Tuesday, November 27, 2012

மலாய்க்காரர்கள் எந்தப் பக்கம்?


                                                   அன்வர் இப்ராஹிம் PKR கட்சி

                                     
                                        மஹாதிர் முகம்மது முன்னால் பிரதமர்.
நிக் அசிஸ் PAS கட்சி

  
            இங்கே நான் மலாய்க் காரர்கள் என்று சொல்வது பெரும்பாலான மலாய்க்காரர்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

            மலேசியாவில் மாலாய்க் காரர்கள் தங்கத் தட்டில் வைத்து பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சலுகைகளை பிற இனத்தவர் வாயில் எச்சில் ஊற பார்த்துக்கொண்டிருக்கும் வகையிலான் கல்வி, சமூக, பொருளாதார் மேம்பாட்டுச் சலுகைகள்! பல இன மக்கள்  வாழும் நாட்டில் இதனை ஒளிவுமறைவில்லாமலேயே அரசு செய்து வருகிறது என்றால் அதன் பலம் குறித்துச் சொல்ல வேண்டிய வசியமில்லை!. இதனால்தான் இவ்வரசு தன்னைத் 'transparent' என்று பிரகடனப் படுத்திக் கொள்கிறதோ என்னவோ!! அதனைச் சட்டப் படியும் செய்து வருகிறது. மலாய்க்காரர்கள் (அதாவ்து பூமியின் புத்திரர்கள்)  என்ற பிரத்தியேக சலுகை பெற்ற குடிமக்கள் என்ற ரீதியில் மலேசியாவில் கிட்டதட்ட அறுபத்தைந்து விகிதம் மலாய்க்காரர்களே வாழ்கிறார்கள். எஞ்சிய இடத்தைச் சீனர்கள், இந்தியர்கள், இபானியர்கள், கடாசான்கள், பிற இனத்தவர்கள் என பகிர்ந்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட இனம் ஆக உயர்ந்த எண்ணிக்கையில் வாழும பட்சத்தில் ஆட்சியில் அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளின் ஜனநாயகப் போக்கு வேறு. ஒபாமா மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது கருப்பர்கள் மட்டுமே வாக்களித்ததால் அல்ல! அங்கே ஜனனாயகம் என்பது
அறிவார்ந்த தளத்தில் இயங்கக்கூடியது என்று நான் புரிந்துகொள்கிறேன். இங்கே அப்படியில்லை ஜனனாயகம என்பது இன அடிப்படையிலானது. மலாய்க்கார இனம் அதிகப் படியாக வாழ்வதால் இதனை மலாய்க்கார ஜனநாயகம் என்று சொல்லலாம்.

               சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே அடித்தளமிட்டுக்கொண்ட UMNO (UNITED MALAYAN NATIONAL ORGARNAZATION) மாலாய்க்கார இனத்தால் ஆன கட்சி. அது விடுதலைக்கு வித்திட்ட கட்சி. அதன் காரணத்தால்  தொடக்கத்தில் அது  பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது.  மலாய்க் காரர்களில் பெரும்பாலும் அதில் அங்கத்தினர்களாக இருந்தார்கள். அதன் அடித்தளம் பலமிக்கதாக இருந்ததால் நாற்பது ஆண்டுகளாக அது அசைக்க முடியாத இடத்தில் இருந்தது.
         
          ஆனால் எதிர்க் கட்சிகள் இன்றைக்கு முன்புபோல பலவீனமாக இல்லை. மலாய்க்காரர்கள் தங்கத் தட்டில் வைத்துப் பார்க்கப் பட்டாலும் அரசாங்கம் தூய்மையான அரசாங்கமாக இல்லை என்ற குற்றச்ச்சாட்டாலும், தூய்மையான அரசாங்கமாக இருக்கவேண்டுமென்றால் அது இஸ்லாம் கொள்கைகளைக் கறாராகப் பின்பற்றினால் ஆகக் கூடிய காரியம் என நம்புகிறது. இப்படி நம்புவதற்கு ஒரு முகாந்திரக் காரணம் ஒன்று சாட்சியாய் நிற்கிறது. அகில மலேசிய இஸ்லாமியக் கட்சி என்று சொல்லப்படும் PAS கட்சியின் ஆட்சியில் இருக்கும் கிளந்தான் மாநிலம் ஒரு தூய்மையான் அரசாக இன்று வரை நிலைக்கிறது. அதன் முதலமைச்சரை ஒரு மதகுருவாகவே மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.ஆகவே மலாய்க்காரர்களின் நம்பிக்கை கிட்டதட்ட இந்த நேர்மையான ஆட்சியால் ஈர்க்கப் பட்டு தகவமைக்கப்பட்டது.
     
          ஆனால் UMNO வின் தலைவர்கள் அப்படியல்ல. பல அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் கையை அழுக்காக்கிக் கொள்ளாமல் பலர் ஆட்சி செய்ததில்லை. அவர்களைப் பாதுகாக்கக்கொள்ள மேல்மட்டத் தலைவர்கள் இருப்பதால். அதனை ஊழல் நிறைந்த ஆட்சியாகவே மக்கள் அவதானிக்கிறார்கள். நாடு விடுதலை அடைந்த நாள் தொட்டு , அதாவது கிட்டதட்ட 57 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே கட்சி (தேசிய முன்னணி) ஆட்சி பீடத்தில் இருப்பதால் அதற்கு அகந்தை கூடிவிட்டிருக்கிறது .அதனால் ஊழலுக்கும் இடம் கொடுத்துவிட்டது, இந்தத் தேர்தலில் மாற்று அரசியல் கட்சிக்குப் பாதை விடுவோமே என்று மக்கள் நினைக்கிறார்கள்.    ஊழலற்ற அரசாங்கத்திற்கு இஸ்லாம் கொள்கை அடிப்படையில் ஆட்சி நடக்கவேண்டும். அந்தத் தூய்மையான் ஆட்சி செய்வதற்கு எல்லாத் தகுதிகளும் எதிர்க் கட்சிக்கு உண்டு என்றும் கருதுகிறார்கள். பினாங்கில் ஆட்சி செய்யும் DAP யும் , கிளந்தான் மாநிலத்தை ஆட்சி செய்யும் PAS சும், சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் PKR ரும் கூட்டணி அமைத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள். இந்தக் கூட்டணி ஆட்சியில் ஊழல் இல்லையே என்று வியக்கிறார்கள் நாட்டு மக்கள். எனவே பெரும்பாலான பெருக்கல் குறிகளைப் பெறப்போகும் கட்சியாக எதிர்க் கட்சி விளங்குகிறது.
  
            ஒரு நாற்பது வருடத்துக்கு முன்னர்  இருந்த மலாய்க்காரகள் மனநிலை இன்று இல்லை. அரசாங்கக் கட்டுப் பாட்டில் இருக்கும் ஊடகச் செய்திகளே மலாய்க்காரகளின்  அபிப்பிராயத்தைக் கட்டமைத்து வந்தன. ஆனால் மின் ஊடகங்கள் பெருகி கை அடக்கத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறித்தான் விட்டது. வலத்தலங்கள், ட்டுவீட்டர்கள், முகநூல்கள், மின்னஞ்சல்கள், மின் செய்தித் தாட்கள் தரும் தகவல்களை அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். தொடக்கத்தில் இவை வம்படியான செய்திகள் கொண்டுள்ளதால் மக்கள் பெரிதும் கவரப்பட்டாகள் என்றுதான் கருதவேண்டும்.  ஆனால்  இவற்றுக்குள் (பெரும்பாலும) பதிவாகும் நிதர்சனத் தகவல்களை  நம்பி அதனால் பெரிதும் ஈர்க்கப் பட்டார்கள் என்று சொன்னால் தப்பாகாது.
      
        இன்னொரு முக்கிய தகவல் ஒன்றுண்டு.
 
       தொடக்க காலத்தில், அதாவது  நாடு விடுதலை அடைந்த காலத்தில் என்பது விகிதம் மலாய்க்காரர்கள் UMNO வின் பக்கமே இருந்தார்கள். இருபது விகிதம் பாஸ் கட்சியை நம்பினார்கள். இன்றைக்கு அவர்கள் குத்துமதிப்பாக முப்பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள். முப்பிரிவுகளும் கிட்டதட்ட சம பங்கு மாலாய்க்காரர்கள்  தன்னகத்தே கொண்டுள்ளது என்று கூறலாம்.
 
        UMNO கட்சியில் ஒரு முப்பத்து மூன்று விகிதமும். UMNO இன்றைக்கு ஆளும் தேசிய முன்னனியில் முக்கியக் கட்சியாகும். அதுதான் அரசாங்கத்தை நிர்ணயிக்கிறது என்று சொன்னாலும் பிழையில்லை.

         PAS என்ற முக்கிய எதிர்க்கட்சியில் இன்னொரு 33 விகிதமும்;
   
         PKR (மக்கள் நீதிக் கட்சி) என்ற இன்னொரு எதிர்க்கட்சியில் 33 விகிதமாக பிரிந்து கிடக்கிறார்கள்.
 
         DAP எதிர்க் கட்சி கூட்டணியிலும்( பெரும்பாலும் சீனச் சமூகத்தினரைக் கொண்டது) சிறிய எண்ணிக்கையில் மலாய்க்காரர்கள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். சிலர் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருக்கிறார்கள்.
   
        இதில் PAS PKR என்ற இரு கட்சிகளும் எதிர்க்கட்சி கூட்டணியில் சங்கமித்துக் கொண்டன. எனவே இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் மலாய்க்காரர்களின் கை ஓங்கித்தான் இருக்கிறது.

          PKR கட்சி அன்வர் இப்ராஹிமைத் தலைவராகக் கொண்டுள்ளது. அன்வர் இப்றாஹிம் முன்னர் UMNO  ஆளுங்கட்சியில் இருந்தவர் என்பதும் , அவர் துணைப்பிரதமராக இருந்தார் என்பதும் புதிய செய்தியல்ல. அப்போது அவர் ஒரு தூய்மையான அரசியல் வாதியாக இருந்ததே 'பெரும் குற்றமாக' கருதப் பட்டது. அப்போது பிரதமராக இருந்த மஹாதிர் தன்னைவிட அதிக செல்வாக்கில் இருந்த அன்வரின் வளர்ச்சியைப் பிடிக்கவில்லை. அவரை வேரறுக்கு முயன்றார். அதனால் அவர்  ஓரினப் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் சிறைக்குள் தள்ளப்பட்டார். (மலாய்க்காரர்கள் இதனை நம்ப மறுத்ததே மஹாதீரின் செல்வாக்கு சரிந்து ஆட்சியிலிருந்து விலகியதற்குக் காரணம்) ஆறாண்டும் சிறை வாசத்துக்குப் பின் இப்போது பலம் வாய்ந்த எதிர்கட்சி கூட்டணியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார் அன்வர் இப்ராஹிம்.

          ஆளுங்கடசி (தேசிய முன்னணி- BARISAN NASIONAL) தான் இழந்ததை (வாக்குகளை) மீட்டெடுக்கு தவமாய் தவமிருக்கிறது. அதிலும் பிரதமர்  நஜிப் படாத பாடு படுகிறார். சீனர்களின் வாக்கையும் இந்தியர்களின் வாக்கையும் சேகரம் செய்ய வரலாற்றிலேயே இல்லாத அலவுக்குத் தேசிய முன்னணி  தராத சலுகைகளை அறிவித்த வண்ணமும் , அவற்றை நிறைவேற்றிய வண்ணமுமாக இருக்கிறார்.

          அரசாங்கத்தின் கடைசி நேர அறிவிப்புக்களும் வாக்குகள் எந்தப் பெட்டிக்குள் போகும் என்பதை நிர்ணயிக்கும்.

Wednesday, November 7, 2012

மலேசிய சீனச் சமூகம் யாருக்கு வாக்களிக்கும்?


                            ( பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்)
 
             (லிம் குவான் எங்கின் தந்தை லிம் கிட் சியாங். DAP கட்சியின் முக்கிய  தலைவர்களில் ஒருவர்)

       மலேசியாவில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப் படலாம். ஐந்து ஆண்டுக்கால ஆட்சி காலக்கட்டம் நிறைவுறும் தருணம் நெருங்கிவிட்டது. நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு தேர்தல் அறிவிப்புக்கு மக்கள் ஆர்வத்தோடு காத்துக்கிடக்கிறார்கள்.  தேசிய முன்னணி ஆளுங்கட்சியே அந்த அறிவிப்பைச் செய்யும். அதிலும் பிரதமரிடம்தான் அந்த ‘வெட்டோ’ அதிகாரம் உள்ளது. அவர் சரியான தருணத்துக்கு காத்திருக்கிறார் அல்லது சரியான தருணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

       கடந்துவிட்ட ஐம்பது ஆண்டுகளைப் போலல்லாமல் இம்முறை கடும் போட்டியை எதிர்கொண்டு நிற்கிறது தேசிய முன்னணி. இது சோதனை மிகுந்த காலக் கட்டம் அதற்கு. நாடு பிரிட்டிசாரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட நாள் தொடங்கி இன்றைய தேதிவரை அக்கட்சியே ஆட்சியைப் பிடித்து அசைக்க முடியாத அரசாங்கமாக தன்னை நிறுவிக்கொண்டு வந்தது இந்த ஐம்பது ஆண்டு காலமாக. அது ஒரு சாதனைதான். ஆனாலும் அது ஒரு வரலாறாகிவிடும் வாய்ப்பும் மிக அண்மையில் உள்ளது என அரசியல் பார்வைகள் அழுத்தமாகவே பதிவு செய்து வருகிறது. 

       ஆனால் இன்றைக்கு நிலைமை தலை கீழ். தேசிய முன்னணி ஆட்சி ஊழல் மலிந்துகிடக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகள்.  இதுநாள்வரைச் சற்று பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியில் துணைப் பிரதமாராய் இருந்த அன்வர் இப்ராஹிம் குதப் புணர்ச்சி குற்றச்சாட்டில் ஆறாண்டுகள் சிறைக்குள் தள்ளப்பட்டு வெளியே வந்தார். சிறையில் இருக்கும் போதே  நீதிக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அதற்கு தன் மனிவியையும் தன் ஆதர்ஸ தோழர்களையும் முன்னிலை வக்கிக்கச் செய்தார். முன்னர் அவர் பக்கம் இருந்த ஆதரவாளர்களின் அரசியல் பலத்தோடும் தான் விட்டுச் சென்ற செல்வாக்கை மீட்டு சக்திவாய்ந்த எதிர்கட்சியாக பரிணமிக்கச் செய்தார். அவரின்  கட்சியின் தோற்றத்துக்குப் பிறகு, பலவீனமாகக் கிடந்த எதிர்க் கட்சிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சி, புதிய ஊக்கியாக அமைந்தது அதன் தோற்றமும் குறுகிய கால வளர்ச்சியும்.

