Tuesday, September 27, 2011

ஒரு பருந்தும் பாவப்பட்ட ஜென்மமும்.

     
நோக்கம்:

         ஜூலை 28 காலை 9.25க்கெல்லாம் நான் வேலை செய்து ஓய்வு பெற்ற கணேசர் கலாசாலையில் இருந்தேன். அதிகாலை என்னுடைய மாமுல் மருத்துவ பரிசோதனையைச் சுங்கைப்பட்டாணி மருத்துவ மனையில் முடித்துக்கொண்டு, பசி எடுத்ததால் காலை உணவை வந்தான் மீயை சீனர் உணவகத்தில் முடித்துக்கொண்டு மனைவியை மீண்டும் வீட்டில் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பயணமானேன். நான் காண்ட்ரக்ட் ஆசிரியர் வேலைக்கு மனு போடுவதால் என்னுடைய கடைசி கியூ 8 பெறுவதற்கு அங்கே சென்றேன்.

வருகைப்பொருள்

         நான் ஓய்வு பெற்று ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் கோப்புகளைத் தேடி கியூ எட்டை உருவி எடுக்க குமாஸ்தாவுக்கு அவகாசம் கொடுத்து மறுநாள்  அங்கு பிரசன்னமானேன். அப்பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் கனகம் என்னைப் பார்க்கவேண்டும் என்று குமஸ்தாவிடம் தகவல் சொல்லியிருந்ததால் கியூ எட்டைப் பெற்றுக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்கதவைத் தட்டினேன். இதற்கு முன்னர் தலைமை ஆசிரியரைப்பற்றி அங்கு பணிபுரியும் (என்னிடமும் பணி புரிந்த) ஆசிரியர்கள் ஓரிருவர் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தைச் சொல்லவில்லை. அந்த அபிப்பிராயத்தின் முகாந்திரத்தில் தலைமை ஆசிரியரின் கண்களில் படாமல் திரும்பி விடுவது மரியாதையற்ற செயல் என்பதால் அவர் அறைக் கதவைத் தட்டினேன்.
      என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே ஒரு பிரச்சனைக்காரனை நோக்கி வீசுகின்ற அவதானிப்போடு எதிர்கொண்டார். வாசல் புறத்திலிருந்து வரும் ஒளி என் முகத்தை கிரகணப் படுத்தியிருக்கலாம். “நான் புண்ணியவான் டீச்சர்,” என்று இடைமறித்து அவரின் அகோர தரிசனத்தின் நோக்கத்தைக் கலைக்க முயன்றேன். “ஓ சார், வாங்க வாங்க வணக்கம். நான் யாரோ பெற்றோருங்கதான் பிரச்ன குடுக்க வந்திருக்காங்க்ன்னு நெனச்சேன்,” என்று இருக்கையிலிருந்து சடக்கென்று எழுந்து கொஞ்சம் முன்னகர்ந்து என்னை வரவேற்றேர். அவரைப் பற்றிய என்னிடம் திணிக்கப்பட்ட முன்னபிப்பிராயங்கள் செல்லாதது என்ற பிரக்ஞை  அவரின் வரவேற்பில் மெல்ல நசியத்துவங்கியது. அப்போது அவரோடு பேசிக்கொண்டிருந்த துணைத் தலைமை ஆசிரியர் சமயோசிதம் தெரிந்தோ, தலைமை ஆசிரியரின் சமிக்ஞையிலோ நாற்காலியை விட்டெழுந்து விடைபெற்றார். ஒரு பணிவான புன்னகையை வீசியவாறு. அவர் மேசைமேலிருந்த கனத்த , மேலட்டை தடித்த வருகையாளர் பதிவு நோட்டில் என்னைக் கையொப்பமிடச்சொன்னார். சுமூகமான தொடக்கம்.
     என் பெயருக்குச் சில நிமிடங்களுக்கு  முன்னர்தான் மூர்த்தி வருகை தந்திருந்த  அடையாளமாக பதிவின் ஈரம் சரிவர காயாது இங்க் கருத்து , மினுக்கி, சிற்றொலி பட்டுத் தெறித்த நட்சத்திரம் போன்று எம்பி நிற்பது தெரிந்தது.

