Skip to main content

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

      
   6.  சுய வம்சத்தையே சூறையாடும் மனித வன்மம் 

        தாய் வயிற்றில் கருவுற்றது முதல் பிறந்து வளரும் குழந்தைப் பருவம் மிகுந்த கவனத்துக்குரியது. ஒன்பது மாதங்கள் கருவறையின் இருட்டறையில் சன்னஞ்சன்னமாய் வளர்ந்து அங்கிருந்து வெளிச்சத்துக்கு வந்தவுடன் அதன் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது பிரமிப்பான சில தகவல்களை மனித வாழ்வுக்குக் கிடைக்கின்றன. குழந்தை பிறந்த முன்று நான்கு மாதத்துக்குள் புரண்டு படுக்கும். ஆறு மாதத்துக்குள்  தவழும். பின்னர் மெல்ல முழந்தாள் போட்டு நகரும். ரெக்கை முளைத்த பறவைக்குஞ்சுகள் பறக்க முனைவதைப்போல! புரளும்போதும் தவழும்போதும் முழந்தாள் போடும் போதும் அதற்குண்டாகும் வலியை அது பொருட்படுத்துவதில்லை. டொக் டொக் என்று முட்டியை சிமிந்துத்தரையில் பதித்துப் பதித்து நடந்து வரும்போதே நம் முட்டிகள் வலிப்பதுபோல இருக்கும். பார்வை இழந்தவனின் உலகம் எப்படி இருக்கும் என்பதை உணர கொஞ்ச நேரம் கண்ணை மூடி நடந்தால்தான் உணர்ந்துகொள்வது போல , வலி எப்படிப்படது என்பதை நீங்கள் முட்டி போட்டு நடந்து பார்த்தால்தான் உணரமுடியும்.
      வெற்றி காணும் வரை கஜினி முகம்மதுவைப் போல தன் முயற்சியிலிருந்து பின் வாங்காது, உடலை வறுத்தி வறுத்தி புரளும். தவழும், முட்டி போடும். குழந்தைக்குள் இயல்பாக பதிவாகிவிட்ட சுயமுயற்சியின் உந்துதலின் செயல்பாடுகள் இவை. தன்னால் முடியாது என்று எந்தக் குழந்தையாவது புரண்டு படுக்காமல், தவழாமல், முட்டிபோட்டு நகராமல் தோல்வியைச் ஏற்றுக்கொண்டதுண்டா?   எல்லாம் சுயமாய் முயற்சி செய்யவேண்டுமென்ற பிடிவாதம்! பின்னர் மெல்ல உட்கார ஆரம்பிக்கும். நிற்பதற்கு அது செய்யும் பிரயத்தனங்கள் மிக முக்கியமானது. முதல் முறையாய் இரண்டு பலவீனமான கால்களால் தன் உடலை சமநிலைப்படுத்தி நிற்க முயலும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும். கருமமே கண்ணாய் இருந்து, சுதாரித்து, கடைசியில் சமநிலை கொண்டு நிற்கும்.  பலமுறை உடகார்ந்து எழுந்து உடகார்ந்து எழுந்து முயலும் குழந்தையின் தொடர் செயலுக்கு யார் தன்முனைப்பு தந்தார் ? பணம் கட்டி யாரிடம் தன்முனைப்பு பயிற்சியை மேற்கொண்டது? நடைவண்டியின் துணை என்பதெல்லாம் அதன் இயல்பான நடவடிக்கையைக் கேலி செய்வதற்குச் சமம். ராணுவப் பிரிவில் கொமாண்டோ பயிற்சிப் பிரிவினரின் கடுமையான பயிற்சி மேற்கொள்வதைப்போல , தான் பிறந்துவிட்ட இவ்வுலகின் சவால்களை எதிர்நோக்க தன்னைத் மூர்க்கமாய்த் தயார் படுத்திக்கொள்ளும் செய்முறைப் பயிற்சி ஒப்பானதாகும் இது.
     அதனைத் தொடர்ந்து நடை பயில ஆரம்பிக்கும் . பலமுறை விழும் எழும் தருணங்களில், காயம் பட்டாலும் நன்றாக நடக்கும் வரை எந்த பின்னடைவுக்கும் தன்னை ஒப்புக்கொடுத்துவிடாது. அதனை நடக்காதே என்று கட்டிப்போட்டாலும் அழுது அடம் பிடித்தாவது தன் முயற்சிக்கு மீண்டு வந்துவிடும்! பின்னர் ஓட முயற்சி செய்யும். அதற்குள் இயல்பாகவே அமைந்துவிட்ட சுயமுயற்சியின் பலனாகத்தான் இவ்வளவும் நடக்கிறது. சைக்கில் ஓட்டி சிலமுறை விழுந்தவர்கள் இனி இந்தச்சனியனே