Tuesday, January 21, 2014

19. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?


கங்கை அழைப்பைக் தடுக்கும் வனிகச் சாமியார்கள்

அரிதுவார் மனதை ஒருநிலைப் படுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடம். காசிபோலல்லாமல் கொஞ்சம் சுத்தமாகத்தான் இருகிறது. கிளை நதிகள் சங்கமித்து சலசலத்தோடும் நதிநீர் நம்மை தண்மையாகவே வைத்திருக்கிறது. தண்ணீரின் இறைத் தன்மை அது. கங்கை மாதா தாய்மையின் தண்மை அது. நீர்  கடவுளாகவும், தாயாகவும், அன்பைச் சொரியும் கன்னியாகவும் பல அவதாரங்களில் நம்மை தடுத்தாட்கொள்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவரையும் இந்த நதியென்னும் இயற்கை அன்னை ஆரத் தழுவி தன் தண்மையை சொரிந்து விடுவதில் இயற்கைதான் இறைவன் என்ற வேதாந்த கற்பிதத்தை போதிக்கிறது.

மீண்டும் ரிசிகேசின் தபோவனம் விடுதிக்குத் திரும்புகிறோம். பரிமாறிய உணவு வகைகளையே திரும்பத் திரும்ப பரிமாறுகிறார்கள். பசியோடு போனால் ஏதோ சாப்பிடலாம். பசியற்றவர்கள் தட்டைத் தள்ளி வைத்து விடுகிறார்கள் . பயண ஏற்பாட்டுத் தலைவர் 'சாப்பாடு நல்லாதான் இல்ல' என்று நம்மோடு ஒத்திசைத்து ஆறுதல் படுத்தும் மனோவியல் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் சற்றே வராண்டா பக்கம் பார்த்தால் மலையைத் தழுவி மலர்ந்திருக்கும் பனிக்கூட்டமும்,பச்சைப் போர்வையில் முகிழ்ந்திருக்கும் காடும், குளிர் பிரதேசத்தை மட்டும்  புணர்ந்து மகிழும் பூவினமும் நம்மை ஆற்றுப்படுத்துகிறது.

என்னென்ன உல்லாச வசதிகள் செய்து தருகிறார்கள் என்பதை ஒரு விளம்பரப் பலகையில் பட்டியல் போட்டு பயணிகளை ஈர்க்கிறார்கள். பனி சறுக்கு விளையாட்டு, நீர் விரைந்தோடும் ஓடையில் லாவகமாமாக படகு செலுத்த, மலை ஏற, என வகை வகையான உபகரணங்களை பக்கத்திலேயே விற்கிறார்கள். உல்லாசத்துக்கென்றே வரும் வெள்ளையர்கள் இக்கடைகளில் குழுமி இருக்கிறார்கள். நான் ஒரு கடையில் எட்டிப் பார்த்தேன். யாரோ உள்ளூர் வடநாட்டான்தான் பாராக்கு பார்க்க வந்திருக்கிறான் என்று என்னை கண்ணாலேயே என்ன வேண்டும் என்று கேட்டு ஊதாசீனப் படுத்தினான். கொஞ்சம் உடல் வெளுத்திருந்தால்  " வாட் டு யு நீட் சர்" என்று என்னை பணிவோடு அணுகியிருக்கக் கூடும். நிறம் மனிதர்களை என்னவெல்லாம் செய்து தொலைக்கிறது!

காலை பசியாறலை முடித்துக்கொண்டு விடுதியிலிருந்து இறங்கி கடைத்தெருவுக்கும் போனோம். அந்நிய ஊரில் கடைத்தெருவில் நடந்தே செல்வது சுகமாகத்தான் இருக்கிறது. நமக்கு பராக்குப் பார்பபதில் உண்டாகும் குதூகலம்தான் எவ்வளவு!

