Friday, September 25, 2009

ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

கோ.புண்ணியவான்அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய் சகுந்தலா,” என்று எதேச்சையாக அழைக்கும் பட்சத்திலும் அவர் யாரையோ கூப்பிடுகிறார்கள் போலும் என்று தன் போக்கில் நடையை தொடர்ந்தவளாய் இருப்பாள்.சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட காலந்தொட்டு அவள் நிஷா)பார்வதி வேஷம்.வசனம் ஏதுமில்லை.ஒரு மணி நேரத்தில் சூட்டிங் முடிந்துவிடும்.ஐம்பது ரூபாய் தருவதாக துணை நடிகை ஏஜண்டு ஆசைக்காட்டி அழைத்து வந்துவிட்டான்.ஒரு மணி நேரம் என்பது ஒரு பேச்சுக்காகச் சொன்னது. இரண்டு மணி நேரமகலாம்.ஏன் அதிக பட்சம் மூன்று மணி நேரமாகலாம் என்று தான் அவள் கணித்திருந்தாள்.ஆனால் ஐந்து மணி நேரத்தைக்கடந்தும் படப்பிடிப்பு முடியவில்லை.வசனம் இல்லை சும்மா சிவனின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டியதுதான்.புதிதாய் அறிமுகமாகும் ஒரு சுவை பானத்திற்கான விளம்பரப்படம்தான் என்று ஆசைகாட்டி அழைத்து வந்துவிட்டான்.ஐம்பது ரூபாய் அவள் ஆசையைக்கிளப்பிவிட்டிருந்தது.ஆனால் ஐந்து மணி நேரத்துக்கு மேலான உழைப்புக்கு ஐம்பது ரூபாய் ஊதியம் என்பது சுரண்டல்தான்.என்ன செய்வது நிஷா வாய்ப்பைப் புறக்கணித்தால் இன்னொரு உஷாவோ, சைலாவோ பயன்படுத்திக்கொள்வர்.அந்த ஐம்பதும் கைக்கு இன்னும் வந்து சேரவில்லை.படப்பிடிப்பு முடிந்து கொஞ்சம் கூட்டிக்கொடு என்று கேட்டால் தப்பாய்ப்புரிந்துகொண்டு அதற்கு உடனே சம்மதம் கொடுத்துவிடுவான்.அதில் அவனுக்கான வருமானம் அதீதம்.நகத்தில் அழுக்குப்படாமல் பைக்குள் துட்டை நிரப்பும் லாவகம் தெரிந்தவன்.சூடு சொரணையா? அப்படின்னா?

நிஷாவுக்கு வலது தொடையில் வலி பிடுங்கியது.

கையில் குளிர்பானத்தோடு போலிஸ்காரர்கள் விரட்ட ஓடித் தப்பித்து வந்து பார்வதி தொடையில் வந்து விழவேண்டும்.விழுந்த கையோடு, “பார்வதியம்மா மடியிலயே எடங் கொடுத்திட்டாங்க,அம்மாவோட அனுக்கிரகத்தால இனி எவனும் என்ன நெருங்கமுடியாது” என்ற வசனம் பேசி காட்சியை முடிக்கவேண்டும். அவன் ஒடி வந்த வேகத்தில் அவள் தொடையில் விழுவது இது முதல் முறைதான்..அவளை உட்கார்த்திவைத்தபோது இதுதான் நடக்கப்போகிறது என்று அவள் எள்ளவும்கூட எதிர்பார்க்கவில்லை.முதல் முறை அவன் வந்து விழுந்தபோதே அவன் உடற்சுமையைத்தாங்கமுடியாமல் கதறிவிட்டாள்.விழுந்தவன் பிரபல வில்லன் நடிகன் தண்ணிமலை என்று அப்போதுதான் கவனித்தாள். நிஷாவை அவனில் மூன்றில் ஒரு பங்குதான். அஜானுபாகுவான உடல் வாகு. டைரெக்டர் கட் என்று கத்தினார்.இரண்டாவது முறை படம் பிடிப்பதற்கு முன்னால் இயக்குனர் அவளை எச்சரித்தார். “பொறுத்துக்க சரியா அமஞ்சிட்டா சீக்கிரம் முடிச்சிடலாம்”.வலையில் வந்து சிக்கியாயிற்று; தப்பிப்பது தம்பிரான் புண்ணியம்.”என்னால் முடியாது வேற ஆள பாத்துக்குங்க”, என்று எழுந்து போனால் அவர்களின் ஜன்ம சாபத்துக்கு ஆளாகக்கூடும்.”இவள யான்யா கூப்பிட்டு வந்த?”என்று சபிப்பார்கள். அதற்கப்புறம் இந்த இயக்குனர் எடுக்கும் எந்தப் படத்துக்கும் வாய்ப்பு வராது. ஏஜண்டுக்கு அது வேத வாக்கு.

பொறுத்துகொள்ளதான் வேண்டும்.ஐம்பது ரூபாய்.இரண்டு மூன்று நாட்களுக்கு வயிறு காயாது.

இரண்டாவது முறை டேக் சோல்லப்போவதற்கு முன்னாலேயே மனதை ஒருநிலைப்படுத்தி வலியைக்கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நொடிப்பொழுது வேதனைதான்.சமாளித்துக்கொள்ளவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டாள்.அவளுக்கு மனம் சொல்வதை உடல் கேட்கும்.சினிமாத்துறையில் எத்தனை ஆண்டு அனுபவம்! கூட்டத்தில் ஒருத்தியாய், அம்மாவாய், பாட்டியாய், பரத்தையாய், படியில் உருண்டு விழுவதில் நாயகிக்கு டூப்பாய், (சிராய்ப்புக்களையும் வலியையும் தாங்கிக்கொண்டு) ஏன் அவர்களுக்குத் தொப்புளை, முத்தத்துக்குக்கன்னத்தைக்கூட இரவலாய் காட்டவேண்டியிருந்தது.

டைரெக்டர் டேக்சொல்வதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. வெயிலில் உட்கார்ந்திருந்த சிவனுக்கு மேக்கப் கலைந்துவிட்டிருந்தது. டச்சப் செய்யவேண்டியிருந்தது. அடுத்து இவளின் முகத்திலும் மேலும் ஒப்பனை ரசாயனங்கள் பூசப்பட்டன. தன் முகத்தைக்கண்ணாடியில் பார்த்தபோது பார்வதியாக நடிப்பது நிஷாதான் என்று ரசிகர்கள் அடையாளம் காண்பதில் சிரமமிருக்காது.அவளுக்கு அதில் சற்று திருப்தி.டச்சப் முடித்துக்கொண்டு வரிசையில் எல்லாரையும் அமர வைத்தபோது இயக்குனர் கேட்டார் “எல்லாம் ரெடியாப்பா?

“ரெடி சார்”

“கெமரா மேன்”

“ரெடி சார்”

டைரெக்டர் எல்லாவற்றையும் உன்னிப்பாக நோட்டமிட்டார்.எல்லாம் சரியாய் இருந்தது.

“ ஒக். ரெடி டேக்”

“டேக் டு” கிலேப் “அக்ஷன்”

நிஷா தன்னை நிஷாவாக நினைக்காமல் பார்வதியாக அவதாரம் பூண்டாள்.அப்படி அவதரித்தால் வலி தெரியாது என்பது அவள் யூகம். அவள் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.பார்வதியாயிற்றே!

