Wednesday, April 2, 2014

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்-கன்னி முயற்சி

குழப்பம் 3
தயாஜி

முதல் நாள் நள்ளிரவு 12 மணிக்கு என் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெ எனக்கொரு அஞ்சல் அனுப்பியிருந்தார். புண்ணியவான் தயாஜி எங்களை டேக்சியில் ஏற்றி ஒரு ஒட்டலில் விடச்சொன்னார். அது வேறொரு விடுதியாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று எழுதியிருந்தது. அவரிடம் மலேசிய தொலைபேசி எண் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது கைக்குக் கிடைத்தது மின்னஞ்சல் மட்டுமே. அவருடைய தொலைபேசி எண்ணை எனக்கு அன்று மணி 4 வாக்கில் அனுப்பியிருந்தார் யுவா. நான் அவர் மின்னஞ்சல் அனுப்பிய நேரத்தைப் பார்க்கவில்லையாதலால்., சற்று முன் அனுப்பிய மின்னஞ்சலாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நான் அவரோடு உடனடியாகத் தொடர்பு கொண்டேன். இந்த நள்ளிரவில் என்ன அலைக்கழியப் போகிறார்களோ என்ற கவலை எனக்கு.

"ஜெ என்ன எங்கே இருக்கிறீகள்.. மின்னஞ்சலைப் பார்த்தேன்," என்றேன் படபடப்போடு.

"அதை இன்று காலையில் அனுப்பினேன். என்னையும் கிருஷ்ணனையும் ஒரு டேக்சியில் ஏற்றி அனுப்பி விட்டு. பின்னால் தயாஜியும் ராஜமாணிக்கமும் வந்தார்கள். டெக்சி எங்களை வேறு விடுதியில் இறக்கி விட்டு கிளம்பிவிட்டான்.  தயாஜி அலைந்து கண்டுபிடித்து, சரியான இடத்துக்கு கொண்டுவந்து விட்டு விட்டார் என்றார். எனக்கு மட்டுமல்ல நவீனுக்கு, தயாஜிக்கு, யுவாவுக்கு என் மின்னஞ்சல் பறந்திருக்கிறது. யுவா மின்னஞ்சல் பார்த்தது அன்று இரவு 1.ஓ மணிக்கு. அவரும் அலறி அடித்துக்கொண்டு ஜெவுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.


இரண்டாவது நாள் மலேசிய எழுத்தாளர் சங்கக் கலந்துரையாடல்.

ரெ.கா ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்ச்சிக்கு பத்து பதினோரு பேர்தான் வந்தார்கள் என்று தெரிய வந்தது. இரண்டும் மாதங்கள் கடுமையான வெப்ப நாட்களுக்குப் பிறகு கொட்டிய பெரும் மழை நிகழ்ச்சியைக் குலைக்கக் காரணமாக இருந்திருக்கிறது. நெடுநாட்களாக காத்திருந்த மழையைப்  கோலாலம்பூர் மக்கள் ஆரத்தழுவிக்கொண்டார்கள் என்று கருதும்போது , நல்லார் ஒருவர் மலேசியாவுக்கு வந்தமைக்கான நல் அறிகுறியாகவே அவரின் சிறுபாண்மை வாசகரும் வரவேற்கவேண்டியதாயிற்று. சிறு கூட்டம் ஒரு பொருட்டே அல்ல!

ஆனால் கூட்டத்தில் ஜெ உற்சாகமாவே பேசினார் என்றார்கள். வந்திருந்த அனைவரும் ஜெவின் எழுத்துகளைப் படித்தவர்கள் . குறிப்பாக அறம் (சிறுகதை நூல்) வாசித்தவர்கள். அதனைத் தொட்டே அதிகமான கேள்விகளும் உரையாடல்களுமாக அமைந்தன என்றார். எப்போதுமே தீவிர இலக்கிய ஈடுபாட்டையே ஜெ விரும்புவார். பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதகமில்லை. ஆனால் பங்கெடுப்பு அக எழுச்சியை உண்டுபண்ன வேண்டும் அவருக்கு. எல்லா கேள்விகளுக்கும் சலைக்காமல், தக்க சான்றோடு பதிலுரைப்பார். அவரின் பல் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டவருக்கு மட்டுமே அவரைப்பற்றி தெரியும். எனவே மலேசிய எழுத்தாளர் சங்க கலந்துரையாடல் உற்சாகமான ஒன்றாகவே அமைந்ததில் மகிழ்ச்சி- இரு சாரருக்கும்.

கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்குதான். அன்று முழுதும் கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா தளங்களை பார்த்திருக்கிறார்கள். தயாஜி அவர்களை அழைத்துக்கொண்டு இடங்களைக் காட்டியிருக்கிறார்.
பத்துமலை முருகன்மறுநாள் காலையில் கோலாலம்பூரிலிருந்து கூலிம் தியான ஆஸ்ரமத்துக்கு மூவரையும் அழைத்துக்கொண்டு வர்வேண்டிய பொறுப்பு யுவராஜனுடையது. யுவா ஜெவின் தீவிர வாசகர். மும்முறை ஜெவின் ஊட்டி முகாமில் கலந்துகொண்டவர். ஊட்டி முகாம் இரண்டாவது முறை சுவாமி, யுவா, நான் மலேசியாவிலிருந்து கலந்துகொள்வதாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். ஆனால் மறுநாள் காலை நேரம் தாமத்தித்து விமான நிலையத்துக்குப் போனதால் விமானம் பறந்துவிட்டது. நானும் சுவாமியும் மீண்டும் வீட்டுக்குத் திரும்ப ஆயத்தமானோம். ஆனால் யுவா "சார் நீங்களாவது வாங்க சார், நாம ரெண்டு பேரும் போலாம் என்றார்." டிக்கட்டின் விலை ரி.ம 700 சொச்சம். அன்று மாலையே  சென்னைக்குப் பற்ந்தோம். பின்னர் அந்தம் பயணம் ஒரு பெரிய வரலாற்று அத்தியாமாக ஆகிவிட்டிருந்தது !!
                                 மலேசிய அடையாளம் இரட்டைக் கோபுரம்.


யுவா அவர்களை அழைத்துவரும் வழியில் செண்டோலும், ரோஜாவும் வாங்கித் தந்திருக்கிறார்.சில இடங்களைக் காட்டியுமிருக்கிறார். ஜேவும் சரி அவரோடு வந்தவர்களும் சரி ஊர் சுற்றிப்பார்ப்பதை ஒரு வேள்வியாகவே கருதுபவர்கள். எனவே மலேசியாவின் வரலாற்றுப்புகழ் வாய்ந்த இடங்களைப் பார்ப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். கிருஷ்ணனிடம் நான் ஏற்கனவே மலேசியாவில்  இந்தியாவைப் போல புராதன  இடங்களை எதிர்பார்க்காதீர்கள் என்று முன்னாலேயே எச்சரித்திருந்தேன்.

அன்று மணி இரண்டுக்கெல்லாம் கூலிம் தியான ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.பகல் உணவு அங்கேதான்.

நான் மாலை 5.00 மணிக்கு ஆஸ்ரமத்தைப் போய்ச் சேர்ந்தேன். யுவா, கிருஷ்ணன்,ராஜமாணிக்கம் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏற்கன்வே அவர்களை ஊட்டி முகாமின் பெருங்கூட்டத்தில் பார்த்திருந்ததால் யார் கிருஷ்ணன், யார் ராஜமாணிக்கம் என்று தெரியவில்லை. அறிமுகப் படுத்திக்கொண்ட அடுத்த கணமே ஒரு குபீர் சிரிப்பு வெடித்தது.

கிருஷ்ணன் மின்னஞ்சலில் மலேசியத் தொடர்பு எண் கேட்டிருந்தார். நான் சிலவற்றைக் கொடுத்துவிட்டு கீழே கோட் போட்டுக்கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தேன்.(இதனைக் குழப்பம் 3.1 என்று உப தலைப்பிட்டுக்கொள்ளலாம்)

சார் என்னிடம் வழக்கறிஞர் கோட்தான் உண்டு அது போட்டுக்கொள்ளவா என்று பதில் போட்டுவிட்டு என் மின்னஞ்சலை ஜெவுக்கும் ராஜாவுக்கும் அனுப்பி அவர்களை கோட் போட்டுக்கொண்டுவர கவனப்படுத்தியிருக்கிறார்.
நான் உடனே மீண்டும் ஒரு பதிலை எழுத வேண்டியதாயிற்று.