விடுதி மலைப்பகுதியில் இருப்பதால் கனரக வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மற்றபடி குதிரைகள்தான் சுமைதாங்கிகள்!கடைத்தெருவைத்தாண்டி கங்கை நம்மை மீண்டும் சந்திக்கிறாள். அக்கரையிலும் இக்கரையிலுமாய் ரிசிகேஸ் ஒரு ஊராகவே பிரிந்து நிற்கிறாள். நடந்து கடப்பதற்கென்றே கட்டப் பட்ட அழகிய பாலம். அதை லட்சுமணன் பாலம் என்று பெயரிட்டுருக்கிறார்கள். ராமர் பாலம் என்றும்  ஒன்று உண்டு.குரங்குகள் நம்மை வரவேற்கின்றன. அனுமார் என்றே அதனைக் கருதுகிறார்கள். கொடுப்பதை மகிழ்ச்சியாக வாங்கித் தின்கிறது. தொல்லை தருவதில்லை -உண்ணக் கொடுத்தால்.(நாம் மட்டும் சாப்பிட்டால் அதற்கு வயிறெரியாத என்ன?

பாலத்தைதாண்டி இருக்கும்  பரபரப்பாக இருக்கிறது. மக்கள் கூட்டம்கடைத்தெருகளில் நிரம்பி வழிகிறார்கள். நினைவு பொருட்கள் பலவகையில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பூசைப்பொருட்கள் சிறையதாய் கலை நேர்த்திமிக்க வடிவங்களில்
கிடைக்கின்றன. பேரம் பேசுவதில் வல்லுனர்கள் அவற்றை குறைந்த விலையில் வாங்கிக்கொள்கிறார்கள்.

அப்படியே  நடந்து வீடமைப்புப்பகுதிகள் கடைத்தெருவெனக் கடந்து ஒரு ஒற்றையடிபாதையில் நடந்து ஒரு மேடானப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார் சரத். உடலே சுமையாகத் தூக்கி வந்தவர்கள் திணற .." இன்னும் எவ்ளோ தூரமிருக்கு " என்ற அவர்களின் மூச்சுவாங்கல் 'உல்லாச்சப்பயணத்தின்" அதிமுக்கிய பலனைக் கேள்விக்குட்படுத்துகிறது. அதிலும் கிட்டதட்ட நூறு படிகள் இறங்கி நடக்கும் போது இன்னும்  "ஏண்டா வந்தோம்" என்ற பரிதாபக் குரலியும் கேட்க முடிந்தது.

படிகள் இறங்கி ஏழெட்டு பேர் ஏறக்கூடிய வாகனத்தில் ஏறி கங்கை புரண்டோடும் கரையின்  வேதம் சொல்லித் தரும் ஆஸ்ரமத்தை அடைகிறோம்.

கங்கை நதிக் கரியைல் நடக்கப்போகும் யாகத்திலும் பூசையிலும் கலந்துகொள்ளத் தயாராகிறோம். கங்கையின் தெளிந்த நீர் நம்மை குளிரவைக்கிறது. களைப்பிலிருந்து சற்றே விடுதலை கொடுக்கிறது. ஆனால் வனிகச் சாமியார்களின் தொல்லையும் கூடவே  ஆரம்பிக்கிறது இங்கேயும்!

தொடர்வோம்....

Monday, January 20, 2014

18. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா?


ஒரு சாபமா?

