Friday, September 24, 2010

(இது ஜெயமோகன் வலைப்பூவில் இடம்பெற்ற கடிதம்)

அன்புள்ள ஜெயமோகன்,உங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு கசந்துபோயிருக்கிறார்கள். அதன் நிஜத் தன்மையை உணர்ந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு ஒத்துப்போகிறார்கள். நான் உட்பட. ஒத்துப்போகாதவர்கள் “விட்டேனா பார் இந்த ஜெயமோகனை, இங்கே எப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் நாங்கள் வளர்த்து வருகிறோம், பெரிய பெரிய இன்னாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள்! எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று ?”என்று புலம்பும் ஒரு பெண்ணின் குரல் இன்னும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. விட்டால் படை திரட்டி வீச்சறிவாலோடு நாகர்கோயிலுக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது.இங்கே படைப்பிலக்கியம் தேங்கிப்போனதற்குச் சில விஷயங்களை நான் சொல்ல வேண்டும். மலாயாப் பல்கலைக்கழகதுக்கு(-இங்கே மட்டும்தான் தமிழ் பல காலமாக ஒரு பாடமாக போதிக்கப்பட்டு வருகிறது- )தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கணம் இலக்கியம் போதிக்கத் தருவிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் இரா.தண்டாயுதம். இவரின் குருவான மு.வரதராசனயும்., ஆதர்ஸ எழுத்தாளரான அகிலனையும், ந. பார்த்தசாரதியையும் இங்கே அறிமுகப்படுத்தினார். தற்கால இலக்கியத்தைப் போதிக்கும் பாடத்திட்டத்துக்கு இவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். பல்கலைக்கழகம் , இடைநிலைக்கல்வி பாடத்திட்டத்தில் இன்றைக்கும் இவர்கள் நூல்கள்தான் போதிக்கப்பட்டு வருகிறது. இதனை அடியொற்றி வந்தவர்கள் எப்படிப்பட்ட இலக்கியம் படைப்பார்கள் என்று யூகித்துக்கொள்ளுங்கள். மு.வா , ந.பா , அகிலன், நூல்கள் இன்னமும் இங்குள்ள புத்தகக்கடையில் கிடைக்கும். ஜெயமோகன், சுந்தர ராமசாமி, மௌனி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சேரன் போன்றவர்களை இவர்கள் அறிந்திருக்கவில்லை. நான் உங்களிடம் உங்களை மலேசிய வாசகர்கள் பலர் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினேன். புரிந்துகொண்ட நீங்கள் ஒரு புன் சிரிப்பை உதிர்த்தீர்கள். இங்குள்ள பெண் வாசகர்கள் பலர் ரமணிச்சந்திரனை விடமாட்டார்கள் போலிருக்கிறது. எனவே இங்கேயும் ரமணிச்சந்திர பாணி எழுத்தாளர்கள் உருவாகி எழுதி வருகிறார்கள். இந்த வகை எழுத்து இங்கே செல்லுபடியாவதை தவிர்க்க வெகு காலமாகும். இரா.தண்டாயுதத்தின் இதே கொள்கையைத் தொடர்ந்து காப்பாற்றியவர் இன்னொரு தமிழகப்பேராசிரியர் நா.வி. ஜெயராமன். இவர்களின் போதனையால் இங்கே மு.