வேண்டாம் என்று சைக்கிலை விட்டுத் தூரப்போனவர்களை நான் பார்த்திருக்கிறேன். இன்று வரை சைக்கிலைத்தொட அஞ்சியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் , விடாகொண்டான் தனம் எவ்வளவு படிப்பினையைத் தரவல்லது பாருங்கள். பிஞ்சு வயதில் உடல் வளராத பருவத்தில் எங்கிருந்து கிடைக்கிறது இந்த அமானுஷிய சக்தி. இயல்பாய் அமைந்துவிட்ட மன வலிமை. சாதித்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியம்!
     குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போதுதான் மனித பலவீனம் முதன் முறையாய் அதன் இயல்பான முயற்சி செய்யும் தன்மைக்கு சவால்விடுவதாய் அமைந்துவிடும். நான்கு வயதில் அது பேச ஆரம்பிக்கும்போது தன்னைச்சுற்றி இயங்கும் இயக்கங்களைப் பற்றி ஆராய ஆரம்பிக்கும். மூளையில் தகவல்கள் பதிவாகும் காலக் கட்டம் அது.
     “அம்மா, அது என்னாம்மா?”
     “அதா, அது காற்றாடி”.
     “காத்தாடி எப்படிம்மா சுத்துது?”
     “மின்சாரத்துனால சுத்துது”
     “மின்சாரனமா என்னமா?”
     “மிசாரம்னா கரண்டு”.
     “எப்படிம்மா கரண்டு காத்தாடிய சுத்த வைக்கும்?”
அம்மாவுக்கு இப்போது கோபம் துளிர ஆரம்பிக்கும்.
    “ தொண தொணன்னு கேள்வி கேக்காத,” என்று தடை போடும் அம்மா அதன் அறிவு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார் என்றாகிவிடுகிறது. பல சந்தர்ப்பங்களில் குழந்தைகளின் அறிவுத்தேடலுக்கு அம்மா, அப்பா போன்றவர்கள் தடைக்கல்லாக நின்று விடுகிறார். இது தாழ்வு மனப்பான்மையை குழந்தை மனதில் பதிவு செய்துவிடுகிறது. பிறகு பாலர் பள்ளி ஆசிரியர்களும், பள்ளி ஆசிரியர்களும் சுயமுயற்சியையே தன் பலமாகக் கொண்ட குழந்தையின் தேடல் முயற்சிக்கு தூண்டலாய் அமையாததாலும் அதன் சுய ஆற்றல் மெல்ல பலவீனமடையத் தொடங்குகிறது. பைய இவ்வளவு நாள் பலவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அதன் போக்கில் தொய்வடையும் அறிகுறிகள் நுழைய ஆரம்பிக்கும். வகுப்பில் கேட்கப்படும் வினாக்களுக்கு தன் பதில் சரியாய் இருக்குமா என்ற சந்தேகத்தில் அதற்குப் பதிலளிக்காமல் தன்னை ஓட்டுக்குள் நுழைத்துக்குள்ளும் ஆமையைப்போல ஒடுங்கிக்கொள்ளும்.  இதுநாள்வரை தானாகப் புரண்டு,  தவழ்ந்து, முட்டி போட்டு நகர்ந்து, உடகார்ந்து, நடந்து ஓடி, வினா எழுப்பி தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட குழந்தை, திடீரென பயந்து பின்வாங்குவது எதனால் என்று சிந்திக்கத்தோன்றுகிறது. யாரைத் தன் ஹீரோயினாக, ஹீரோவாக, தன் முன்னோடியாக ஏற்றுக்கொண்டதோ, அவர்களே குழந்தையின் தன்னிச்சையான வளர்ச்சிக்குத் குறுக்கே நின்றுவிடுகிறார்கள்.  எந்தக்குழந்தை  சுய முனைப்போடு முன்னோக்கி நகர்ந்ததோ அதே குழந்தை மனிதனின் எதிர்மறை போதனையால் பின்னகரத் துவங்கி விடுகிறது. தோல்விகளைதோளில் சுமக்கத் தயாராகி விடுகிறது. என்ன முரண் பாருங்கள்! வினாவுக்கு விடை காணத்துடிக்கும் மனதை நிராகரிக்கும்போது அச்ச துளிர ஆரம்பிக்கிறது. அச்சமே வகுப்பறையில் பதிலளிக்கும் திறனை முறித்துவிடுகிறது. இப்படித்தான் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டே தேடலை நிறுத்திவிடுகிறது நாம் குழந்தைக்குள் விதைத்துவிட்ட அச்சம்!