தண்ணிமலை பாராதூரியான உடம்போடு ஓடிவருகிறான்.போலிஸ் கூட்டம் அவனைத்துரத்திப்பிடிப்பதாக ஒரு பிம்மத்தை ஏற்படுத்தியவாறு,திரும்பிப்பார்த்தவாறு ஓடி வந்து பார்வதியின் தொடையில் திமுக்கென்று பாரங்கல்லாய் விழுகிறான்.பார்வதி கண்ணை மூடியவள் கட்டுப்படுத்திக்கொண்டு தியானத்திலேயே இருந்து வலியை சமாளித்துக்கொண்டாள்.

“கட்” கத்தினார் டைரெக்டர்,”என்னையா சொதப்பிட்டே! பார்வதியம்மா எடங்கொடுத்திட்டாங்க இனி எவனும் நெருங்கனா சீவிடுவேன், இல்லையா.அம்மாவோட அனுக்கிரகத்தால, இனி எவனும் என்ன நெருங்க முடியாதுய்யா!”

“சோரி சார் இன்னோரு டேக் போலாம்” கூட்டமாய் நடிக்கும்போது எங்காவது பிசகிவிடும்.மீண்டும் டேக் போகவேண்டியிருக்கும்.

பார்வதியின் வலது தொடையில் பயங்கர வலி அழுத்தியது. தண்ணிமலை ஓடிவந்த வேகத்தில் உட்காரும்போது அந்த திடீர் அழுத்தத்தில் தொடை நசுங்கி எலும்புவரை வலித்தது. எழுந்திருப்பது சிரமமென தோன்றியது.யாராவது கைகொடுத்து தூக்கி விடவேண்டும். இந்தக்காட்சியை ஏன் பார்வதியை மையமிட்டு எடுக்கிறார்கள். சிவன் உலகுக்கெல்லாம் தலைவனாயிற்றே. முழுமுதற் கடவுளாயிற்றே! சிவனுக்கு அடுத்துதானே சக்தி. அவரை மையப்புள்ளியாக வைத்து படம் பண்ணியிருக்கலாமே. மலைபோல் உடல்வாகு கொண்ட தண்ணிமலையைத் தாங்கிக்கொள்ளமுடிந்த அஜானுபாகுவான தேகமாயிற்றே. அவரை விட்டுவிட்டு என்னை ஏன் கொடுமைப்படுத்தவேண்டும்.

பெண்களைத்தானே முகாமயாகவைத்து விளம்பரங்கப்படங்கள் எடுக்கிறார்கள். தேனீர் விளம்பரத்திலிருந்து டொயாட்டா விளம்பரம் வரை எல்லாம் பெண்கள்மயம்தான். மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்குப் பெண்களின் முகமும் உடல்வாகும் விளம்பரங்களின் மூலதனம். அதனால்தான் பார்வதியைத்தேர்வு செய்திருக்கிறார்கள் போலும்.அம்மையப்பன் என்றுதானே சொல்கிறார்கள்.அதுதான் போலும்.

“சார் ரிரெக்கார்டிங்ல சரிபண்ணிக்கலாம் சார்” தண்ணிமலை சொன்னான்.அவனுக்கு வேறு ஏதோ ஒரு படத்துக்கு கால்சீட் இருக்கிறது போலும்.

“ரிரெக்காடிங்கில சரி பண்ணிக்கிறதுக்கு, இது சினிமா இல்ல. மக்கள் மறு தடவ பாக்க மாட்டாங்க. இது டிவி விளம்பரம். ஒரு நாளைக்கு அஞ்சாறு தடவ போகும். வாயசைப்புல மக்கள் பிடிச்சுடுவாங்க. நம்ம தப்பு பண்ணுனது நல்லா தெரியும். விளம்பரம் எடுபடாது. பொருள் விக்காது.விளம்பரத்த எவனும் வாங்கிப்போடமாட்டான். இன்னொரு டேக் போலாம்.”

பார்வதியின் வேதனையை யாரும் உணர்ந்த்ததாய்த்தெரியவில்லை. குறைந்தபட்சம் ஏதாவது தைலமாவது கொடுத்து தேய்க்கச்சொல்லியிருக்கலாம். யுனிட்டில் பெண் டெக்னிஷியன்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லியாவது தேய்த்துவிடச்சொல்லியிருக்கலாம். அப்படியொருத்தி வலியில் துடிக்கிறாள் என்பதை யாரும் பொருட்படுத்தியதாய்தெரியவில்லை. இத்தனைக்கும் வேதனையில் துடிப்பது சாட் சாட் பார்வதியாக்கும்.

மூன்றாவது முறை டேக் சரியாகிவிடும்.தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். தண்ணிமலை எத்தனைபடங்களில் நடித்தவன்.இந்த முறை சரியாக வசனத்தை ஒப்பிவித்துவிடுவான். வசனத்துக்கு ஏற்ற முகபாவத்தைக்காட்டிவிடுவான்.அனுபவம் கைகொடுக்கும்.இது விளம்பரப்படம் வேறு. பார்வதியின், இல்லை இல்லை நிஷாவின் தொடையில்தான் தண்ணிமலை விழுகிறான்.எத்தனை முறை இந்த நிஷா தொலைக்காட்சி விளம்பரத்தில் வரப்போகிறாள். இன்னும் பிரபலம் ஆகப்போகிறாள். ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை என்றால், ஆறு மாதம் போகிறது என்று வைத்துக்கொள்வோம். சில நொடி விளம்பரமானாலும் ஆறு மாதத்துக்கு எத்தனை முறை! தான் மேலும் பிரபலமடையலாம்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் கையில் ஐம்பது ரூபாய். முழுதாய் கொடுப்பானா, இல்லை தனக்கான கமிசன் ஒன்றிரண்டை கழித்துக்கொள்வானா? கொடுத்துவிடுவான். ஒரு மணி நேரம் என்று அவன்தானே சொன்னான். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறதே, பத்து இருபது கூட்டியும் கொடுக்கலாம்.

ஆம் மூன்றாவது முறை டேக் சரியாக வந்துவிடும்.

வெயில் உக்கிரமாயிருந்தது. ஒரு முறை டேக் எடுப்பதற்குள் ஒப்பனைகள் கலைந்து விடுகிறது.சிவா குடும்பம்.சிவன் பார்வதி,வினாயகன், முருகன்.பாதுகாவலர்கள்.பக்திக்கூட்டம், இத்தனை பேருக்கும் ஒப்பனை கலையக்கலைய மேல்பூச்சு வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். எல்லார் கையிலும் இருக்கவேண்டிய ப்ரோப்ஸ் வேறு மிஸ்ஸாகக்கூடாது.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டேக் நிறைவேறாத பட்சத்தில், யுனிட் ரெடியாக குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது.டச்சப், கேமரா, நடிகர்கள் இருக்கவேண்டிய இடம், ப்ரோப்ஸ், போதுமான வெளிச்சம் என எல்லாவற்றையும் சரி செய்த பின்னரே அடுத்த டேக்குக்குப் போகமுடியும்., எங்காவது சின்ன தவறு நேர்ந்துவிடும்போது அத்தனை ஏற்பாடுகளும் கலைந்து மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.

டைரெக்டர் மூன்றாவது முறை டேக்குக்கு ஆயத்தமாக கட்டளை பிரப்பித்தார்.