     இஸ்லாமிய கோட்பாட்டோடு இயங்கி வந்த ‘பாஸ்’ அரசியல் கட்சியும் (முழுக்க முழுக்க மலாய்க்காரர்களை அங்கத்தினர்களாகக் கொண்டது) பெரும்பாலும் சீனர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஜனனாயக செயல் கட்சியும் (DAP) அன்வரின் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டது. அதற்குப் பிறகு எதிர்க் கட்சி ஆளுங் கட்சிக்கு ஈடான பலத்தோடு இயங்க ஆரம்பித்தது. 2008ல் நடந்த 12வது பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பலத்தைத் தற்காத்துக் கொள்ளத் தவறியதற்கு இந்தப் புதிய கூட்டணியும் ஒரு முக்கியக் காரணம்தான். ( இந்திய இளைஞர்கள் சிலர் முன்னெடுத்த ஹிண்ட்ராப் போராட்டம் இதற்கு முக்கிய முன்னோடி என்றும் கொள்ளலாம்).

       மலேசிய அரசியல் கட்டமைப்பை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு இங்கு இயங்கும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இனரீதியானது என்று புலப் பட்டுவிடும். பாஸ் மலாய்க் காரர்களாலும், மக்கள் முற்போக்குக் கட்சி சீன இனத்தாலும், நீதிக் கட்சி மலாய்க் காரர்களாலும், ம.இ.கா இந்தியர்களாலுமாக இனரீதியான அமைப்பைக் கொண்டே இயங்கி வருகிறது. ஆளுங்கட்சி கூட்டணி மட்டுமல்ல எதிர்கட்சி கூட்டணியில் இயங்கும் கட்சிகள்கூட உள்ளபடியே இனரீதியான அமைப்பைக் கொண்டதுதான். மலேசியாவில் இதனைத் தவிர்க்க முடியாது. தன் இனமும் மற்ற இனத்துக்கு ஈடாக மேம்படவேண்டும் என்ற நோக்கமே இனக் கட்சியாக தகவமைப்புக்கான முக்கியக் காரணி என்பதை சுட்டாமல் சுட்டுகிறது அரசியல் கட்சிகளின் கட்டமைப்பு. இந்தப் போக்கு அரசியல் சாசன வரையரைக்கு முற்றிலும் முரணானது. தேசிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கம் இனங்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பேணுதல். அரசியல் கட்சிகளின் உள் கட்டமைப்பே இனம் சார்ந்து இருப்பதால் இனப் புரிந்துணர்வை கொண்டு வருவது எங்ஙனம்? நாடு சுதந்திரம் அடைந்த நாள் தொட்டே அரசியல் இயக்கங்கள் இப்படித்தான் இயங்கி வருகின்றன. இது ஒரு மரபாகிவிட்டது என்றும் சொல்லலாம். என்னதான் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சி கூட்டணி கட்சிகள் போல முழுக்க முழுக்க இன ரீதியாக அமைந்தது அல்ல என்று சொல்லி வந்தாலும், அதன் உள் கட்டமைப்பு , அதிகாரம் எல்லாம் ஒரு அந்தந்த இனத்தின் பிடியிலேதான் உள்ளது.

      சீனர்களைக் கொண்டு இயங்கி வரும் ஜனனாயக செயல் கட்சிக்கு (DAP), ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் மலேசிய சீனர் கட்சியை விட கூடுதல் பலம்வாய்ந்து திகழ்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. ஆளுங்கட்சிக்குள் இருந்துகொண்டு சீன இனத்தின் அடிப்படைத் தேவைகளை அதனால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை இருந்துகொண்டே இருந்ததை மிகப் பெரிய பின்னடைவாகவே சீனர்கள் அவதானித்து வந்தனர். மலாய்க்கார இனத்தைப் பொருளாதாரத்திலும் கல்வியிலும் நாட்டின் பலம் வாய்ந்த இனமாகக் ஆளாக்கவேண்டும் என்ற கோட்பாட்டோடு இயங்கி வந்த ஆளூங்கட்சி குறிப்பாக அம்னோ( UNITED MALAYAN NATIONAL ORGANISATION- முழுக்க முழுக்க மலாய்க் காரர்களை அங்கத்தினர்களாகக் கொண்டது) பிற இனத்தின் தேவைகளைப் புறந்தள்ளவேண்டிய நிர்பந்தத்துக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டது. (உயர கல்விக்கூட இடங்களையும், வனிகத்துக்கான வாய்ப்புகளையும் பெருவாரியாக தன் இனத்துக்கே கொடுத்து உதவியது.) மறைமுகமாக பிற இனத்தின்- சீன இந்திய இனத்தின் ‘இடங்களை’ கபலீகரம் செய்து அவற்றை தன் இனத்துக்கு தாரை வார்த்து தான் திட்டமிட்டபடி மலாய் இனத்தை இன்றைக்கு மேல்நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த ஐம்பது ஆண்டுகளில் மலாய் இனம் அடைந்த முன்னேற்றம் ஒரு சாதனையென்றே வர்ணிக்கிறார்கள். ஆளுங்கட்சிக்குள் கூட்டணிக் கட்சியாக இருந்த சீன இந்திய இன அடிப்படையிலான கட்சிகள் நடப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டே ‘சும்மா’ இருந்துவிட்டது. UMNO அதிகார பலமே இதற்குச் சான்று. அரசின் இந்த இனவாதப் போக்கால் ஒரு இனம் விரைந்து முன்னேற்ற மடையவும், பிற இனங்கள் பின் தள்ளப்படவும் முக்கியக் காரணமாக இருந்துவிட்டது. இது சீனர்களிடையே நீரு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தது. அதனால் வெகுகாலமாகவே தங்கள் வாக்கை எதிர்கட்சியாக இருக்கும் DAPக்கு ஆதரவாகவே அளித்து வந்தது. இப்படித்தான் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் MCA மெல்ல தன் பலத்தை இழந்துகொண்டிருந்தது.

      சீன இனம் மலேசியாவில் வனிகத்தில் ஈடுபட்டு தன்னை வலுப் படுத்திக் கொண்ட இனம். கல்வியிலும் மற்ற இனத்தைக் காட்டிலும் பல படிகள் சிறந்தே விளங்கியது. இதற்கு அவர்களிடமிருந்து பணபலம் ஒரு காரணம். மாலாய்க் காரர்களை வாழ்வு நிலையை மேபம்படுத்த சீன இனத்துக்கு கிடைக்கவேண்டிய பொருளாதார கல்வி வாய்ப்புகளை மலாய் இனத்துக்கு தாரை வார்த்து சீனச்சமுக முன்னேற்றத்தைக் கட்டுப் படுத்த காரணமாக அமைந்துவிட்டது. இன்னி ஒரு மாற்று அரசு மட்டுமே இனத்தை மேம்படுத்த முடியும் என்ற எண்ணம் சீனர்களிடம் ‘ரகசியமாகவே’ இருந்து வந்தது. இந்த எண்ணம் மிகத் தெளிவாக பதிவானது 2008ல்நடந்த தேர்தல் முடிவுகளில். DAP அரசியல் எதிர்கட்சி சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பல இடங்களில் வென்றது மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியின் பிடியிலிருந்த பொருளாதார பலம்மிக்க பினாங்கு மாநிலத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியை அமைத்துக் கொண்டது. அம்மாநிலம் இப்போது முன்பைவிட சிறப்பாக ஆட்சி செய்யப்பட்டு வருவதாக சமீபத்தில் வெளியான தேசிய கணக்காய்வுக் கழகம் அறிவித்துள்ளது.

    மலேசியக் மக்கள் தொகையில் சீன  இனம் வெறும் முப்பது விகிதமே. அதில் எதிர்கட்சி பினாங்கில் ஆட்சி அமைத்துக்கொள்ள ஆளுங்கட்சியை புறக்கணித்த சீனர்களின் எண்ணிக்கையை நம்மால் ஊகிக்கமுடிகிறது.  DAP யின்  இந்த முன்னேற்றத்துக்கு அன்வர் தலைமையில் இயங்கும் கட்சியோடு கூட்டணி சேர்ந்ததும் ஒரு முக்கியக் காரணம்தான் எனலாம். கண்டிப்பாக மலாய்க்கார சீன இனமும் வாக்களிக்காமல் எதிர்க்கட்சி இந்த இடத்தைப் பிடித்திருக்க முடியாதுதான். இந்த வெற்றி இனவாத அரசுக்கு எதிரான வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில்.. மற்ற எல்லா மாநிலத்தையும் மலாய்க்காரகளே தலைமைத்துவம் ஏற்றிருந்தார்கள். ஆளுங்கட்சியின் அபிலாசையும் அதுதான். எதிர்க் கட்சி பினாங்கைக் கைப்பற்றுவதற்கு முன்னர் ஆளுங்கட்சி கூட்டணியைச்  சேர்ந்த இன்னொரு (GERAKAN) கட்சிதான் பினாங்கில் ஆட்சியை அமைத்து ஆண்டு வந்தது. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரக் கட்டுப் பாட்டில் அதன் இயக்கம் அமைந்ததால் பெரும்பாலான சீனர்களுக்கு அந்த வகை அதிகாரத் தோரணை பிடிக்கவில்லை. பினாங்கை சீனர்களின் கையிலிருந்து மலாய்க்கார ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற ஆளுங்கட்சியின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் சீன சமூகத்தை விழிப்புறச்செய்தது. அதன் காரணத்தாலேயே GERAKKAN தொடர்ந்து ஆட்சி அமைத்தால் அது சீன தலைமைத்துவத்தை வேரறுத்துவிடும் என்ற அச்சம் காரணமாகவும் DAP க்கு வாய்ப்பைத் திறந்துவிட எண்ணம் கொண்டது ஒட்டுமொத்த சீன சமூகமும்..

    பினாங்கு மாநில முதலமைச்சரின் அபாரமான ஆட்சித் திறன் இனி பினாங்கு ஒருபோதும் ஆளுங்கட்சின் கைக்கு நழுவ முடியாத சக்தியோடு பெற்றுத் திகழ்கிறது. ஆளுங்கட்சியால் கொண்டுவரத் தவறிய முன்னேற்றங்களை எதிர்க் கட்சிக் கூட்டணி கொண்டு வந்து காட்டியதால் எதிர்க் கட்சியின் திறமை மேலான நம்பிக்கை இன்றைக்கு வலுவடைந்து வருகிறது. சீன இனத்தைச்  சேர்ந்த லிம் குவான் எங் முதல்வாரய் இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி காட்டிய பின்னர் இதனைப் பெருமையாகவே கருதி மெய் சிலிர்த்துப் போயிருக்கிறது சீனச் சமூகம். இதனை எளிதில் விட்டுக்கொடுத்துவிடும் மன நிலையில் இப்போது சீன இனம் இல்லை!

  மற்ற இனத்தைக் காட்டிலும் இன்றைக்கு சீன இனம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் மேம்பட்டுத் திகழ்ந்தாலும் அது தன் இடத்தைத் தற்காத்துக் கொள்ளவும், மேலும் முன்னேற்றம் அடையவும் லிம் குவான் எங் போன்ற தலைவர்களைப் பெரிதும் ஆதரிக்கவே செய்யும். அவர் போன்ற தலைவர்கள் அவர்களுக்கு இப்போது அதிகம் தேவை. சட்டமன்ற நாடாளுமன்ற இடங்களில் தன் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய சீன இனம் முனைப்போடு இயங்கவே செய்யும்.

     ஆளுங்கட்சியாக இருக்கும் தேசிய முன்னணியினால் இழந்த பலவற்றை , மீட்க எதிர்க் கட்சியினால் மட்டுமே முடியும் என்று அவர்கள் நம்பிக்கை சரியானதே என நாமும் நம்பலாம். இந்த முறை DAP கைப்பற்றப் போகும் இடங்களின் எண்ணிக்கையை வைத்தே ஆட்சியை அமைக்கப் போவது ஆளும் தேசிய முன்னணியா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியாக பரிணமிக்கும் PAKATAN RAKYAT என்று சொல்லக் கூடிய மக்கள் கூட்டணியா என்பதை உறுதி செய்ய முடியும்.

Wednesday, October 31, 2012

இந்தியர்களின் வாக்கு வேட்டைக்காக நஜீப்பின் அரசியல் வியூகம்


                                                 Najib                                        Anwar
 
             இன்றைய மலேசியப் பிரதமர் நஜிப் முந்தைய பிரதமர்களைவிட சற்று வித்தியாசமானவர். எந்த நேரத்திலும் நாடு எதிர் நோக்கியிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற அவர் எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் முந்தைய எந்தப் பிரதமரும் சந்தித்திராதது. 2008க்குமுன்னர் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தை எளிதில் கைப் பற்றி ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்திக் கொண்டது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறு வடிவம் கொண்டு அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.   
   
               முந்தைய காலங்களைவிட தற்சமயம் எதிர் கட்சிகள் குரல் ஓங்கியிருப்பதே காரணம். எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலில் ஜெயிப்பதற்கான அரசியல் வியூகமும் முன்னகர்வும் பிரதமரை மிகுந்த கவலைக் குள்ளாக்கியிருக்கிறது. அதனாலேயே அவர் தன் அரசாங்கத்தின் மரபான இனவாத அரசியல் பாணியைக் கைவிட்டு ‘எல்லாருக்கும் எல்லாமும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொண்டு கவனமாகக் காயை நகர்த்தியபடி இருக்கிறார். 2008ல் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு , எதிர்கட்சி கிட்டதட்ட ஆட்சியைக் கைப்பற்றிவிடக்கூடிய சாத்தியங்கள் தெரியத் தொடங்கின. அதன் நீட்சியாக இந்தத் தேர்தல் எதிர்க் கட்சியின் கையில் விழுந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். அரசியல் கருத்தாக்கங்களும் ஆரூடங்களும் இந்த எதிர்பார்ப்பைத்தான் நிறுவுகின்றன.  அப்படி அரசு எதிர்கட்சி  ஆட்சியை வென்றால்   இதுவரை   மலேசிய வரலாறு கண்டிராத அதிர்ச்சி தேர்தல் முடிவாகத்தான் அது அமையும். (நாடு சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு இன்று வரை தேசிய முன்னணியே ஆட்சியைக் கைப்பற்றி தன் ‘இஷ்டப்படி’ ஆண்டு வந்தது.)
       
             மக்களின் எண்ணமும் பெரும்பாலும் எதிர்கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டிருக்கிறது. நான் புழங்கும் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற வாய்மொழி தகவல் இது . இது வாய்வழித் தகவல்யதானே என்று  ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் இணையம், டிவீட்டர், முகப் பக்கம், அனைத்துலக ஊடகத் தகவலின் அடிப்படையில் இதனை அருதியாக கட்டியங் கூறலாம். இம்முறை எதிர்க் கட்சியின் வாய்ப்பு கூடுதல் பிரகாசத்தோடு ஒளிர்கிறது.
      