  “ மூர்த்தி வந்திட்டுப் போனாரோ?” என்றவாறே பதிவு செய்தேன். பதிவு செய்து முடித்ததும் மெல்லிய கௌரவ உணர்வு என்னை ஆட்கொண்டு உற்சாகப்படுத்தியது.(பழைய நெனப்புடா சாமி)


வளர்ச்சிப் படிநிலை 1.  

    
    “ஆமாம் சார்"  என்றவர் "மூர்த்தியும் நானும் இதே ஸ்கூல்ல ஒன்னா அஞ்சாறு வருஷம் வேல செஞ்சோம். அப்போ அவரு எனக்கு எதிராதான் பேசுவாரு. குருபுசார் பக்கம்தான் அவரு. ஆனா இப்போ அவரு பி.ஐ.பி.ஜி தலைவரு. நான் குருபுசார். அப்போ இருந்த சாதாரண ஆசிரியர் கனகம் வேற , இப்போ குருபுசார இருக்கிற கனகம் வேற! வயசும் அனுபவமும் ஆள பொரட்டிப் போட்டுடுச்சி சார். அப்போ ஆசிரியாரா இருந்த கனகம் கறாரான கனகம், இப்போ குருபுசார இருக்கிற கனகம் வேலையில கண்டிசனான கனகம். ஒரு பள்ளிக்கோடத்த முன்னெடுத்து நடத்துற அதிகாரமும் பொறுப்பும் வந்ததும்தான் எங்கிட்ட இருந்த பழைய கனகம் காலாவதியாப் போயி புது கனகம் உருவெடுத்துட்டா. தலைமைப் பொறுப்பு முக்கியமான பொறுப்பில்லையா? எத்தன பேருக்கு பதில் சொல்லணும்! கெமெந்திரியானுக்கு, ஜபத்தானுக்கு, பி.பி.டிக்கு , பெற்றோருக்கு, பொது அமைப்புக்குன்னு நமக்குள்ள ப்ரஷ்ஷர் கூ....ட. அதனால் முன்ன இருந்த கனகம் காணாப்போயி இப்போள்ள கனகமா மாறிட்டேன். ஆனா எல்லாரும் பழைய கனகமாத்தான் என்ன பாக்குறாங்க. வம்புக்கு நிக்கிற பேர்விழியாத்தான் இன்னும் கருதுராங்க. எப்பியோ குருபுசாருக்கிட்ட பிரச்ன தந்து  நிர்வாகத்தக்குத் தொல்ல கொடுத்த கனகமாத்தான் பாக்குறாங்க. நான் மாறிட்டேன்னு நிரூபீக்க நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன்? முடியல சார். மூர்த்தி கூட சொன்னாரு, “ டீச்சர் முன்ன நீங்களும் நானும் எலியும் பூனையுமா இருந்தோம், இப்போ ஒரு பள்ளிக்கோடத்த நிர்வகிக்கிற முக்கியமான பொறுப்புல இருக்கோம். அதனால் பழைய பகைய மறந்துட்டு , பள்ளிக்கோட நன்மைக்காக ரெண்டு பேரும் கைகோத்துக்குவோம்னு,” சொன்னாரு, நானும் திருப்பி அதையேதான் சொன்னேன். பழச மறந்துடறது நமக்கு பள்ளிக்கோடத்துக்கும் நல்லது. புதிய கனகமாத்தான் என்ன நீங்க பாக்கப்போறீங்கன்னு சொன்ன சார். அவரு பரவால்லீங்க சார் .அவரு பழைய மூர்த்தியும் இல்ல, நான் பழைய கனகமும் இல்ல? புள்ளைங்க நலனுக்காக நாங்க சமரசமாயிட்டோம்.