வாவும், நா.பாவும், அகிலனும் நிரந்தர ‘குடியுரிமை’ பெற்றுவிட்டார்கள். மு.வா விலிருந்து move ஆகாத நிலை இங்கே உருவாகிவிட்டது. இவர்களுக்கு முன்னால் கு. அழகிரிசாமி தமிழ் நேசன் இல்க்கிய ஆசிரியராகப் பணியாற்றக்கொண்டு வரப்பட்டார். அவரின் சேவை நல்ல இலக்கியவாதிகளைப் பிறப்பித்தது. அவர்களில் பலர் இன்றில்லை.இங்கே தமிழகத் தீவிர எழுத்தாளர்கள் நூல்கள் கிடைப்பது அரிது. நான் தமிழகம் வரும்போதெல்லாம் தேடித் தேடி நூல்கள் வாங்கி வருவேன். தமிழகத்துக்கு போக முடியாதவர்கள் இங்கே கிடைக்கும் நூல்களை நம்பியே இலக்கியம் படைக்கிறார்கள். அப்படிக்கிடைக்கும் நூல்களின் விலையோ தமிழ் நாட்டைவிட மும்மடங்கு அதிகம். நீங்களே சிந்தித்துப்பாருங்கள் அதிக விலை கொடுத்து நூல்களை வாங்குவதை விட அதே தரத்திலான சீரியல் நாடகத்தைப் பார்க்கலாமே என்று முடிவெடுக்கிறார்கள். சீரியலும் படப்பிலக்கியத்துக்கான சரக்கை தந்துதவுகிறது.சினிமாவைக்களமாகக்கொண்டு புகழ்பெற்ற வைரமுத்துவின் பாதிப்பு இங்கே மிக அதிகம். அவர் மலேசியாவின் செல்லப்பிள்ளை. ஆஸ்ட்ரோ வானவில், எழுத்தாளர் சங்கம் அவரைப் பலமுறை கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கும், கருவாச்சி காவியத்துக்கும், மலேசிய நாவல் போட்டிக்கும் இங்கே சிவப்புக்கம்பள விரிப்பை நல்கி அவரின் நூலை வெளியிட்டு லட்சக்கணக்கை கொடுத்து அனுப்பியது. அவரின் சினிமாப்பாடல்கள் ஒரு தேசிய கீத அந்தஸ்தைப்பெற்றது. மேத்தா கண்ணீர்ப்பூக்களால் ஆராதிக்கப்ப்ட்டு பின்னர் மறக்கப்பட்டார். இருவரும் மலேசியக் கவிதை பாணிக்கு வழிவகுத்தவர்கள்.தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச்செல்லும் இயக்கங்கள் இங்கே மிக மிகக்குறைவு என்று சொல்லிவிடலாம். நீங்கள் இங்கே வந்து பேசியபோது உங்களிடம் விடுக்கப்பட வினாக்களிலிருந்து இலக்கியப் பின்னடைவை நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்கள் பதில்கள் அதிர்ச்சி வைத்தியமாகவே அர்த்தப் படுத்திக்கொண்டார்கள். வடக்கில் சுவாமி பிரம்மாந்தா ஆசிரமத்தில் நாங்கள் நடத்தும் நவீன இலக்கியச் சிந்தனைக் களமும், கோலாலம்பூரில் வல்லினம் குழு மட்டுமே தீவிர இலக்கிய வளர்ப்பில் ஈடுபடுகிறது. இந்தக் குழுமத்திலிருந்து வருபவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்கள். ஆனால் நம்பிக்கை தரக்கூடியவர்கள். நீங்கள் சொல்வது போல சுயம்புவாக தீவிர வாசகத்தில் ஈடுபடுபவர்கள், இணையத்தில் நல்ல எழுத்தாளர்களைத் தேர்வு செய்து வாசிப்பவர்களும் இவர்கள்தான். இவர்களை நம்பலாம். உங்களை போன்றவர்களுடனான தொடர்பு புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு செல்லும். நன்றி.