“டேக் திரி” (கிலேப்.)”அக்ஷன்”தண்ணிமலை சுவைபான புட்டியோடு ஓடிவருகிறான்.பதற்றத்தோடும், போலிஸில் பிடிபடாத லாவகத்தோடும், திரும்பிப்பார்த்துக்கொண்டே ஓடி வருகிறான்.பார்வதி ஏதும் தவறு நடந்துவிடக்கூடாது என்ற முழு பிரக்ஞையில் வலியைப்பொறுத்துக்கொள்ளும் வைரக்கியத்தில், மனதை ஒருநிலைப்படுத்தி முகபாவனையில் கவனம் செலுத்துகிறாள். இருந்தாலும், முன்னர் தண்ணிமலை வந்து விழுந்த இடம் அவள் தியானத்தையும் மீறி வலிக்கிறது.முழுவதுமாய் மனத்தை ஒருமுகப்படுத்தமுடியவில்லை.

தண்ணிமலையின் உருவம் அருகில் வந்துவிட்ட சாயல் விழுகிறது. மூடியிருக்கும் அவள் இமைகளுக்குள்ளும் அவன் நிழல் துரிதகதியில் படிகிறது. தண்ணிமலை வந்து விழுகிறான். வேதனையில் முகம் கோணிவிடுகிறது. பட்ட இடத்திலே படும்............தொடை சப்பையானது போன்ற வேதனை.கண்களிலிருந்து கண்ணீர் தன்னிச்சையாய் சொட்டியது.

மீண்டும் கட்.

டைரெட்டர் துணைக் இயக்குனரை கூப்பிடுகிறார்.”என்னையா இது?

அவளுக்கிட்ட சூட்டிங் வெவரமெல்லாம் சொன்னியாயா?”

“இல்ல சார், சொன்னா ஒத்துக்லிட்டிருக்க மாட்டா. உண்மைய சொன்னா ஆள் கெடைக்க கஷ்டம்”.சன்னமான குரலில் காதருகே ஓதினார்.

“வருவாளுங்கய்யா, இவள வச்சுக்குட்டு லோல் படவேண்டிருக்கு. சாவ் கிராக்கி.”

“சார், அடுத்த டேக் சரியாயிடும். முடிச்சிடலாம் சார்.”

வலி எலும்புவரை பாய்கிறது. வேதனையில் கத்த முடியவில்லை. சுற்றி நிறைய பேர்

பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.நடிப்பு என்று வந்துவிட்டால், பல சமயங்களில் வேதனையை வெளியில் காட்டாமல் இருப்பதுவும்தான்.

மூன்று முறை நிஷாவுக்கு வரன் வந்தது. முதல் முறை ஐம்பதைத்தாண்டியவன் குடிகாரன்.நடிகையை மணந்துகொள்ளவேண்டும் என்ற தனது கனவை ஏந்திநின்றவன்.துணை நடிகைதானே என்ற சிறுமைதான் கிழவன் பெண்கேட்கக்காரணம். இவள்தான் நிராகரித்தாள். இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் நடிகை வேண்டாம் என்று வரனின் பெற்றோர் நிராகரித்ததனர். அவள் எதிர்பார்த்ததுதான். நிஜ வாழ்க்கை என்று வந்துவிட்டால் நடிகை என்ற பிம்பம் சிம்மசொப்பனம் ஆகிவிடுகிறது. அவளுக்கு இன்னும் உள்மன ஆசை இருக்கிறது. எவனுக்காவது கழுத்தை நீட்டி வாழ்க்கைப்பட்டுவிட்டாள் இந்த இம்சையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்குமென்று. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. வயது இந்த ஆகஸ்டில் முப்பத்தாறு முடிகிறது. முப்பத்தாறுக்குள் முடியவில்லையெண்றால் கல்யாணக்கனவு முளைக்கும்போதெல்லாம் அதனை விரக்தியோடு விரட்டியடிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும்.

இடையில் ஒருவனை மனதாரக் காதலித்தாள். இவளை அனுபவித்துவிட்டு வேறொருத்தியை மணந்துகொண்டான்.அவளை விட்டுச்செல்லும்போது கேவலம் நீ ஒரு நடிகைதான் என்று அவன் பேசியதுதான் அவளின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத வசனம்.

“யோவ், சொல்லுயா இந்த டேக் சரியா அமைஞ்சிடனும். சின்ன சீன எவ்ளோ நேரம்யா எடுக்கிறது?”

“செஞ்சிரலாம் சார், முடிச்சிடலாம் சார்”மதிய உணவு வேலை கடந்துவிட்டிருந்தது.உணவு பரிமாறப்படவில்லை. இரண்டு மூன்று மணி நேரத்தில் ஷாட் ரெடியாகிவிடுமென்றுதான் உணவுக்குச்சொல்லவில்லை என்று அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு பரவிக்கொண்டிருந்தது.

டைரக்டர் யுனிட்டை ஷாட்டுக்குத் தயாராகும்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். எல்லாருக்குமே கலைப்பு. தகிக்கும் வெயில். இருந்தாலும் புதிய தெம்போடு தயாராகிவிட்டனர்.

நிஷாவுக்கு தொடையின் வலி உக்கிரமாகிக்கொண்டிருந்தது.இந்த ஷாட் கண்டிப்பாய் கோணலாகிவிடக்கூடாது அவள்(பார்வதி) வேண்டிக்கொண்டாள்.

முடிந்ததும் ஐம்பது ரூபாய் கைக்கு வந்துவிடும்.

டைரெக்டர், ஒலிபெருக்கியை எடுத்து யுனிட்டை உஷார் படுத்தினார்.

“டேக் போர்” (கிலேப்)”அக்ஷன்”

சிவா குடும்பமும் ஏனைய பரிவாரங்களும் தயார் நிலையில்.பார்வதி எலும்புவரை பாய்ந்துவிட்ட வலியோடு,முகபாவனையில் கவனம் செலுத்தி தயாராகிவிட்டாள்.எந்த நேரத்திலும் தண்ணிமலை தொடையில் விழுந்துவிடக்கூடும். அதை நினைக்கும்போதுதான் அவளின் உடல் ஒரு முறை நடுங்கி நின்றது. நொடிப்பொழுது நடிப்பானாலும் நன்றாக அமையவேண்டுமென்பதில் தண்ணிமலைக்கும் ஆசை. இதில் துணை நடிகையின் துயரமாவது வெங்காயமாவது!

தண்ணிமலை வந்து விழுந்தான். வசனத்தைச் பிசகாமல் ஒப்புவித்தான். நல்ல ஏற்ற இறக்கத்தோடு முக்கிய வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்திருந்தான்.

இந்த முறை டைரெக்டர் கட் சொல்லவில்லை.

யுனிட் முழுதும் கைதட்டி பாராட்டியது.எல்லார் முகத்திலும் புன்னகை.பார்வதி நீங்கலாக!

விளம்பரம் ஒரு மாதத்தில் தொலைகாட்சியில் வந்துவிடும் என்று நிர்வாகி சொல்லியிருந்தார்.

நிஷா தொலைகாட்சியைத் தவறாமல் பார்க்கத்தொடங்கினாள்.தன் சக நடிக தோழிகளிடமும் பெருமையாய் சொல்லிவைத்திருந்தாள்.பார்த்தால் சொல்லுங்கள் என்றாள்.