நான் குறிப்பிட்டது telephone code, coat அல்ல, இங்கே வெயில் கொலுத்துகிறது, கோட் எதற்கு என்று பதில் போட்டிருந்தேன்.
 அந்த குபீர் சிரிப்பு வெடித்த காரணம் அதுதான். ஜெ களைப்பை நீக்கத் தூங்கி எழுந்தவர் " என்ன பயங்கர சிரிப்புச் சத்தம் கேட்டதே என்றார். சொன்னேன்.

கிருஷ்ணன் பயணம் போகும்போதெல்லாம் பயணத்துத் தேவையான பொருட்களை எல்லாரையும் கொண்டுவரும்படி பட்டியல் அனுப்புவார். ஆனால் அவர் கொண்டுவர மறந்துவிடுவார் என்றார். அதற்கு ஒருமுறை சிரித்துத் தீர்த்தோம்.
                                                குமாரசாமி,(வாசிப்பவர்) தமிழ்மாறன்

அன்று மாலை பினாங்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஒரு இலக்கிய உரையும் உரையாடலும் நிகழ்ச்சியை விரிவுரைஞர் குமாரசாமி ஏற்பாடு செய்திருந்தார். குமார் ஜெவின் இன்னொரு தீவிர வாசகர். வெண்முரசை படித்துவிட்டு "அப்பாடா" என்பார். அவர் முகத்தில் வியப்பு வெடித்திருக்கும். அதன் நீட்சியாகவே தன் மாணவர்களை பீஷ்மர், அம்பை சந்திக்கும் ஒரு ஆவேசக் காட்சிய நாடகமாக்கியிருந்தார். மலேசியாவில் நாடகக்கலை கிட்டதட்ட இறந்துவிட்ட நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு  இந்த ஒரங்க நாடகத்தைப் பார்க்க மிகுந்த ஆவலாய் இருந்தது.

பினாங்கு கல்லூரிக்கு எங்கள் நவீன இலக்கியக் குழும நண்பர்கள் அனைவரும் நான்கு கார்களில் உற்சாகத்தோடு பயணமானோம். அங்கே பீஷ்மரும், அம்பையும் எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.

தொடரும்.....

 

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்- கன்னி முயற்சி

குழப்பம் 2

ஜெயமோகனிடம் மலேசிய தொடர்பு எண் இருக்காது. பாலமுருகனுடன் தொடர்பு கொண்டு அவரிடம் தொலைபேசியைத் தரச்சொன்னேன். அவர் ஜெயமோகனோடு வந்த ராஜமாணிக்கத்திடம் கொடுத்துவிட்டார். ஜெயமோகனிடம்தான் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு முகமன் விசாரிக்கத் தொடங்கினேன். குரல் வேறமாதிரி இருக்கிறதே என்ற் பிரக்ஞைகூட எழவில்லை. என்ன பதில் சொல்வது என்ற பதற்றத்தில் குரலை அடையாளம் காண மறுத்தது. சற்று சுதாரித்த பின்னரே இது ஜெமோ குரலில்லையே என்றே அடையாளங்கண்டு ,

" நீங்கள்..." என்றேன்.

"சார் நான் ராஜமாணிக்கம் ... ஒரு நிமிஷம்," என்றுவிட்டு ஜெமோவிடம் கொடுத்தார்.

"புண்ணியவான் பேசுறேன், நலமா வந்து சேந்தீங்களா ஜெ?" என்றேன்.

" எல்லாம் நல்லாருந்தது.." என்றே துவங்கைனார். வார்த்தைகளில் கோபம் ஏதும் தென்படவில்லை. எப்போதும்போலவே மென்மையாகவே பேசினார். தொலைபேசியில் அவரோடு உரையாடும் போது நமக்கு உற்சாகம் வராது. நேரில் பேச ஆரம்பித்தால் நமக்குள் ஒரு துடிப்பையும் ஆர்வத்தையும் கிளர்த்திவிடுவார். நான் இருமுறை அவருடைய ஊட்டி இலக்கிய முகாமில் பேசி மகிழ்ந்திருக்கிறேன். என் பதற்றம் நொடியில் சரிந்தது.