       காசிக்கு அடுத்து ரிசிகேஸ் கிளம்பவேண்டும். பேருந்தில்தான் மீண்டும் டில்லிக்குப் போய் அங்கிருந்து ரிசிகேசுக்குப் போகவேண்டும். டில்லியை அடைந்தவுடன் படுத்துறங்கி பயணத்தைத்தொடர்கிறோம். எட்டு மணி நேரத்துக்கு மேலாகிறது ரிசிகேஸை அடைய. மலை உச்சியில் தபோவனம் விடுதிதான் நாங்கள் இரு இரவுகள் கழிக்கவேண்டும். ஊருக்குத் தகுந்த பேர்.பாதையைத் தவற விட்ட ஓட்டுனர் தொலைபேசியில் விசாரித்து விசாரித்து, சுற்றி அலைந்து மலை அடிவாரத்தை அடைந்தார். இரவு சாய்ந்து கொண்டிருந்தது. மலை அடிவாரத்தை நெருங்கியதும் மழை தூறல் போட்டு 
பூமியை ஈராமாக்கி இருந்தது. அடர்ந்த காடு. இன்னும் எத்தனை மணி நேரமாகும் என்று வயிறு கேட்டுக் கொண்டே இருந்தது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாகும் என்று சொன்னார்கள். மழையின் காரணத்தால் இன்னும் தாமதமாகலாம். சாலை வலைந்து நெலிந்து போய்க்கொண்டிருந்தது. தூரம் என்று கருதிய படியால்தான் சாலைமேல் பழியைப் போட்டு 'சாலை போய்க்கொண்டிருந்தது ' என்று சலித்துக்கொள்கிறோம்.  மலை உச்சியை அடைய அடைய  குளிரும் உச்சியை அடைகிறது. இரண்டொரு விடுதியைக் கடந்து போகிறோம். 'இந்த விடுதியா' என்று குறுக்கே விழுந்த நப்பாசை வேறு. இன்னும் மேலே என்றார் ஓட்டுனர்.ஒரு கட்டத்தில் பேருந்து திணறியது. ஒரு வளைவில் போய் நின்று முரண்டு பண்ணியது. டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு இனி மேற்கொண்டு செல்லாது. கொண்டை ஊசி வளைவு. பேருந்துக்கு முதுகெலும்பும் , வளைந்து கொடுக்கும் தசை நார்களும் இல்லையென்று அப்போதுதான் தெரிந்தது. விடுதிக்குத் தொடர்பு கொண்டு வாகனத்தை அனுப்பச் சொன்னார்கள். வாகனம் வந்தது. நான்கைந்து வாகனங்கள். அங்கிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் இறக்கம்தான்.
"இதைவிட பெரிய பேருந்தெல்லாம் இதில் வளையும்... என்றுசலித்துக்கொண்டார் ஒரு விடுதி ஊழியர்.

                                               கங்கையைக் கடக்கும் பாலம்

தபோவனத்தை பசியோடு அடைந்தோம். மிகச்சாதாரண விடுதி. தபோவனம் இல்லையா அதனால். பார்ப்பதற்குத்தான் பெரிய நட்சத்திர விடுதி போன்று உள்ளது. ஆனால் மிகச்சாதாரணமான ஒன்றுதான். உணவு பணியாட்களின் சேவை எல்லாம் சுமார்தான். இரவைக் கழித்துவிட்டு ஹரிதுவாருக்கு இறங்க வேண்டும். கங்கை நதி பல முனைகளிலிருந்து சங்கமித்து நதி அழகில் மெருகேறி 
                                           
 தபொவனம் விடுதி

நிற்கிறது. அதனைத் திரிவேணி சங்கமம் என்றே நினைத்தேன். திரிவேணி சங்கமம் இன்னும் மேலே போகவேன்டும் என்றார்கள். நதியின் கரையில் பலர் சிவனின் சிலையை நிறுவி பூசை செய்கிறார்கள். நீங்கள் கீழே பார்க்கும் இந்த பக்தர்போல பலரை நாம் பூசை செய்யும்போது பார்த்தோம். நதியின் கரையில் மிகப்பெரிய சிவன் எழுந்தருளி இருக்கிறார். நதிக்கரையில் காசியைப் போலவே இங்கேயும் பல வீடுகளையும் கோயில்களை பார்க்கிறோம். நதி நீர் காசி போலல்லாமல் திருப்திபடும் அளவுக்கு தெளிந்து நகர்கிறது. சாமியார்கள் பகதர்களை இடைமறித்து விபூதி கொடுத்து பைசா கேட்கிறார்கள். ஒரு வெள்ளைக்காரத் தம்பதியினரை எவ்வளவு வற்புறுத்தியும் முடியாமல் பின்வாங்கும் சாமியாரைப் பரிதாபமாகப் பார்க்க நேர்ந்தது.


