Skip to main content

ஆக்டோபஸ் கவிதைகளும் , அடர்ந்த கவித்துவமும்


7. நினைவைத் தொடரும் தீராத நிழல்



         நான் பள்ளியில் இருந்த சமயம் ஒரு முறை எனக்கொரு தொலை பேசி அழைப்பு வந்தது. அலுவலகத்தில் எனக்கு வரும் அழைப்புகள்  அநேகமாக வேலை சம்பந்தப்படதாகவே இருக்கும். மேலதிகாரிகள், சக தலைமை ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்தே  பள்ளி தொலைபேசியை ரீங்காரமிடச் செய்யும்  . ஆனால் , அன்று என்னைத் திகைப்புற வைத்த அழைப்பு ஒரு பெண்ணினுடையது. என் பதின்ம வயதில் என்னைக்கிரங்கடித்து , என்னை திக்குமுக்காடச்செய்து , என்னை நடைப்பிணமாக உலவவிட்டு , பின்னர் என் கைக்குக் கிட்டாது போன அதே பெண்ணினுடைய அழைப்பு. அவள் தன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் என் ஞாபகக்கிடங்கு எங்கும் அலைந்து தேடாமல் பட்டென்று அவளை என் மனக்கண்முன்  கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. இத்தனைக்கும் அவளைப்பார்த்து 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்திருந்தது. முப்பது ஆண்டுகள் கடந்தாலும் அவளை அதிசயாமாய் அதே பதின்மவயதுப்  தோற்றத்தையே காட்சிப்படுதிக்கொண்டிருந்தது நினைவு! அவளின் அப்போதைய ஐம்பது வயது மதிக்கத்தக்க பிம்பத்தைக்கூட மனக்கண் முன் நிறுத்த மனசாட்சி இடம் தரவில்லை என்பது அந்தப் பதின்மவயதி உண்டான பாதிப்புதானே!.

முதிராத பதின்ம வயதில் நாம் கொள்ளும் நேசம் ,நட்பு ,காதல் அனைத்தும் மனித மூலையில் நிரந்தரமான ஒரு இடத்தைப்பிடித்துப் பட்டா போட்டு உட்கார்ந்துகொண்டு லேசில் அகல்வதில்லை போலும்! அந்தப் பதிவுகள் காலத்தால் அழிந்துபோகாது , அவ்வப்போது தன்னைப்புதுப்பித்துக் கொண்டு தண்ணீருக்குள் மூழ்கிவிடாத தக்கைபோல மேலெழுந்து நம் நினைவுகளை அலைக்கழிக்கின்றன. சிறு குழந்தை கடையில் இருக்கும் விளையாட்டுப் பொருளுக்கு கேட்டுத் தொல்லை தருவதுபோல , நம் இருப்பை அல்லல் படுத்துகின்றன.

   அவளுக்கும் எனக்குமான நட்பு அவள் வேறொரு தோட்டத்திலிருந்து வந்து அவளின் நெருங்கிய உறவினரான என் அண்டை வீட்டில் தங்கிப் படிக்க வந்ததிலிருந்து தொடங்கியிருந்தது. அவளின் பெற்றோர் வீடு பள்ளியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவளை என் அருகே கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. அவளின் அன்றாட தரிசனம் என்னை நிலைகுலையச் செய்த வண்ணமிருந்தது. அவள் சித்தியோடு பேசும் குரல் சில சமயம் எனக்கான ரகசியத்தகவலைக் கசிய விடுவதாகப்பட்டது. அவளின் பார்வை என் மேல் எதேச்சையாய் பட்டுத் திரும்பும்போதெல்லாம் நான் என்னிலிருந்து என்னை இழந்தபடி இருந்தேன். எதை நினைத்தோ ஒரு நேர்த்தியான சித்திரத்தைப்போல அவள் அதரங்களில் விரிந்தாடும் புன்னகை, எனக்கானதுதான் என நான் பத்திரப்படுத்திக் கொண்டதுண்டு. அவள் உடல் மொழி வசீகரத்தில் தீக்குழிக்குமுன்  மந்திரிக்கப்பட்ட ஆடுபோல சுயபிரக்ஞையற்று நின்றதுண்டு. அவளிடம் பேசும் சந்தர்ப்பங்கள் அரிதாகவே கிடைத்தன. அப்படியான வாய்ப்புக்களின் வார்த்தையிழந்து உளறிக்கொட்டியதுதான் மிச்சம்.

அவளிடம் என் காதலைச் சொல்லத் தோன்றும்போதெல்லாம் வார்த்தைகள் அனிச்சையாய் முறிந்துபோய் ஊனமாகிப்போனதுண்டு.