( இக்கட்டுரையை உங்கள் தளத்தில் பிரசுரிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.)கோ.புண்ணியவான்.

நவீன இலக்கியச் சிந்தனைக் களம்.Sunday, September 19, 2010

கவிதைக்கும் வாசகனுக்குமான இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறது

1964ல் புதுக்கவிதை மலேசியாவுக்கு அறிமுகப்படுவதற்கு முன்பே நான் மரபுக்கவிதையால் சுவீகரிக்கப்பட்டிருந்தேன். 1961 வாக்கில் இடைநிலைக்கல்வி முடிந்து என்ன செய்வதென்று அல்லாடிய பருவத்தில் தோட்டப்புறத்தில் அலைந்து நேரத்தைப்போக்கிக்கொண்டிருந்தேன். தோட்டப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நூல் நிலையம் மதியம் இரண்டு மணிக்குமேல்தான் திறக்கப்படுமென்பதால் காலையில் நிரைக்குப்போய் அம்மாவுக்கு துணையாய் இருந்துவிட்டு வேலை திரும்பி அம்மா சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டு நூல்நிலையத்துக்குப்புறப்பட்டு விடுவேன். இடைநிலைக்கல்வியில் இரண்டாம் கிரேடில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்- ஒரு உண்மையைச்சொல்வதென்றால் ரப்பர்மரக் காட்டுப்பிள்ளைகளில் அந்தத்தோட்டத்தைப்பொறுத்தவரை MC SPMம்மில் தேர்ச்சிபெற்ற முதல் ஆள் நான்தான். கிராணிமார் வீட்டுப்பிள்ளைகள் எனக்கு முன்னாலேலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்கி மருத்துவக்கல்விக்கு இந்தியாவரை சென்றெல்லாம் இருக்கிறார்கள். தோட்டப்பாட்டாளியின் பிள்ளைகளில் இடைநிலைக்கல்வியில் தேர்ச்சிபெற்றது நான்தான் முதல் மாணவன் என்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாக இருந்தது. தேர்ச்சி பெற்று என்ன செய்ய? மலேசிய மொழியில் சிற்ப்புத்தேர்ச்சி கிடைக்கவில்லை. மலேசிய மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெற்றால்தான் ஆறாம் படிவம் சேர்ந்து பல்கலைக்கழகம் செல்வதற்கும், அரசு வேலைக்குச்செல்வதற்குமான கடப்பிதழாக அமையும். எனக்கு அது வாய்க்கவில்லை. ஆனால் ஐந்து வருட மராத்தான் முயற்சியில் எனக்கும் கிரடிட் கிடைத்து அரசு வேலைக்குச்சென்றேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும். கிரடிட் கிடைக்கும் வரை காலை வேளையில் ரப்பர் காட்டில்தான் என் கால்கள் நடந்தன என்பதும், மாலை நேரத்தில் நூல் நிலைய தரையில் என் கால்கள் மிதந்தன என்பதும், அந்தி வே¨ளையில் ஆற்றங்கரையிலும் நண்பர்களோடு என் கால்கள் நனைந்தன என்பதும் ஒரு ஐந்து வருடங்களின் ஆழப்பதிந்த சுயசரிதை.

இங்கேதான் என் எழுத்துலக வாழ்க்கையின் அடி நாதம் ஆரம்பமாகியிருக்கக்கூடும். குமுதத்திலும் ஆனந்த விகடனிலும் உள்ளூர் படைப்புகளிலும் நான் என்னை ஒப்புக்கொடுத்துவிட்டிருந்த சமயம் அது. அவற்றில் வரும் கதைகளைப்படித்து முடிக்குமுன்பே அதன் முடிவு இப்படித்தான் அமையப்போகிறது என்பதை என்னால் பல சமயங்களில் யூகிக்க முடிந்திருந்தது. இந்த யூகத்தின் ஊடான வெளிப்பாடுகள் என்னையும் எழுதத்துறைக்கு ஈர்த்தது என்று சொல்லலாம். அந்த நூல் நிலையம் அப்படியொன்றும் புத்தகக்காடு கிடையாது. ஆனால் யார் யாரோ வாங்கிப்படித்த நூல்கள் முக்கால்வாசி திராவிடக் கழக நூல்கள் குமுதம் ஆனந்த விகடன் கல்கண்டு என அங்கே பொது வாசிப்புக்குப்போடப்பட்டு கிழிந்தும் சதா கலைந்தும் கிடந்தன. கிழிந்த ஏடுகளுக்குள் முழுதும் மறைந்திருக்கும் படிக்கக்கிடைக்காத மர்மங்கள் எனக்குள் யூக அறிவை மேலோங்கச்செய்து கொண்டிருந்தது.

நூல் நிலையத்தில் படிக்கப்போதுமான புத்தகங்கள் இல்லாததாலும், மேற்கொண்டு படிக்க முடியாததாலும் மாலை நேரங்களில் நான் தோட்டப்புறத்தை நோக்கி ஓடிவரும் செம்மன் சாலைக்கு அருகில் இருக்கும் தார் சடக்கில் சைக்கிளை நிறுத்தி பேருந்துகளையும் வாகனங்களையும் வேடிக்கைப் பார்ப்பது பொழுது போக்காக இருந்தது. இதனை வெட்டி வேலை என்று நீங்கள் தாரளமாக மொழிப்யர்த்துக்கொள்ளலாம்.

