங்லாக் ஹட்யாய் நகரங்கள் பாதித்திருப்பதே . ஹட்யாயில்  குண்டு வெடிப்புக்கு சில வருடங்களுக்கு முன்னர் பாதிக்ககப்பட்ட  ஒரு விடுதியைப் பார்த்தோம். சுஙகச் சாவடியில் லஞ்சம் பெறுவதிலேயே குறியாய் இருந்தால் தீரவாதிகளின் நுழைவை எப்படித் தடுப்பது?

தொடரும்.....


Thursday, July 7, 2016

2.தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

2. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்.

டானோக்கில் பானுவுக்காக காத்திருந்த வேளையில் கழிப்பிடம் தேடி அலைந்தேன். பொதுக் கழிப்பறையைக் காணவில்லை. அப்படியே இருந்தாலும் அது அழையா விருந்தாளியாய் நம்மை விரட்டும். ஒரு விடுதி இருந்தது . உள்ளே நுழைந்து பாத்ரோம்' என்றேன் . அவள் வலது பக்கம் கையை காட்டினாள். படியேறியதும் சீருடை அணிந்த பெண்கள் பலர் லோபியின் சோபாவில் அமர்ந்தும் படுத்தும் கிடந்தனர். என்னைப் பார்த்ததும் எழுந்து " கம் கம்" என்று அன்பொழுக அழைத்தார்கள். நான் அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டேன். இளம் வயதில் என் நண்பனை கொனோரியா நோயில் பார்த்த அச்சம் என்னை  விரட்டியபடியே இருக்கிறது)

"ஏன் கழிப்பறை போகவில்லை?" பானு கேட்டார். அங்கே பெண்கள் சீருடையில் அமர்ந்து என்னை அழைத்தார்கள் என்றேன். எனக்கு ஒவ்வவில்லை திரும்பிவிட்டேன் என்றேன்.

தாய்லாந்தில் இதெல்லாம் சகஜம்யா? அவளுங்க அவளுங்க வேலைய செய்றாளுங்க, நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு வரவேண்டியதுதானே என்றார்.

"என்னால் அப்படி முடியாது," என்றேன். அவளுங்க ஏன் சீருடை போட்டிருக்காளுங்க? சீருடை அணிவது ஒழுங்கின் குறியீடல்லாவா? என்றேன்.

சீருடை அணிந்தவனெல்லாம் ஒழுங்காவா இருக்காணுங்க?  என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

ஓ அதுவும் ஒருவகை வி......ம் தானோ? என்றேன்.

"யெஸ்யு  ஆர் கரெக்ட்," என்றார்.


இருநாடுகளின் எல்லை டானோட்டிலிருந்து, சாலை விரிந்து வாகனம் செல்வதற்குப் போதுமான வசதியை அளித்திருந்தது. புயல் போல பறக்கத் தூண்டும் அகன்ற சாலைதான். ஆனால் எல்லா வாகனங்களும் 80/90 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பயணப் பட்டுக்கொண்டிருந்தன.பானு அடிக்கடி தாய்லாந்துக்குக் காரில் செல்பவர். அவரிடம் கொஞ்சம் வேகமாகப் ஓட்டுங்கள் என்றேன். இங்கே இதுதான் ஆகக் கூடுதல் வேகக் கட்டுப்பாடு என்றார். சாலையின் விரிசல் நம்மைச் சவாலுக்கு அழைக்கிறது. மலேசிய மனநிலை அது. வேகமாக செலுத்திய பழக்க தோசம்  அது. 110ல் ஓடலாம் என்ற விதியை வைத்துவிட்டு,  வேகத்தைக் கொஞ்சம் தாண்டினால், 2 வார்த்தில் சமன் வந்து சேரும். நாம் சமநிலை குலைந்துவிடுவோம்.

 இது அந்நிய மண். வீணான வில்லங்கத்தில் முடிந்தால் இரண்டு ஓய்வு நாட்களைப் பலி கொடுக்க நேரலாம். மொழி மிகப்பெரிய தடைச் சுவர். ஒரு பயலுக்கு ஆங்கிலம் தெரியாது. தாய் பாசையில்தான் பேசுவான். சாலை விதி மீறலை எதிர்கொண்டது மட்டுமல்ல, அவன் மொழியே நம்மை இம்சித்துக் கொன்றுவிடும்.