" ஏன் சார் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி போட்டிருக்கீங்க..ஓய்வில்லாம இருக்கும்போலிருக்கே...எனக்கு மேடையில பேச விருப்பமில்லியே," என்றார்.

"ஜெ...உங்களுக்கு நிகழ்ச்சி நிரல் அனுப்பி இருந்தேனே....."

"ஆமா கல்லூரி நிகழ்ச்சிய எடுக்கச் சொன்னேனே...."
விரிவுரைஞர் குமாரசாமி, தமிழ் மாறன், நண்பர்

"இல்லிங்க ஜெ.. நீங்க ... குறுகிய கால வருகை மேற்கொண்டிருக்கீங்க..உங்க வாசகர் உங்கள பாக்க விரும்புறாங்க அதான் .." என்றேன்.

"ஒரு நிகழ்ச்சிய ரத்து செய்திடுங்க," என்றார்.

"சரிங்க ஜெ செய்திடலாம்," என்று வாக்கு கொடுத்தேன்.

பின்னர் சுவாமியைக் கூப்பிட்டு, நான் பேசிவிட்டதாகச் சொன்னேன்.

"ஓ பேசிட்டீங்களா.." என்ற எப்போதும் போலவே இன்ப அதிர்ச்சியோடே கேட்டார். 

"அவர் கோபத்தோடெல்லாம் இல்ல சாமி... நிகழ்ச்சி நெடுக்க இருக்குன்னு கொற பட்டுக்கிட்டாரு ...அவளவுதான்" என்றேன். "அப்பாடா," என்றார். "நான் இப்போ பேசுறேன்," என்றார். அப்போது அவரிடம் உற்சாகம் துள்ளியது.

ஒரு நிகழ்ச்சியை ரத்து செய்தாக வேண்டும். உடனடியாகத் தகவல் சொன்னால்தான் ஏது செய்ய முடியும். கல்லூரி தவனை விடுமுறை துவங்குவதற்கு கடைசி வாரம். அதற்குள் ஒன்றை ரத்து செய்தே ஆகவேண்டும்.
எந்தக் கல்லூரியை நீக்குவது. சரி முதல்ல தகவலை விரிவிரைஞர் தமிழ் மாறனிடம் தகவல் சொல்வோம். என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று போன் செய்தேன். அவர் கனிவோடு பேசக்கூடியவர். நல்ல அபிப்பிராயம் சொல்லாலாம்.
விரிவுரைஞர் தமிழ்மாறன், யுவராஜன், ஜெயமோகன்

" சார்.. நான் ஏற்பாடு செஞ்சிட்டேன் ஒன்னும் செய்ய முடியாது போல இருக்கே சார்."
"இல்லிங்க மாறன்  உங்கள ஐடியாதான் கேட்டேன்," என்றேன்.
அடுத்து துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் மணியரசனிடம் தொடர்புகொண்டு, ரத்து செய்ய முடியுமா.. முயற்சி செய்து பாருங்கள்.." என்றேன்.
"அப்படியா..... எங்க கல்லூரி இயக்குனர்ல்லாம் வராங்கா ...அதுதான் இடிக்குது.." என்றார்.
"முயன்று பாருங்க...இல்லனா பரவால்ல" என்றேன். அந்தக் கல்லூரி இலக்கிய நிகழ்ச்சியைக்கூட ஒரு அதிகாரப் பூர்வ விழாவாகவே எடுப்பார்கள். இலக்கிய விழா எளிமையாக இருந்தால் போதும் என்றே  தீவிர இலக்கியவாதிகளின்  இயல்பான எண்ணமாகும்.

மறுநாள் எனக்கு மணியரசன் மீண்டும் தொடர்பு கொண்டு.. ஒரு நல்ல தகவலைச் சொன்னார்." சார்.. நீஙக எதிர்பார்த்த மாதிரியே  நான் நிகழ்ச்சியை ரத்து பண்ணிட்டேன்," என்றார். நான் எதிர்பார்க்காத முடிவு இது. மனசு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஜெமோவை அலைக்கழிக்கக் கூடாது என்ற எண்ணம் தவிர வேறொன்றறியேன் பராபரமே. மணியரசனுக்கும் நன்றி சொன்னபோதூ 'அப்பாடா' என்றிருந்தது.