   “சார் முன்ன நீங்க இருக்கும் போது,  வாத்தியாருங்க எப்படி சார்?”
   “அப்போ இருந்த ரொம்ப பேரு இப்போ இ......”
   “ பெற்றோர பத்தி சொல்லுங்க சார்”
   “ இப்போ எல்லாம் புது பெற்றோரா....இ.....”
என்ன சார் பெற்றோரெல்லாம் இப்படி இருக்காங்க. அன்னக்கி தர்மாவோட பிள்ளைக்கு குவாம்ப் -அரசாங்க ஒதவித்தொக ,எறநூறு வெள்ளி தரலேன்னு போராட்டம் பண்ணப்போறேன்னு என்ன பயமுறுத்தி அறிக்கையெல்லாம் விட்டு, ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு கேட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் பண்ணாரு சார். சார் ஆர்ப்பாட்டத்துக்குப் பத்து பேரு போதுமா சார். என்னாட இந்தாளு கோமாளித்தனம் பன்றாரேன்னு போலிசுக்குப் போன் பண்ணிட்டேன் சார். போலிசப் பாத்ததும் அஞ்சாறு பேரு அப்படியே நழுவிட்டானுங்க. போலிஸ¤கூட கேட்டான் சார் என்னடா ஆர்ப்பாட்டம் இதுன்னு, அஞ்சாறு பேருகூட இல்லாது ஆர்ப்பாட்டம் னு? (போலிசுக்கும் கௌரவக் கொறைச்சல் ஏற்படுமில்லியா? ஒரு நூறு பேராவது கூச்சல் போட்டிருந்தா பரவாயில்லை) வந்த போலிஸ¤க்கு ஒரு பிரத்தியேக மிடுக்கு வந்திருக்கும்! சார் இதுக்கெல்லாம் காரணம் அந்த கண்ணன்ந்தான் சார் அறிக்கைய நகலெடுத்து பெற்றோருக்குக் கொடுத்தது அவந்தான் சார். இந்தக் கண்ணன்னுக்குத் குத்திக்கொடுக்கிறதெல்லாம் இங்குள்ள வாத்தியாருங்கதான்! ஏன் சார் நீங்க இருக்கிறப்போ இப்படி இருஞ்சா?
    “ நான் இருக்கிறப்போ இதெல்........”      இந்த கண்ணனுக்கு நான் எவ்ளோ ஒதவி பண்ணேங்கிறத மறந்துட்டான் சார் ? என்ன சார் இவன்? ஒரு நாள் என் புள்ளைங்களுக்கு நீங்கதான் ஒதவி பண்ணனு என் கால புடிச்சி கெஞ்சனா சார்.(பொம்பல காலையா?, ஜெயலலிதா ஸ்தானத்துக்கு வந்துட்டாப்பில!) ரெண்டு புள்ளைங்களுக்கு அரசாங்க ஒதவித்தொக குவாம்ப்ப போட்டுக்கொடுத்தேன் சார். பாருங்க சார் தனியா வந்து கெஞ்சி கூத்தாடிட்டு, மீட்டிங் நேரத்துல தண்ணிபோட்டுட்டு தாறுமாறா பேசுறான் சார். தண்ணி போட்டுட்டு பேசுறவுங்களோட நான் பேசமாட்டேன்னு, மீட்டிங்கிலேர்ந்து வெளியாயிட்டேன் சார். குடிகாரனுக்கெல்லாம் என்ன சார் மரியாத கொடுக்க வேண்டியிருக்கு? அதுவும் கூட்டத்துல!(குடிகாரனுக்கு தனியா இருக்கும்போது ராஜ மரியாதை கொடுக்கலாமோ?)