இன்னொரு வசதி இங்கே டோல் கட்டணம் கிடையாது. தாய்லாந்து முழுவதிலுமே. மலேசியாவில் டோல் கட்டணத்தை ஏன் அதிகரிக்கிறீர்கள் என்று கூச்சலிட்டால், "உங்களுக்குத்தான் பழைய சலை இருக்கிறதே என்று ஒரு புத்திசாலித் தனமான ஆலோசனை சொல்வார்கள். கங்காரிலிருந்து ஜோகூர் பாரு வரை பழைய சாலையைப் பயன்படுத்தச் சொல்லும் அவர்களின்  அரிய ஆலோசனைக்கு, பின்னர்,"  ஏன் நெடுஞ்சலை போட்டீர்கள் என்று கேட்க வேண்டும்?"  அது நாட்டு முன்னேற்றத்துக்கு என்பார்கள். அவர்களுக்கு நாடு வேறு குடிமக்கள் வேறாகிவிட்டார்கள்.சமீபத்தில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர்  என் சம்பளத்தை அரசாங்கதான் கொடுக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இல்லை என்று சொல்லி தன் அறிவின் ஆழத்தைப் பொதுவில் வைத்து கும்மாங்குத்து வாங்கிக் கொண்டார். எங்களுக்கு ஒரு வழி சொலுன்னு கேட்டா ..மேலும் வலியைக் கொடுக்கிறியே ஏன்? பாரதி இவர்களுக்காகவே பாடினான்... என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்...என்று.

சரி பயணத்துக்கு வருவோம்.

பானு மிகக் கவனமான கார் ஓட்டி. நான் பையில் என் லைசன்ஸை வைத்திருந்தேன். சும்மா படம் காட்ட. நான் ஓட்டப் போவதில்லை என்று கிளம்புவதற்கு முன்னமேயே முடிவெடுத்திருந்தேன். மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு விதியையாவது மீறி விடுவேன். என் மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்தால். "சிக்னல் போடுங்க. பிரேக் போடுங்க.. நாய் போவுது பாருங்க, இப்போ தாண்டாதிங்க," என்று கட்டளைப் பிறப்பித்துக் கொண்டே இருப்பாள். கட்டளைகளைக் கேட்டுக் கேட்டு அவள் இல்லாமல் செலுத்தும்போது கட்டளைப் பிறப்பிக்க ஆள் இல்ல அனாதை நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. பழக்க தோசம்தான்.  பானு மிகக் கறாரான பேர்விழி. முதலில் என் காரை எடுப்பதாகத்தான முடிவில்தான் இருந்தோம். அங்கே டயர்களைப் புதிதாக மாற்றினால் 40 விகிதம் வரை விலை மலிவு என்று மகன் சொன்னான். ஆனால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கிறது 4 நாட்கள் அந்நாட்டில் தங்கி வரவேண்டும். இரண்டாவது, காரின் அசல் உரிமைப் பத்திரம் கையோடு கொண்டு செல்லவேண்டும். உரிமைப் பத்திரம் மே வங்கியில் கடனில் சிறைபட்டிருந்தது. அதனைப் பெற்றுவிடலாம் , ஆனால் 4 நாட்கள் தங்கி வரவேண்டும் என்ற விதிக்கு தான் பின்வாங்க வேண்டியிருந்தது. இரண்டு நாட்களே போதும், மிஞ்சிப் போனால் மூன்று நாட்கள் தங்கலாம். அதற்குமேல் தாங்காது. அந்த ஊர் உணவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வூரின் தொம்யாமை சகிக்க முடியாது. என்றாலும்  . நீங்கள் தொம்யாமை நிராகரித்தாலும் பிற உணவு  வகைகளில் அதன் சாயல் இருந்துவிடும். புளிப்போடு சேர்ந்துகொண்ட கொஞ்சம் இனிப்பு.  அது தேசிய சுவை.