ஜெமோவுக்கு மறுநாள் மலேசிய எழுத்தாளர் சங்கப் பணிமனையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. முனைவர் கார்த்திகேசு நிகழ்ச்சி வேண்டுமென்றே கேட்டுக்கொண்டபடியால் நடந்தது. அந்நிகழ்ச்சி தொடக்கக் கட்டத்திலேயே கிட்டதட்ட நடக்காது இருந்தது. ஆனால் முனைவர் கார்த்திகேசு முன்னெடெடுத்து அதனை நடத்துவதில் முனைப்பாக இருந்தார். மலேசியாவில் ரெ.கா அவரின் தொடக்ககாலத்திலிருந்தே வாசித்து வருபவர். இதனை எழுத்தாளர் யுவராஜன் சொன்னார். "

"நான் அவரை வாசிப்பதற்கு காரணம் ரெ.காதான். அவரின் ரப்பர் நாவலைப் படித்துவிட்டு ரெ.கா எழுதிய குறிப்புதான் என்ன அவர் பக்கம் இழுத்தது என்றார். அதற்காக அவரை நான் பெரிதும் மதிக்கிறேன் சார்." உணமைதான் நானும்  மாடன் மோட்சம் படித்துவிட்டு ரப்பரைத் தேடி, கன்யாகுமரியைத் தேடி... அவரின் தடித்த சிறுகதைத் தொகுப்பைப் படித்து... இப்போது காலையில் பசியாறுவதே  வெண்முரசுதானென்றாகிவிட்டது. அவருடைய வாசகர்கள் எத்தனை பேர் வெண்முரசால் காலைஉணவை skip செய்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

என் வீட்டுக்கு அவர் வந்தவுடன் வெண்முரசை பத்து ஆணுகளில் எழுதி முடிக்கப் போவதாக சங்கல்பம் செய்திருக்கிறீர்களே. அதனைப் படித்து முடிக்கும் வரை என் ஆயுள் நீடிக்குமா என்று கேட்டேன்.
அதற்கு அவரோடு வந்த கிருஷ்ணன் சொன்னார். சார் பத்து ஆண்டுகள் என்ற காலக்கெடுவுக்கு முன்னாலேயே பத்து வெண்முரசு நாவல்களை எழுதி முடித்துவிடுவார் பாருங்கள் என்றார். ஆம் அந்தக் காலவரைறையரை பத்து ஆண்டுகள் நீளாது. அதற்கு சில ஆண்டுகள் முன்னாலேயே முடித்து விடுவார். ஏனெனில் வெண்முரசு எழுதத் துவங்கிய முன்று மாதத்துக்குள்ளாகவே முதல் நூல் 'முதல் கனல்' வந்துவிட்டது. இதோ இந்த மே மாதத்துக்குள்  இரண்டாவது நூலான 'மழைப் பாடல்' வரப் போகிறது என்றார்.
சரிதான் ஜெயமோகனை ராட்சச எழுத்தாளர் என்று சொன்னது மெத்தச் சரி. இதனை யார் சொன்னது என்று யுவராஜனைக் கேட்டேன் அவர் கார்த்திகேசுதான் சொல்லியிருக்கிறார் என்றார் . இல்லை அதற்கு முன்னாலேயே தமிழ் நாட்டில் அந்தப் பெயரைச் சூட்டிவிட்டார்கள் எனபதற்கு ஆதாரமாகவே பத்திரிகைச் செய்தியில் ரெ.கா ஜொமோவை ' ஜெயமோகனை ராட்ச்ச எழுத்தாளர்' என்றே குறிப்பிடப் படுகிறார் என்றே எழுதியிருந்தார். அதுபற்றி யாராவது ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.
நான் ஜெமோவைக் கேட்டேன்..."எப்படி ஜே நாங்க படிக்கிற வேகத்த விட நீங்க எழுதிற வேகம் அதிகமா இருக்கு," என்றேன்.
அவர் சொன்னார்," டைப் அடித்து அடித்து என் விரல்களை ஒரு சில கணம் நீட்டி மடக்கக் கூட முடியாது  அவை செயலற்றுப் போயிருக்கும் "என்றார். என்னைப்போல எழுத்துச் சோம்பேறிகளுக்கு எதற்கு விரல்கள் என்று தோன்றியது.