தொடை வலி நீங்க டாக்டருக்கே நூறு ரூபாய்க்கு மேல் செலவாயிற்று.ஒரு வாரம் நடக்கவே முடியவில்லை.ஏஜண்ட் கொண்டு வந்த மற்ற சினிமா வாய்ப்பெல்லாம் பறிபோயிற்று.

ஒரு நாள் ஒரு சீரியலின் இடைவேளையில் விளம்பரம் வந்தது. இருபது விநாடிக்கும் குறைவான நேரம்தான். நிஷா அதிர்ச்சியுற்றாள்.தண்ணிமலை வந்து விழுந்து தன் வசனத்தை பேசும்போது ‘பார்வதி’யின் முகத்தை தன் பூதம்போன்ற உடம்பால் முற்றாய் மறைத்திருந்தான்.Ko.punniavan@gmail.com

Wednesday, September 23, 2009

நாள் : 8/13/2005 9:41:48 PM, -வெங்கடேஷ்


பிரிவுகள்

தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை:

பிரிவுகள்நாளை இந்தக் குளத்தில்

நீர் வந்து விடும்

இதன் ஊடே

ஊர்ந்து நடந்து

ஓடிச் செல்லும்

வண்டித் தடங்களை

இனி காண முடியாது

இன்று புல்லைத்

தின்று கொண்டிருக்கும்

ஆடு, நாளை

அந்த இடத்தை

வெறுமையுடன்

சந்திக்கும்

மேலே பறக்கும்

கழுகின் நிழல்

கீழே

கட்டாந்தரையில்

பறப்பதை

நாளை பார்க்க முடியாது

இந்தக் குளத்தில் நாளை

நீர் வந்து விடும்மிக அழகான கவிதை. குளத்தில் நீர் வருவது என்பது கிராமம் முழுவதற்குமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. குளத்தில் நீர் வந்து நிறையுமானால், குடிநீர், விவசாயம், அதன் மூலம் கிராம வளம் எல்லாம் பெருகும். உற்சாகம் பெருகும். செயல்பாடுகள் கூடும். வேலைகள் கூடும். உற்பத்தி கூடும்.ஆனால், கலாப்ரியா கண்ணில் வேறொன்று படுகிறது. இது நாள் வரை நீர் வராமல் இருந்தபோது, அதே குளம் எதெதற்கெல்லாம் பயன்பட்டதோ, அவையெல்லாம் இனி நடைபெற முடியாமல் போய்விடுமே என்ற வருத்தம் அவருக்குத் தென்படுகிறது. என்ன சொல்கிறார் பாருங்கள் : வண்டித் தடங்களை இனி காண முடியாது, புல் மேய்ந்த ஆடு இனி வெறுமையைச் சந்திக்கும், மேலே பறக்கும் கழுகின் நிழலைப் பார்க்க முடியாது. இது ஒரு வகை வலிந்து உருவாக்கப்படும் முரண் அணி.உண்மையில் கவிக்கு அந்தக் குளத்தில் நீர் வருவதில் மகிழ்ச்சி இல்லையா? அதெப்படி இல்லாமல் இருக்கும். நிச்சயம் உண்டுதான். அதுதான் வளர்ச்சி தரப்போவது. அதனால்தான், கவிதையின் முதலிலும் கடைசியிலும் குளத்தில் நீர் வரப்போவதை அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், இன்றுவரை, அதே குளத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கும் பிறர் அதனால் பாதிக்கப்படுவார்களே என்பது ஒரு சின்ன கரிசனம்.இதை வேறு மாதிரியாகவும் வாசிக்கலாம். அதுநாள் வரை மழையே இல்லாமல், நீர் வரத்தே இல்லாமல் பல ஆண்டுகளாக, இப்படிப்பட்ட வண்டித்தடம் உருவாதல், ஆடு புல் மேய்தல், கழுகின் நிழல் படிதல் போன்ற விஷயங்கள் ஏற்பட்டுவிட்டன. அதுவே இயல்பு என்று நினைக்கும் அளவுக்கு, நீர் பஞ்சம் அங்கே இருந்திருக்கவேண்டும். சட்டென, நாளை இக்குளத்தில் நீர் வருமானால், அதுவரை இருந்த இயல்பு பாதிக்கப்படுமே என்ற கரிசனத்தைக் இக்கவிதை சொல்வதாகவும் கொள்ளலாம். நீர் பெருகி பல ஆண்டுகள் ஆயிற்று என்பதற்கு கவி தரும் ஒரு முக்கிய ஆதாரம், வண்டித்தடம் உருவாதல். அவ்வளவு சீக்கிரத்தில் வண்டித்தடம் உருவாகிட முடியாது. பல ஆண்டுகள் பயன்பாட்டிலேயே வண்டித்தடம் உருவாக முடியும்.இக்கவிதையை நீர் வரத்தின் மகிழ்ச்சியாகவும், இருப்பவைகள் இழக்கப் போகும் இயல்பைச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிதை இப்படி பல அடுக்கு அர்த்ததைத் தன்னுள் கொண்டிருப்பது அபூர்வமானது. இக்கவிதை அப்படிப்பட்ட ஒரு அபூர்வம்.