சில கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு என் காரையே எடுத்து வருகிறேன் என்றார். என் கார் டயர்கள் நீண்ட பயணத்துக்குச் சரி வராது என்று அவரே நிராகரித்தார். லைசன்ஸைக் கொண்டு வந்திருக்கிறீர்களா என்றார். ஆமாம் என்றேன். ஆனால் அவர் காரை ஓட்டப்போவதில்ல என்று முடிவை  என் ரகசியமாகவே  வைத்திருந்தேன். ஒரு சிறிய சாலை விதி மீறல் நடந்தாலும் ஊசி மிளகாய் கடித்துவிட்டது போல சினம் கொள்வார். எதற்கு வம்பு? அவரோடு ஐந்து வருடமான நட்பின் பிரதிபலன் அது. அவர் கோபம் நியாமாகத்தான் இருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்தும் தன்மைதான் விவாதத்திற்குரியது.  நான் அவரோடு பயணிக்க உடன் பட்டதற்கு மூன்று  காரணங்கள் சொல்வேன். ஒன்று மிகச் சரளமாக ஆங்கிலம் பேசுவார். முன்னால் ஆங்கிலப் பேராசிரியர். நான் என் ஆங்கிலத்தை பள் பளக்கச் செய்ய  வாய்ப்பு ஒன்று. நெடுக்க ஆங்கிலம்தான், தவறியும் தமிழ் வராது. மலையாளம் வரும். எனக்கு வராது. இரண்டாவது  சோசியலிசம் பேசுவார். நாம் நூலில் கற்பதை விட ஒரு சராசரி மனிதனின் சோசியலிச நடைமுறை வழக்கம் எப்படியுள்ளது என்று ஆழமாக அறிந்து கொள்ளலாம். ஒரு படைப்பாளனுக்கு சோசியலிசம் ஆழமாகத் தெரிந்தாக வேண்டும். அதுதான் விளிம்பு நிலை மக்களுக்காக்  குரல் கொடுக்கும் எழுத்து  அரசியல் முறையைக் கற்றுத் தரும்.  மூன்றாவது முக்கியமானது. என் சகிப்புத் தன்மையை வளர்த்து கொள்ள.

ஐந்து ஆண்டுகளாயும் சகிப்புத் தன்மை வளரவில்லையா என்று கேட்கலாம். நமக்குள் உடன் பிறப்பாய் இருக்கும் அகந்தை அதற்கு எளிதில் வழிவிடாது.

நான்கு பேர் கிளம்புவதாகத் முன்திட்டம். ஆனால் இருவர் பயணய்த்திலிருந்து கழட்டிக் கொண்டனர்.
பயணத்தின் போது அவர் இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குறைபட்டுக்கொண்டே வந்தார். "கடைசி நேரத்தில் இப்படிச் செய்யக் கூடாது,"  என்று சினந்தார்.

நான் சொன்னேன். "அதற்கு யார் காரணம் தெரியுமா?" என்றேன். சாலையிலுருந்து கண்களை எடுத்துவிட்டு ஒரு கணம் என்னைப் பார்த்தார்.
நான்," நீங்கள்தான்," என்றேன். அவருடைய் விழிகள் விரிவதைப் பார்த்தேன்.
நீங்கள் நேரடியாகப் பேசக் கூடியவர். உங்களை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை அதனால் என்றேன். சகிப்புத் தன்மையை நான் மட்டுமே வளர்த்துக் கொண்டால் போதுமா? அவருக்கு...?

"யெஸ் ஐ எம் அவுட் ஸ்போக்கன்," என்று ஒத்துக் கொண்டார்.

ஜனநாயக நாட்டில் சோசியலிஸ்ட்டுகள் ஒத்துப் போக முடியாது. இரண்டுமே எதிரெதிர் முனை.குறிப்பாக ஜனநாயம் பணநாயகமாக பரிணமித்த பிறகு சோசியலிசத்துக்கு இடமற்றுப் போகும். இந்நாட்டில் சோசியலிஸ் கட்சி இருக்கிறது. ஒரே ஒரு நாடாளுமன்ற சீட்தான் அதற்குக் கிடைத்திருக்கிறது- சுஙை சிப்புட். அதுவும் எதிர்க் கட்சியோடு இணைந்திருந்ததால். தமிழர்கள் கிட்டதட்ட அனைவருமே ஜனநாயக மனநிலை கொண்டவர்கள் அவர்கள் கொள்கையோடு சோசியலிஸ்ட் மோதி மாறறிவிட முடியாது. எங்கள் நடைப்பயிற்சியில் இக்காரணத்தாலேயே நண்பர்களிடையே விரிசல் உண்டாகும். அவர் அரசியல் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரும் பிறருக்கு வழி கொடுக்க மாட்டார்.  அதனால் முடிந்தவரை உரையாடலில் அரசியல் நுழையாமல் கவனமாக இருப்போம். மலேசிய அரசியலைப் பேச்சில் கலந்துவிடாமல் இருக்க அது  உப்பு சப்பற்றதா என்ன?