 படிநிலை 2
  நான் 2007 கடைசில இங்க வேலக்கு வந்தப்போ வகுப்பற, சைன்ஸ் ரூம், பி.கே ரூம் ,ஸ்டாப் ரூம் எல்லாம் தாறுமாறா கெடந்துச்சி. அலமாறியெல்லாம் ஒடஞ்சி, பைல்லேல்லாம் கலைஞ்சி, காறையான் ஏறி, தூசு படிஞ்சி .... எல்லாத்தியும் சுத்தப் படுத்தினே சார்.. இந்த  பிஐபிஜி கிட்ட கொஞ்சம் காசு கொடுங்க. நெறைய சுத்தப் படுத்தணும்னு எல்லா பங்கறையையும் கொண்டு போயி காட்டுனேன் சார். பழைய நிர்வாகம் காசு வைக்காம போய்ட்டாங்கன்னு, காரணம் சொல்றாங்க சார்.
முன்னால் தலைமை ஆசிரியரு அதுக்கு மேல, ஒரு காசு வைக்காம கஜானவ காலியாக்கிட்டுப் போய்ட்டாங்க. என்னா டீச்சர் இது? நிர்வாகம் கைல கொடுக்கறதுக்கு முன்னால எல்லாத்தையும் தொடச்சிட்டா கொடுக்கிறதுன்னு கேட்டுட்டேன். அவங்க” நான் என்னா பண்றது, முன்னால் தலைமை ஆசிரியருங்க இப்படித்தான் கொடுத்துட்டுபோனாங்க , அவங்க வச்ச கடன அடைக்கவே எனக்கு போதும் போதும்னு ஆயுடுசின்னு, காரணம் சொல்றாங்க சார்.( இது ஒரு அனுமார் வால் கதை. முன்னாலுக்கும் முன்னால் ஆசிரியர், முன்னாலுக்கு முன்னாலுக்கு முன்னால் அதற்குப் பின்னாலும் கடன் பற்றுக் கதை வளரும்) யாருக்கிட்டேயும் சொல்லாத ஒரு ரகசியத்த சொல்றேன் சார். ( என் வாழ்நாளில் அவரைச் சந்தித்துப் பேசுவது இதுதான் முதல் முறை. ஒரு ரகசியத்தைச் சொல்ல, இந்த ஒரு காரணம் போதாதா?)  இதுதான் ரொம்ப பேருக்குத் தெரியாது சார். என் ஹஸ்பண்ட் பெண்சன் ஆனப்போ அவரோட  இ.பி.எப் சேமிப்புலேர்ந்து முப்பாதியிரம் வெள்ளி கேட்டேன் சார். “நீ திருந்தவே மாட்டியான்னு . இதுலேயும் கைவக்கச் சொல்றியா?”ன்னு திட்டிடாரு சார்.  குடுக்கிலேன்னா பராவால்ல நான் என் நகய வச்சி வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன். நான் நகய விரும்பி போடமாட்டேன் சார்.(அவர் கழுத்து குரல்வலை வரை பாத்திக் சாரோங் கிபாயா மூடியிருந்தது. ஆதாரம் கிடைக்கவில்லை) கையில் அடுக்காய் நான்கைந்து காப்பு இருந்தது. ( உரசிப்பார்ப்பது அநாகரீகம் இல்லையா!) அழுதுக்கிட்டே முப்பாதாயிரம் வெள்ளி எடுத்துக் கொடுத்தாரு. இத எந்தக் கணக்குல சார் சேக்குறது? சொந்தக் காசு சார்!
    நான் இவ்வளவு நேரம் அவரிடம் செலவிடுவேன் என்று எதிர் பார்க்கவில்லை. மூன்று நிமிடத்துக்கு மேல் யாரிடமும் தொடர்ச்சியாய் பேசும் இயல்பு இல்லாதவன். கோட்டுப்பால் மாதிரி இழுக்க இழுக்க நீண்டு கொண்டே போகிறது. எங்காவது ஒரு புள்ளியில அறுபடாதா என்ற ஆதங்கம் மனசுக்குள்! சில மனிதர்கள் எப்படி முற்றுப்புள்ளி என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடுகிறார்கள்.