             2008ல் மலேசிய இந்தியர்கள் பெரும்பாலும் எதிர்க் கட்சிக்கே வாக்களித்தன. ஹிண்ட்ராப் போராட்ட அலை அவர்கள் மடை மாற்றம் செய்துவிட்டிருந்தது ஒரு முக்கியக் காரணம். இந்தியர்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்யாமல் இருந்ததே அதற்குக் காரணம். அதனைக் கறாராக முன்னெடுத்த ஹிண்ட்ராப் போராட்டக் குழுவுக்கு இன்றைக்கும் மக்கள் சிலர் நன்றி பாராட்டி நெகிழ்ந்து போகின்றனர்.  அந்தப் போராட்டத்தின் பலனாக இன்றைக்கு இந்தியச் சமூகம் இழந்த பல வாய்ப்புகளை மீட்டுக்கொணர வழிவகுத்திருக்கிறது. ஆனாலும் ஐம்பதாண்டுகள் இழப்பை இந்த நான்கு ஆண்டுகளில் சரி செய்துவிட முடியுமா என்ற எண்ணம் படித்தவரிடையே எழும் முகாந்திரமான கேள்வி.
   
              நஜீப் பிரதமராக வந்தவுடன் சமூகங்களிடையே நிலவிய கல்வி, சமூக , பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் 2008 தேர்தல் முடிவை நிர்ணயித்துவிட்டது என்பதை உணர்ந்துவிட்டிருந்தார். அதிலும் ஹிண்ட்ராப் இயக்கப் போராட்டம் இந்திய இனத்துக்கு மட்டுமின்றி மற்ற இனத்தையும் உசுப்பி விட்டு இந்த இனப் பாகுபாட்டுப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டிருக்கிறது என்பதை படிப்பினையாக் கொண்டே நஜீப் இந்திய சீன சமூகம் எதிர் நோக்கிய பிரச்னைக்கு தீர்வு காண, மிகுந்த முனைப்போடு செயல் பட்ட வண்ணம் இருக்கிறார். ‘என்ன வேண்டும் கேள் மனமே’ என்பதோடு நின்றுவிடாமால் ‘நீங்கள் தட்டவே தேவையில்லை நான் தருவேன், நீங்கள் கேட்கவே தேவையில்லை நான் வருவேன்,’ என்ற எதிர்கொண்டு வருவதும், பூட்டிக்கிடந்த வாசலைத் தட்டித் திறந்து உதவி செய்வதுமாய் இருக்கிறார் நஜிப். இதனால் சீனச் சமூகம் உச்சி குளிர்ந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. கொடுப்பதெல்லாம் வாங்கிக் கொண்டு பெருக்கல் குறியை மட்டும் யாருக்குப் போடுவதென்ற ஒரு தீர்க்கமான குறிக்கொளோடுதான் இருக்கிறது. பினாங்கு மாநிலம் எதிர்க் கட்சியான ஜனனாயக செயல்கட்சியின் ( பெரும்பாலும் சீனச் சமூகத்தினரைக் கொண்ட அரசியல் கட்சி)  கையில் விழுந்த நாள் தொட்டு அது காட்டிவரும் முன்னேற்றம் , முந்தைய ஆளுங்கட்சி அரசின் பலவீனங்களைக் துல்லியமாக அடையாளம் காட்டி தன் இருப்பை ஸ்திரப் படுத்திக் கொண்டிக்கிறது. அதனைச் சீன சமூகம் அங்கீகரித்து தங்கள் சமூகத்தின் கெட்டிக்காரத்தனத்துக்கான நிரூபனமாக நிறுவிய கர்வத்தோடு தன்னை பிற இனத்திடம், குறிப்பாக மலாய்க்கார இனத்திடமும், பொதுமையில் மக்களிடமும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளத் தவறவில்லை. சீன சமூகம் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காது என்பதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று இது.
              
             ஆனால் இந்திய சமூகம் யாருக்கு வாக்களிக்கும் என்று என்னைக் கேட்டால் நான் ஆளுங்கட்சிக்குத்தான்  பெரும்பாலானோர் வாக்களிக்கப் போகிறார்கள் என்று சொல்வேன்.
   
               ஏன்? ஹிண்ட்ராப் போராட்ட உணர்வு மங்கிவிட்டதா என்ற கேள்வி இத்தருணத்தில்  கண்டிப்பாய் எழும். நான் அதற்கும் ஆம் என்றே பதிலுரைப்பேன்.
   
            அது எப்படி என்ற தொடர் வினாவைக் கேட்பீர்கள்.
    2008ல் நடந்த ஹிண்ட்ராப் இயக்கப் போராட்டம் இந்திய சமூகத்துக்கு அரசாங்கம் இழைத்த போதாமையை உள் நோக்கமாகக் கொண்டது. அரசாங்கம் இந்தியர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யாமையால் உண்டானது. ஆனால் இந்த நிலையை மெல்லக் கலைந்து வருகிறார் நஜீப். இனி அரசாங்கம் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்காது என்று உறுதிபடக் கூறியும், நடந்தும் வருகிறார் . (தேசிய முன்னணி வெற்றி பெற்ற பின்னர் என்ன நடக்குமென்று இங்கே நான் ஆரூடம் கூற விரும்பவில்லை) இன்றைக்கானத் தோசையை இந்தியர்களுக்குக்  கிழி படாமல் கொடுப்பதில் கூடுதல் கவனமாக இருக்கிறார் நஜீப். இது ராஜ தந்திரம் என்றும், ஓட்டு வேட்டை என்றும் குத்தலாகக் கூறுகிறார்கள் தெளிவுள்ளவர்கள். இந்தியர்கள் தெளிவுள்ளவர்கள் எத்தனை சதவிகிதம் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடும்! இப்படி ஒரு சமூகத்தின் கண்கள் திறக்கப் படாமல் இருந்ததற்கு காரணி யார் என்ற காரணமும் தெரியாதவர்கள் பெரும்பாலான இந்தியர்கள்.
  
                 அதனால்தான் சொல்கிறேன் இந்தியர் ஓட்டு ஆளும் தேசிய முன்னணிக்குத்தான். சரி இதற்காக நான் கூறும் காரணங்கள் ஒத்து வருகிறதா என்று பாருங்கள்.

1. புதிய பிரதமர் கேட்டதெல்லாம் கொடுக்கிறார். அரசாங்கம் தன் தவற்றை உணர்ந்துவிட்டது. இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற மனப்பாண்மை வளர்ந்து வருகிறது. அதற்கான நடவடிக்கை கை மேல் பலன் அளிக்கத் துவங்கியும் விட்டது.( ஒரு புதிய தமிழ்ப் பள்ளி கட்டுமானம் தொடக்கப் பட்டுவிட்டது, கெடா மாநிலத்தில்) முன்னர் அரசாங்கம் புதிய தமிழ்ப்பள்ளி நிறுவப் படுவதற்கான எந்த அக்கறையும் காட்டவில்லை. மறைம்கமாக அதனை முடக்கவே முன்நின்றது.

2. மன்னித்து குற்றங்களை மறந்துவிடும் மனப் போக்கு இந்தியர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. அதனால் பழையதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

3. இந்தியர்கள் அதிகாரத்துக்கு அடிபணிந்த மரபில் இருந்து வந்தவர்கள். ஒருவகையில் அதிகாரத்தின் கீழ் வாழ்வது பழக்கமாகிப் போய்விட்டது. தேசிய முன்னணி அதிகார அரசாங்கமாகத்தானே இருந்தது( இருக்கப் போகிறது .உள்நாட்டுப் பாது காப்புச் சட்ட, மலாய்ச் சமூகம் எஜமானச் சமூகம் என்ற கோட்பாட்டை வரையறுத்து வைத்து நிறுவ முனைவது) அப்படியானால் மலாய்ச் சமூகம் அதிகாரச் சமூகம் தானே?

4.,இந்தியரகள் பெரும்பாலும் அரசு சார்ந்த ஊடகத்தையே படிப்பவர்கள்.  தொலைக் காட்சி, வானொலி,  போன்ற மின் ஊடகங்களையும், செய்தித்தாட்கள் போன்ற அச்சு ஊடகங்களுமே உண்மையான தகவலைத் தரும் என்று நம்புபவர்கள். இன்றைக்கான நவீனத் தகவல் மையங்களான் அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அல்லது கால மாற்றத்துக்கு ஏற்ப நவீன ஊடக வாய்ப்பைத் தேடிப் போகாதவர்கள். எனவே முற்போக்கான, தர்க்கரீதியான தகவல்கள் அவர்களைச் சேர்வதில்லை.

5. எதிர்க் கட்சி வெற்றிபெற்றால் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று நினைத்து அஞ்சுகிறார்கள். எதற்கு எலிகப்டரில் போகும் சனியனை ஏணிவைத்து இறக்கி குத்துதே குடையுதே என்று வருந்தவேண்டும்?  இந்தியர் மட்டுமேவா சனியனுக்கு ஏணி பிடிக்கப் போகிறார்கள்?

6. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நடப்பது நடக்கட்டும் என்ற போக்கு உடையவர்கள் இந்தியர்கள்.

7. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் 2008ல் ஒற்றுமையாக இருந்து போராடிய ஹிண்ட்ராப் குழு இன்றைக்கு நவக்கிரகங்களாய்  ஆளுக்கொரு திசையில் முகங்களைத் திருப்பிக் கொண்டு விட்டார்கள். நம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரிய பலவீனமிது. தங்களுக்கு விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் வழங்கிய தலைமைத்துவம் இன்றைக்கு  இல்லையே.  இ வர்களே    இப்படியென்றால் தங்கள்
தலையெழுத்தை வேறு யாரிடம் ஒப்படைப்பது  என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது!

    இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியர் ஓட்டு ஆளும் கட்சிக்கே போய் விழும் என்று சொல்லலாம். ஆனால் இந்தியர் ஓட்டுகள் மட்டுமே (ஏறத்தாள ஏழு விகிதம்)  ஆளப்போகும் அரசை நிர்ணயித்துவிடும் என்பது ஒரு அபத்தமான கருத்துதான். இருப்பினும் இந்தியர் வாக்கு அரசு வேட்பாளர்களின் வெற்றி தோல்வித் தருணங்களின் இக்கட்டான தடுமாற்ற நிலையிலிருந்து கண்டிப்பாய் கைதூக்கிவிட்டுவிடும்.  இதுவே நஜீப்பின் நம்பிக்கை. இதற்காகத்தான் நஜீப் இந்தியர்களின் நம்பிக்கையை மீட்கத் துடித்து மெல்ல மெல்ல பெற்றும்விட்டார் என்றும் கருதலாம்.
            (சீனர்களின் வாக்களிப்பு அரசியலையும் அடுத்து காணலாம்)

Monday, October 29, 2012

இந்த முறை இந்தியர்களின் ஓட்டு யாருக்கு?

          

         இரண்டு வாரங்களுக்கு முன்னால் முன்னால் தமிழாசிரியர்கள் மாநாடு நடந்தது. நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த துணையமைச்சர் வரவில்லை.ம.இ. கா காரர்.  அவருடைய பிரதிநிதியாக  பினாங்கின் முக்கியமான தலைவராக இருக்கும் கிருஷ்ணன் வந்திருந்தார்.
   
       அவரை உரையாற்ற அழைத்தார்கள்.  நாடு தேர்தல் காய்ச்சல கண்டிருந்த சமயத்தில் அரசியல் வாதிகள் கிடைக்கும் மேடை வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிந்த விஷயம்தானே.
   
       அவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
    
       இன்றைக்கு பிரதமர் இந்தியர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிறார். முன்பு போலல்ல. 2008ல் நடந்த ஹிண்ட்ரப் புரட்சி நல்ல பலன்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது போன்ற புரட்சி நடந்திராவிட்டால் இந்தியர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே தொடர்ந்து நடத்தப் பட்டிருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார். ( மலேசியா ஒரு இனவாத நாடு. இனப் பாகுபாட்டைச் சட்டப் பூர்வமாகவே அமலாக்கம் செய்யும் சாதூர்யத்தை இங்கே காணலாம்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாலாய்க்காரர்களுக்கான் சிறப்பு சலுகைகளைக் கேள்வி முறையின்றியே செய்து வந்தார்கள். இன்னமும் தொடர்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியர்களுக்கான அடிப்படை தேவைகள் பெருவாரியாக நிவர்த்தி செய்யப் படாதிருந்த காரணத்தை முன்வைத்துதான் ஹிண்ட்ராப் புரட்சி நடந்தது.
   
     சரி கதைக்கு வருவோம்.

    அவர் பேச்சில் அரசு இன்றைக்கு எவ்வாறெல்லாம் மாறிக்கிடக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் செய்யாததை இப்போது நம் பிரதம்ர் நிறைவேற்றி வருகிறார் பாருங்கள் என்று தன் பேச்சை தேர்தல் பிரச்சாரமாக மெல்ல நகர்த்திகொண்டிருந்தார்.

    "நீங்க இங்க அரசியல் பேசாதீங்க... அப்புறம் நாங்களும் பேசவேண்டி இருக்கும்," என்று நண்பர் வேணுகோபால் (முன்னால் தலைமை ஆசிரியர்)  இடை வெட்டினார்.

   "என்னை நீங்கள் பேச அழைத்திருக்கிறீர்கள். நான் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?" என்று சமாளித்தார் பேச்சாளர்.