பேருந்தை நிறுத்திவிட்டு கேபல் காரில் மானசதேவி கோயிலுக்குப்புறப்பட்டோம். கங்கைதான்  மானசதேவியாக எழுந்தருளி இருக்கிறார். வரிசையில் காத்திருந்து கேபல் காரில் ஏறி 15 நிமிடத்தில் மலை உச்சியை அடைகிறோம். கேபில் காரில் போகும்போது கீழே கங்கை கிளை கிளையாகப் பிரிந்து ஓடும் அழகைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.


ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் வரிசைப் பிடித்து நிற்க நாங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். வரிசை நத்தையாய் நகர்கிறது.மானசதேவி கோயிலை அடையும் முன்னரே காளிச் சிலைகளை சிறு தெய்வம் போல  நிறைய நிறுவி இருக்கிறார்கள். பக்தர்கள அதனைக் கடக்கும் போது நிறுத்தி வழிபடச்சொல்கிறார்கள். எதற்காக இந்த வற்புறுத்தல் என்று பார்த்தால் குறைந்தது 10 ரூபாயாவது தட்டில் போடுவதற்கு. இப்படி பத்துக்கு மேற்பட்ட உருவ வழிபாடுகள். ஒவ்வொன்றிலும் ஒரு சாமியார் தரிசனம் தருகிறார். அவருக்குப் பணம் போட ஒரு தரகர் நம்மைத் 'தடுத்தாட்கொள்கிறார்'.
   
 தபோவனம் விடுதிக்கு முன்னால் மேடான பகுதியில் சிறுவனிகர்களின் சிரமம்

சில பயந்தாங்கொல்லி பக்தர்கள் ஒவ்வொரு தட்டிலும் ரூபாய்கள் போட்டுக்கொண்டே போகிறார்கள். சாமிக் குத்தம் வந்திடும் என்று பயம். சாமிகளே இப்படி குத்தம் செய்வதை அறியாத பேதைகள்.
! பக்கா பகற்கொல்லை நடக்கிறது. கோயில் உண்டியல் அங்கிருக்க, ஏன் இடைத் தரகர்கள் வழிப்பறி செய்கிறார்கள் என்று தெரியவில்லை . காசியிலும் ரிசிகேசிலும் ஹரிதுவாரிலுமா இப்படி? காசியிலும் அரித்துவாரிலும் கோயிலை எப்படி நிர்வகிப்பது உலக இந்துக்கோயில்களுக்கு இப்படித்தான் 'பாடம்' கற்றுக்கொடுக்கிறார்கள். என்னை இரண்டு மூன்று இடத்தில் மிரட்டி பைசா போடச்சொன்னார்கள். இந்தியில் ஏதோ திட்டினார்கள். கையை நீட்டி வழி மறித்தார்கள். நான் அசையவில்லை.நீங்கள் பார்க்கும் இந்தப் பணமரம் மானசதேவி கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அங்கே கட்டியிருக்கும் நூலில் ரூபாய்களை கட்டிவிட்டுச் செல்லவேண்டும். நாம் அதனைக் கடந்து சென்றால் அடியாள் போன்ற ஒருவன் குறுக்கே நின்று மிரட்டுகிறான். பலர் பயந்தே பணம் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். பக்தியில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத் தந்திரம் என்று ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்து சமயத்தைச் சடங்கு அளவிலேயே தரிசிக்கும் கூட்டம் 99 விகிதம் இருக்கிறார்கள். அந்தச் சடங்குகள் புத்தி ஏற்கிறதா என்று சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். சிறுதெய்வங்கள் கையில் அரிவாலையும், ஆயுதங்களையும் சிறுவயதில் பார்த்து பயந்த சனங்கள்! சாமி பேரில் யார் மிரட்டினாலும் அரண்டு விடுகிறார்கள். இந்து சமய நம்பிக்கையாளர்களுக்கு  இது ஒரு சாபம்தான்.

ஹரிதுவாரில் இயற்கைக் காட்சிகள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

தொடரும்.......