படிநிலை 3:
      இருக்கையிலிருந்து நெளிந்து , முன்னகர்ந்து , காதைச் சொறிய ஆரம்பித்தேன். அவர் முகத்தில் வசமாய் அகப்பட்டுக்கொண்ட என் பார்வையை விலக்கியவாறு. புடவை விற்பனையாளனிடம்தான் பொறுமையைக் கற்றுக்கொள்ளவேண்டும். அல்லது புடவை விற்பனையாளனாகவே வேலை செய்திருக்கவேண்டும். புடவையின் நீளம்போல பொறுமையும் நீண்டிருக்கும்.

    இவ்ளோ செலவு பண்ணியும் இந்த ஸ்கூல்ல எனக்கு நல்ல பேரு இல்ல சார். இந்த வாத்தியாருங்க ஒரு எதிரிய பாக்குற மாதிரிதான் என்ன பாக்குறாங்க. எங்கிட்ட வேல செஞ்ச துணைத்தலைமை ஆசிரியருங்க, நான் சொன்னதா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லினேன்னு என்னப்பத்தி மோசமான அபிப்பிராயத்த பரப்பி விட்டுட்டாங்க. எங்கிட்ட கொணஞ்சி கொணஞ்சி பேசிட்டு பின்னால குத்துற வேலய செஞ்சாங்க. பெற்றோருங்க அடிக்கடி மீட்டிங்கல நான் ரகசியாம சொன்னதைபத்தி   பேசுவாங்க. அவங்களுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு தெரியாம ஒரு முட்டாள் மாதிரி முழிச்சதுண்டு. சரி இதெல்லாம் எப்படி இவங்களுக்குத் தெரியும்னு யோச்சிச்சிபாத்தப்ப இவங்க ரெண்டு பேருக்கிட்டருந்துதான் பரவிருக்கும்னு தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப நாளா இப்படியே செஞ்சிட்டு வந்தாங்க. பாத்தேன் இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு வேற ஸ்கூலுக்கு மாத்தி வுட்டுட்டேன். “அவங்கதான் என்ன சதி பண்ணி மாத்திட்டாங்கன்னு பெற்றோருக்கிட்ட சொல்லிட்டாங்க. என்ன சார் இது ? ஏன் சார் இப்போ வர பி.கேல்லாம் இப்படி இருக்காஙக.. நீங்க சொல்லுங்க சார்...!
“மனுசாளுங்கன்னா நாலு வி....... “
சார் நான் என்ன பிரச்னனாலும் பேசித் தீத்துக்குவோம்னு ஆபிஸ¤க்கு வரச்சொல்லிடுவேன் சார். ஒக்காந்தி பேசுனா பல பிரச்ன தீருமில்ல சார்.
“ஆமா நீஙக சொல்ற.......”
எங்க சார் அப்பியும் முடியல சார். பரமலிங்க ஒங்ககிட்ட வேல செஞ்சிருக்காரு இல்ல. அவரு பாரு சார் கோலாலம்பூருக்கு மாணவர்கள சுற்றுலாவுக்கு அழச்சிட்டு போற பொறுப்ப கொடுத்தேன். போக்குவரத்து செலவுக்குமட்டும் நாலாயிரம் பேசி முடிச்சாரு. முன் பனமும் கட்டியாச்சு. ஏன் இவ்ளோ வருதுன்னு எனக்கு ஒரு சந்தேகம்தான். இதுக்கெடையில ஒரு பையன் ஆபீசுக்கு வந்து “நானும் பஸ் வச்சிருக்கேன். சுற்றுலா கிற்றுலா போனும்னா எங்கிட்ட சொல்லுங்க,”ன்னாரு.
நானும் சரின்னு சொல்லிட்டு. கோலாலம்பூருக்குப் போவ எவ்ளோப்பா கேப்பேன்னு ஒரு பேச்சுக்குக் கேட்டேன். அவன் கணக்குப் பண்ணிட்டு ரெண்டாயிரத்து ஐன்னூறு வரும்னு சொன்னான். இது பாருங்க சார் பரமலிங்கம் காதுக்கு போயிடுடுச்சு. நேரா ஆபீசுக்கு வந்து என்ன கேக்கத கேள்வியெல்லாம் கேட்டாரு சார். நாந்தான் பேசி முடிச்சிட்டனே. “என்ன நம்பாம தான நீங்க மத்தவங்ககிட்ட விசாரிக்கிறீங்க.எங்கிட்ட பொறுப்பு கொடுத்துட்டு மத்தவங்கல விசாரிச்சா என்ன அர்த்தம்? ஏன் என் மூஞ்சில கரி பூசுற வேலையெல்லாம் செய்றீங்கன்னு வேணும்னே சத்தம் போட்டு கேட்டுட்டாரு. நீங்கெல்லாம் பெரிய வாத்தியாருக்கே லாயக்கில்லேன்னு பேசிட்டாரு.  இவர சும்மா விடுலாம்மா . மறு வருஷமே இங்கேர்ந்து தூக்கிட்டேன். ஏன் சார் நான் விசாரிச்சது தப்பா?
“அது தப்புன்னு சொல்ல முடியா.....”