Tuesday, September 22, 2009

முகப்பு ஞ இயக்குநர் அடூர்கோபாலகிருஷ்ணன் நேர்காணல்:டி.அருள் எழிலன்


இயக்குநர் அடூர்கோபாலகிருஷ்ணன் நேர்காணல்:டி.அருள் எழிலன்

அடூர் அவரது “நாலுபெண்ணுகள்” படத்திற்காக ஏழாவது முறையாக தேசீய விருது பெற்றிருக்கிறார். 2004-ல் சென்னைக்கு வந்த ஆரம்பகாலத்தில் மலையாளப்படங்கள் எனக்கு ஆதர்ஷமாக இருந்தது. அந்த வகையில் எனக்கு பஷீரின் கதையைத் தழுவி அடூர் எடுத்த மதிலுகள் படத்தின் மூலம் ஏற்பட்டது அடூர் மீதான ஈர்ப்பு. பின்னர் திருவனந்தபுரம் செல்லும் போதெல்லாம் அவரை இயலுமாயின் சந்தித்து சிறிது நேரம் உறையாடி வருவேன். அப்படி சில நேர்காணல்களையும் என்னால் செய்ய முடிந்தது.இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மவிபூஷன், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பாரத்ரத்னா விருதைத் தவிர எல்லாவற்றையும் பெற்று விட்டார் அடூர். அடூர் அதிகமாகப் பேச மாட்டார் சிக்கனமாக வார்த்தைகளை உபயோகிப்பார் யாருடைய கதையை தழுவுகிறோமோ அவருக்கே கதையில் நேர்மையான அங்கீகாரத்தைக் கொடுப்பார் மற்றபடி அடூர் எடுத்த எல்லா படங்களும் சிறப்பானவைகள் அல்ல திருவனந்தபுரத்தில் அவரைச் சந்தித்த போது,‘‘நான் இப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன் சினிமா தொடர்பாக படித்ததோ, சினிமா எடுத்ததோ விருதுகளுக்காக அல்ல. விரும்பிய ஒன்றை தெரிந்து கொள்வதற்காகவே” என்று பணிவோடு சொல்லும் அடூர் கோபாலகிருஷ்ணன் , தனது சிறுபிராய சினிமாத் தேடல் குறித்து சொல்லும் போது,எனக்கான சினிமா என்னிடமிருந்துதான் வந்தது.அப்போ நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன்.என் அம்மாவோட மூத்த சகோதரருக்கு ஒரு சில தியேட்டர்கள் இருந்தது. காசு கொடுக்காம அங்கே போய் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.பிரேமலேகா மாதிரியான படங்களை அடிக்கடி பார்ப்பேன்.வருடக்கணக்காக அந்தப்படங்கள் ஒடும்.சினிமாவும் நாடகமும்தான் இனி நம்மோட வாழ்க்கைணு முடிவு பண்ணினது அப்போதான்.பதேர்பாஞ்சாலிண்ணு ஒரு படம் காட்டினாங்க..இது ஒரு பெயிண்டர் எடுத்த படம். ஒரு சில அவாட்ஸ் வாங்கியிருக்கு என்று சொல்லி பதேர்பாஞ்சாலி படத்தோட இயக்குநர் சத்யஜித்ரேயை அறிமுகப்படுத்தினாங்கஸ.முகப்பூச்சு இல்லாத மனிதர்களின் ஜீவிதத்தை முதன்முதலாக தரிசித்தது அந்தப்படத்தில்தான். பூனே இன்ஸ்டியூட்டில் சேர்ந்து டைரக்சன் கத்துக்கணும்ணு முடிவு பண்ணி அங்கே போய் சேர்ந்தேன். ஆனால் அந்தக் காலத்தில் சினிமா எல்லா அக்காடமிக் கல்வி மாதிரி முறையான பாடத்திட்டங்கள் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் என்ற எண்ணமோ பார்வையோ பொதுவாக இல்லாமல் இருந்தது. அப்போது ஒரு சினிமா விஐபி ஒரு நாள் எதுக்கு இன்ஸ்டியூட்டுக்கு வந்திருக்கீங்க? என்ன மாதிரி சினிமா எடுப்பீங்க? என்று கேட்டார் நான் சொன்னேன்‘‘பத்து சினிமா எடுத்தால் அதில் ஒரு நல்ல சினிமா வரும்லியா அதுக்குத்தான் நான் வந்தேன்’’ என்று சொன்னேன். அவர் திருப்பிக்கேட்டார்.‘‘பத்து குழந்தைகள் பிறந்து அதில் ஒன்பது ஊனமாகவும் ஒன்று மட்டும் ஆரோக்கியமாகவும் பிறந்தால் போதுமா ? என்று கேட்டார். அது ஒரு சிக்கலான கேள்வி இல்லையா? நல்ல சினிமா என்பது என்ன? ஓடுகிற சினிமாவா? வசூலிக்கிற சினிமாவா? அல்லது சிலரின் கண்ணீரை காவு கேட்கிற சினிமாவா? என்று பலவாரான குழப்பங்கள்.ஆனால் இது குறித்து சிந்திக்கத் துவங்கினால் ஆரம்பகாலத்தில் இருந்த குழப்பங்கள் இன்றும் வந்து சேர்ந்து விடுகிறது. நான் எனக்கான சினிமா எனது ரசனைக்கான சினிமாவை எடுக்கத் துவங்கினேன். அப்புறம்தான் என்னோட முதல் படமான சுயம்வரம் படத்தை எடுத்தேன். முதல் படம் பெறும் போராட்டமாக இருந்தது.’’ என்று ஆரம்பகால சினிமா ஆர்வம் குறித்துப் பேசுகிறார்இனி அவரது நேர்காணல்.?தாதா சாகேப் பால்கே விருது, இப்போது ஏழாவது முறையாக தேசீய விருது சந்தோசமாக இருக்கிறதா? பொதுவாக விருதுகளைப்பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.தென்னிந்தியாவில் முதல் முதலாக ஒரு இயக்குநருக்கு பால்கே விருது கிடைத்தால் அதுவும் நானாக இருக்கும் போது மகிழ மாட்டேனா? இந்தியா சினிமாவுக்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிச்சியாக இருக்கிறது. திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்க்காகவும், சினிமா துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிப்பதற்காகவும்தான் மத்திய அரசு சினிமா விருதுகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதற்க்கான ஜூரிக்களை அமைக்கிறது. விருதுகள் தகுதியானவர்களை சென்றடைவதும்,தகுதி குறைந்தவர்களிடம் செலவதும். நியமிக்கப்படுகிற ஜூரிகளின் கையில் உள்ளது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசு விருதுகள் அறிவிக்கும் போது நம் நாட்டில் சர்ச்சைகள் எழுவதுண்டு. இந்தியாவைப்போல பல மொழி கலாச்சாரங்களைக்கொண்ட நாட்டில் இம்மாதிரி சர்ச்சைகள் எழுவது சகஜம்தான். எனக்கு கிடைத்த விருதுகள் குறித்து நான் கருத்துச் சொல்வதென்றால் விருதுகள் கிடைக்கும் என்றெல்லாம் நான் சினிமா எடுக்கவில்லை . ஆனால் இந்த விருதுகள் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றது. மறந்து விடாதீர்கள். இது ஒரு நல்ல சினிமா. இது உங்களால் பார்க்கப்பட வேண்டிய படம் என்று மக்களுக்கு அரசு சொல்வதும் அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணரவுமே இம்மாதிரி விருதுகள் கொடுக்கிறார்கள் என நினைக்கிறேன்.?இப்போது உங்களுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்திருக்கும்‘நாலு பெண்ணுகள்‘ கதையை தகழியிடம் இருந்து எடுத்து அப்படியே காட்சியாக்கினீர்களா? அல்லது நீங்கள் கதையை மாற்றி அமைத்தீர்களா?தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய ஏராளமான கதைகளில் நான்கு கதைகளை வெவ்வேறு தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்துதான் இந்த நாலு பெண்ணுகள் படத்தை இயக்கினேன்.