    பேராக்கிலிருந்து வந்தமுன்னால் தலைமை ஆசிரியர் உடனே எழுந்து.. " நீங்க என்ன  வேணுண்ணாலும் பேசுங்க... பின்னால நாங்க
முடிவெடுத்துக்குறோம்"  என்றார்.     
             அவருடைய கருத்துக்கும் முன்னால் பேசிய வேணுகோபாலின் கருத்துக்கும்
பெரிய  வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை! மாணிக்கம் சொல்லாமல் சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான். இருவருமே இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற முடிபே தெரிகிறது. முன்பு இவர்களெல்லாம் தேசிய முன்னணிக்கு வாக்களித்திருப்பவர்களாக இருக்கலாம். முன்னர் தொண்ணூறு விகிதம் இந்தியர்கள் ஆளுங்கடசிக்கே வாக்களித்து வந்தார்கள் என்ற ரீதியிலிருந்தே இதனைச் ' அவர்கள்தானே என்ற மாயையில் வாக்களிப்பது நடந்து வந்தது. ஏனெனில் இந்தியர்களைக் கொண்ட ம.இ.கா அரசியல் கட்சி ஆளுங்கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்ததாலும், ஒரு அமைச்சரும் இரண்டு துணை அமைச்சர்கள் பதவிகளும் நம்முடைய 'அடையாளத்துக்கு' அங்கீகாரமாக இருக்கிறதே என்ற திருப்தி முகாந்திரமான காரணமாக இருந்ததாலும்,    என்று சொல்லலாம்.(இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன)

      ஆனால் அதிலிருந்து சமூகத்துக்குப் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதை மக்கள் அவதானிக்கத் தவறி இருந்தனர். (உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற கறாரான கெடுபிடி  மக்களின் வாயைக்கட்டிப்போட்டு இருந்தது) என்பது முக்கியமான காரணம். இந்தியர்களைப் புறக்கணித்த அரசின் கொள்கையை- வாயை அடைத்துவைத்திருந்த உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பூச்சாண்டியை மிக ஆவேசமாக உடைத்தெரிந்ததுதான் இந்த ஹிண்ட்ராப் இயக்கமாகும். அதனால்தான் 2008 ல் நடந்த (புரட்சிக்குப் பின்னர்) இந்தியர்கள் முதன் முறையாக, துணிச்சலோடு ஆளுங்கட்சியை எதிர்த்தே வாக்களித்தனர். அரசும் காலங்காலமாக தன் கைக்குள் வைத்திருந்த மூன்றில் ஒரு பங்கு பெரும்பாண்மையை இழநதுவிட்டிருந்தது என்பது பழைய கதை! அந்தப் பழைய கதைதான் இன்றைக்குப் பெரிய தாக்கத்தை இந்தியர்களிடையே விட்டுச் சென்றிருக்கிறது.

       சரி மேற்சொன்ன சம்பவம் ஆளுங்கட்சிக்கு நம் ஆதரவு இல்லை யென்று நீரூபிக்கிறது அல்லவா?

       ஆனால் இன்னும் சில கருத்தாக்கங்கள் தேசிய முன்னணியை (இன்றைய ஆளுங்கட்சியை) ஆதரிக்கவே செய்கிறது என்பதையும் கட்டியம் கூறுகிறது.

       முன்னால் தலைமை ஆசிரியர் ஒருவர்... அவருக்குப் பொருளாதாரத்தில் எந்தக் குறையுமில்லை, அவர் சொன்னார்.....


      "எந்தக் காலத்துலையா அரசாங்கம் வருமானம் குறைவா உள்ளவங்களுக்கு ஐநூறு வெள்ளி கொடுத்தது. இப்ப உள்ள பிரதமர் கொடுக்கிறாரே.   தழ்ப்பள்ளிகளை நிர்மாணிக்கவும், புதிய தமிழ்ப்பள்ளி கட்டவும்
ஆணையிட்டிருக்காரே... கோயில்களுக்கெல்லாம் வாரி வாரி கொடுக்கிறாரே.. நான்....... தேசிய முன்னணிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்," என்கிறார்.

       இவர் பழையதை மறந்துவிட்டார்.  இந்த ஐம்பாதாண்டுகளில் நமக்கு இழைக்கப் பட்ட பெரிய இழப்புகளை அருதியாக மறந்துவிட்டிருக்கிறார். அதனால் சமூகத்துக்கு நேர்ந்த பாதிப்புகளை பார்க்கத் தவறிவிட்டார் என்றே படுகிறது.

        இவர் போல எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கும்போது நம் தலை எழுத்து மாறப் போவதில்லை என்றே அஞ்சுகிறேன்.

    

   
 

Tuesday, October 16, 2012

அன்னை என்ற தீபம் அணையாது எரிகிறது


அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.அம்மா
என்ற தலைப்பில்
கவிதை கேட்டார்கள்
‘அம்மா’
என்றேன் உடனே,

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
‘நீ’.....என்று                     ...தாஜ்

      இந்தக்கவிதை ஆனந்தவிகடன் இதழில் 2002 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் எழுபத்தைந்து சிறந்த கவிதைகளில் ஒன்றாக பதிவாகியது. கடுகளவே இருக்கும் இந்தக் கவிதை மனதுக்குள் பூமழை பொழிவதை உணரமுடிகிறது.  வெப்பம் உரசியதும் நெகிழ்ந்துருகும் நெய்யைப்போல அம்மா என்ற சொல்லுக்குள் அன்பும் பாசமும் பிரவாகமாவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெறும் சொல்தானே என்று புறந்தள்ள முடிவதில்லை, அதற்குள் உறைந்திருக்கும் உணர்வும் உயிர்த்துடிப்புள்ளவை!. எல்லாச் சொற்களுக்கும் தாய்ச்சொல்லாக தன்னை நிறுவிக்கொள்கிறது அம்மா என்ற அற்புதச் சொல். உயிரெ¦ழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்யை உருவாக்குவதுபோல அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உயிரும்    மெய்யும் இரண்டரக் கலந்து நிற்கிறது.
       ஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னைத் தன்னோடு ஓரிடத்துக்கு வரும்படி அழைத்திருந்தான். எங்கே என்றெல்லாம் நண்பனிடம் கேட்கத்தோணவில்லை. என் வீட்டுக்கு வந்து என்னை தன் காரில் ஏற்றிக்கொண்டான். பின் இருக்கையில் ஒரு வயதான கிழவி அமர்ந்திருந்தாள். பங்கரையான உடையில்,  மழலையின் சுவர்க்கோடுகளாய் கிறுக்கல் விழுந்த முகத்தில் சோகம் படிந்திருந்தது. வதங்கிய கீரைத்தண்டைப்போல ஒடுங்கியிருந்தாள். கண்களை மூடியிருந்தாள். அப்போது அவள் யாரென்று கேட்கத்தோணினாலும் வார்த்தைகள் என்னவோ முடமாகிக்கொண்டேயிருந்தன. சற்று நேர மௌனமான பயணத்துக்குப் பிறகு நண்பனே வாய் மலர்ந்தான்.
      “இவங்கள அனாதை விடுதியில சேக்கணும். தனியா கெடந்து தவிக்கிறதவிட அந்த எடத்துல அவங்களுக்குத் தொணையா மத்த ஆளுங்க இருப்பாங்க, நீங்க துணைக் கையெழுத்துப் போடணும்” என்றான். வயது முதிர்ந்த திக்கற்றவளை அனாதை விடுதியில் சேர்த்த புண்ணியம் என்னையும் சேரட்டுமே என்று நானும் ஒத்துக்கொண்டேன்.

“யாருமில்லாதவங்க, போல இருக்கு. இன்னிக்கி நான் பிரீயா இருக்கேன், அதான் அங்க பதிஞ்சிராலாமுன்னு முடிவெடுத்துட்டேன், ரொம்ப நாளாவே இதச் செய்யணும் செய்யணும்னு நெனச்சிக்கிட்டிருந்தேன், இன்னிக்குதான் முடிஞ்சது,” என்றான்.
பின் சீட்டில் அமர்ந்திருக்கும் கிழவி எந்தச்சலனமுமில்லாமல் இருந்தால். திரும்பிப் பார்த்தபோது , கனத்த மௌனத்தோடு கண்களை மூடியபடியே இருந்தாள். உறங்கிவிட்டாள் போலும்.
     “அவங்களுக்கு காது கேட்காது.” என்றார்.
அனாதையாக அலைந்து ஊர் சுற்றிப், பின்னர் ஒரு நாள் பசிக்காகக் கையேந்துவதைவிட அனாதை இல்லம் நல்ல புகலிடமாக இருக்குமென்ற எண்ணம் மனதுக்குள் ஓடியபடி இருந்தது. மேற்கொண்டு அவளைப்பற்றி விசாரிப்பதற்குள் எங்கள் உரையாடல் வேறு திசையை எட்டியிருந்தது.
     அவளை அனாதை இல்லத்தில் விட்டு விட்டு வீடு திரும்பியிருந்தோம். அவளை அங்கே விட்டு விட்டு வெளியே வந்தபோது அவன் முகத்தில் என்று மில்லாத மலர்ச்சி ததும்பியிருந்தது.
    பின்னொரு நாளில் ஏதோ ஒரு வேலையாக அவன் முகவரியைத்தேடி வீட்டுக்குசென்ற போது அவன் வீட்டு வாசலில் ‘அன்னை இல்லம்’ என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தேன். அப்போது அவன் வீட்டில் இல்லை எங்கோ வெளியே போயிருந்தான்.
    ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது என் நண்பனைப்பற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவன் அனாதைகளுக்கு உதவுபவனென்றும், அன்னையின் மேல் அதிக பாசமுள்ளவனென்றும் , தன் வீட்டுக்கே அன்னை இல்லம் என்றுதான் பெயரிட்டிருக்கிறானென்றும் புகழ்ந்துரைத்தபடி இருந்தேன்.
      நான் வெள்ளந்தியாகப் பேசிக்கொண்டிருந்ததை ஒரு அங்கதப் புன்னகையோடு அவதானித்துக் கொண்டிருந்தவன் சொன்னான், “அவன் தான் பெத்த தாயவே அனாதை இல்லத்துல விட்டுட்டு வந்துட்டான், ஊரு மெச்சிக்கணுங்கிறதுக்காக தான் வீட்டுக்கு அன்னை இல்லம்னு பேரு வச்சிருக்கான்,” என்றார். ஒரு சிறுகதையின் எதிர்பாராத திருப்பம் முகத்தில் அறைந்துவிட்டதுபோல நான் விக்கித்து நின்றபடி அசைவற்றுப்போயிருந்தேன். நான் அவனைச் சிகரத்தின் மீது  ஏற்றி வைத்திருந்த மரியாதை பனிப்பாறைபோல உடைந்து சரிந்து பல்லத்தாக்கை நோக்கி உருண்டுச் சிதறிப் பாய்ந்துகொண்டிருந்தது.
மனிதர்கள் விநோதமானவர்கள். தன்னை முன்னிருத்திக்கொள்ள யாரையும் பலியிடத்தயங்குவதில்லை! தவமிருந்து வரம் வாங்கிப் பெற்ற பிள்ளை என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். அப்துல் ரகுமான் பொறுமை இழந்து இப்படிக் கேட்கிறார்.
      வரங்களே
      சாபங்கள் ஆகுமென்றால்
      இங்கே
      தவங்கள்
      எதற்காக?

எதற்காகப் பெற்ற தாயை அனாதை இல்லத்தில் விடவேண்டுமென்ற நினைப்பு என்னைக் கரையானைப்போல அரிக்கத்துவங்கியிருந்தது. மருமகளுக்கும் மாமியாருக்குமான உறவில் விரிசல் காண்பது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இத்தனைக் காலமும் தான் பெற்று வளர்த்து ஆளாக்கியவனைக், கழுகு பறந்துவந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச் சென்றுவிட்டதைப்போல மகனைத் தன் பக்கம் ஈர்த்து வைத்துக்கொண்டாளே என்ற நெருடல் அவளைத் துன்புறுத்தியிருக்கக்கூடும். தனக்குச் சொந்த மாகிவிட்டவன் அம்மாவின் சொல்லுக்கு அடிபணிகிறானே என்ற எண்னம் மருமகளை வருத்தியிருக்கக்கூடும். பெரும்பாலான குடும்பங்களில் மருமகள் மாமியாருக்கிடையே நடக்கும் இழுபறிகளால்தான் உறவு முறியத் தொடங்குகிறது. தொடக்கத்தில் கண்களுக்குத் தெரியாத விரிசலாக இருந்து பின்னாளில் உடைப்புகளாக வெடித்துவிடுகிறது. இதற்கான தற்காலிகத் தீர்வாகவே மகன்  அவளை அனாதை விடுதியில் விட்டிருக்கலாம் என்று தோணியது.
மனிதர்கள் எப்போதுமே வார்த்தைகளைச் சுமந்து திரிகிறார்கள். சினத்தில் சிதறி வரும் வார்த்தைகள் வெப்பத்தில் குஞ்சுபொறித்து இனப்பெருக்கத்தை உண்டுபண்ணிவிடுகிறது. வார்த்தைகள் சேகரமாக ஆக வன்மத்தின் சுமை கூடிவிடுகிறது. குறியீடாய் விழும் வார்த்தைகளைத்தான் நாயாகவும், பேயாகவும், குரங்காவும் நாம் உருவமாக்கிக்கொள்கிறோம். அவற்றைப் புறந்தள்ளுவதற்கு போதுமான புத்தி நமக்கு இருப்பதில்லை! குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், புதிய குற்றங்களை உண்டாக்கிவிடுவதிலும் நம்க்குள்ள விருப்பம் அவற்றைக் கலைவதில் இருப்பதில்லை! வார்த்தைச் சுமையைத் தாளமுடியாதபோது இப்படியான முடிவுகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் நான் படித்த ஒரு பழைய கவிதை இந்த சம்பவத்துக்கு எப்படிப் பொருந்திவருகிறது பாருங்கள்.    


அம்மா
என்
பிஞ்சுவயதுப் பிரபஞ்சமே
எனக்கு நீ உலகமாகவும்
உனக்கு நான் உலகமாகவும்
இருந்த காலங்கள்
கல்யாணப் பந்தலில்
ஒரு புரோகித மந்திரத்தில்
ஒடிசலான ஒரு பூனைக்குட்டி
தேவ கன்னிகையாய் பரிமளித்து
ஆச்சிரிய நிமிடங்கள்
உன் ஆசிர்வாத
அட்சதை மணிகள்
அப்புறம்..... அப்புறம்....
அம்மா...... அம்மா...
என் பிஞ்சுவயதுப் பிரபஞ்சமே
உனக்கும் எனக்கும்
இடையில் விழுந்ததே
ஒரு அழுத்தமான
மௌனத்திரை                       (மௌனத்திரை- சர்ப்பயாகம்)

      ஒடிசலான ஒரு பூனைக்குட்டி என்ற குறியீடு தனக்கு வாய்த்த மனைவியைச் சுட்டுகிறது. ஒரு தேவ கன்னிகையாகப் பரிமளித்தவள் தன் பிஞ்சுவயது உலகமாக இருந்த அம்மாவைக் காவுகொண்டு விடுவதை அங்கதமாகச் சொல்கிறது கவிதை. அம்மாவுக்கும், மகனுக்கும் இடையே அந்தத் தேவ கன்னிகை திரையாக விழுந்துவிட்ட வாழ்வின் நிதர்சனத்தைக் கவிதை புலப்படுத்திவிடுகிறது. கவிதை என்பது அதன் சொற்கள் மற்றும் சொல்லிடை வெளிகளில் ஆன மௌனங்களால் ஆனது..  வாசகன் குறியீடுகளை தன் வாழ்வனுபவத்தால் உடைத்துப்பார்க்கும்போது டுரியானிலிருந்து வெளிப்படும் சுளையும் அதன் வாசமும்போல கவிதையின் பொருள் அவனை வந்தடைகிறது.
     புரியாத கவிதை என்று ஒன்றில்லை. முள் தரித்த ஒரு முரட்டு டுரியானைப் போன்று முதல் வாசிப்புக்குத் தோன்றும கவிதையை உடத்துச்சுவைப்பதற்கு வாழ்வனுபவத்தைக்கொண்டே அணுக வேண்டும். வாசகனின் அந்தரங்கத்தில் உள்ள அனுபவ மண்டலத்தில் அது அளிக்கும் பொருள் முக்கியமானது.