அது போன்ற ஒரு நாளில்தான் ஒருவர் பெரிய புத்தகக்கக்கட்டோடு எங்கள்

ஊரைக்கடந்துபோகும் கடைசிப்பேருந்திலிருந்து இறங்கினார். அந்திப்பொழுது இடம் பெயர்ந்து இருள் மெல்ல கவியும் நேரம். மனிதர் அலைந்து திரிந்து அக்கடா என்று நிம்மதி மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

அவர் அந்த ஊருக்கு வருவது அதுதான் முதல் முறை என்பதுபோன்ற முகக்குறிகள் காட்டின. உதவிக்கு யாராவது கிடைப்பார்களா என்ற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு அவரிடம் தென்பட்டது. நான் அவரை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தபடியால், “தம்பி இங்க எங்கியாவது இன்னிக்கி ரவு தங்க முடியுமா?” எனக்கேட்டார்.

யார் வீட்டில் அவரைத்தங்க வைப்பது? உறவினர் இல்லாத ஊருக்கு எந்த தைரியத்தில் வந்தார்? என்னை யாரென்றே தெரியாமலேயே என்னிடம் அவர் உதவி கேட்டது போன்ற பிரமிப்புக்களோடு அவர் அணுகினேன்.

“நீங்கள் இங்க கோயில்ல தங்கலாம், ஆனா அனுமதி கேக்கனும்,” என்றேன்.

“ ஏன் ஒங்க வீட்ல எடமில்லையா?”

அந்தக் கேள்வியில் சவால் நிறைந்த வடிந்தது. வீட்டில் இடமில்லை என்பது ஒருபுறமிருக்க, அறிமுகமில்லாத நபரை வீட்டுக்கு அழைத்துப்போவதில் சங்கடம் நிறைந்தது என்பது எனக்குள்ளேயே நடக்கும் உள்மனப்போரை அவர் அறியாதவராக இருந்திருக்கமுடியாது. ஆனால் அவரின் தர்மசங்கடம் அவரை என் நிலையை புறக்கணிக்கச்செய்திருக்கலாம்.

புத்தக மூட்டையை அவரும் நானும் மாறி மாறி சுமந்துகொண்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.

“என்ன புத்தகங்கள் இவை?” எனக்கேட்டேன்.

“என் கவிதைப்புத்தகங்கள்,” என்றார்.

“நீங்கள் எழுதியதா?”

“ ஆமாம் நான் எழுதியவைதான். ஒங்க எஸ்டேட்டில விக்க கொண்டாந்திருக்கேன்,” என்றார்.

புத்தகம், அதை எழுதிய கவிஞன், எழுதியவனே அவற்றைச் சந்தைப்படுத்தும் முயற்சி என்பதெல்லாம் எனக்கு வியப்பை உண்டாக்கும் செய்திகள். என் தோட்டத்தில் கருவாடு விற்கும் கரிம், துணி விற்கும் பாய், ரொட்டி விற்கும் தாத்தா, எண்ணெய் விற்கும் ராமையா போன்றவர்கள் வருவார்கள். புத்தகம் விற்கும் கவிஞனை பார்ப்பது இதுதான் முதல் முறை. இவரும் சம்பள வாசலில் கடன் கேட்டு வந்து நிற்பாரோ? புத்தகம் எழுதிய படைப்பாளானோடு நான் தோள் உரசியபடி நடந்து வருவது. எனக்குக்கிட்டிய பெரிய கௌரவமாகக் கருதினேன்.

“உங்க பேர் என்னா?” என்றேன். ஒரு புது நூலை வாசிப்பவனின் முதல் நோக்கம் இங்கேயும் பிரதிபலித்தது.