நான்கு கதைகள், நான்கு பெண்கள். திருமணமாகியும் கணவனால் தாம்பத்திய சந்தோசத்தை பெற முடியாத பெண், பாலியல் தொழிலாளி, குடும்பத்தலைவி, திருமணமாகாத முதிர் கன்னி, என நான்கு கேரளப் பெண்கள் தங்களின் வாழ்வின் மீது எவ்வாறான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசுகிற கதை அது.ஒரு வகையில் இது மனச்சாட்சியை உலுக்குகிற விஷயமும் கூட பெண்கள் குறித்த மதிப்பீடுகளை யதார்த்தமாக உணரச் செய்கிற கதை இது என நினைக்கிறேன்.?பூனே இன்ஸ்டியூட்டில் படித்த வந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து அந்த இன்ஸ்டியூட்டுக்கே தலைவரான அனுபவம் எப்படியிருந்தது?எனக்கு சினிமா மீதான மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது பூனே இன்ஸ்டியூட்தான். என்னோட சொந்த மாநிலத்தில் கிடைக்காத சினிமா நட்புகள் பூனேயில் கிடைத்தது.மலையாளத்தில் சில படங்களை இயக்கியவரும் திரைப்படக்கல்லூரியின் டீனாக இருந்தவருமான ஜாண் சங்கரமங்கலம் என்னுடன் படித்தவர். இயக்குநர்கள் சுபாஷ் கய், மணிகவுல்,நடிகர் அஷ்ராணி,நடிகை சுதாராணி ஷர்மா.இவர்களெல்லாம என்னோட டிப்ளோமோ படத்தில் நடித்தவர்கள்.கேரளத்தின் புகழ் பெற்ற இயக்குநர்கள் ஜாண்ஆப்ரஹாம்,கே.ஜி ஜார்ஜ், என்னோட ஜூனியர்ஸ். ரெம்ப சந்தோசமான பருவமாக பூனா இன்ஸ்டியூட்காலம் எனக்கு இருந்தது .பிற்பாடு இன்ஸ்டியூட்டுக்கு தலைவராக போன போது நான் படித்த போது எனக்கு சினிமா கல்வியில் என்னென்ன கிடைக்கவில்லையோ அதையெல்லாம எதிர்கால சந்ததிக்கு கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.சினிமா கல்வியின் பல துறைகளிலும் பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு செய்தேன். குறிப்பாக டைரக்ஷன் துறையில் பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ என் பதவிக்காலத்துக்குப்பிறகு பாடத்திட்டங்கள் பழைய ஸ்டைலுக்கே மாற்றப்பட்டது. மாற்றங்களுக்கான தேவைகள் குறித்து நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறேன்.?புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற காலத்திய மன நிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் ஏதாவது வேறு பாடு இருக்கிறதா?அங்கு செல்வதற்கு முன்னால் நான் தமிழகத்தின் திண்டுக்கல்லில் காந்திகிராமில் படித்துக் கொண்டிருந்தேன்.ஆனால் அப்போது எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. நான் நேசிக்கிற தெரிந்து கொள்கிற ஆர்வத்தில்தான் புனே கல்லூரிக்குச் சென்றேன். உலகின் ஆகச்சிறந்த படைப்புகளை அங்கு பார்த்தேன் அதில் சில இந்திய இயக்குநர்களும் இருந்தார்கள். 1965ல் படித்து முடித்து விட்டு வெளியேறிய பிறகு நாற்பதாண்டுகள் ஓடிக் கழிந்து விட்டது. அப்போது என்ன மனநிலையில் இருந்தேனோ இப்போதும் அப்படியே இருக்கிறேன். தினம் தோறும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன், சினிமாவில் மட்டுமல்ல வாழ்விலும்.?பொதுவாக உங்களை மாதிரி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லையே?டூயட்,,மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்று போட்டால்தான் சினிமா. என்று தயாரிப்பாளர்களும் பைனான்சியர்களும் ரசிகர்களும் நினைத்துக்கொண்டிருந்த எழுபதுகளில் நான் சினிமா எடுக்க வந்தேன். அதனால் என் பாணி படங்களுக்கு பைனான்சியர்ஸ் கிடைப்பது கடினமாக இருந்தது. அதனால் ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து பணத்தை போட்டு டாக்குமெண்டரி படங்களைத் தயாரித்தோம். என்னுடைய முதல் படத்திற்க்கு பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடம் இருந்த நிதி கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருக்கவேண்டி வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து வந்த பணத்துடன் டாக்குமெண்டரி படங்களின் மூலம் நான் சம்பாதித்த பணத்தையும் சேர்த்து சுயம்வரம் படத்தை எடுத்தேன். அதனால்தான் நான் எனது முதல் படமான ‘சுயம்வரம்’ பெரும் போராட்டமாக இருந்தது என்றேன்.?சுதந்திரமான மக்கள் சினிமா இயக்கங்கள் கேரளத்தில் ஜாண்ஆப்ரஹாம் துவங்கிய ஓடேஸா’அமைப்பை மாதிரி மக்களுக்கான சினிமா அமைப்புகள் இன்று இல்லாமல் போனதேன்?மக்களிடம் இருந்தே நிதி வசூலித்து அவர்கள் ஊரிலேயே படம்பிடித்து அங்கேயே அதை16 – எம் எம் படமாக போட்டுக்காட்டும் ஜாணின் ‘ஒடேஸா‘அமைப்பும் அவரும் மக்களோடு மக்களாக சினிமாவை ஒன்று கலந்தார்கள். அல்லது அதற்கு முயர்சித்தார்கள். மக்கள் தயாரிக்கிற படங்களை அவர்களிடமே கொண்டுபோய் சேர்த்த ஜாணின் உழைப்பு மலையாள சினிமாவில் காலாகாலத்துக்கும் போற்றத்தக்கது. ஜாணுக்கு பிறகு அந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்படவில்லை. ஜாண் மாதிரி ஆத்மார்த்தமான உழைப்பும் இல்லை ஒடேஸா மாதிரி அமைப்பும் இல்லை.?உங்கள் சினிமாக்களுக்கு கலைப்படங்கள் என்ற முத்திரை விழுவதை விரும்புகிறீர்களா ?சினிமாவை கம்ர்ஷியல் படங்கள் கலைப்படங்கள் என்று பிரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது . எல்லா படங்களும் தங்களால் இயன்ற லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தரத்தான் செய்கிறது.என்னுடைய படங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை.ஆனால் என்னுடைய எல்லா படங்களும் தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை பெற்றுத்தந்துள்ளன. பெரும்பாலான படங்கள் லாபத்தையும் சில படங்கள் பெரும் லாபத்தையும் ஈட்டிக்கொடுத்துள்ளன. பெரும்பான்மை மக்களை சென்றடையும் அம்சங்கள் ஒரு படத்தில் இருந்தால் அது கம்ர்ஷியல் படம் என்று நினைக்கிறார்கள்.அதிக பொருட் செலவில் எடுக்கப்படும் கம்ர்ஷியல் படங்கள் படு மோசமான தோல்வியடைந்து பெட்டிக்குள் முடங்குவதும். கலைப்படங்கள் என்று நீங்கள் சொல்லக்கூடிய படங்கள் நன்றாக உலகெங்கிலும் பயணித்து நல்ல வருவாயை ஈட்டிக் கொடுப்பதும் இன்றைய சினிமாவின் வழித்தடத்தில் இறைந்து கிடக்கிறது.ஆகவே சினிமாவை கமர்ஷியல், கலை என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.