Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 10

கூவமும் ஐரோப்பிய அழகிய நதிகளும். -முத்தம். 10

முன்னெப்போதையும் விட பார்சினோவில் பார்த்த கணேசப் பெருமான் இடம்பெற்ற உள்ளாடைப் பதிவை நிறைய பேர் வாசித்திருக்கிறார்கள். என்னடா உலகமிது? உள்ளாடையின் ஈர்ப்பின் ரகசியம் புரியவில்லை எனக்கு. அதற்காக பல்வேறு உள்ளாடை படங்களைப் பதிவு செய்துகொண்டு வந்திருக்கலாம் என்று தோணுகிறது. என்ன செய்வது நுகர்வோர் விருப்பம்தானே எதிலும் முன்னிற்கிறது.

முத்தங்களால் ஆன தேசம் என்று எழுதியது   தப்பானதோ என்று எண்ண வைக்கிறது. எங்கே முத்தங்கள் என்று கேட்கிறார்கள். இத்தனைக்கும் ஏட்டில்தான் முத்தம் என்று எழுத முடியும். அதையேனும் போடுங்கள் என்று கேட்கிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொன்னது முத்தப் பதிவையும் சேர்த்துச் சொன்னாதா என்ன? என்ன செய்வது ? நான் நேரடியாகப் பார்த்த அனுபவத்தை அப்படியே உங்களுக்கு பதிவேற்றம் செய்ய முடியுமா தெரியவில்லை. படம் போடுகிறேன் பார்த்து அனுபவியுங்கள். ஆனால் இப்போதல்ல.முத்தக் காட்சி வரவேண்டும்.

வெட்டிக்கன் சிட்டியை விட்டு வெளியாகும்போது பசிக்கத் துவங்கியது. என் மகள் பிரியாணி கிடைக்குமா பார்க்கவேண்டும் என்றாள். இங்கே எண்ணற்ற வங்காள தேசிகள் இருப்பதால் அரிச்சோறு கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. மருமகன் கூகலில் தேட ஆரம்பித்தார். அவரிடம் இன்னது வேண்டும் என்று சொல்லிவிட்டால், நூதன ஆலவுதினின் அற்புத விளக்கான கூகலைத் தேய்க்க ஆரம்பித்துவிடுவார்.

நாங்கள் ஆவலோடு காத்திருந்த போது , கிடைத்துவிட்டது என்றார். ஆனால் இப்போது நாமிருக்கும் இடத்திலிருந்து தொலைவு என்றார். இப்போதைக்கு எதையாவது சாப்பிடலாம், இரவில் பிரியானி சாப்பிடலாம் என்றேன்.

இல்லை பிரியானிதான் வேண்டும் என்று அடம் பிடித்தாள் மகள். அரிசிச் சோறு சாப்பிட்டு யுகங்களானது போல் இருந்தது  எல்லாருக்கும்.

என்னோடு பணியாற்றிய என் மலாய்க்கார தலைமை ஆசிரிய நண்பர்கள் சொல்வார்கள், "அக்கு லாப்பார் நாசி" என்று. அதாவது அவருக்குச் சோற்றுப்பசி எடுக்கிறதாம். சோற்றுக்கென்று ஒரு விநோதப் பசியா?
 பசியில் கூட பேதம் இருக்கிறாதா என்று யோசித்தேன். பணம் உள்ளவர்களுக்கு  பசி எப்படி எடுக்கும் " உணவைத் தேர்வு செய்யும் பசி" என்று மொழிமாற்றம் செய்துகொள்ளலாம். அன்றுதான் எங்களுக்கும்  சோற்றுப்பசி  என்பதன் பொருள் புலனானது.
எங்களுக்குக் கடந்த மூன்று நாட்களாக சோறு கிடைக்காததால் உண்டான பிரத்தியேகப் பசி இது. மருமகன் கூகலில் ஜி பி எஸ்ஸை  முடுக்கிவிட்டு அது காட்டும் திசையில் நடக்கலானார். நாங்கள் சோற்றுக்காகப் பின் தொடர்ந்தோம். அரை மணி நேரம் நடந்தும் கடை இருக்கும் அறிகுறியே இல்லை. நீங்களெல்லாம் இங்கேயே இருங்கள், நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு  தேடல் யந்திரமான கூகல் வரைப்படத்தை வைத்துக்கொண்டு ஒரு திசையை நோக்கி நடக்கலானார்.
புராதன கொலிசியம் வடிவில் புதிய காப்பி

"சரவணன், நீங்க போகவேணாம், நாம ரெண்டு நாள்ள ரோமைச் சுற்றிப்பார்த்து முடித்தாக வேண்டும். சுற்றுலாவுக்கான பேக்கேஜ் டிக்கெட் எடுத்துவிட்டோம். அதை வீணாக்கவேண்டாம். பின்னர் சாப்பிடலாம்," என்றேன். என் மகளின் முகத்திலும், என் மனைவியின் முகத்திலும் சோறுதான் வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்தவர்,"நீங்க இங்கியே இருங்க,  தோ வந்துடுறேன்,"  என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டார்.
நாங்கள் ஒரு பூங்காவில் உட்கார்ந்து விட்டோம். வெகு நேரம் நடந்து கால்களில் வலி பிண்ணியது. என் மனைவியோ நடக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
தெருவைப்பார்த்தடியே அமர்ந்திருந்தோம். வருவார் வருவார் என்று வழியைப் பார்த்தபடியே இருந்தேன். ஒரு மணி நேரமாயிற்று ஆளைக் காணோம். நான் பதற்றமானேன்.
"அப்பா அவரு வந்திருவாரு, எப்பேற்பட்ட புதிய இடமாக இருந்தாலும், ஒருமுறை போனால், அடுத்த முறை வழி மாறாமல் அதே இடத்துக்கு வந்துவிடுவார்," என்று உறுதியாகச் சொன்னாள்.
பசியை நிறுத்த , நான் மனைவிக்கும் மகளுக்கும் ஆரஞ்சுச்சாறு வாங்கிக் கொடுத்து விட்டு தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தெரு ஓரத்தில் 70/80 வயதான இத்தாலியன் செக்சபோன் வாசித்துக்கொண்டிருந்தான்.

போவோர் வருவோர் சில்லறைகளைப் போட்டுக் கொண்டிருந்தனர். நான் வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழ்ப் பாடலொன்றின் மெட்டில் இடையிடையே ஒரு இசை கேட்டது. கண்டிப்பாய்த் தமிழ்ப் பாடல்தான். யார் யாரை காப்பியடித்தார் என்றுதான் புரியவில்லை. நம்முடைய இசையமைப்பாளர்கள் வெளிநாடு போனால் பிற நாட்டு இசைத்தட்டுகள் பொட்டலமாய் கட்டிக்கொண்டு வருவார்களாம். நான் கேட்ட ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாடலின் டிரம்பெட் இசை வேறொரு நாட்டின் பாடலில் கேட்டு வியந்து போனேன். யார் முன்னோடி? பெரிய இடத்துப் பொல்லாப்பு நமக்கெதற்கு?



ஒன்றரை மணி நேரம் கழித்து மருமகன் திரும்பி வந்தார். "என்ன கெடச்சதா?" என்று கேட்டாள் மகள். அவர் சோகத்தில் தலையை ஆட்டினார்.
வாங்க பிசா சாப்பிடலாம் என்று அழைத்துப் போனார். விதம்விதமான பிசா விற்கும் கடைக்குள் சங்கமமானோம்.

பின்னர் மீண்டும் நடக்கலானோம். சுற்றுலா பேருந்து வழித்தடத்துக்கு. ஆனால் அங்கிருந்து வெகுதூரம் நடந்து
விட்டபடியால்  எத்திசையில் அந்த இடம் இருக்கிறது என்று தெரியவில்லை. சில இத்தாலியர்களைக் கேட்ட பிறகு வெகு தூரமில்லை என்று கூறி திசையைக் காட்டினர்.
நாங்கள் நடந்த பாதையில், எங்கள் களைப்பையெல்லாம் உள்வாங்கிக்கொள்ள  அழகிய நதியொன்று ஓடியது. ஐரோப்பிய நாடுகளில் நதியைப் பாதுகாக்கும் /அழகு படுத்தும் முறை நாம் தீவிரமாய்க் கடைபிடிக்க வேண்டிய படிப்பினை.

 சென்னை என்றவுடன் நமக்குக் கூவம்தான் நினைவை ரணமாக்குக்கிறது. நதி நீரை கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் அதனைப் பாழாக்கும் நாடுகளில் இந்தியாவைச் முதன்மையாகச் சொல்லலாம். அதிலும் தென்னாட்டின் சிங்காரச் சென்னையைத்தான் சொல்லவேண்டும். கொல்லும் கூவம் ஒன்று போதும். ஒருமுறை பணம் மாற்ற ஒரு நண்பர் என்னை ஓரிடத்துக்கு மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் சென்றார். அவர் ஒரு பேராசிரியர். அவர் கடந்து போனது கூவம் நதியோரத்தில். அதனை எப்படி நதி என்று சொல்வது? என் விதி.
 ஒரு லட்சம் பேரின் ஓராண்டு நொதித்த மலநாற்றாம் தாங்க முடியவில்லை. கூவம் ஓரத்தில் குடியிருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் என்றறிக. குடிக்கவும் குளிக்கவும் அதனைப் பயன்படுத்தும் சேரி மக்களைப் பார்த்து குறுகிப் போனேன். வழி நெடுக்க தெருவில் மலம் கழிக்கும் சிறார்கள். அதவும் சேரி மக்கள் அடுப்பு மூட்டிச் சமைக்கும் இடத்தருகே.
என்னை ஏற்றிவந்த பேராசிரியருக்கு அதெல்லாம் சாதாரணக் காட்சி. மல நாற்றம் கூடவா பழகிப்போனது ? என்று தெரியவில்லை. நீங்கள் நம்பினால் நம்புங்கள் இதனை எழுதும் நேரத்திலும் அந்த துர்நாற்றம் என் மூக்கில் அலசியப் போனது. எத்தனையோ  நூறாண்டுகள் கழிந்தும்  ஒரு தேசத்தின் அடிப்படை இயற்கை வளத்தை பாதுகாக்க முடியவில்லையென்றால் என்ன அரசாங்கம் அது? நடிகர்கள் ஆண்ட லட்சணம் இப்படித்தானா?  இதுதானோ ? இதில் நான் அரசியலுக்கு வருவது கடவுளிடமுள்ளது என்று குழப்பும் ரஜினிவேறு.
தமிழ்ச்சினிமாவே ஒரு கூவம்தானே! மக்கள்தான் பாவம்!