நான் மீண்டும் கொஞ்சம் அதிகமாய் நெளிந்து , அவரிடமிருந்து கவனத்தை மீட்டு சுவரில் மாட்டியிருக்கும் படங்களையும் எழுத்துகளையும் பார்க்கிறேன். என் இருப்பு சவகாசமாய் இல்லையென்பதை என் உடல்மொழி வழி செய்தி அனுப்பும் முயற்சி செய்தேன். என் போதாத காலம் , அந்த சமிக்ஞைகள் போய்ச்சேரவில்லை!
நம்ம பேசுனது எப்படி இந்த ஆளுக்குத் தெரியும்னு பாத்தா . ஒருநாள் இப்படித்தான் நான் பேசிட்டு இருக்கிறப்போ அந்த முகம் பாக்குற கண்ணாடி வழியா பாத்தா இந்தக் கிராணி செல்வா ஒட்டுக்கேக்குறது பாத்துட்டேன். கேட்டவன் என்னா செய்வான்னா ...நான் இல்லாத நேரம் பாத்து பிலேக் குருக்கு போயீ வாத்தியாருங்கக்கிட்ட பத்தவக்கிறது. அப்புறம் எங்கிட்ட வந்து நல்ல புள்ளையா நடிக்கிறது. இவந்தான் அந்த சகுனியான்னு ஸ்கூல மாத்தி வுட்டுட்டேன். ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாதவன் சார். இப்போ இருக்கிறவங்க பாதி பேரு வேற ஸ்கூல்லேர்ந்து வந்தவங்க. புதுசா வந்ததுங்களும் அப்படித்தான் இருக்குங்க!

படிநிலை 4
 பிட்டம் சூடேறி நாற்காலியில் ஊடுருவி நாற்காலியின் சூடு பிட்டம் வழியாக மண்டையை நோக்கி நகர்ந்தது. ஜவ்வு பார்ட்டியிடம் மாட்டிக்கொண்ட வலி பிடரியில் தெறித்தது.