“கரு. வேலுச்சாமி” என்றார். எதிலேயோ பார்த்த நினைவு, அவ்வளவே. ஆனால் நூலை எழுதியவர் என் முன்னால் பிரசன்னமான அதிர்ச்சி உவப்பளிப்பதால் பெயர் ஒரு பொருட்டல்ல. நூலாக்கமென்பது எவ்வளவு பெரிய சாதனை அப்போது - எனக்கு!

எங்கள் வீட்டில் ஒரு கவிஞனை இரவு தங்க வைக்கப்போகிறேன் என்பதும், இனி அவருடனான நட்பு என் சுயத்துக்கு மிகப்பெரிய கௌரவத்தை தரப்போகிறது என்பதான பிரம்மையில் நான் திளைத்தேன்.

அவர் ஒரு மரபுக்கவிஞர். நான் எழுதப்போகும் புதுக்கவிதைகளுக்கு எதிர்ப்பாட்டாளனாகப்போகிறார் என்பதை அப்போது அறியாதவானாய் எங்கள் நட்பு பரிமளக்கத்துவங்கியது.

அவர் எனக்கு யாப்பிலக்கணம் கற்றுத்தர எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எனக்குமதில் ஆர்வம் பிறக்கவே இல்லை. ஆனால் அவருடைய கவிதைத்தொகுப்பை அவரே பல முறை வாசித்துக்காட்டி என்னை அதன் பக்கம் மெல்ல ஈர்க்கத்துவங்கினார். நானும் சந்தத்தை வைத்து மெல்ல மரபுலக்குக்குள் நுழைய ஆரம்பித்தேன். இரண்டொரு கவிதைகள் பிரசுரம் காணத்துவங்கின. அவற்றில் இலக்கணப்பிழைகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டும்போது அதன் மேல் எனக்கு வெறுப்புண்டாகத்துவங்கியது. பிழையைச்சுட்டிக் காட்டாவிட்டால் மரபாளானுக்கு என்ன மரியாதை? நான் கற்ற முதல் விமர்சனப்பாடம் அதுதான்.

அப்போது மரபுக்கவிதைகள் ராஜ பாட்டையில் சிங்கங்கள் நடைபழகிய காலம்.

1964 புதுக்கவிதை சத்தமில்லாமல் மலேசியாவுக்குள் கள்ளத்தனமாக மெல்ல நுழைகிறது. மரபாளர்கள் மத்தியில் பெரும்புயலை உருவாக்கிவிட்டிருந்தது அந்த வீச்சு. ஆனால் அதன் வியாபகத்தைத் தற்காக்க ஒரு படை புறப்பட்டது. அதெல்லாம் நம் நாட்டு இலக்கியம் பத்திரமாய்பதிவு செய்து வைத்திருக்கிறது. கள்ளத்தனமாக நுழைந்த அந்தப் புது வடிவம் இலக்கிய உலகில் கோலோச்சத்துவங்கி பின்னர் நிரந்தரப்பிஜையாக உருவெடுத்தது.

மரபின் மேல் தீராத பற்று கொண்டவனாக இருந்த எனக்கு புதுக்கவிதை என் மனமுடிச்சுகளைக் கட்டுப்பாடில்லாமல் தொடுப்பதற்குத் தோதான ஒன்றாக அமைவதாகப்பட்டது. மரபுக் கட்டுக்குள் இருந்த நான் என்னை கட்டவிழ்த்துக்கொண்டு சிறகு தரிக்க ஆரம்பித்தது அப்போதுதான். மன உணர்வுகளைச்சிதைக்காமல் சொல்ல வந்ததைச் சொல்லில் கொண்டுவந்தததில் எனக்கு உவப்பானதாக அமைந்தது.