ஹாட்யாயை நெருங்கிக் கொண்டிருந்தோம். பெரும் பட்டண  நுழைவாசல் தெரியத் தொடங்கியது. மூலை முடுக்கெல்லாம் தாய் மன்னரின் பதாகைகள். பள்ளியில், அரசு கட்டடங்களில், புத்தர் ஆலயங்களில், சாலை முடுக்குகளில் அங்கெங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருந்தார். தாய் மன்னர் பூமிபால் அங்கே மாபெரும் ஆளுமை. கடவுளுக்கு நிகரானவர்.  நாட்டு ஆட்சியின் கடைசியான தீர்க்கமான சொல் அவருடையதுதான். மக்கள் நலனை முன்வைக்கும் தீர்ப்பாகும். நியாயமானதும் கூட.

தொடரும்....


Wednesday, July 6, 2016

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

             என் மனைவி தமிழ் நாட்டு சுற்றுப் பயணத்துக்கு அனுப்பியிருந்தேன். எனக்கு சேலை கடையென்றால் அலர்ஜி. இரண்டு மூன்று நாட்கள் முழுக்க கால்கடுக்க சேலைக்கடையிலும் , கடைத்தெருவில் அலைவதை நினைத்தாலே கால்கள் கடுக்கத் தொடங்கிவிடும்.
மகள் குடும்பத்தோடு அவள் ஜூலை 29ல் போய்விட்டிருந்தாள். கிட்டதட்ட 11 நாட்களை எப்படிக் கழிப்பது என்ற பிரச்னை. நீண்ட நாட்களாவே பானு விடுமுறையைக் கழிக்க சொங்க்லாக்-தாய்லாந்து போகலாம் என்று அழைத்துக் கொண்டிருந்தார். நான் நாலைந்து முறை பார்த்த  ஊர்தான். மிகுந்த ஆரவ்மில்லை. காரில் போய்விட்டு வருவதற்கு உசிதாமான இடம். இரண்டரை மணி நேரப் பயணம்தான். எனக்கும் போரடித்துக் கொண்டிருந்தது. சரியென்று பானுவோடு கிளம்பிவிட்டேன்.
மனைவி இல்லாத வேளையில் பானுவோடா? அதுவும் தாய்லாந்துக்கா? என்ற உங்கள் எண்ணம் கோணாலாவது தெரிகிறது. பானு என் நடைப் பயிற்சி நண்பர். ஆடவர். பானு  நாயர். போதுமா?

2 ஜூலை காலை 7.30க்கெல்லாம் என்னை என் வீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார். மணி 10 வாக்கில் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையை அடைந்தோம். சனிக்கிழமையாதலால் ' உல்லாச விரும்பிகள்' எல்லைச் சாவடியை அடைத்துக் கொண்டு நின்றிருந்தனர். பானு கொஞ்சம் எரிச்சலடைய ஆரம்பித்தார். காலை ஆறரைக்குக் கிளம்பியிருக்க வேண்டும் என்றார். நான்தான் தமதமாக்கினேன் என்பது போன்ற உடல் மொழி. சுங்கச்
சாவடியின் நான்கைந்து  நீண்ட வரிசையில்  நின்றிருந்தார்கள் .  இதனை 'சாவடி' என்று சொல்வதன் உட்பொருள் புரிய காத்திருப்பவர்கள் மட்டுமே விளங்கும். நம் பாக்கெட்டைக் கொள்ளையடிக்கும் டோல் கட்டணம் கூட நம்மைச் சாவடி அடிப்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஆளும் மலாய்க்காரக் கட்சிக்கே  நம் டோல் கட்டணம் அனைத்தையும் தாரை வார்ப்பது  பயண மக்களின் தலைவிதி. குடி மக்களை முடி மக்களாக்கிய  பெருந்தன்மை உடையவர்கள் நாம். முடிமக்கள் இப்போது 'குடி ' மக்களாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் வெளி நாட்டுக்குச் சென்றால். நல்லாருக்கட்டும்.... நல்லாருக்கட்டும். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது,