ஜெ உங்கள் விரல்களின் நடனம் எங்களுக்கு அக வேள்வியைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. எழுதுங்கள் ஜெ.
முனைவர் ரெ.கார்த்திகேசு

மறுநாள் ரெ.கார்த்திகேசு ஒருங்கிணைத்த சங்கப் பணிமனையில் பேச்சு. ஜொமோவை ரெ.காதான் விடுதியிலிருந்து நிகழ்ச்சி இடத்துக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொன்னார். நான் அவரின் தொடர்பு எண்ணையும், விடுதி முகவரியையும் கொடுத்திருந்தேன்.

தொடரும்... 

Tuesday, April 1, 2014

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் கன்னி முயற்சிஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்
கன்னி முயற்சி1. முதற் குழப்பம்


    2010  லேயே ஜெயமோகன் மலேசியா வந்திருந்தார். எங்கள் நவீன இலக்கியக் களம் அவரை வரவழைத்திருந்தது. குறிப்பாக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி நவீன இலக்கியக் களத்தை முன்னெடுப்பவர். அவர்தான் அதில் மும்முரமாக இருந்தார். சுவாமி இலக்கியத்திலிருந்துதான் ஆன்மிகத்துக்குப் போனார். பின்னர் இலகியத்தையும் ஆன்மீகத்தையும் சமமாகவே அவதானிக்கத் தொடங்கினார். அவர் படிக்கும் காலத்தில் அவரை இலக்கியத்துக்கு இழுத்தது மு.வ தான். மு.வதான் அவரை மெல்ல ஆன்மீகத்துக்கு கொண்டு சென்றார். ஆன்மீகத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அந்த அளவுக்கு இலக்கியத்தையும் நேசிக்கிறார் இப்போது. இரண்டும் வெவ்வேறல்ல . இரண்டுமே தத்துவ நோக்கோடுதான் வாழ்க்கையைப் பார்க்கின்றன என்ற நிதர்சனத்தை முன்வைப்பவர்.
 ஜெயமோகனின் எழுத்துகளை அவருக்கு அறிமுகப்படுத்தியது நான்தான். ஜொமோவின் அகப்பக்கத்தை திறந்து கொடுத்த நாள் முதல் இன்றைய தேதிவரை ஜொமோவை விடாமல் விரட்டிக் கொண்டு வாசிக்கிறார். அவரை உள்வாங்கிய பின்னர்தான் அவரின் ஆளுமையின் முழு தரிசனம் கிடைக்கப் பெற்றார். பின்னர்தான் ஜொமோ இங்கு வரவேண்டும் என்று முன்மொழிந்தவரே அவர்தான். 2010 ன் அவர் விட்டுப்போன அழுத்தமான அடையாளத்தின் பலனாகத்தான் மீண்டும் அவர் இங்கே வந்தார்.

16.3.2014 மாலை 4 மணிவாக்கில் ஏர் ஏசியா விமானம் மூலமாக கோலாலம்பூர் எல்சிசிடி விமான நிலையத்தை வந்தடைந்தார்.


அவருடன் கிருஷ்ணனும். ராஜமாணிக்கமும் வந்திருந்தார்கள். கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு மேலாக அவருடய தீவிர வாசகர்களாக ஆனவர்கள். நண்பர்கள் அரட்டை இல்லாமல் ஜெயமோகன்  இருக்க முடியாது என்பதை வைத்தே அவர் எவ்வளவு நட்பாகப் பழகக்கூடியவர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இலக்கியம் ஆன்மீகம் சமூகவியல் என எல்லாத்துறையிலும் அவர் பிளந்து கட்டுவதை நம்முடைய திறமையோடு ஒப்பிடும்போது, நம்மை கொஞ்சம் எட்டியே இருக்கச் செய்கிறது அந்த பிரம்மாண்டம்.