எனக்குப்பத்து வயதாக இருக்கும்போது நான் நண்பர்களோடு ஆற்றில் மீன் பிடிக்கச்செல்வது வழக்கமாக இருந்தது. நாங்கள் மகிழ்ச்சியாக் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருநாள் ஒரு கிராணி ( வெள்ளைக்காரனுக்கு மிக நெருக்கமான அடிமை) எங்களை அவனின் மோட்டார் சைக்கிலின் பின்னால் நடக்கச்சொல்லி ஆபீஸ¤க்கு கொண்டு சென்றான். அபீஸ¤க்குள் நுழையச்சொல்லி ஒரு மேசையின்கீழ் முட்டிபோடச்சொல்லி முதுகுப்புறம் மேசையின் கீழ்த்தட்டில் படுமாறு நிற்கச்செய்தான். மிகுந்த குமுறலோடு நாங்கள் கிழே குனிந்தவாறே ஒரு மூன்று மணி நேரம் கிடந்தோம். அதிகார வர்க்கத்தின் முன் சுதந்திரமாக மீன் பிடிப்பதுகூட மிகப்பெரிய தவறு என்ற வாழ்க்கை தத்துவத்தை அப்போது புரிந்து கொண்டேன். எதிர்வினை பயங்கரமாகப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு நடந்தவற்றை என் தந்தையிடம் கூறினேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. நரைத்த முடிகொண்ட அப்பா அபீஸைக்கடக்கும்போதெல்லாம், ஏதோ வேலையிட “டேய் கோய்ஞ்சாமி” என்று அந்த இளைய வயது கிராணி அழைக்கும்போதெல்லாம், சட்டென்று சைக்கிளை விட்டிறங்கி ஏவலுக்காக அடிபணியும் அப்பா எப்படிக்கேட்பார் அநியாயத்தை! அப்பா மட்டுமா தோட்டத்து அப்பாக்களும்தான்!

நான் படித்து வேலைக்காகி வெளி உலக அனுபவத்தை சுவாசிக்கும் போதெல்லாம் என் இளம்பருவப் புண்கள் தனக்கான மருந்ததித்தடவிக் கொண்டன புதுக்கவிதை என்ற மயிலிறகு வழி.

அப்படிப்பிறந்ததுதான் 2018 தடவையாக என் பேனாவாலும் சொல்லப்படும் இவன் நட்ட மரங்கள் கவிதை. இப்போது எல்லாரும் நிமிர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள். எனவே கவிதை காலத்தைக்கடந்து நிற்காது என்கிறார்கள்.

விமர்சிப்பவனை நான் எதிர்வினை செய்பவனல்ல. பல சமயங்களில் என் எழுத்தே பதில் சொல்லிவிடும் என்ற தைரியத்தில்.

............ ............. ..............எனக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்த கவிதை அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்கப்படவேண்டும் என்ற அரசு கொள்கையை எதிர்த்து எழுதப்பட்ட கவிதை.

தலையாட்டி பொம்மைகளாக இருக்கும் தலைமையாசிரியர் கூட்டத்தோடு ஒருமுறை கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்கிறோம். பேருத்துக்குள் கூட்டத்தில் சாமிவேலு சொல்வதையே ஆதரிக்கவேண்டும் என்ற பாலபாடத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல ஓதிக்கொண்டு வந்தார் அப்போதைய அமைப்பாளர். பிரதமரின் ஆசை அறிவியலையும் கணிதத்தையும் எல்லா நிலைப்பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் போதிக்கப்படவேண்டுமென்பதே. தொழில் நுட்பத் துறைக்கு தகுந்த மொழி ஆங்கிலமே என்று மலாய் மொழியின் பின்னடைவை உணர்ந்த பிரதமர் நினைப்பது சரி. ஆனால் தமிழின் தொண்மையை நன்குணர்ந்த நம்மாள் தலையாட்டலாமா? பதவியில் உள்ளவன் பகர்வதெல்லாம் வேதம் என்பது எதேச்சதிகாரத்தின் அடிப்படை தத்துவமல்லவா! நாங்கள் பிரதமர் சொல்லுக்குத் தலையாட்டவேண்டும் சாமிவேலுவின் கனவு. தமிழ்மொழி கூலிக்காரன் மொழிதானே.அப்படியென்றால் தமிழன்? ஆம் இதுநாள் வரை அப்படித்தான்.

பேருந்தில் எனக்கும் அமைப்பாளருக்கும் வாக்கு வாதம் முற்றிக்கொண்டிருந்தது. அமைப்பாளர் நல்ல நண்பர் என்றபடியால் இந்த விவாதம் ஆரோக்கியமாக நடந்தது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால் நான் முன்வைத்த கருத்துக்கு ஆமோதித்த பலர் சாமிவேலுவுக்கே கை தூக்கினார்கள் என்பது சாத்தியமாகி விட்டிருந்தது.