Thursday, October 11, 2012

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் வற்றாது ஒடும் நதி

  கனத்த இதயத்தோடுதான் நான் பணி ஓய்வு பெறும் நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இனி அத்துவான வெளியைப்பொல சலனமற்று விரிந்திருக்கும் வெறுமையான நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற இனம் புரியாத அச்சம் மனதுக்குள் கசியத்துவங்கியிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற ஓரிரு நாட்களிலேயே அந்த அச்சம் உச்சி வெயிலின் நிழலென சுருங்கிவிட்டிருந்தது! எனக்கு வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும் என்னோடு கவச குண்டலமாய் ஒட்டிக்கொண்டிருந்ததால் பணி ஓய்வு பெற்ற வெறுமையான நாட்களை எளிதில் கடந்து செல்ல  முடிந்திருந்தது. கலை சார்ந்து இயங்காதவர்களின் வாழ்க்கையின் வெறுமையான நாட்களை எளிதில் கடந்துவிடும் உபாயம் பெற்றிருப்பார்களா என்பதில் என் மனதில் தீராத சந்தேகம் வடிந்தபடி இருக்கிறது.

என் நீண்ட கால ஆசிரியர் பணியை செம்மையாகச் செய்ததுண்டா என்ற வினா  மின்சார, தண்ணீர், தொலைபேசி கட்டண பில் போல  என்னை விடாமல் பின் தொடர்ந்தவண்ணம் உள்ளது. பள்ளியில் நான் போட்ட திட்டங்கள் பல நிறைவேறியும், சில வற்றில் தோல்வியும், முழுமூச்சாய் ஈடுபடாததால் சிலவற்றில் நிறைவின்மையும் உண்டானதுண்டு. தலைமை ஆசிரியப் பணியின்போது உண்டான பின்னடைகளும், முழுமையின்மையுமான செயற்பாடுகள் இன்றைக்கும் என்னைத் துன்புறுத்துகிறது. என் சுய சிந்தனையை நிறைவேற்றவிடாமல் தலைக்குமேல் காத்திருந்த கல்வி அமைச்சின்- இலாகாவின் தொடர் திட்டங்களால்  முடங்கி மூச்சுத்திணறியதுண்டு. இன்னும் நிறைவாகச் செய்திருக்கலாமே என்னை ஆதங்கத்தோடு எண்ணம் என்னைத் திரும்பிபார்க்கச் செய்கிறது. இங்கேதான் காலங்கடந்துவிட்ட சிந்தனை படிப்பினையாக மலர்கிறது போலும்!  என்னை நம்பி வந்த மாணவர்களுக்கு முறையாக சேரவேண்டிய கல்விச்செல்வத்தை ஒப்படைத்தேனா என்ற எண்ணம் ஆற்றின் சுழியைப்போல சுழன்றபடியே இருக்கிறது. மனசாட்சி குரங்கைப்போல சதா இயங்கிக்கொண்டே இருப்பதால்  குறைகளை ஓசையின்றி, நம்முடைய காலக்கணக்கில் ரகசியமாய் எழுதிக்கொண்டே தன் வலிமையை நமக்கு நிரூபித்தவண்ணம் நகர்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதம்படி என்னை வற்புறுத்திய இன்றைக்கு நடந்த இரண்டு சம்பவங்களை நான் சொல்லவேண்டும். என் முகப் பக்கத்துக்கு வந்த ஒரு செய்தி முதலில் தருகிறேன். முகப்பக்கம் பழைய நண்பர்களையும் நம்மோடு இணக்கமாக இருந்தவர்களையும் நாம் நினைவுகூர ஏதுவானதான சந்தர்ப்பத்தை அமைத்துக்கொடுக்கிறது. இன்றைக்குக் காலையில் மீண்டும் ஒரு மாணவி சார் நான் உங்களை மறக்கவில்லை, நீங்கள் எங்களுக்குச்செய்த நற்பணிகளைப்பற்றி என் புதிய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தாள். ஒரு நல்லாசிரியருக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமிது. மேடை கௌரவங்களும் பொன்னாடைகளும் செய்யமுடியாத ஒன்றை வார்த்தைகள் மாலையாக கோர்த்து வழங்கிவிடுகின்றது. மாணவர்களைக் கொண்டாடுவதில் உண்டாகும் மனத்திருப்தி காலங்கடந்து வந்தாலும் அது தரும் சுகம் அலாதியானது.
   தினங்களை கொண்டாடுவதை
   விட்டு விட்டு
   குழந்தைகளைக் கொண்டாடுங்கள்
என்ற ஒரு கவிஞரின் அறிவுரை எவ்வளவு சத்தியம் மிக்கது பாருங்கள்.

இன்னொரு சம்பவம் நான் என் மகனின் இன்சூரண்ஸ் பாலிசிக்கு பணம் கட்டப் போன இடத்தில் நடந்தது.
சார் நீங்க தமிழ் ஸ்கூல்லதான வேல செஞ்சீங்க? என்று கேட்டவாறு என்னை எதிர்கொண்டார் ஒரு முகமறிந்த நண்பர்.
நான் “ஆமாம்” என்றேன்.
“அபப்டின்னா ஒங்களுக்கு கண்ணையா சார தெரியணுமே?” என்றார்.
“நல்லாவே தெரியும் அவர் அமைப்பாளராக இருந்தார். கடசியா ஆஸ்டிரேலியாவுக்குக் குடியேறனதா  கேள்விப்பட்டேன்,” என்றேன்.
“அருமையான வாத்தியாரு சார் அவரு. நான் இன்னிக்கி இந்த நெலமியில் இருக்கேன்னா அதுக்கு அவர் முக்கியமான காரணம் சார். என்னை அன்போடு பாத்துக்கிட்டரு சார். எனக்கு செலவுக்கு காசெல்லாம் தருவார் சார்,” என்றார்.
ஆசிரியரின் கடமை போதிப்பதோடு நின்றுவிடுவதில்லை. ஒரு மாணவனுக்கான தேவையை உணர்ந்து அவனுக்கு உற்ற துணையாக செயல் படும்போதுதான் ஒரு ஆசிரியர் நினைவில் நீங்காது , மாணவரின் தங்கச் சிம்மாசனத்தைப் அமர்ந்து கொள்கிறார். ஒரு நல்லாசிரியருக்குக் கிடைக்கவேண்டிய தார்மீகமான அங்கீகாரமிது!

அவரின் அடுத்த செய்திதான் எனக்கு நிலைகொள்ளாமையை உண்டாக்கியது. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் பெயரைச் சொல்லி இவனைத்தெரியமா என்றும் வினவினார். தன் வாழ்வின் குறுக்கே வந்த ஒரு வில்லங்கமான கதாபாத்திரத்தைக் கொடுமையான பின்னணி இசையின் மூலம் அறிமுகப்படுத்துவதுபோல இருந்தது, ‘இவனைத்’ தெரியுமா என்ற எகத்தாள வார்த்தை.
“கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்று பதிலுரைத்தேன்.
“சார் இந்த வாத்தியாருதான் சார் நான் செய்யாத குற்றத்துக்காக என்னை லோக்கப்ல போட்டான்,” என்றார்.
“நீங்க மாணவரா இருக்கும்போதா?” என்ற வியப்போடு கேட்டேன்.
“ஆமா சார் இடைநிலைப் பள்ளியில படிச்சிக்கிடிருக்கிறப்போ நான் ஸ்டோர் ரூம்லேர்ந்து திருடிட்டேனு போலிஸ¤க்கு புகார் கொடுத்துட்டாரு சார். என்னப்புடிச்சு உள்ள போட்டானுங்க,” என்றார்.
இந்தத் தகவல் என் இரு கால்களையும் பற்றி, சுவற்றில் வீசி அறைந்தது போல இருந்தது. ஆசிரியர் ஏன் இவ்வளவு கொடுமையாக நடந்துகொள்ளவேண்டும்? திருடி இருக்கலாம் என்றாலும் பள்ளியில் நடந்த சம்பவத்தை பள்ளியிலேயே அல்லவா விசாரித்து தண்டனை கொடுத்து முடித்திருக்க வேண்டும்? பதின் வயதின் அதுவும் பள்ளிப் பருவத்தில் சிறைக்கு அனுப்பும் கொடுமை ஒரு மாணவரின் வாழ்க்கையில் ஆறாத புண்ணாக அல்லவா தீராது வலித்துக்கொண்டிருக்கும்?( இண்டர்லோக் நாவலைப் படிக்கமாட்டோம் என்ற ஒரு பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் திருப்பிக்கொடுத்தபோதும் காவல்துறை வரை மாணவர்கள் இழுக்கப்பட்டு அவமானப் அப்டுத்தப் பட்ட சம்பவமும் , ஆசிரியரின் மீது உண்டான் கோபம் நினைவுக்கு வருகிறது.)
“சார் நான் அவனை நேத்த எதேச்சையா சந்திச்சிட்டேன் சார்,” என்றவர் முகத்தில் வன்மம் வெடித்திருந்தது..” நீ இன்னும் உயிரோடையா இருக்கேன்னு கேட்டுட்டேன். இன்னைக்கு தேதி வரைக்கும்  எனக்கு ஆத்திரம் தீரல,” என்றார். மனசாட்சி தனக்கு ஏற்பட்ட அவமானக்களை வங்கியின் நீண்ட கால நிரந்தர இருப்பைப்போல  சேகரம் செய்து பத்திரமாக வைத்துக்கொண்டே இருக்கிறது.  பழி வாங்க சந்தர்ப்பம் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது. வாய்ப்பு நேரும் போது தன் கோர நகங்களைக் கொண்டு பிராண்டி விடுகின்றது. அவரைப் பழி வாங்க எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன! பழி வாங்கும் எண்ணம் வற்றாத நதியைப்போல இயங்கிக்கொண்டே இருக்கிறது.? அவ்வப்போது தோலுறித்துக்கொள்ளும் பாம்பு போல பழிதீர்க்க தன் கோபத்தைப் புதுப்பித்துக்கொள்கிறது.
     ஆனால் நல்லாசிரியர்கள் எப்போதுமே மாணவனின் (மனிதனின்) மனப்பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார்கள். நெகிழ்ச்சியோடு நினைவுகூரத்தக்கவர்களாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீராவாணியின் கவிதை திகழ்கிறது.
      
         தாவரவியல் பச்சையம் நீங்கள்
         எனக்குள் அனைத்தும்
         உற்பத்தியாகின்றன.
         நீங்கள் வீசியெறிந்த பிராணவாய்வால்
         இன்றுவரை என்னுள்
         சகமான சுவாசிப்பு!
         அரிசுவடி கற்பிக்கையில்
         உங்கள் சேலைத் தலைப்பில்
         பூத்த கனவுகள் சேலையுடுத்தும்
         ஒவ்வொரு பொழுதிலும் என்னில் குலுங்கி
         மணம் பரப்புகின்றன.
         பேசு நீயென்ன பேசாமடந்தையா
         என்ற உங்கள் வார்த்தைகள்
         எனக்குள் இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன
         அன்று பேச மறந்ததையும்
         இன்னும் பேச மறுப்பதையும்
         என் பேனா பேசிக்கொண்டிருக்கின்றன
         என்னுள் நீங்கள் விதைத்த கனவுகளில்!           (மீராவாணி)
ஆசிரியரின் போதனையை பிராணவாய்வு என்ற குறியீட்டில் சொல்லும்போது ஆசிரியரின் மீதான மரியாதை மேலும் உயர்கிறது. ஆசிரியர் வகுப்பில் மாணவர் முன்னிலையில் திட்டியதுகூட பின்னாளில் தித்திப்பாய் மாறுவதுதான் மகோன்னதமானதாகவும் வியப்புக்குரியதாகவும் மிளிர்கிறது. அன்றைக்குத் தேவையானதை மட்டுமா ஆசிரியர்கள் தருகிறார்கள்? ஒரு முன்னோக்குச் சிந்தனையுடன் தூரநோக்கைத் தொடப் பார்க்கும் புனிதப் பயணமது.
         கவிதை முதல் வாசிப்பில் நமக்குள் நுழைய மறுத்தால், மறு வாசிப்பைச் செய்யவேண்டும். வாசகன்தான் கவிதைக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டும். பல கவிதைகள் முதல் வாசிப்பில் வாசகனுக்குள் நுழையாது. என்வே தொடர் முயற்சி பலனளிக்கும். தொடர் வாசிப்பில் வார்த்தைகள் பொருள் உடைந்து கசிய ஆரப்பிக்கும். அப்போது கவிதையின் முழு அவதானிப்புசாத்தியமாகும் வாய்ப்பு உண்டு. வாசிக்க வாசிக்க புதுப்புது பரிமாணங்கள் நம்மை வியக்கவைக்கும் –சுகிக்கும்.  பழம் கைக்குக் கிட்டவில்லையே என்று உச்சிக்கொம்பை அடையாதவன் அதன் சுவையை மறுதலிப்பவனாகிறான். இது நமக்குப் புரியாது என்று தூர விலகும்போது கவிதையும் தூர விலக்கிப்போகும். எவ்வகையிலும் அது கவிதைக்கு நட்டமில்லை. வாசகனுக்குத்தான்!
   Tuesday, August 14, 2012

எப்போது தருவாய் வரம்?எப்போது வரம் தருவாய்?