ஒரு தலைக் காதலாகவே அவள் இடைநிலைக்கல்வி முடியும் வரை நீண்டது. அவள் என்னை விரும்பினாலா இல்லையா என்பதன் மர்மம் இன்று வரை மதில்மேல் நிற்கும் பூனை எந்தப்பக்கம் தாவப்போகிறது என்று தெரியாமலேயே என் விருப்பம் நசிந்துகொண்டிருந்தது.



அவள் அன்று என்னோடு பேசும்போது தான் லண்டனிலிருந்து நேற்று முன்தினம் தான் வந்தததாகவும். என்னைப்பற்றி விசாரித்ததில் நான் இப்பள்ளியில் வேலை செய்வதாகவும், ஏனோ என்னோடு பேசத்தோணியது என்றும் கூறினாள். லண்டனுக்கு வந்தால் அவள் இல்லத்துக்கு வரவேண்டுமென்று சொல்லித் தொலைபேசி எண்ணையும் வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தாள். குடும்பத்தைப் பற்றியும் குழந்தைப் பற்றியும் பரஸ்பரமாக விசாரித்துக்கொண்டோம். கடந்த கால குறிப்புகள் எதையும் பேச மறுத்திருந்தோம் இருவரும்!

  அந்த உரையாடல் முடிந்ததும் , முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு என் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் தேடிக் கண்டுபிடித்து பிரத்தியேகமாக என்னிடம் ஏன் பேசவேண்டுமென்ற வினா என்னுள் எழுந்துகொண்டே இருந்தது! அவள் என்னை மானசீகமாகக் காதலித்திருப்பாளா. என்னைப்போலவே தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறியிருப்பாளோ, என்னைப்போலவே அரைப்பைத்தியமாய் அளைந்திருப்பாளா, என்ற எண்ணத்தைக்கடந்து எளிதில் விட முடியவில்லை.

  அவள் நினைவாகவே இருந்த என் நிலையை இக்கவிதைகள் முழுதாகப் பிரதிபலிக்கின்றன.



 1.  போனவாரம் சாரலுக்கு

   குற்றாலம் போனபோது கைப்பேனா மறந்து

   கால் செருப்பு தொலைந்து

   வரும் வழியில் கண்டெடுத்த

   கல் வெள்ளிக் கொலுசொன்று

   கற்பனையில் வரைந்த

   பொற்பாதச் சித்திரத்தை

   கலைக்க முடியவில்லையே     -விகரமாதித்தியன் நம்பி

        ................

2.   திராட்சைக் காரன் ஏமாற்றினாலும்

   திராட்சைகள் ஏமாற்றுவதில்லை

   என்ற வரிகளைக் கணபதி அண்ணனுக்கு

   எழுதியிருந்தேனாம் கடைசி கடிதத்தில்

   வாஸ்தவமாகவே ஞாபகமில்லை

   இப்படித்

   தன்னையறியாமல் செய்கின்ற

   காரியம் ஒவ்வொன்றும்

   நல்லபடியாக அமைந்துவிட்டது எனில்

   எவ்வளவு நன்றாக இருக்கும்

   காற்று கலைந்த

   சங்கரி சிகை மாதிரி      - கல்யாண்ஜி





எதை எதையோ மறந்துபோன இரு கவிஞர்களுக்குக் கையில் கிடைத்த கால் கொலுசும், காற்று கலைத்து அலைந்த சங்கரி சிகையும் இன்னமும் அலைக்கழிக்க வைப்பது வியப்புதானே!

       படைப்பாளிகள் புனைவின் உச்சம் காட்சிப்படுத்தும் சொற்களில் அமைந்திருக்கிறது. தான் அவதானித்த புறச் சூழலை உள்வாங்கி உணர்ந்தும், உணர்தலின் வழி வெளிப்படுத்தும் சொற்களில் சூட்சமத்தில்தான் இருக்கிறது ஒரு கவிதையின் வெற்றி. கவிதைக்கான சொற்கள் நினைத்ததுபோல அமையவில்லையெனில் படைப்பாளன் உணர்ந்த ஒன்றை உணர்த்த முடியாத தடுமாற்றம் உண்டாகிறது. அந்தத் தடுமாற்றம் ஏன் எனச் சிந்திக்கும்போது, அவனிடம் சேகரமாகியுள்ள சொற்களின் சொற்ப எண்ணிக்கையே பதிலாய்க் கிடைக்கிறது. நம்மிடம் உள்ள சொற்களஞ்சியம் குறுகி இருந்தால், படைப்புக்கான சொற்களை அமாவாசை இரவில் தொலைந்த சவரி முடியைத்தேடும் நிலையைப் போலத்தான் ஆகிவிடும். இதற்கு நிவாரணம் என்ன? வாசிப்பின் தளத்தையும் தரத்தையும் விரிவுபடுத்திக்கொள்வதேயாம்.






Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த