மண்குதிரையை நம்பிக்கூட ஆற்றில் இறங்கிவிடலாம்!

பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது எனக்குள் தமிழைத் தாரைவார்க்கத் துணிந்துவிட்ட தமிழனைப்பற்றி கவிதை ஊற்றெடுக்கத்துவங்கியது.நம்மை தந்திரமாய் ஆற்றுக்கு

அழைத்துச்சென்று

நம் ஈரலைக்கேட்டன முதலைகள்மொழிக்கு முள்கிரீடம் அணிவித்த

பாவிகள் நாம்

ஒரு வகையில்

நாமும் யூதாஸ்கள் தாம்தமிழ்த்தாயின் மகுடத்தை

மண்ணில் தட்டிவிட்டு

கொடுப்பாவி எரிக்க

தீப்பந்தம் எடுத்துக்கொடுத்த

கருப்பு நாள் இது

(ஒரு பகுதி மட்டுமே)

எப்போதும் போல கவிதையை எழுதிவிட்டு பேசாமல் இருக்கமுடியவில்லை என்னால். சில தலைமை ஆசிரியரியர்களிடம் காட்டினேன். படித்துப்பார்த்துவிட்டு, எங்கே அனுப்பப்போகிறீர்கள் என்று கேட்டு விட்டார்கள். செம்பருத்திக்கு என்றேன்.

கவிதை செம்பருத்தியில் வந்தது. கொஞ்ச நாள் கழித்து எனக்கான ஓலை அரசாணையாக வந்தது.

செம்பருத்தியில் வந்த கவிதையை வெட்டி யெடுத்து அதனை மொழி பெயர்த்து அதற்கான வியாக்கியானத்தை எழுதி கல்வி அமைச்சருக்கும், சாமிவேலுவுக்கும், தேசிய கல்வி இயக்குனருக்கும், மாநில கல்வி இயக்குனருக்குமாய் நகல்களை அனுப்பி வைத்து விட்டார் ஒரு தலைமை ஆசிரியர்.

எனக்கு அப்போது பதவி உயர்வுக்கான ஏற்பாடுகள் நடந்துவிட்டிருந்தன என்பது எனக்குத்தெரியாது. அந்த நேரம் பார்த்து என் கவிதை சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் கலக்கிவிட நான் விளக்கம் கொடுக்க இயக்குனரால் அழைக்கப்பட்டிருந்தேன். உங்கள் கவிதை அரசு கொள்கைக்கு எதிரானது என்பதால், உங்களுக்கான பதவி உயர்வு ரத்தாகிறது என்று கூறி என்னை அனுப்பிவிட்டார்.

என் கவிதை வந்த மறுமாதத்திலிருந்து செம்பருத்தி பள்ளிக்கூடங்களில் விற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அன்றிலிருந்த தேசிய கல்வி இயக்குனருக்கு மாநில கல்வி இயக்குனருக்கும் நான் நன்கு ‘அறிமுகமாகி’யிருந்தேன். எனக்குக்கிடைக்கவேண்டிய எல்லா சலுகைகளுக்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டு விட்டிருந்தது.

வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசாக 25000 வெள்ளி பெறுமானமுள்ள வைர நெக்லஸ் பரிசாகக்கிடைத்திருந்தது. எல்லா கண்களுக்கும் வைர நெக்லஸ்தான் தெரிந்ததே தவிர கவிதை தட்டுப்படவேயில்லை என்பது நமக்கும் கவிதைக்குமான இடைவெளியை கட்டியம் கூற தவரவில்லை அந்தச்சம்பவம்.

அந்த வைர நெக்லஸ் உண்மையிலேயே அவ்ளோ பெறுமா?

அதை யார் அணியப் போறாங்க?

அத போட்டுக்குட்டு வெளியே தைரியமா நடக்க முடியுமா?