   கீழ்வரும் கவிதை அகத்தூண்டலைச் சாகடிக்கும் மனித வன்மம் குறித்தது.
  
   கடலுக்குள் புதைந்த கேள்விகள்

  கடல் எங்கப்பா முடியும்?
  அங்க..... சூரியன் புதையுற எடத்துல
  சூரியன் ஏம்பா கடல்ல தூங்குது?
  வெய்யில்ல அலைதுல்ல, சூட்டைக் குறைக்க
  நுரை எப்படி வருது?
  மீன் குளிக்குது
  அய்ய தண்ணி கசக்குது .....உப்பு!
  தொண தொனக்காம வெளையாடப் போடா

  கடலுக்குள் நீந்துகின்ற
  ஆயிரம் கேள்விகள் கேட்பாரற்று.

 குழந்தைகள் வினா தொடுப்பது தன் அறிவு வங்கிக்குள் சேகரம் செய்துவைத்துக்கொள்ள! ‘தொண தொணக்காம வெளியாடப்போடா’ என்ற வரிகளில் மனித பலவீனம் வெளிப்படுகிறது. நம் பலவீனத்தை எரிச்சாலாகக் காட்டுகிறோம். அப்போது அதற்குள் அச்ச உணர்வு தலைகாட்டத் தொடங்குகிறது. கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது என்ற கேள்வி மகனிடமிருந்து வந்து விடுமோ என்று நாணிய தந்தை தன்னை அவன் வினா தொடுப்பிலிருந்து விடுவித்துக்கொள்கிறார். கடலளவு தன் அறிவை விரித்துக்கொள்ள விரும்பும் தன் மகன் தன் வாழ்நாள் முழுதும் விடை காண முடியாத பல சந்தேகங்களோடே வாழ்ந்தாக வேண்டியுள்ளதன் காரணம் நமக்கு இப்போது புரிகிறது. வேதனையோடான புரிதல்!
  வினாவுக்கு விடை காணத்துடிக்கும் மனதை நிராகரிக்கும்போது அச்ச துளிர ஆரம்பிக்கிறது.

   நாம் எப்படியேல்லாம் நம் குழந்தை வளரவேண்டும் என்று கறபனை செய்து கொள்கிறோம். ஆனால் பெரும்பாலும் அது கற்பனை அளவிலேயே ஸ்தம்பித்துவிடுகிறது. நாம் தினசரி வாழ்வின் பிரச்னைகளால் குழந்தைகளிடம் நம்மையறியாமல் எதிர்மறை சிந்தனையைப் புகுத்திவிடுகிறாம்.
  ரமேஷ் பிரேதன் தன் கவிதையில் தன் குழந்தையை எப்படி ஆராதிக்கிறார் பாருங்கள். எல்லாப் பெற்றோருமே குழந்தையை இப்படித்தான் கொண்டாடுகிறோம். ஆனால் பின்னாளில்  சாலைக்குப் பழக்கமாகிவிட்ட கார் டயரைப்போல தேய்மானம் ஆகிவிடுகிறோம்.

  

டோல்பின் புத்தர்

இதுவரை நான் பயன்படுத்தியிராத வார்த்தைகளினால்
ஆன வாக்கியங்களினாலான ஒரு கவிதை எழுத
வேண்டும் என்றாய் நீ
எழுதிவிட்டேன் மகளே
அது நீயன்றி வேறேது என்றேன்
உன் முகத்தில் பௌர்ணமி கடலின் பூரிப்பு
டால்•பின் மீன்களின் துள்ளல்கள்
இரண்டு சொற்களுக்கு இடையேயான
வெற்றிடத்துக்குள் பதுங்கியது உனது ஆன்மா
முற்றுப்பெறாத வாக்கியத்தின் இறுதியில்
தொக்கி நிற்கிறது உனது இருப்பு
எல்லாம் கடந்த நிலையில் நான்
உன்னை எழுதிய திளைப்போடு
டால்•பின் வயிற்றுக்குள்
பேரானந்தம்
பேரெழுச்சி
மகாபோதம்
மைத்ரீயம்
உன்னால் நாம் ஒரு மைத்ரீயவாதியானேன்
மகளே என் டால்பின்............                                     ரமேஷ் பிரேம்

டால்பின்கள் வினோதமான நீர்வாழ் உயிரினங்கள். கற்றுக்கொடுப்பதை அப்படியே செய்துகாட்டும் அதிசியப் பிறவி. நம் குழந்தைகளின் சுட்டித்தனத்தையும் உடல் மொழியும்கூட நமக்கு டோல்பினை நினிவுறுத்தும். டால்பினாக மாறி நமையும் மனம் துள்ள வைக்கும்  குழந்தைமையை, நம் பேதமையால் அதன் சுயதூண்டலுக்கு எதிரானவராய் ஆகிவிடுகிறோம்.
    கவிதை எழுத சொற்களின் எண்ணிக்கை மட்டுமே போதாது.  அக எழுச்சி நிலையும், கரிசனமும் காரணமாகிறது. குடும்பம், உறவுகள், பணிச்சூழ்நிலை, அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மனித சுபாவங்கள்,  நண்பர்கள் இவர்கள் பால் அதீதமான கவனிப்பு உண்டாகும்போது கவிஞர்களுக்கு மன எழுச்சி உண்டாகிறது. அதன் பொருட்டே கவிஞர்கள் கவிதை புனைகிறார்கள். இங்கே தன் குழந்தையை அவதானிப்பதில் உண்டான மன்வெழுச்சியே கவிதையாகப் பரிமளிக்கிறது.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின