Skip to main content

கண்டடைதலின் குரூரங்களும் - கட்டுமான உடைப்புகளும்

கோ.புண்ணியவான்
சமீபத்திய மலேசியக் கவிதைகளை முன்வைத்து

தன்னிச்சையாய் முகப்பருக்களைப் தேடிப்போகும் கைவிரல்களைப்போல கவிதாமனங்களிலிருந்து வெளியேற வழி தேடிக்கொண்டே இருக்கிறது கவிதை. இது ஒரு இனிய நோய் காதலைப்போல. மௌனம் ஏழாவது இதழ் கைகளில் விழுந்து மனத்தை தாலாட்டியபோது அதன் பிரசவ வலியின் ரத்த வாடையிலிருந்து எளிதில் தப்பித்துவிட முடியவில்லை. என்ன தான் தேவா அதன் தாயாக இருந்தாலும், கவிதை தாய்மார்களுக்கும் அதன் வலி நீட்சிகாண்கிறது. இயல்பாகவே ஒரு சிற்றிதழ் பிறக்கிறதென்றால் அதன் ஆயுட்காலம் அப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. பரந்த வாசக பரப்பைக்கொண்ட தமிழ் நாட்டிலேயே சிற்றிதழ்களின் வாழ்நாட்கள் குறை ஆயுளை எதிர்நோக்கும்போது, இங்கே சொல்லவே வேண்டியதில்லை. சொற்ப வாசகர்களிலும் சில அற்ப வாசகர்களிடம் எப்படித் தாக்குப்பிடிக்கும் என்பது மனதை நெருடியாவாறு இருக்கிறது. கவிதைகள் வாங்கும் சக்தி அருகிப்போய்க்கொண்டிருக்கும் நிலப்பகுதியில் -கவிதையென்றால் கசப்பானது என்று பதிவான பொதுப்புத்திக்கு இதனை பந்தி வைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று மௌனம் கைகளில் வந்து விழுந்தோறும் கவலையில் மனம் தோய்ந்துவிடுகிறது. பணமோ பொருளோ ஒரு பொருட்டல்ல என்று நினைக்கும் அற்பணிப்பு உணர்வொன்றே கவிதை இதழான மௌனத்தை முன்னெடுத்துச் செல்லும். இலக்கிய தாகம் கிட்டதட்ட சரிந்துபோய்விட்ட சமூகத்திடம் கவிதையைக்கொண்டு சேர்ப்பதில் உண்டாகும் பின்னடைவை பொருட்படுத்தாது, மிகச்சிறுபாண்மை நுகர்வை வளர்த்தெடுக்க முனையும் தேவா போன்றோரின் முயற்சியை நான் பெரிதும் மதிக்கிறேன். வணங்குகிறேன்.

புற்றீசலைப்போல கவிதை கணக்கற்று விரவிவிடும் படப்பிலக்கியப் பண்பாட்டுக்கோளாறிலிருந்து, பொன்முட்டையிடும் புற்றீசலைத்தேடும் நடவடிக்கைளைப் மௌனத்தாலும் அநங்கத்தாலும் நயனத்தாலும் மட்டுமே சாத்தியமாக்கமுடியும் போலத்தெரிகிறது - காகித ஊடகத்தைப்பொறுத்தவரை. சில பொன்முட்டையிடும் ஈசல்களை அடையாளங்காணத்தவறும் வெகுஜன ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன- கவிதை காகித்ததை நிரப்பும் வகைமையாகவே பார்ப்பதால் உண்டாகும் பிழையோ இது ?

எல்லா மௌனத்திலும் நான் கவிதையைச்சுவைத்து என் பார்வையைப் பதிய முனைந்ததுண்டு. ஏழாவது மௌனக்கவிதைகளைப்பற்றிய என் மதிப்பீட்டை எழுதுவது மட்டுமே சாத்தியமாகிறது போலும்.

ரப்பர் உறைகளுக்குள் உறைந்து காய்ந்துபோகும் உயிரணுக்கள் பற்றிய
தன் கழிவிரக்கதைப் பதிவு செய்கிறார் சை.பீர். நவீன மொழியில் அதனை ச்சொல்லியிருக்கலாம்.
கடவுள் நகரம் ஆகிய இரு குறியீட்டையும் விடுவதாயில்லை பாலா. தன் வாழ்வனுபத்தின் அழுத்தமாக வேரூன்றிய பாதிப்பிலிருந்து விடுபடுவது அத்துணை எளிதல்ல.
ஒரு நீண்ட உரையாடலின்போது
எனக்கும் கடவுளுக்கும்
சர்ச்சை உருவாகியிருந்து
..............
.............
ஒருவர் மீது ஒருவர்
மெல்லிய துரோகங்களாகப்
படிந்திருக்கும் சந்தர்ப்பத்தில்
யார் முதலில் யாரைத் தூக்கி வீசப்போகிறோம்
என்ற அச்சம் பரவி இருந்தது.
நண்பர்ளாகவே காலத்தைக்கடப்பது சாத்தியாமானதன்று. நட்பின் ஊடே குரோதமும்
பொறாமையும் வளார்ந்துவருவது இயல்பான- யதார்த்தமான குணம்.
அவ்வாறான தருணங்களில் மெல்லிய துரோகம் கசிந்து, விஷ நாவல் தீண்டிவிடுகிறது நட்பை. ஒரு காலத்தில் கடவுளாக கருதப்பட்ட நண்பன் பிறிதொரு காலத்தில் சாத்தானாகக்காட்டப்படுவதன் படிமம் நேர்த்தியாக விரிகிறது.
தனக்குப்பிறந்த குழந்தையை இறைவனின் இதயமாகக் குறியீடாக்குகிறது சீ.அருணின் கவிதை ஒன்று.
ஒரு முறை ஒரு கவிஞர் கடவுள் புனிதமானவர்.கவிஞர்கள் அவரைக் கண்டபடி கையாள்வதும், அவரை சாக்கடைக்கு இணையாக்காட்டுவதையும் தன்னால் அனுமதிக்க முடியாது என மூர்க்கமானார். கடவுள் கடவுளாகவே இருக்கட்டும்.யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. கவிஞன் கவிஞனாக இருக்கவேண்டும். அதற்கு முகாமையான தகுதி முரண்படுவது. கடவுளைப்பற்றிய தேவாவின் முரண் சுவையான ஒன்று.
நான்
உங்கள் கடவுள்தான் பேசுகிறேன்
நான் உங்கள்
கடவுள் அல்ல
இக்கவிதையில் கடவுளை நான் குறியீடாகக்கொள்ளாமல், கடவுளாகவே பார்க்கிறேன். கடவுள் என்பதற்கு பல்வேறு கட்டமைப்பை நிறுவுகிறார்கள் சான்றோர்களும் சாமான்யர்களும். அந்த வியாக்கியானங்களை ஏற்றுக்கொள்வதற்கும், புறக்கணிப்பதற்கும் அவர்களின் அறிவு சார்ந்த பக்குவத்தைப்பொறுத்தது. கடவுளின்மேல் நமக்குண்டான நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையைச் சார்ந்தது இறைமை. வேண்டுதல் நிறைவேறினால் வந்திப்பதும் , நிறைவேறாத பட்சத்தில் நிந்திப்பதுமான மானிட குழப்பத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள கடைசியில் முற்றுப்புள்ளி வைக்கிறார். நம் எதிர்பார்ப்பின் முடிவுகளுக்கேற்ப கடவுளைக் கையகப்படுத்துவதும், நம் விருப்பத்துக்கு இழுக்கடிப்பதும் கடவுளை ‘எரிச்சல்படுத்தியிருக்கக்கூடும்’. இப்படியாக கடவுளின் இருப்பை அல்லது இல்லாமையை நிறுவும் தர்க்கங்கள் ஓய்ந்தபாடில்லை. கடவுள் பார்க்கிறார்- இந்தக்குழப்பங்களுக்குத் தான் காரணமாக இருந்துவருவதைத்தவிர்க்க நான் கடவுள் இல்லை எனப்பிரகடனப்படுத்தி எப்போதும்போலவே நழுவுக்கொள்வாதான சித்திரத்தைக் கவிஞன் வரைந்து காட்டுவதாகக் கருதுகிறேன்.
எண்ணிக்கையற்ற மரபுக்கவிதைகளில் திளைத்துவிட்டு அதன் கட்டுமானத்தின் இன்றைய ஒற்றைத்தூணாகத் தன்னை நிறுவ முனையும் சந்திரன், கொஞ்சமாய் புரண்டு, நவீன மொழியில் பெண்ணியம் பேசுகிறார். அவரின் நவீனம் சார்ந்த ஆரோக்கியமான கண்டடைதல் மரபாளர்கள் மத்தியில் இந்நேரம் கடுப்பை உண்டாக்கியிருக்கக்கூடும்.
அந்தப்பூ
பன்னிரண்டு வயதில்
பூத்தது
பதினாறு வயதில்
மீண்டும் பூத்தது
இன்னொரு பூவுக்காக- என்ற அவரின் சமீபத்துக் கவிதை
என்னைக்கவர்கிறது. இதன் படிமம் எண்திசையில் சுழல்வதாகப்படுகிறது. அதில் ஒன்று.. பெண்ணைப்பூவாகக் காட்டுவதும் காலங்காலமாக ஆணாதிக்கப்பிடியில் கசங்கி பெண்ணுடல் சார்ந்த வன்முறையைக் காட்டுவதாக பொருள்கொள்ளலாமா ?
பூ சூடுவதற்கா? வாடுவதற்கா? உங்கள் கவிதையை எப்படி அர்த்தப்படுத்திகொள்வது?
வந்தவர்களை உபசரிப்பதைவிட, உபசரிக்காமல் அனுப்பிவிடுவது சலனங்கள் நிறைந்தது. தேநீராவது சாப்பிடலாமே என்ற ஒரு வார்த்தைகூட கூறாமல் வெறுமனே அனுப்பிவிடுவதில் உண்டாகும் வலியைவிட, அதற்குப்பிறகு அதுபற்றிக்கதைப்பதற்கான தளங்களை அமைத்துக்கொடுத்துவிடுகிறது. மனிதர்கள் நிரம்பி வழியும் வீட்டைவிட, யாருமற்ற எப்போதோ எதனாலேயோ மனிதர்கள் விட்டுப்போய்விட்ட, பூட்டப்பட்ட வீடு உண்டாக்கும் ஓசை முடிவற்றது. அப்படித்தான் தேனீர் தராமல் விட்டுவிட்ட நண்பரைப்பற்றிய முடிவற்ற நினைவுகள். சிங்கை பாலு மணிமாறனின் கவிதையைப்பாருங்கள்.
உன்னைவிட
சும்மா வார்த்தைகளில்கூட
நீ தராமல் விட்டுவிட்ட
தேநீரைப்பற்றிப்
பேசிக்கொண்டிருந்தோம்
நானும் என் நண்பனும்.
தன்னைப்பற்றி அவதூறுகள் பேச நண்பன் ஒருவன் போதுமே. தேநீர் தரவில்லை என்பது அவ்வளவுபெரிய குற்றமில்லை. அனால் நண்பனைப்பற்றிச் சிலாகிப்பதற்கு உபசரிக்காமை ஒரு சாக்காகிறதே.
எல்லா படைப்பாளருக்கும் பால்யத்தின் பாதிப்புகள் வாழ்நாள் முழுதும் கைகோர்த்து வரக்கூடியவை. அவை கவிதையாக தன்னை எழுதிக்கொள்ளும்போது அதன் வியாபகம் பால்யத்தில் அனுபவித்ததை விடவும் சுகானுபவம் நிறைந்தது. தன் சிறுவயதில் நினைவுகளை அனுபவிகிறார் தினேஸ்வரி. கவிதை எழுதும் வரம் கிடைத்தவர்களுக்குமட்டுமே அதன் அனுபவத்தின் சுவை அலாதியானது. நாமும் கொஞ்சம் அவரின் நினைவு மழையில் நனைந்து பார்க்கலாம்.
கடந்துபோயும்
இன்னும்
கடந்துகொண்டிருக்கிறது
பால்யம்
புத்தக இடுக்கில்
பூக்களில்
மணி கேட்போரில்
அப்பாவின் பெயரில்
ஒவ்வொரு கணத்தில்.