கட்டுரை திசைமாறி எங்கோ போகிறது. நம் போதாமையைதான் இந்த வழித்தவறலுக்குக் காரணம்.

நதி அகன்று சலசலத்து ஓடியது. உல்லாசக் கப்பலகளில் சுற்றுப்பயணிகள் இருந்தனர். இரு புறமும் அழகிய வீடுகள். கடைகள் கட்டடங்கள். ஒரு பாலத்தில் பூட்டுகள் பூட்டப்பட்டுக் கொத்துக்கொத்தாய்த் தொங்கின. அதில் பெயர்கள் எழுதப் பட்டிருந்தன. அது காதலைப் பூட்டிவைத்த பூட்டு. காதலர்கள் இணைந்துவிட்டால் இதனைச் செய்கிறார்கள். அங்கேயும் மூட நம்பிக்கை வளர்ந்துதான் இருக்கிறது. பூட்டுக் கலாச்சாரம் ஐரோப்பிய நாடுகள் முழுதிலும் பார்த்தேன்.

சமீபத்தில் எங்கோ ஒரு நாட்டில் பூட்டுகளாலின் சுமை தாங்கமலேயே  பாலம் சரிந்திருக்கிறது என்று படித்தேன்.
சென்னையில் நதியே  கூவமாகச் 'சரிந்துவிட்டதை' ஒப்பிடும்போது பாலம் சரிந்தால் பரவாயில்லை?




கொலிசியம் பார்த்து திரும்பி வந்த போது, நாங்கள் தங்கியிருந்த மாஸ்சலா விடுதிக்குக் கட்டடத்தின் கீழ்த் தளத்திலேயே ஒரு உணவகம் இருந்தது. அதைக் கடந்துதான் சென்ட்ரல் ஸ்டேசனுக்குச் செல்லவேண்டும். எங்கள் மூவர் கண்ணிலேயும் படாமல் இருந்திருக்கிறது அந்த பிரியாணி உணவகம்.
 நம்ம ஊர் நாசி காண்டார் கடைகள் போலவே விதம் விதமாய்ச் சமைத்து வைத்திருந்தார்கள் . நெடுநாள் சோறையே காணாதது போல வயிறாறச் சாப்பிட்டோம். விலை அதிகமில்லை அங்குள்ள இத்தாலிய உணவின் விலையை ஒப்பிடும்போது. நாங்கள் மட்டுமல்ல மற்ற சில பாக்கிஸ்தானிய, வங்காள  , இந்திய நாட்டவரும் அங்கே நோண்பு திறந்து உண்டார்கள்.
கொலிசியம்

சுற்றுப்பயணப் பேருந்தின் விண்பார்க்கும் மேல்தளம்.
 
கொலிசியத்தில் சுற்றிச்சுற்றி வந்து பயணிகளுக்கு உதவும் பணியாளர்கள்
அன்று இரவு மீண்டும் விடுதியில் தங்கிவிட்டு புல்லட் டிரேய்ன் ஏறி பிசா சாய்ந்த கோபுரம் பார்க்கவேண்டும்.
கூவம் கதையில் கொலிசியம் மறந்து போனது. அது பற்றி நாளை எழுதுகிறேன்.

தொடரும்.....

Comments

செம கலாட்டா போங்க சார்.. கூவம் பாவம்.. வயிறு வலிக்கச்சிரித்தேன்.. ஹாஹாஹா.. நாமெல்லாம் சோத்துக்கட்சி.. உஸ்ஸ் வெளியே சொல்லப்படாது.

கொலிஸியம் பற்றிச்சொல்லுங்கள் சார். ஏன் அது உலக அதிசயமாகத் திகழ்கிறது?.
வணக்கம்
ஐயா.

விளக்கமும் படங்களும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த