 நாங்கள் மனிதர்களை
 மந்திரிகளாக்கினோம்
 மந்திரிகளைத்தான்
மனிதர்களாக்க முடியவில்லை.

சரி விடுங்க.

"இங்க பாஸ்போர்ட் பரிசோதனை. அந்தப் பக்கமாய் இருக்கும் சாவடி தாய்லாந்து உள்ளே பயணமாகப் போகும் கார் பரிசோதனை " என்றார் பானு அடுத்த சாவடியைக் காட்டி.  அப்படின்னா இரண்டு முறை சாவடி இருக்கிறது! அங்கேயும் மலைப்பாம்பு போல வரிசை வால் நீண்டிருந்தது. எனக்குப் பொறுமை கொள்ளவில்லை. ஒன்றரை மணி நேரம் வரிசை வான்கோழியை விழுங்கிய மலைப் பாம்புபோல மெல்ல நெளிந்துகொண்டிருந்தது. மூன்று நான்கு சாவடிகள் மூடப்பட்டிருந்தன.

 "பாஸ்போர்ட்டின் உள்ளே ஒரு வெள்ளி மலேசிய ரிங்கிட்டை வைத்து விடு," என்றார் பானு . நான் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஆமாம் லஞ்சம்தான் என்றார். அது தாய்லாந்து சாவடி. குத்து மதிப்பாய் ஒரு ஆயிரம் பேர் கடந்தால் 1000 ரிங்கிட் ஆயிற்று. யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. அது கிட்டதட்ட கட்டாயமாக்கப்பட்டு பழக்கத்துக்கு வந்துவிட்ட ஊழல்களில் ஒன்று. ஒரு ரிங்கிட் ஒரு பயணிக்குப் பெரிய பிரச்னை இல்லைதான். ஆனால் பெறுநரை கொள்ளைக் காரகளாக்கி பணக்காரார்களாக்கி விடுவதில் நமக்குள்ள  பெருந்தன்மைதான் காரணம். பெறுபவன் சொரணையே இல்லாத முகம் வைத்திருப்பதுதான் அங்கீகரிக்கப் பட்ட அறவுணர்ச்சியாகிவிட்டது. நமக்கு ஒரு ரிங்கிட் லஞ்சம் கொடுக்கவே கை நடுங்குகிறது!
"பரவால்ல ஒரு ரிங்கிட் தான" என்றார் பானு. அவர் தன்னை அடிக்கடி ஒரு சோசொயலிஸ்ட் என்று சொல்லிக்கொள்வார். இடது சாரித்தனம் சில இக்காட்டாண தருணங்களில் சமரசம் செய்துகொள்கிறது. ஊழல் அரசு பற்றி உரக்கக் கருத்துரைக்கக் கூடியவர்.

அப்போது சில தாய்லாந்து தரகர்கள், "டுவென்டி ரிங்கிட்... கோ குவிக்" என்று காத்திருப்பவர்களை நோக்கி "சிறப்புச் சலுகை'செய்யக் கோரிக்கொண்டிருந்தான். நான் பானுவைக் கேட்டேன் ." 20 ரிங்கிட் கொடுத்தால் அவனே நம் பாஸ்போர்ட்டைக் கொண்டு போய், நாம் சீக்கிரம் கடந்து போக முத்திரை குத்தும் வசதியை செய்து கொண்டு வந்து விடுவான்," என்றார்.