எங்கிட்ட கொண்டு வந்து காட்டுங்களேன் நான் பாத்திட்டு கொடுத்திர்றேன்.

உங்களுக்குப்பிறகு இது யாரப்போய்ச் சேரும்?

விசாரிச்சுப்பாத்திங்களா இது உண்மையான வைரமான்னு?

இத வித்துறாதீங்க பரம்பர சொத்தா ஒங்க பேர் சொல்லட்டும்.

என்றெல்லாம் கவிதை வாங்கித்தந்த வைரத்துக்கு மதிப்பு கூடிக்கொண்டே போனதே தவிர ஒரிருவர் மட்டுமே கவிதையை வாசிக்கக் கேட்டார்கள்.

ஒரு நாள் எனக்கு அறிமுகமில்லாத பெண்மணி ஒருத்தி கேட்ட கேள்வியை என்னால் எளிதில் மறந்துவிட முடியாது.

“நீங்க தான வைர நெக்லஸ் ஜெயிச்சது?”

“ஆமாங்க.”

“இப்போ அத யாரு போட்டுக்கிறா?”

“என் மனைவி தான்”

“அதெல்லாம் எங்க தகுதிக்கு உள்ளது. நாங்க போட்டு அழகு பாக்குனும். அப்பதான் அதோட மெளசு கூடும்.” என்றார்.எல்லாரும் நம் கவிதையை வாசித்து இன்புறவேண்டுமென்பதுனொரு கவிஞனுக்குள்ள அல்ப ஆசைதான். ஆனால் கவிதை இங்கே எந்தத்தராசில் வைத்து நிறுத்துப்பார்ர்க்கிறார்கள் என்பதுதான் கவிதைக்கான பின்னடைவைப் பறைசாற்றுகிறது.

அந்தக்கவிதையை உங்களின் மறு வாசிப்புக்குத்தருகிறேன்.வெள்ளித்திரைக்கே

வெண்ணிற ஆடையா?

திரையுலகமே திலகமிழந்ததேதொழில்நுட்ப அற்ற காலத்திலேயே

தொழிலின் நுட்பமறிந்தவன் நீஉங்களுக்குள்தான்

எத்தனை அறிஞர்கள்; சான்றோர்கள்

நீயும் அவதாரப்புருஷன்ந்தான்ஒரே பார்வையின் மூலம்

மொழிபெயர்த்து விடுகிறாய் நீமௌனத்தின் மூலம் பேசிவிடுகிறாய் நீஉன் கழுத்து நரம்புகள்கூட

கதை சொல்லிவிடுகிறதுஉன் நெற்றிப்புருவங்களில்

நடிப்பின் துருவங்க்ளித்தொட்டவன் நீஉன் நடை ஒன்று போதாதா

நீ நடிகன் என்பதற்குபராசக்தி வந்தபோதே

பதிவாகிவிட்டது உன் திலகம்.உன் வாய்மொழி உதிரும்

ஒவ்வொரு முறையும்

தமிழ் புதிய சுவாசம் பெறுகிறது

உச்சரிப்பு சுத்திகரிப்பு செய்யப்படுகிறதுபாத்திரங்களைப்பரிமாறுவதில்

சூத்திரம் தெரிந்தவன் மட்டுமல்ல

அள்ளி அள்ளித்தந்த

அட்சய பாத்திரம் நீ

நீ நடிப்புக்கு ராஜரிஷியா? பீஷ்மரா?

அல்லது ஆலமரம்?

உன்னைச்சுற்றினால்தான்

நடிப்புக்குழந்தை பிறக்கும்

அரச மரமா?விருதுகள் ஏணிவைத்து ஏறினாலும்

எட்டிப்பிடிக்கமுடியவில்லை

உன் உயரத்தை.(இறுதிச்சுற்றில் வைரமுத்துவால் தேர்வுபெற்ற கவிதை இது)

கவிதையைப்பற்றி சொல்வதற்கு கவிஞனிடம் நிறையவே இருக்கிறது. மலேசியக் கவிதைச்சிற்றிதழ் மௌனத்துக்கான சின்ன தகவலோடு இதனை இந்த அளவில் நிறுத்திக்கொள்கிறேன்.