வெளியே இருந்துகொண்டு
ஒரு அழகிய வீட்டைப் பார்ப்பது போலவே
உன்னைக் பார்க்கத் துவங்கினேன்
அப்போது அந்நியம்தான்
அந்த வீட்டுக்கும் எனக்குமான
தொடர்பு என்பது
என் கண்களுக்கும்
வசீகர வீட்டுக்குமான
இடைவெளி மட்டுமே

நாம்  நட்பாகிப் போன
 தொடக்க நாட்களில்
ஒரு இடைவெளி எப்போதுமே
நம் உள்முகத்தை
ஒளித்து விளையாடியது

வார்த்தைகளுக்கு ஒப்பனை செய்து
களைத்த போதெல்லாம்
எதுதான் நிஜமென
மௌனமாய் அழுதோம்

நாம் சந்திக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
ஏதேதோ பேசுகிறோம்
காதலை தணிக்கை செய்துவிட்டு
தணிக்கை செய்ததுவும்
காதல்தானே என்று தெரியாமல்

நாம்
பேசிக்கொண்டிருக்கும்போது
தொடர்பற்றிருந்தோம்
பேசாதபோதுதான்
தொடர்பில் இருந்தோம்
நம் காதலை மென்றபடி

வானத்தில் திடீரெனெ
நட்சத்திரமொன்று
இருளைக் கிழித்தது போல
உன் ஒளி
என்னை இருளாக்கியது

வெளிச்சத்துக்காக
நான் வேண்டி நின்ற போது
இடைவெளி குறைத்து
என்னுள் மின்னல்
ஒன்றைச் பாய்ச்சினாய்
நட்சத்திர ஒளியால்
திணறடிக்கப்பட்டு  மீளாத போது
மின்னலாய்த் தாக்கி
என்னை ஊனமாக்கி விட்டிருக்கிறாய்

நான் மீண்டும் பழைய
நானாக வேண்டும்
இந்த
நக்கீரனை எரித்த சிவனே
என்னைச் சாம்பலிருந்து
மீட்டுக்கொடு
நான் 
உன் பின்னால் பறந்துவர

 

Monday, August 6, 2012


நிராகரித்தலும், நிராகரிக்கப் படுதலும்-

பிச்சைப் பாத்திரம் கதை ஒரு பார்வை

                    

       பாவையின் ‘பிச்சைப் பாத்திரம் சிறுகதை மலேசியாவில் அரிதாக சொல்லப்படும் கதை வகைமையில் ஒன்று. ஏறத்தாழ துறவறமே இல்லறத்தைவிட மேலானது என்று சொல்ல வந்த கதை. கிட்டதட்ட 100 விகிதம் நடைமுறை  வாழ்க்கையையைத் திரும்பத் திருமப படம்பிடித்துக்காட்டும் வரட்சியான கதைக் களத்திலிருந்து சற்று விலகி துறவு பற்றிப்பேச வந்ததை சற்று ஆறுதல் தருகிறது. அதற்காகப் பாராட்டுகள்.

       ஏகபோக சொத்துக்கும் அதிபதியாகப் போகிறவனின் மகன்  துறவறத்தில்தான் தான் முழுமையடைவதாகச் சொல்வதை நிதானமாக , சொற்ப வார்த்தைகளுக்குள் சொல்வது வாசகமனத்தை கவர்கிறது. ஆனால் மகன் துறவறம் மேற்கொள்வதற்கான பின்புலக் கற்பிதம் எங்கேயும் காட்டப் படவில்லை. வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும் என்று வெற்றுக்கோடுகளை விட்டிருக்கலாம் கதாசிரியர் .ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லியே இருக்கவேண்டும் .இட்டு நிரப்புவதற்கான வெற்றுக்கோடுகள் கதையில் காணவில்லை. மகன் மெய்ஞ்ஞானத் தேடலுக்குள் நுழைந்து விட்ட பின்புலம் இன்னொரு கதையாக நீண்டுவிடுமோ என்று நினைத்து கவனமாகத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ? தெளிவாகக் காட்டியிருந்தால் கதை மேலும் வலுவாகியிருக்கும்.

      பணமும் புகழும் புரளும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவன்  சந்தடி சத்தமில்லாமல் துறவறத்துக்குத் தாவுவது சாத்தியாமா என்ன? எங்கிருந்து கிடைத்தது அந்தத் திடீர் மெய்ஞ்ஞான ஒளி?

       நொடி நேரம் கூட விரையமாக்காமல் வணிகம் வணிகம் என்றே உழன்று, கோடிக்கனக்கான சொத்துக்கு அதிபதியானவர் தன் மகனின் ‘மெய்ஞ்ஞானத் தேடல் ’ குறித்து கவலையுறுகிறார். அதிலிருந்து அவனை மீட்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கும் நிலை கதையில் நிறைவுற காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னுடைய வாகன ஓட்டுனரின் சொற்கள் இடைச்செருகளாவதுதான் கொஞ்சம் உறுத்துகிறது. தன் எஜமானரின் மனச் கிலேசங்களை உன்னித்தவர், இப்போதுள்ள இளைஞர்கள் வன்மமான முறையில் தங்கள் வாழ்க்கையை விணாக்கிக்கொள்கிறார்கள், அதற்கு உங்கள் மகனின் மெய்ஞ்ஞானத் தேர்வு வாழ்வு, எவ்வளவோ மேல் என்று கூறியதும் எஜமானருக்கும் அவர் சொல்வது சரிதான் என்ற வெளிச்சம் கிடைக்கிறது .. இது மிகச்சாதாரண கருத்து. மகனை மீட்டெடுக்க வகையறியாமல் தவிக்கும் மனத்துக்கு இந்த வசனமே அவரின் சிந்தனையை வழி மறித்து புதிய தெளிவைக்காட்டுவதாகச் சொல்லி முடிக்கிறார். மகனைப் ‘பறிகொடுத்தவர் – அவனை மீட்கும் உபாயத்துக்காக்ச் சிந்தித்தவர் அர்ச்சுனரை மீட்க உபதேசம்  சொல்ல வந்த கண்ணனாக கார் டிரைவரைக் காட்டுகிறாரா என்ன? எல்லா சாரதிகளும் பார்த்தசாரதியாகிவிட முடியுமா என்ன?

      பரம் என்ற பாத்திரம் இக்கதைக்குள் நுழைகிறது . இது ஈரிழையில் இயங்கும் கதை யென்றாலும் ஒரு கதைப்பொருளையே சொல்ல வந்த சிறுகதை. இந்த உத்தியில் கதை சொல்ல முயன்றதற்கும் பாராட்டுகள்.. ஓவியத்தில் இதனை கோலாஜ் முறை என்று சொல்வார்கள். ஆனால் பரமு தெருவுக்குத் தள்ளப்பட்ட நிலையையும், கோடீஸ்வரனின் மகன் பிச்சைப் பாத்திரத்தை தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட நிலையையும் கொஞ்சம் ஒப்பீட்டு நோக்கில் பார்க்கத்தான் வேண்டும். பரம் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். விளிம்பு நிலை வாழ்க்கைக்குள் வலிந்து தள்ளப்பட்டவர். ஆனால் பணம் படைத்தவனின் மகன் மெய்ஞ்ஞானத்தேடலை தானே விரும்பி ஏற்றுக்குக்கொண்டிருக்கிறார். வாழ்வு சூரையாடப் பட்டு நீராகரிக்கப்பட்ட ஒருவரின் கதையும், லௌகீக வாழ்வை நிராகரித்துவிட்ட இன்னொருவரின் கதையும் இறுத்திப்புள்ளியில் –ஒட்டியதா என்று தெரியவில்லை. ஆனால் முயன்றிருக்கிறார்.

   கதையில் சமிக்ஞை விளக்கைக் குறியீடாகக்காட்டுவது கதை நிகழ்தலுக்குள் ஒன்றி விடுகிறது.

   கதை சொல்லும் கலை பாவைக்கு எப்போதுமே சீராகவே வருகிறது. இக்கதையும் அதற்கொரு சான்று.

    இது என் பார்வை மட்டுமே.

    கதை எழுத முன்வரும் புதியவர்களையும்  கை நீட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற தார்மீகச் நோக்கத்துக்காகவே இதனை எழுதுகிறேன். நீதிபதிகளின் நடுவு நிலைக்கும், என் கலா ரசனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற தினக்குரலின் முடிபுக்கு நானும் ஒத்த கருத்துடையவன்-அவ்வளவே..


Sunday, July 29, 2012

ஓடாதே -கதை விமர்சனம்

22.7.12ல் ஞாயிறு தினக்கதிரில் பிரசுரமான ஓடாதே கதையைப் பற்றி என் பார்வை 
ஓடாதே கதையை ஒரு கட்டாயத்தின் பேரில், ஒரு ஆர்வமற்ற மனநிலையோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் கதையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே பொதுவாகவே புதியவர்களின் படைப்பை வாசிக்கும்போது  தோன்றும் முன்சலிப்பு, கதையைத் தொடங்கியதும் பட்டென விலகிக்கொண்டது. தொடங்கியபோது உண்டான ஆர்வநிலை முடியும் வரை அகலவே இல்லை என்பதிலிருந்தே இக்கதை மிக அருகில் வந்தமர்ந்து என்னோடு கைகோர்த்துக்கொண்டு கடைசிவரை பயணித்தது.
 நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி. ஆனாலும் இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி  மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று.
   ருக்குமணி டீச்சரில் தொடங்கி அவரிடமே ஒரு அதிரடி முடிவோடு வந்து நிற்கிறது கதை.
   பொதுவாகப் பள்ளிகளில் ருக்குமணிச் டீச்சர்களின் சாகசங்களால் சமூகத்தில்  சாதனையாளர்களாக வரவேண்டியவர்களை எண்ணற்றவர்களை மிகச் சாதூர்யமாக ,அதிலும் மிக துச்சமாக தெருவில் எரிந்ததுவிடுவதுண்டு. அப்படி இல்லையென்றால் நமக்குள் ஏன் இத்தனை குண்டர்கள் , குற்றங்கள், கொலைகள்? ருக்குமணி டீச்சர்கள்தானே அவர்களின் தொடக்க நிலை உருவாக்கிகள்! .(கணிதப் பாடத்தின் மேல் எரிச்சலை உண்டாக்கிய கைங்கர்யத்தால் இவ்வாறான மாணவர்கள் உருவாகிவிடுகிறார்கள்)
   கதாசிரியர் ருக்குமணி டீச்சர் பற்றிய பாத்திரப் படைப்பை மிக அங்கதத் தொனியில் சொல்லிக்கொண்டு போகும் தருணத்தில் , சாமான்ய வாசகனுக்குத் உண்டாக்குகின்ற கோபம் மிக முக்கியமானது. இந்த அழகியலில் தான் வாசகன் கதையோடு கூடிவிடுகிறான். ருக்குமணி டீச்சர் கணிதம வராத கதை சொல்லிக்கு உண்டாக்கும் மன அழுத்தத்தையும், ஏமாற்றத்தையும் கதை சொல்லியின்(முக்கிய கதாப்பாத்திரத்தின்) மேல் கரிசனத்தை உண்டு பண்ணுகிறது.  வாசகனுக்கு மாணவிமேல் கரிசனமும் ,ருக்குமணி டீச்சரின் மேல் கோபமும் உண்டாக்கும் கதைப் போக்கு கதையின் இறுகப் பிடித்துக்கொண்டு வாசகனை கதைக்குள் ஒன்றிடவைத்துவிடுகிறது ,
     இக்கதையின்மையப் புள்ளியாக கதைசொல்லி முன்னின்றாலும், கதை கலிவித்துறையின் முகாமையான பின்னடைவை ஒன்றை மிக கவனமாக் முன்னகர்த்திய வண்ணம் இருக்கிறார். ஆசிரியர் மாணவரை சிறுமை செய்வதலும், மாணவர்கள் மற்ற துறைகளில் ஆர்வமாக ஈடுபடுதலைக் கருணையற்று வெட்டி எறிவதிலும், மாணவ சமூகத்தைச் சோதனையை நோக்கியே மூலைச் சளவை செய்வதிலும்...விளையாட்டெல்லாம் உப்புக்கும் ஆகாது என்ற துர்போதனை செய்தலையும் பிரச்சார வாடை அறவே தலைகாட்டசெய்யாமல் கதைக்குள் ஊடாட வைத்திருக்கிறார். மாணவர்களின் இயல்பாக விரும்பும் துறையில் குறுக்கே நின்று ,சிதைத்து தங்களின் குறுகிய நோக்குக்குக்காக மடைமாற்றம் செய்து அவர்களின் வாழ்வை பலியிட்டுவிடும் கல்வித்துறையினரின் பிற்போக்கு நிலையை கதை சொல்லாமலே சொல்லிவிடுகிறது.  சமீபத்தில் நடந்து முடிந்த சுக்மா தடகள ஓட்டப்பந்தயத்தில் காலங்காலமாக நாம் பெறும் வெற்றிக்கிண்ணங்களை பிற இனத்தவர் தட்டிச்சென்ற காரணத்தை ஆராய்ந்தால் ருக்குமணி டீச்சர்களின் வன்மம் புரிபடும்.
   இதில் முரணான இரண்டு பாத்திரங்களின் படைப்புத்திறன் சுட்டிக்காட்டப் பட வேண்டிய அம்சம். அவர்களின்  குறிக்கோளை நிறைவேற்றும் விடாப்பிடி கதைக்குள்ளிருந்து வாசகனை வெளியேற விடாத படைப்புச்சாதூர்யம் பாராட்டத்தக்கது. ருக்குமணி, மாணவி(கதைசொல்லி) மேல் வலிந்து செலுத்தும் கணித வாய்ப்பாட்டு மனனமும் , அதன் மேல் விருப்பமுற்று ஓட்டப்பந்தயத்தில் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மாணவியும் இந்த முரணியக்கத்துக்கு நல்ல அடையாளம். இது கதையை சோர்வடையாமல் நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.
    கல்விச்சான்றிதழ் மட்டுமே வாழ்வைச் செம்மையாக்கும் என்ற கருத்தாக்கம் கல்வியாளர்களாலும் அரசியல் வாதிகளாலும் கட்டமைக்கப் பட்ட ஒன்று. இது தவறான ஒன்று என்பதை ஓடாதே கதை வலிந்தே நிறுவியிருக்கிறது. மாணவர்களின் அபிலாசைளை களவாடுகின்ற இச்சமூகத்தின் மீதான கோபமும்,அதனைமடைய முடியாது தவிக்கும் அவர்களின் கையறு நிலையையும் நாம் அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.
    இந்த ஒற்றைக் கதையோடு  இலக்கியவாழ்வை முன்னெடுக்க வேண்டும் ஐஸ்வரி. சமீபத்திய தினக்குரல் கதைகளை வாசித்து வந்தவன் ஓடாதே கதையை வாசித்து, மூச்சுவாங்க சற்றே நின்று இதனை எழுதுகிறேன்-அல்லது கதை எழுத வைத்தது.
(இக்கதை கதாசிரியரின் கைவண்ணமாக இருக்கவேண்டுமே என்பதே என் நம்பிக்கை)

Friday, July 27, 2012

பேயச்சம்கழுத்தைக்கடித்து
குருதியுறுஞ்சும் பேயாகவே
மாரியம்மன் கோயிலேறும்
சடக்கில் தலைகோதி நின்ற
புளிய மரம் அச்சுறுத்திய
காலம் ஒன்றுண்டு

அம்மாதான் சொல்வாள்
ரத்தக் காட்டேறி மரமென்று
 பழம் பறிக்க பள்ளி முடிந்து
கழியெறியும் போதெல்லாம்


அதன் குச்சியொடித்து
விலாசும்போதே
தோலுறித்த ரத்தத் தடையங்கள்
உறுதிப் படுத்தியது
உண்மைதானென்று

வெயில் விரட்டும்
அதன் குளிர் நிழலில்
வியர்வை நனைய
விளையாடும் போதில்
பேய் நினைவு மெல்ல
ஒதுங்கத் தொடங்கியது