நான் பாஸ்போர்ட்டுக்குப் பதிவு செய்யும்போது முகக் கண்ணாடியைக் கழட்டி படம் எடுத்தார்கள். இங்கே முகத்தைக் கூடப் பார்க்காமல் 20 ரிங்கிட் வாங்கிக் கொண்டு முத்திரைக் குத்துவதை நினைத்துப் பார்த்தேன். என்ன முரண்? என்ன அல்பம்? என்ன அக்கறையின்மை?  உலகநாடுகளில் பயங்கராவாதம் பக்கவாத நோயாய்ப் படமெடுப்பது எப்படி என்று இப்போது புரிய வைத்தது.

முத்திரை குத்தப் பட்ட கடப்பிதழ் கைக்கு வந்ததும் காரைக் கொண்டு போய் தாய்லாந்து எல்லைக்கு அப்பால் வைத்துவிட இடம் தேடினோம்தெளிதில் இடம் கிடைக்கவில்லை. கண்டபடி பார்க் செய்த ஒரு சில கார்கள் நகராண்மைக் கழகத்தால் 'கிளேம்ப்' ( நகராதபடி இருக்க இரும்புப் பூட்டு) போடப்பட்டுக் கிடப்பதைப்  பார்த்ததும் பயம் வந்துவிட்டது. எங்கள் காருக்கு அது நேர்ந்தால் பயணமே நாசமாகிவிடும்.

 ஒரு உட்புறத் தெருவில் 'பாதுகாப்பாக காரை நிறுத்திவிட்டு மீண்டும் எல்லைச் சாவடிக்குச் சென்றோம் காருக்கான பயண அனுமதி பெற. அப்போது வரிசை மேலும் நீண்டு நெளிந்து கொண்டிருந்தது. வாகன உரிமையாளர் மட்டும் வந்தால் போதும் என்றார்கள். நான் மீண்டும் வாகனத்தை நிறுத்திய இடத்திற்கே ஓடினேன். கார் கிளேம்ப் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய. நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை.

அவர் முடித்துக் கொண்டு வந்திருந்தார். என் கைப்பேசி தற்காலிகமாய் செத்துப் போய் இருந்தது.  ரோமிங் பதிவு செய்ய வில்லை. இரண்டொரு முறை ரோமிங்கால் என் பர்ஸ் இளைத்துவிட்ட அனுவம் உள்ளதால்.

பசி குபு குபுவென வயிற்றை எறிக்கத் தொடங்கியிருந்தது. மணி மதியம் பன்னிரண்டைத் தாண்டியிருந்ததும், கோடை வெயில் கொலுத்திக்கொண்டிருந்ததும். காதிருந்த களைப்பும் பசியைத் தூண்டிவிட்டிருந்தது. டானாவ் கடைத் தெருக்களின் கவிச்சி நெடி குடலைப் பிடுங்கி பசியை அடக்கிக் கொண்டிருந்தது. இதற்காகவே அந்நிய மண் வந்தோம் என்ற எரிச்சல் அங்கேதான் தொடங்கியது. மலேசியாவையும் தாய்லாந்தையும் ஒரே ஒரு கோடுதான் பிரிக்கிறது என்றாலும் உணவுக் கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டிருப்பது அதிசயம்தான்.
அதற்குள் சுங்கச் சாவடி வேலைகளை முடித்துக் கொண்டு பானு வந்துவிட்டிருந்தார்.

பானு' ஹாட்யாய்' போய் சாப்பிடலாம் என்றார்.ஹாட்யாய் தாய்லாந்தில் மூன்றாவ்து பெரிய நகரம். ஹாட்யாய் டானாவிலிருந்து ஒரு மணி நேரப்பயணம். கவிச்சி வாடை டானாவிலிருந்து என்னை விடாமல் விரட்டியது. தாய்லாந்து பச்சை நிற குமுட்டிப் பழத்தைச் சாப்பிட்டு பசியோடு சமரசம் செய்துகொண்டிருந்தேன். அதன் மேல் தோல், பாம்பு தோல் தரிசு நிலம் கோடைகால்த்தில் வெடித்துக்கிடப்பதுபோல இளம்பச்சை நிறத்தில் இருந்தது . பாதுகாப்புக்காக எல்லை பேரங்காடியில் வரியற்ற பிஸ்கட் ஒரு பொட்டலம் வாங்கி வைத்திருந்தேன்.  


பயணம் தொடரும்......