நான் கமர்ஷியல் படங்களில் இருந்து எந்த வகையிலும் விலகவில்லை. கமர்ஷியல் இயக்குநர்கள் பயன்படுத்தும் அதே கேமிரா, அதே லைட்ஸ், படச்சுருள்களைத்தான் நானும் பயன் படுத்துகிறேன். ஒரே வித்யாசம் நான் என்னுடைய படங்களை எனக்கு பிடித்த மாதிரி படமாக்குகிறேன் என்பதுதான்.கோடி கோடியாகக் கொட்டி ஒரு பாடலுக்காக ஃபாரின் போகிற சினிமா தொழிலில் கலைப்படங்கள் எடுப்பது செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் பயன்படாதே.? நீங்கள் வாங்கும் ஊதியத்தைச் சொல்ல முடியுமா?செல்வமும் செல்வாக்கும் சேர வேண்டும் என்று நான் சினிமா எடுக்கவில்லை நான் எடுப்பது கலைப்படங்கள் என்று சொல்லப்படும் ஆர்ட் சினிமாவும் அல்ல, நான் எடுத்த படங்கள் எனக்கு அதிக லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. நான் என்ன ஊதியம் வாங்குகிறேன் என்பதை உங்களிடம் மட்டுமல்ல உலகுக்கும் சொல்ல மாட்டேன். காரணம் அது என் தனிப்பட்ட விஷயம். நீங்கள் ஏன் சினிமாவை கலைப்படம் என்றும் வணிகப்படம் என்றும் வேறு படுத்துகிறீர்கள்? அப்படி என்றால் அடூர் படங்கள் எடுத்து சம்பாதிக்கவே இல்லையா என்ன? அப்படி எல்லாம் இல்லை. நான் வர்த்தகன் அல்ல கலைஞன். லாபமீட்டும் கலைஞனாகவும் இருக்கிறேன். சினிமா எடுக்கும் போது கலைப்படமாக அல்ல என் விருப்பத்திற்காவும் என் ரசனை சார்ந்தும் இயக்குகிறேன். அதில் வெற்றியும் பெறுகிறேன்.எனக்கென்று தனித்த விருப்பங்களும் ரசனைகளும் உண்டு. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் முப்பது குறும்படங்களும் 11 முழு நீள சினிமாவும் எடுத்திருக்கிறேன். நான் எடுத்து மற்றவர் ரசிப்பது என்பதையும் தாண்டி நான் இயக்குகிற எல்லா படங்களையும் என் ரசனைக்கும் விருப்பத்துக்கும் உட்பட்டதாகவே எடுக்கிறேன். எந்த ஒரு படைப்பும் என் விருப்பங்களுக்கு அப்பால் எடுக்கப்படுவதில்லை. நான் விரும்புகிற சினிமாவைத்தான் இத்தனை ஆண்டுகாலமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.?இலக்கியத்தோடு இணைந்து பயணித்த மலையாள சினிமா தற்காலத்தில் அதன் ஆன்மாவை தொலைத்து விட்டதா?பயணத்தில் நாம் இடர்களைச் சந்திக்கிறோம் மேடு பள்ளங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாரும் பயணத்தை பாதியில் இடை நிறுத்தி விடுவதில்லை. அது போலவே சினிமாவும் வனப்பும், வறுமையும் வந்து செல்லத்தான் செய்யும். மலையான சினிமா அதன் கெட்ட நேரத்தைக் கடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.மலையாளத்தில் புதிய தலைமுறை இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள் என்று சில படங்களையோ இயக்குநர்களையோ குறிப்பிட இயலுமா?மலையாளத்தில் எம். .ஆர். சுகுமாரன்தான் என் மனதுக்குப் பிடித்த இயக்குநர். நடிகர் முரளியை வைத்து அவர் இயக்கிய ‘த்ரிஷாந்தம்‘ படம் மலையாளத்தின் மிகச் சிறந்த படம் என்பேன்.?கேரளத்தில் மம்மூட்டி மோகன்லால் போன்ற நடிகர்கள் உங்களது சினிமா முயர்ச்சிகளுக்கு உந்துதலாக இருக்கிறார்களா?இப்போது வழமையான மலையாள சினிமா பாரம்பரீயம் சீரழிந்து விட்டதாக அறிவு ஜீவிகள் குற்றம் சாட்டுகிறார்களே?மம்மூட்டி,மோகன்லால், சுரேஷ்கோபி போன்றோர் என்னுடைய முயர்ச்சிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.இம்மாதிரி படங்களில் நடித்து அதற்க்குரிய பயனையும் அடைந்திருக்கிறார்கள்.‘அனந்தரம், விதேயன், மதிலுகள் என என்னுடைய மூன்று படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார்.சிறையிலடைக்கப்படுகிற ஒரு கிரியேட்டருடைய தனிமைக்குள் ஊடுறுவுகிற ஒரு சிறைக் காதலை மதிலுகள் படத்தில் சொல்லொயிருப்பேன். கடைசி வரை அதில் வருகிற பெண் யாரென்றே தெரியாது.துன்பமான சிறையிலிருந்து அவன் விடுதலையாகி வெளியில் போக நினைக்கிறான் விடுதலை தள்ளிப்போகிறது.பெண் சிறைப்பகுதியில் இருந்து ஒரு காதல் கிடைத்து சிறை சொர்க்கம் ஆகும் போது விடுதலை வந்து துன்பம் கொடுக்கிறது.வைக்கம் முகமது பஷீருடைய கதையை நான் படமாக்கிய போது அது வசூலிலும் நல்ல பெயரை சம்பாதித்துக்கொடுத்தது.இப்போதும் நான் சினிமா எடுத்தால் என்னுடைய முயர்ச்சிகளுக்கு நடிகர்கர்கள் துணைபுரிவார்கள் என்று நம்புகிறேன்.?தமிழ் சினிமா உங்களுக்கு பரிச்சயம் உண்டா அது குறித்துச் சொல்ல முடியுமா?தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார்?எனது துவக்கலாத்தில் நான் தமிழ் சினிமாவைக் கடந்தே வந்திருக்கிறேன். ஒரு முறை சென்னையில் பரணி ஸ்டுடியோவில் 1957&ஆம் ஆண்டு என நினைக்கிறேன் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஷூட்டிங் எல்லாம் பார்த்திருக்கிறேன். அந்த ஷாட்டில் சிவாஜிகணேசனும், மனோரமாவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமா பற்றிய என் கருத்து என்னவென்றால் செழுமையான தமிழ் இலக்கியத்தைத் தொட்டு தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னி அதோடு கைகோர்த்து தமிழ் சினிமா பயணிக்கவில்லையோ? என்று தோன்றுகிறது. மற்றபடி தமிழில் இயக்குநர் மணிரத்னமும், நடிகர் கமலஹாசனும்தான் எனக்குப் பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள்.?சினிமாவை டி வி சீரியல்கள் தின்றுவிட்டது என்று குற்றம்சுமத்துகிறார்களே?சினிமாவைத் தின்பதிருக்கட்டும் தொலைக்காட்சியும் அதில் வரும் சீரியல்களும் போதை வஸ்துவைப்போல மக்களின் மனதை மயக்கி வைத்திருக்கின்றன..இதிலிருந்து மக்களை திசைதிருப்புவது கடினம்.வெறுத்துப்போய் மக்களாக திரும்பிவந்தால்தான் உண்டு.?நல்ல சினிமாவுக்காக அரசு என்ன செய்ய வேண்டும்?தேசீய திரைப்பட வளர்ச்சி கழகம் N,F.D.C)போன்ற அமைப்புகள் நல்ல சினிமாவுக்கான முற்போக்கு கொள்கைகளை உருவாக்க வேண்டும்.வெறும் பணத்தை கடன் கொடுக்கும் அமைப்புகளாக இல்லாமல் நல்ல சினிமாவை ஊக்குவிக்கும் அமைப்பாக மாறவேண்டும்.நம் நாட்டில் நல்ல படங்கள் பல தியேட்டர்களை அடையாமல் முடங்கிப்போகின்றன. இந்நிலையை மாற்றி நல்ல படங்களை தியேட்டர்களுக்கு விநியோகம் செய்யும் வர்த்தகத்தை அரசே நடத்த வேண்டும்.?அரசியலுக்கு வரும் சினிமா நடிகர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?ஒரு நல்ல நடிகரால் நல்ல அரசியல்வாதியாகவும் நடிக்க முடியும்.