16.3,14ல் ஜெமோ வந்திறங்கிய அன்று மாலை மணி 6 மணிக்கே அவர் உரையாற்றும் இலக்கிய நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. கோலாலம்பூரில் தீவிர கதியுடன் இயங்கும் வல்லினம் என்ற இலக்கிய குழுமம் அவரின் முதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. விமானம் அரை மணி தாமதித்து தரை இறங்கிய காரணத்தால் அரக்கப் பரக்கக் குளித்து நேராக நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரோடு பேசலாமென்று காத்திருந்தேன். மணி 9.30 இருக்கும். நிகழ்ச்சி முடிந்து களைப்பாக இருப்பார்  இரவு உணவுக்குப் பின்னர் பேசலாம் என்றே தள்ளிப்போட்டேன். இந்த தள்ளிப்போடல்கூட என்னுள் உண்டாகியிருந்த  அச்சம்தான் காரணம்.

நான்தான் அவர் மலேசியாவில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நிரலை அனுப்பியிருந்தேன். அன்றே அதற்கு அவர் பதிலிறுத்தியிருந்தார்.

"கல்லூரிகளில் பேச எனக்கு விருப்பமில்லை. அவர்கள் வாசிக்கமாட்டார்கள் என்று ஆசிரியராக இருந்த உங்களுக்குத் தெரியாதா. கல்லூரி நிகழ்ச்சியை முடிந்தவரை குறைத்துவிடுங்கள்," என்றிருந்தது.

"நான் முயற்சி செய்கிறேன் ஜெ," என்று பதில் போட்டேனே ஒழிய. என்னால் பெரிதாக எதையும் மாற்றிட இயலவில்லை. கல்லூரிகள் நிகழ்ச்சிகளுக்கு முன்னரே ஏற்பாடு செய்துவிட்ட காரணத்தால் அவற்றை மாற்றிட முடியாத நிலை. மொத்தம் மூன்று கல்லூரிகள். ஒவ்வொன்றும் அவர்களின் மேலதிகாரிகளிடம் அனுமதி கேட்டு ஏற்பாடு செய்துவிட்டிருந்தமையால் ரத்து செய்வது கடினம் என்று சொல்லிவிட்டார்கள். சரி ஜெமோ மலேசியா வரட்டும். வந்துவுடன் சமாளித்துக் கொள்ளலாம் என்றே எண்ணியிருந்தேன். ஜெமோ இதுபற்றிக் கேட்பாரே என்ற தயக்கம்தான் என்னுள் அச்சத்தைக் கிளர்த்தியிருந்தது.

பேசலாமா வேண்டாமா என்ற இரண்டுங்கெட்ட நிலையில் இருந்தபோதுதான் சுவாமியிடமிருந்து வந்த ஒரு அழைப்பு என்னை அதிரச்செய்தது.

"புண்ணியவான் ஜெயமோகன் பயங்கர கோபத்தில் இருக்கிறாராம் , நவீன் சொன்னான்" என்றே என்னையும் நடுங்க வைத்தார்.
"என்ன சாமி என்ன நடந்துச்சு?" என்றேன்.
" அடுத்தடுத்து நிகழ்ச்சி ஏற்பாடாயிருக்கே,நான் எழுத்தாளன் மேடைப்பேச்சாளனல்லவே," என்று கோபப்பட்டாராம் என்றார்.
நான் எதற்காக அவரிடம் பேச அஞ்சினேனோ அது நடந்தே விட்டதே என்று மனம் அழுத்தத்துக்குள்ளானது.
"நீங்க அவருகிட்ட பேசுங்க.." என்றார். "நாளைக்கு மலேசிய எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துடுங்க," என்றார்.
"சாமி அது நடக்காது, ரெண்டு மூனு நாளா பத்திரிகையில் செய்தி போட்டுட்டு வராங்க....இப்ப போயி.." என்றேன்.
"நீங்க அவருகிட்ட பேசுங்க ..." என்று மீண்டும் அழுத்தினார்.
" சாமி நீங்களே பேசுங்க.. நீங்க சொன்னா கேப்பாரு," என்றேன்.
"இல்ல இல்ல நீங்க மொதல்ல பேசுங்க. நான் அடுத்து பேசுறேன்," என்றார்.
"சரி சாமி நான் பேசுறேன்" என்றேன். மனதில் துணிச்சல் வர மறுத்தது. சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு கைப்பேசியை எடுத்தேன்.

தொடரும்......