தோ இப்போ பேசிட்டுப் போனிச்சே அந்த பி.கே நீங்க , இருக்கிற சுங்கப்பட்டாணியிலேர்ந்துதான் வந்துச்சி. இது லேசுபட்ட ஆளுன்னு நெனச்சீங்களா?
பள்ளிக்கோடத்துக்கு வந்த மறு நாளே நான் வெள்ளி சனி லீவுல வேலக்கி வரமுடியாது. நான் சைன்ஸ் பாட மட்டுந்தான் எடுப்பேன். என் பி.கே ஹெம் வேலய மட்டுந்தான் செய்வேன். எனக்கு வாரதுக்கு 450 நிமிசத்துக்கு மேல பாடம் தரக்கூடாது, குறிப்பா நீங்க எங்கக்கிட்ட அஞ்சி நிமிசத்துக்கு மேல பேசக்கூடாதுன்னு.( அந்த மனுஷி இங்க வர்ரதுக்கு முன்னயே யாரோ பலமா எச்சரிச்சிட்டு இருக்காங்க. நான் தான் வகையறியாம வந்து மாட்டிக்கிட்டிருக்கேன்) ஒரு பத்து சட்டம் போடுதுங்க சார் எங்கிட்டயே. இதெல்லாம் வேல செய்றதுக்கு லாயக்கா? சொல்லுங்க சார்.
(நான் என்னத்த சொல்லி..... என்னத்த கேட்டு.......)
படி நிலை 5
படி நிலை 6
படிநிலை 7
படிநிலை 8
நான் என் கடிகாரத்தை முதல் முறையாக பார்த்தேன். நேரம் பார்க்க என்று நீங்கள் தப்பாக எண்ணிவிட மாட்டீர்கள். அப்போதும் நான் அனுப்பும் சமிக்ஞைகள் இலக்கை அடையாத அஸ்திரமாய் என்னிடமே திரும்பி வந்தது. இப்போ பாத்து என் கைப்பேசி கூட உதவிக்கு வரவில்லை. வரவில்லையென்றால் என்ன? ஏதோ அழைப்பு வரும் அதிர்வுகளை உணர்ந்து பேசியைப் பையிலிருந்து எடுத்து “ தோ வந்துடுறேன் முடிஞ்சி..” என்று நாடகீயமான வசனத்தை உதிர்த்தும் புண்ணியமில்லை.
இழுவை மனுஷி கவ்விய வலி அனுபவித்துக்கொண்டிருக்கும் எனக்கு விமோசனம் கிடைக்காதா? ஹெலிகொடர்ல போற சனியன ஏன் ஏணி வச்சி எறக்கினேன்னு ஆயிடுச்சு.
பிடரி காந்தியது. உடம்பில் ஏதோ ஒன்று ஊர்ந்தது. அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளும் தைரியம் வார்த்தைக்கு இல்லாமல் இருப்பது எரிச்சலாக இருந்தது.

படிநிலை 9
படிநிலை 10

முடிவுரை:
“டீச்சர் ஒங்க வேலய கெடுத்துக்கிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன். எனக்கும் முக்கியமா ஒரு அலுவல் இருக்கு” நான் இருக்கையை விட்டு மல்லுக்கட்டிக்கொண்டு எழுகிறேன்.
“சார் என்ன சார் இவ்ளோ நேரம் இருந்திட்டு திடீர்னு போறேன்னு சொல்றீங்க. வாங்க சார் கெண்டீன்ல ஒரு டீ சாப்பிட்டுப் போலாம்.” (கெண்டின்னல 2வது அத்தியாயம் ஆரம்பிச்சிடுமோ என்ற பயம் என்னை அச்சுறுத்தியது!)
“இல்லைங்க நேரமில்ல மன்னிச்சிடுங்க!”
சார் ஒங்க ஆலோசனைய கேக்கத்தான் சார் ஒங்கள கூப்பிட்டேன். ரொம்ப நன்றிங்க  நீங்க இவ்ளோ நேரம் இருந்ததுக்கு.
சார் ,அதோ போறானே அந்த வாத்தியார பத்தி நீங்க என்னா நெனைக்குறீங்க? அவன்.

அவர எனக்குத் தெரியாது..... அப்போ நா வரட்டா?


அடைவு நிலை:
என் ஐந்து புலன்கள் வழியாக ஒருசேர புகையும் அனலும் வெளியேறிக்கொண்டிருந்தது.
பள்ளியின் வளாகத்தை விட்டு என் கார் பாய்ந்துகொண்டு வெளியேறியது.

(நோக்கம் , பொருள் , படிநிலை, அடைவு நிலை எல்லாம் தினசரி போதிக்கும் ஆசிரியர்கள் எழுதும் பாடத்திட்டத்தில் வரும்)