Monday, September 21, 2009

பாயாஸ்கோப்பில் படம் தெளிவாகவே கிடைத்திருக்கிறது.சை.பீர் முகம்மதுவின் பாயாஸ்கோப் காரனும் வான்கோழிகளும் சிறுகதை மிகச்சரளமாக சொல்லப்பட்ட அவரின் சமீபத்துக் கதைகளில் ஒன்று. கதை தொடக்கத்திலிருந்து கடைசிப் புள்ளிவரை தேக்கமில்லாமல் செல்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த தோட்டத்திருவிழா கோலத்தையும் அன்றைய மக்களின் கேளிக்கை மனோபாவத்தையும், முன்னெடுத்துச்செல்கிறது கதை. கையில் பணப்புழக்கமில்லாத தோட்டப்பாட்டாளிகள் திருவிழா நேரத்தில் கவலையை மறந்து வாழக்கையை ரசித்து அனுபவித்து மகிழ்ந்தத்தை நினைக்கும்போது இப்போது பொறாமையை உண்டாக்குக்கிறது. இப்போது கையில் காசிருந்து என்ன செய்ய? மெகாசீரியல் கதைகள் வாழ்க்கையயை சீரியஸ் ஆக்கி காலையிலிருந்து பின்னிரவுவரை கண்ணீர்மழையில் நனைய வைத்து விடுகிறது. அதுவும் விலை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்கிற சோகம். வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருந்தால் சீராக இருக்காது இல்லையா! அதனால் வானவில் புண்ணியத்தில் துக்கமும் ஊடுருவி சமன் செய்துவிடுகிறது.

நம்ம நாட்டில் பாயாஸ் கோப்பு ஏது என்று என் மனைவி கேட்டாள். தோட்டத்தில் வாழ்ந்த அனுபவம் இல்லாதவளுக்கு இந்த பயாஸ்கோப் விஷயம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அந்த தூங்கு மூஞ்சி மரம், தசரத ரஜ குமார,சைக்கிலின் கானில் காதல் மனைவியை இருகைகளின் அணைப்பிலிருந்தபடி சவாரி செய்வது, சைக்கிலை மிதித்துக்கொண்டே உச்சஸ்தாயியில் பாடும் தியாக ராஜ பாகவதரின் பாடல், அந்த வெற்றிலைப்பாக்குப்பை, கேரியரில் பாயாச்கோப் பெட்டி எனக்காட்சிப்படுத்துதல் செவ்வனே நடந்தேறியிருக்கிறது. தோட்டத்து அன்றாட நிகழ்வுகளில் அவர் குறிப்பிடும் சிலவற்றை நான் சந்தித்த நினைவு இல்லை. ஆனால் அன்றைய தோடப்புறச் சூழலை பின்னோக்கிப்பார்க்கும்போது அந்தச்சம்பவச்சரடுகள் நடந்திருக்கக்கூடும்.

சுருக்குப்பையில் பணம் சேர்க்கும் செல்லாம்மாவின் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் வசகனுக்கு உண்டாவது இயல்புதான். சைக்கிலில் ஊர் ஊராகச்சென்று பாயாஸ்கோப் பிஸ்னஸில் அப்படி என்ன சம்பாதிதுவிட முடியும்?அது என்ன கணினி மென்பொருள் கண்டுபிடிப்புமாதிரியா என்ன? தோட்டப்புற மக்கள் கையில் பணம் கொட்டியா கிடக்கிறது? கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணம். புள்ளக்குட்டி இல்லாத தம்பதி என்று சொல்லி இக்குறையை நேர் செய்கிறார் கதைசொல்லி. அதனால் மன்னித்துவிடலாம். பாவம் ரஜூலாவில் பயணம் செய்யட்டும் என்று தம்பதிகளின்பால் நமக்கு கழிவிரக்கம் உண்டாகிறது. ‘ஊரை நாடை”ப்போய்ப்பார்த்து வருவது அந்தக்கால மனிதர்களின் அபிலாசையாக இருந்திருக்கிறது. அப்போதைய தலைமுறைக்கு ஒட்டுறவு இருந்திருக்கிறது. இப்போது என்னைக்கேட்டால் எனக்கு எந்த ஊர் என் ஊர் என்று சொல்லத்தெரியவில்லை. அறுந்துவிட்டது. எனக்குத்தெரியவில்லையே என்று யாராவது கேலி செய்யும் பட்சத்தில், ஆரூடம் சொல்வது போல எந்த ஊரின் பெயரையாவது அள்ளி விட்டு சமாளித்துக்கொள்ளலாம்..தமது நாடக சகாவான கோபாலை கதையின் முகாந்திரமான தளத்தில் நிறுவ முனையும் கதைசொல்லியின் முயற்சி சிக்கலில்லாமல் நிகழ்கிறது. இது வாழவனுபவத்திலிருந்து உருவி எடுக்கப்பட்ட நிதர்சனத்தை கட்டியம் கூறுகிறது. கோபால் கதைக்குள் நுழைந்தவுடன் கதையின் கேளிக்கை போக்கு இடம்பெயர்ந்து சற்று காத்திரமாக மாறுகிறது. நாடகம் நடித்த காலத்திலிருந்து மாரியின் தீவிர ரசிகனாக இருந்து பழுது படாத நட்பைப்புலபடுத்தும் ஓரிரு காட்சிப்படிமங்கள் கோபாலின் பாத்திரத்தன்மையை கட்டமைத்து முன்னிறுத்தும் அவரின் முயற்சி சோர்வடையவில்லை. பால்யகால் நண்பனைவிட நல்ல நிலையில் இருந்தாலும் பழைய நட்பை பாரட்டும் கோபாலின் மாறாத பண்பைக் கதைப்போக்கில் சொல்லிச்செல்வது கதையின் கனத்தைக் தீர்மானிக்கிறது.சீனனிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பித்தருவதில் கோபால் திக்குமுக்காடும் காட்சியில் காடு மேடெல்லாம் சைக்கில் மிதித்து சம்பாதித்த பணத்தைக் கோபாலுக்குத்தெரியாமலேயே செலுத்தி நேர் செய்வது, கோபால் தன்னிடம் காட்டிய நட்புக்கும் கரிசனத்துக்குமான நன்றிக்கடனென வாசகனை உருக வைப்பது இயல்பாக நிகழ்கிறது.

உனக்கு மதுரை மீனாட்சியம்மனைப் பார்க்க முடியலன்னு வருத்தமா என்று செல்லம்மாவை கேட்கும் இடமும் அதற்கான செல்லம்மாவின் பதிலும் கோபாலின் கடனை அடைக்கும்போது வாசகனுக்கு உண்டான கழிவிரக்கத்தை மேலும் ஈரமாக்குகிறது. கடனை அடைத்தது கோபாலுக்குச் சொல்லாமல் இருந்ததும், பின்னர் கோபாலுக்குத்தெரிய வரும்போது நிகழப்போகும் நெகிழ்வும் வாசகமனம் கதை முடிந்த பின்னர் அனுபவிக்கப்போகும் இடத்தை காலியாக விட்டுச்சென்றிருப்பது கதையின் முடிந்தும் முடியாத வெற்றிடத்தை இட்டு நிரப்புகிறது.

சமீபத்தில் அவர் தொகுத்து வெளியிட்ட ‘பயாஸ் கோப்காரனும் வான்கோழிகளும்” என்ற சிறுகதைத்தொகுதியில் மிகச்சிறந்த கதையாகப்படுகிறது எனக்கு.