நோய் நொடி விரட்டும்
அதன் இலை மருத்தவம்
பார்த்துப் பழகி
நன்பகல் நிழலாய்
கறையத்தொடங்கியது
கொஞ்சம்

மாநுட நலம் காக்கும்
கரிசனை நோக்கம்
மரத்தை நேசிக்க நேர்ந்தது

கருவாட்டுக் குழம்புக்கும்
ஆத்துமீன் கறிக்கும்
புளிப்பு
 சுவை கூட்டியபோதும்
பயம் பறந்தோடி
பாசம் மருவியது

காய்ந்து சுல்லிகள்
நின்றெரியும் தீயில்
தோளில் ஒட்டா புளியம் பழமாய்
அச்சம் ஒட்டாது ஓடியது

கிளையேறி ஒளிந்து
விளையாடும் விறுவிறுப்பில்
கிலி அருதியாய்
 அழிந்தொழிந்தது

கல்லெறிந்து கல்லெறிந்தே
காட்டேரியை
விரட்டி அடித்தோமோ என்னவோ


கித்தா மரங்கள் இலையுதிரில்
எலும்பாய்த் துருத்தி நின்றாலும்
தீராக் கானலை, புயல் மழையை
போராடி ஜெயித்து
நெடுங்காலமாய்
நின்று நிலைக்கும்
புளிய மரம்
சோர்வுறும் மக்களுக்குச்
சூட்டிக் காட்டியது
சுய இருப்பை


பேய் பயம் முற்றாய்
தீர்ந்த
ஒரு விடிகாலைப் பொழுதில்
வாழ்வுக்குப் பயந்த
நைலான் கயிற்றில் தொங்கிய
பேடியொருவனால்
உயிர்க்கத் தொடங்கியது
மீண்டும் பயம்

Monday, May 14, 2012

            
(எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு
இக்கவிதையைக் சமர்ப்பிக்கிறேன். )

  -63

எனக்கின்று -63
நீங்கள் வாழ்த்துக்கூறி
என்னை மீட்டுருவாக்கியதால்

என்னைச்சுற்றி
ஆனந்த ஒளிவட்டம்
என்னாளும் மிதந்திருப்பதால்

என் வெற்றி இன்னதென்று
என் பிரிய எதிரிகள்
இனங்காட்டுவதால்

என்னைச் சூழ்ந்த காற்று
தீபத்தை வேண்டுமானால்
தீர்த்துக் கட்டலாம்
தீயை அல்லவே... என்பதால்

என் நரை
என் வரையறை
இதுவென்று வழி சொல்வதால்
அது என்னை மென்மேலும்
வெள்ளையாக்குவதால்

என் முதுமை
என் இளமையிலிருந்தே
பிறந்ததால்
என் அனுபவம்
கடவுளாகி
என்னைக் கைப்பிடித்து
இட்டுச்செல்வதால்

தட்டுகின்ற கதவுகள்
இன்றில்லையென்றாலும்
என்றாவது திறந்தே
தீரும் என்பதால்

கர்ணன் தொடையைத்
துளைத்த
கவலை வண்டு
என் கவனத்துக்கு அப்பால்
இருப்பதால்

இந்தக் கவிதைக்கான
கரு
இன்று என்னிலிருந்து
வித்தானதால்

மரணம்
மறுபிறப்புக்கான
வாசலைத் திறந்துவிட்டதால்
இன்று எனக்கு
மைனஸ் 63 தானே?.

Thursday, April 12, 2012

         
                    அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்
                                உள்ளொளி நிறைந்த உலகம்

              நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்த நாட்கள்  எங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்கிவிடவேண்டுமென்ற உந்துதலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. வாடகை வீடுகள் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. இது யாருக்கோ கட்டிய வீடு இதில் உனக்கு இடமில்லை என்று குடியிருப்பனை எச்சரித்தபடி இருக்கும். என்னதான் மாதாமாதம் வாடகைப்பணத்தைக் கட்டிமுடித்தாலும், வீட்டு உரிமையாளன் நமக்குத் எந்த விதத் தொந்தரவும் தராவிட்டாலும், நம்முடைய இருப்பை அது தற்காலிகமாகவேதான் கருதுகிறது. ‘வீடு உன்னுடையதல்ல’ என்ற உரிமைப்போராட்டத்தை வீடு மௌனமாகவே அரங்கேற்றிய் வண்ணம் இருக்கிறது போலும். ஆகவே தான், வாடகை இருப்பவனின் கனவு சொந்த வீடொன்றில் நிறுவுவதிலேயே கசிந்து நிலைகொள்கிறது.
    நான் வீடொன்றை கட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது, “வீடு கட்ட நிலம் இருக்கு வேணுமா?” என்ற நண்பர் ஒருவர் கேட்டார். நிலத்தை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பணம் போதாது என்றே உள்மனம் கருதினாலும் ,” என்ன விலைக்கு வருகிறது” என்ற ஆசையை வெளிப்படுத்தினேன்.”ஐயாயிரம் வெள்ளிதான்,” என்றார். இந்த சிறிய தொகைக்கு நிலம் வருகிறதென்றால் அதன் உத்திரவாத்தத்தின் மேல்  உடனே சந்தேகம்  கிளைத்தது எனக்கு.            
     “ஒன்னும் பயப்பட வேண்டாம், நிலம்னா தனிப்பட்டா உள்ளது இல்ல,  ஒர் லோட்” என்றார். “ஒரு ஏக்கர் நிலத்தை துண்டு துண்டாக பிரித்த இடம்,” என்றார்.

            “பின்னாடி ஏதும் பிரச்னை வருமா?”
      “லாயர் வச்சி ஒவ்வொரு துண்டு நெலமும் வாங்கியவருக்கே சொந்தம்னு ஒப்பந்தம் பணிக்க முடியும், சும்மா வாங்கிப்போடய்யா,” என்றார். துண்டு நிலத்தை வாங்குவதில் மனம் ஒப்பாமலிருந்தாலும் , சொந்த வீட்டுக் கனவில் மனத் தடுமாற்றம் தோற்றுத்தான் போனது.

எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. அதை விட மேலாக வாடகை வீடு நடத்தும் உள்ளிருப்புப் போராட்டம் என்னை அவ்வீட்டினின்றும் விரட்டியபடி இருந்தது. முதலில் வாங்கிப்போடுவோம் பணம் சேர்ந்தபோது பின்னாடிபார்த்துக்கொள்ளலாம் என்ற நிலத்தை சொந்தமாக்கிக்கொண்டேன். நிலம் வாங்கும் வரை இல்லாத எண்ணம் நிலம் வாங்கிய தருணத்திலிருந்து அதன் மேல் வீடு கட்டிவிடவேண்டும் என்ற உக்கிரம் விஸ்வரூபமாகி மேலும் மேலும் பெரிதாய் வளர்ந்துகொண்டே இருந்தது.
எப்படியோ பணத்தைப் புரட்டி வீட்டைக் கட்ட ஆரம்பித்தேன். வீட்டுக்காக நிலம் அளக்கப்படும்போதும்,
அடித்தளமிட குழிகள் வெட்டப் படும்போதும், தூண்கள் ஸ்தாபிக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் நான்
 அருகிலேயே இருந்தேன். அது வளர்ச்சியுறும்  ஒவ்வொரு கனத்திலும் என் கைகளின் ஸ்பரிசமும்
வாங்கிக்கிகொண்டது. சிமிந்து, செங்கல், பலகை, தூண், ஓடு, ஆணி இவற்றை நானே வாங்கிகொடுத்தது மட்டுமின்றி
அவை உபயோகிக்கப்படும் தருணத்தில் நான் உடன் இருந்தேன். வீடு சன்னஞ் சன்னமாய் எழும்பும் தருணம் தரும் மகிழ்ச்சிப் பிரவாகம் வெள்ளம் நிறைந்தோடும் ஆறென் கரை புரண்டது.
என் உணர்வை அது உள்வாங்கியபடி இருந்திருக்கவேண்டும். இப்படி எனக்கும் நான் கட்டிக்கொண்டிருக்கும் என்  வீட்டுக்குமான உறவு ஒரு மரத்தை நீருற்றி எருவிட்டு கலை நீக்கி வளர்த்துவிட்டதற்கு ஒப்பானதாக இருந்தது.
       வீட்டுக்கு குடி வந்த நாள் பரவசமான அனுபவமாக பதிவாகி இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்த பின்னரும் அதனை மேலும் மெருகூட்டும் ஆவல் தீராமால் தொடர்ந்தது. எங்களின் மேலுமொரு குழந்தை போன்று அதனை அரவணைத்துக்கொண்டோம். வாடகை வீட்டில் இந்த எண்ணம் எழவில்லை. ஒருகால் அதன் பராமரிப்பு குறித்த எங்கள் புறக்கணிப்பும் அந்நியத்தன்மையும் அதனோடு ஒட்டவிடாமல் செய்ததோ என்னவோ!
      வீடு பற்றிய தன்னுடைய உள்மன விருப்பத்தை தேவதச்சன் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்கிறார்.
                     
 என் வீடு

என் வீடு சிறிய வீடு
            ஆனாலும்,
            வீடு திரும்ப விரும்புகிறேன்!
   
            ஏழ்மையின் அடையாளம்தான் என் வீடு. அத்தாப்புக்கூரையும் களிமண் தரையும் காற்றை அனுமதிக்காத சாளரமற்ற வீடுதான் என் வீடு. ஆனாலும் இது என் வீடு. களைப்போடும், கோபத்தோடும், சோகத்தோடும்  திரும்பும்போது என் நிலையறிந்து எனக்காகக் காத்திருந்து, ஒரு கனிவான மனைவியைப்போல் அன்போடு அரவணைத்துக்கொள்ளும் வீடு., நான் கூச்சமற்று கால் நீட்டி நிம்மதியாக படுக்க, நடமாட , என் விருப்பபடி சுதந்திரமாகப் புழங்க என்ன என் சௌகரியப்படி அனுமதிக்கும் வீடு. தன் மௌன மொழியில் என் உணர்வுகளைப் பரிவோடு பகிர்ந்துகொள்ளும் வீடு. எனவே வசதியற்றதானாலும் என் வீடு என உரிமை கொண்டாடுகிறார்.
           
            சொந்த வீடு சார்ந்த தேவதச்சனின் கூடுதலான உள்ளுணர்வை வாசித்துப்பாருங்கள்.


            ஒவ்வொரு வீடும் நிரந்தரச் சூரியனை
            ஜன்னல் வழியே அழைக்கிறது
            அதை கைக்குழந்தைபோல
            படுக்க வைத்துக்கொள்கிறது
            தினமும் படியில் ஏறியதும்
            பயங்கள் மறையும்
            என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
            பார்க்கிறேன்
            வீட்டிற்கு அப்பால்
            வேறு எதுவும் இல்லை
                     
                     ...தேவதச்சன்...
    
          அதன் கடைசி வரிதான் உயிர்த் துடிப்பினை உணர்த்துகிறது. என் சொந்த வீட்டுக்கு ஒப்பான ஒன்று எதுவும் வெளியே இல்லை.
          என்னுள் ஆர்வத்தையும், கிளர்ச்சியையும், பேரின்பத்தையும் ஊடுறுத்தும் ஈடான பண்பு வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை என்று உரிமையோடு தட்டிக்கொடுத்து அணைத்துக்கொள்கிறார் தன் இல்லத்தை.

            கொஞ்ச காலம் அந்த வீட்டில் என்னால் வாழ முடிந்தது. பதவி உயர்வு காரணமாக நான் வேறு ஒரு ஊருக்கு மாற்றப்பட்டேன். அங்கிருந்து பயணம் செய்யும் உசிதமான தூரமல்ல. வேலை இடத்துகு அருகிலேயே குடிபெயரவேண்டிய கட்டாயம். வீட்டை அப்படியே விட்டுவிட்டு கிளம்பிவிடமுடியாது. ஆள் நடமாடமற்று புழக்கம் நின்றுபோய்விடும். சூன்யம் குடியேற்றம் செய்துவிடும். வேறு வழியில்லாமல்
            “விற்று விடலாமே,” என்று மன வேதனையோடு முன்வைத்தாள். வீடு உடனே வாங்கப்பட்டது.
            ஆனால் அதனை விட்டு வெளியேறுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. கயிறில்லாமல் எங்கள் அனைவரையும் கட்டிப்போட்டிருந்தது. வீட்டின் ஒவ்வொரு மூளையிலும் எங்கள் சுவாசம் கேட்டது. அந்த வீட்டில் எங்கள் பாதங்கள் படாத தரை இல்லை, எங்கள் கைகள் தொடாத சுவரில்லை, எங்கள் பார்வையிலிருந்து தப்பிய விட்டம் இல்லை. என் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிய இடங்களில் அவர்களின் மகிழ்ச்சிக்குரல் ஒலித்தவண்ணமிருப்பதாக உணர்ந்தோம். சன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டுக் கிளம்பும்போது எல்லாருடைய சொல்லணா சோகம் அப்பிக்கிடந்தது. யார் யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும்? அதனின் கடைசி முறை திரும்பிப்பார்க்கும் தருணத்தில் நெஞ்செல்லாம் வலித்தது. வீட்டை நிராதரவான நிலையில் விட்டு விட்டோமோ என்ற கவலை.
                 
என் கண்முன்னே எழும்பிய வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டானபோது, வாடகை வீடு போலவே சொந்த வீடும் நிரந்தரமானதல்ல என்ற உண்மை மெல்ல புலப்பட ஆரம்பித்தது.

                 ரொம்ப காலத்துக்குப் பிறகு நான் மீண்டும் அங்கே திரும்பிப்போக போகவேண்டிய சந்தர்ப்பம் உண்டானது. என்  பழைய வீட்டைப் பற்றி உருவான கவிதைதான் இது.
           
  இரண்டாவது ஆன்மா


நான் முன்பிருந்த
வீட்டுக்குப் போனபோதுதான்
எனக்கு இரண்டு ஆன்மாக்கள்
இருப்பதாக உணர்ந்தேன்

வீட்டின் தூண் ஒன்றைக்
கெட்டியாகப் பிடித்தவாறு
இருந்தது அது

வீட்டைக் காலி செய்துவிட்டு
விலகியபோது
அது அங்கேயே
தங்கிவிட்டிருக்கக்கூடும்

கடைசியாக
ஒருமுறை திரும்பிப் பார்க்கவைத்ததும்
அதுவாக ஏன் இருக்கமுடியாது

வீட்டை விட்டுப் பிரியும்
தருணத்தில்
ஒரே பிஸ்கட்டை நாயொன்று
கவ்வ்¢ச்சென்ற பசித்த குழந்தையின் சோகம்
கனத்திருந்தது

என் குரல்களின்
அசரீரியை
சேகரித்து வைத்து
ஒலித்துக்காட்டியது

என் பாதத்தடங்கள்
படியாத
இடமொன்றுண்டா
என்று கேலி செய்தது

என் படுக்கையறையிலிருந்து
வரும் குரட்டையொலி
சன்னமாகக் கசிந்தது

கொய்யா மரத்தை அன்னாந்தவாறு
வீட்டை
மீண்டும் வாங்கிவிடலாமே
என்று என் மகன் கேட்டான்
 இரண்டாவது
ஆன்மாவிடம்
எப்படி விலை பேசுவது?Saturday, February 18, 2012

தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்கு துணை முதல்வர் திரு கோவிந்தசாமி
 ஆசிரியர் முனிச்செல்வியுடன் நான்

என் எழுத்துச் சகோதரி முனிச்செல்வி  ஏற்கனவே தான் போதித்த பள்ளிகளில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த என்னை அழைத்திருக்கிறார். அது ஒரு அலாதியான அனுபவம். தானும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் படைப்பிலக்கியம் பற்றிய வற்றாத பற்று  ஊறிக்கொண்டே இருக்கிறது . இம்முறையும் மாணவர் பயனுற என்னை தற்போது அவர் பணியாற்றும் தாமான் பெர்வீரா இடைநிலைப் பள்ளியில் ஒரு பயிலரங்கை நடத்தச் சொல்லி கேட்டுக்கொண்டதிலிருந்து இலக்கியம் சார்ந்த அவரின் ஈர்ப்பு நன்கு புலனாகிறது.( ஏன் அவரையே அழைக்கிறீர்கள் ,எனக்கு ஒரு  வாய்ப்பு தரலாமல்லவா என்று யாராவது உங்களைக் கேட்டும் வரலாம் செல்வி) ஒரு மூன்றாண்டு காலம் தன்னுடைய முதுகலைப் படிப்பை வெற்றிகரமாய் முடித்துவிட்டு இந்தப் புதிய பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் அவர்.எங்கே போனாலும் மாணவர்களோடு அன்பான தொடர்பு வைத்திருப்பவர் இவர். அவர்களுக்கும் படைப்பிலக்கிய ஆற்றல் வளரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.
கடந்த வெள்ளிக்கிழமை 17.2.2012 ல் சரியாக 12.50 க்குப் பள்ளியை அடைந்ததும் என்னை வரவேற்றவர் அப்பள்ளியின் துணை முதல்வர் திரு. கோவிந்தசாமி அவர்கள். என்னை அடையாளம் தெரிந்தது எனக்கு முதலில் வியப்பாகவே இருந்தது. அதிலும் நான் ஒரு எழுத்தாளர் என்பதை அவர் அறிந்து வைத்திருந்ததுதான். அவர் என் படைப்புகளை வாசித்திருக்கிறார் என்பதை அவரின் துவக்க உரையில் புலனானது. என் புகழபெற்ற கவிதையை (இவன் நட்ட மரங்கள்…..) அவரும் மாணவர் முன்னால் சொன்னதில் நான் மெய்யுருகிப் போகவில்லை என்றாலும்….(பழகிப்போயிடுச்சு) ஒரு துணை முதல்வர் வாயிலிருந்து வரும்போது அது எத்தனை உள்ளங்களில் குடியிருக்கிறது என்பதையும் , அது வியந்தோததற்குரியதுதான் என்பதையும், அது பிறருக்கான அகத்தூண்டலாக இருப்பது மட்டுமல்லாமல் என்னையும்  உற்சாகமூட்டுவதாக அமைகிறது என்பதில் ஐயமில்லைதான். ஆசிரியர் முனிச்செல்வியின் அறிமுக உரையில், என்னை அவ்வளவு தூரம் பாராட்டிப் பேசி இருக்கவேண்டாம் என்றே தோன்றுகிறது. ஒரு முன்னோடியை மாணவர் முன்னால் பாராட்டியே ஆக வேண்டும் என்பது அவர்களுக்கான உந்து சக்தியாக அமையவேண்டும் என்று ஆசிரியர் நினைத்திருந்ததையும் மறுப்பதற்கில்லை.
நானும் துணை முதல்வரும் இல்ஹாம் அறைக்குள் நுழையும்போது மூன்றாம், நான்காம், ஐந்தாம் படிவ மாணவர்கள்  சுமார் அறுபது பேர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆசிரியர் இல்லாத அறை படும் அல்லோல கல்லோலம் அங்கே இல்லாதிருந்தது வர்வேற்புக்குரிய சூழலுக்கு ஏற்றதாக இருந்தது. இந்த அசாத்ரணமான ஒழுங்கு கட்டமைதிக்கு ஒரு முக்கிய காரணம் ஒன்றுண்டு. அதனைப் பின்னர் சொல்கிறேன்.
பி.எம்.ஆர் , எஸ்.பி.எம் மாணவர்  சிறுகதையோ, நாடகமோ எழுது வேண்டுமென்பது சோதனை வினாக்களில்  ஒன்று. ஒரு பொதுத் தலைப்பையோ, அல்லது ஒரு சிறுகதையின் துவக்க வரிகளையோ கொடுத்து கதை எழுதப் பணிக்கிறது வினா. அதற்கேற்ப என் வழி நடத்தல் அமைய வேண்டுமென்று முனிச் செல்வி கேட்டுக்கொண்டார். வினாத்தாட்களையும் என் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தார். சோதனையை நோக்கியே மலேசிய பாடத்திட்டங்கள் வடிவமைத்திருந்தாலும், சிறுகதை எழுதத்தூண்டும் பகுதி மாணவர்களைச் சோதனையோடு முடிச்சுப் போட்டுவிடாமல் படைப்பிலக்கியத்துக்கான எண்ணத்தை நோக்கிப்போகும் பரிணாமத்தை உள்ளடக்கியது உள்ளபடியே போற்றத்தக்கதுதான். அவர்களின் வினாத்தாட்களில் கூட உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் வினாக்களாக கேட்கப்பட்டிருந்ததானது உள்ளூர் கலைக்கான  அங்கீகாரமாகவே கருதலாம். மு. வ, அகிலன், கல்கி போன்றவர்களின் நாவல்களும், வினாவிடைப்பகுதிகளிலும் கோலோச்சியிருந்த காலம் மலையேறிவிட்டது. (மலேசியாவில் இன்றைக்கும் அதிகமாக அறியப்படும் எழுத்தாளர் மு.வ தான்) சோதனை வாரியத்தின் தமிழ்ப்பகுதித் தலைவர் மூர்த்தியின் முயற்சியும் , பங்களிப்பும் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டியே ஆகவேண்டும். இல்லையென்றால் தமிழ் நாட்டு ஆக்ரமிப்பு இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்.
   தொடக்கத்தில் சிறுகதை புனைவு சார்ந்தது என்றும். புனைவு அழகியல் கூறுகளைக் கொண்டது என்று விளக்கிச்சொல்லிவிட்டு, கட்டுரைக்கும் கதைக்குமான உள்ளீடு கூறுமுறையின் முரண் பற்றியும் விளக்கினேன்.
   சிறுகதை என்றால் என்ன, அதன் வடிவமைதி எப்படி அமைதல் வேண்டும், தொடக்க வரிகளின் ஈர்ப்பு கதைக்குள்ளே வாசகனைக் கவரும் தன்மை என்பது எது,  அழகியல் கூறுகள்  ஒரு சிறுகதையை  எவ்வாறு மெருகேற்றுகிறது என்பதையெல்லாம் ஒரு முக்கால் மணி நேரத்தில் விளக்கி முடித்தேன். சுய அனுபவமே ஒரு சிறுகதையைச் செறிவாக அமைக்கும் என்பதை சில எடுத்துக்காட்டு மூலம் காட்டிச் சென்றான்.( தொடக்க நிலைக்குச் சுய அனுபவக் கதயாடலே சிறந்தது. படைப்பாளனுக்கு மிக நெருக்கமான தொடர்புடையது அதுதானே) மதிய உணவுக்குப் பிறகு உண்டாகும் சோர்வைக் காட்டாமல்,  கவனச்சிதறல் குறையாமல் , மாணவ மணிகள் என்னைப் பின் தொடர்ந்தது என் பேச்சு ஆர்வநிலையை மட்டுப்படுத்தவில்லை என்பதற்கான ஆதார சுருதியாக கருத வைத்தது.
     அதன் பின்னர் ஒரு சிறுகதைப் படிநிலை எடுப்பு, தொடுப்பு, முடிவு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்காக ருஷ்ய எழுத்தாளர் லியோ டோல்ஸ்டாயின் ‘அவனுக்கு அது போதும்’ என்ற சிறுகதையைக் கொடுத்து வாசிக்கச் செய்து , அதனை மேற்கூறிய படிநிலை வாரியாக பிரித்து எழுதச் செய்தேன். மாணவர்களை ஏற்கனவே ஏழு பிரிவுகளாகப் பிரித்து குழு ரீதியாக பணிமனை நடத்தினார் ஆசிரியர் முனிச்செல்வி.. அவர்கள் கதையையும், அதன் வடிவத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டது, தாங்கள் எழுதி வந்ததைப் மாணவர் முன்னால் படைக்கும் போது தெளிவானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவையும் ஒரு கதையைத் தயார் செய்யப் பணித்து, அவற்றையும் வடிவ நேர்த்தியோடு அடுக்கச்சோல்லி படைக்கச் சொன்னேன். என் இரண்டு மணி நேர விளக்கம் பலனளித்ததா, தோல்வி கண்டாத என்பதற்கான பலப்பரீட்சையாகவே இதனை நான் மேற்கொண்டேன். மாணவர்கள் சிறுகதையின் மையக் கருவை அடிப்படையாக்கொண்டு  அதன் வடிவ அமைதி  சிதறாமல் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு வந்தனர். சிலரிடம் குறுக்கிட்ட சினிமாத் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.( சோற்றிலே கல்லாக இருந்த சினிமா, இப்போது சோற்றூப்பருக்கையில் கற்களாக மலிந்து விட்டன ) வானவில் வருவதற்கு முன்னர் சினிமா மோகம் குறைவு. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட சீரியஸ் எழுத்தாளர்கள் வானவில்லின் சினிமா விற்பனை பற்றி எழுதலாமே. ஆமாம் அப்புறம் தம்பட்டம் அடித்துக்கொள்ள அஸ்ட்ரோவை பேட்டிக்குக் கெஞ்ச முடியாதே?
 மாணவர்களுக்கு வார்த்தை எண்ணிக்கையின் சேகரம் குறைவாகவே இருக்கும் என்பதில் பல பட்டறைகளில் நான் கண்டறிந்த ஒன்று. அதனால் ஒரு முழு கதையை எழுதப் பணிக்கவில்லை. சிறுகதைக்கு வார்த்தை தேர்வு மிக முக்கியமானது. உணர்வு ரீதியாக அதனை சொல்லிச்செல்ல பொருத்தமான சொற்களைச் சேர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களிடம் கொள்முதல் கனிசமான அளவு இல்லாத பட்சத்தில் நல்ல கதையைச் சொல்லும் திறன் மங்கியிருக்கும். எனவே செய்நேர்த்தியிலேயே என் கவனம் இருந்தது. தொடர் வாசிப்பே அவர்கள் சொல்வங்கியைக் கனக்கச்செய்யும் என்று அறிவுறுத்தி  நிறைய வாசிக்கச்சொன்னேன். வழி நடத்த நல் ஆசிரியர்கள் அமைந்துவிட்ட காரணத்தால் பின்னாளில் அவர்களிடமிருந்து கதைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. சோதனையை முன்வைத்து மட்டும் நான் பயிலரங்கை முன்னெடுப்பதில்லை. வாழ்க்கை பரப்பில் திறந்து கிடக்கும் பல்வேறு சுவாரஸ்யங்களையும் ருசித்துப் பருகவும்தான்.
    மதியம் ஒன்றரை துவங்கி நான்கரை வரை நடந்த பயிலரங்கில் துணை முதல்வரும், முனிச்செல்வியும், ஆசிரியை புஷ்பராணியும்  அறையை விட்டுப் போகாமல் இருந்தது அவர்கள் மாணவர்கள் பால் கொண்ட அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் காட்டியது.
   நான்கரை மணிக்குப் பயிலரங்கு முடிந்ததும்துணை முதல்வர், என்னை பள்ளி வாசல் வரை வந்து வழி அனுப்பும் போது, மாணவர்கள் சற்று நேரம் விறைப்பாகக் நின்று (ராணுவ வீரர் போன்று) அவர் நெருங்கியதும் , குனிந்து அவருக்கு வணக்கம் சொன்னது அப்பள்ளியின் கட்டொழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்த்தியது. பல பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர் கடப்பதைக் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்களும் அவ்வாறே. இங்கே மாணவர் ஒழுக்கம் பாசாங்கில்லாமல் இருப்பது எப்படி என்று கேட்டேன். நாங்கள் பெற்றோரோடு கொண்ட அணுக்கமான உறவும், அவர்கள் ஒத்துழைப்பும் முக்கியக் காரணம் என்றார், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கிய இப்பள்ளி இன்றைக்கு ஆயிரத்து எழுநூறு மாணவர்கள் எண்ணிக்கையைத் தொட்டும் , மேலும் கூடிய வண்ணமே இருக்கிறது. எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருப்பதற்கு அதன் கட்டொழுங்கு மரபு ரீதியாக்க் கடைபிடிக்கப் படுவதே காரணம் என்றார்.  அடிப்படையில் அது சரியாக இருந்தால் மற்ற நடவடிக்கைகள் சிதறாமல் நடக்கும் அல்லவா?
     வீடு நோக்கி பயணிக்கும் போது நெடுஞ்சாலைக்குள் நுழைவதில் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நடந்து செல்லும் ஒருவரைக் கேட்டேன். மனுஷன் வெயில் நேரத்திலும் தள்ளாடிக்கொண்டிருந்தார். எனக்குப் பாதையைக் காட்டிக்விட்டு, தன்னை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓரிடத்தில் கொண்டுபோய் விடும்படி கேட்டுக்கொண்டார். சரி ஏறுங்கய்யா என்றேன். உள் நுழைந்தவர் கதவைப் பாடரென்று சாத்தினார். இன்னும் கொஞ்சம் வேகமாக இழுத்து மூடியிருந்தால் வாகனம் பொல பொல வென்று உதிர்ந்து போயிருக்கும். பழைய வண்டி. இறக்கிவிட்டவுடன் மூன்று விரலைக் காட்டி மூனு இருந்தா கொடுங்க என்றார். மூனு எனக்கும் சேர்த்து நாமம் என்றே விளங்கிக்கொண்டேன்.
ஆமாம். பள்ளியின் ஒழுங்கைக் காப்பாற்ற தகுந்த தலைமைத்துவம் இருக்கிறது. பப்லிக்கை எப்படி காப்பாற்றுவது?