வாழ்வு சார்ந்த இனிய கனவுகள் கல்யாணத்தை நோக்கி நீள்கிறது. பிறகு வாழ்வே வரங்களைச் சாபமாகக் கைகளில் திணித்துவிடுகிறது. இன்பக்கனவுகள் கல்லெறியப்பட்ட குளத்தின் சித்திரமென கலைந்துவிடுகிறது முதிர்க்கன்னிகளில் வாழ்வை. மீளமுடியாத கனவொன்றின் காயங்களாக அவளின் இளமைத்தோற்றம் உடைந்து வருவதிலிருந்து அவளின் கலயாணக்கனவுகள் சிதைவுறும் காட்சிப்படிமத்தை வரைந்து காட்டுகிறது மீராவாணியின் கவிதை.
மீராவாணி பெண் வாழ்வின் வீழ்ச்சிகளின் மனமுறிவுகளை எழுதிக்காட்டுகிறார். அதுவும் தன் பால்ய சிநேகிதிக்கு நேருவதை நேர்க்கொண்டு பார்க்கும் தருணத்தில் விதி எப்படியெல்லாம் அவளிடம் விளையாடிப்பார்க்கும் தகிப்பினை உணரவைக்கிறது அவரின் சொல்லாடல்.
மங்கல நாண்
ஏறாத கழுத்தில்
புரண்டு கிடந்த கூந்தலில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஈயக்கம்பிகளாகச்
சிரித்தன நரைகள்.
குறியீடுகளே படிமங்களாகி கவிதைக்குள் இருக்கும் பெண்ணைபற்றிய சோகத்தில் நம்மையும் நெக்குருக வைக்துவிடுகிறார்.

முடிவற்ற உரையாடலின் வழி போலிமையின் அசலான முகத்திரையைக் கிழித்துக்காட்டுவதாக பச்சைபாலனின் பரிமாறல் நிகழ்கிறது.
...................
கனமான அறிக்கைகள் அலசி
கருத்துகளை முன்வைத்து
அவையின் கவனம் ஈர்க்க
உரத்தக் குரலிகளில் கத்திக்
கோபாவேசமாய் பொங்கி வழிந்து
தீர்மானங்களை நிறைவேற்றி
கைத்தட்டல்களால் அதிரவைத்துக்
கடமை முடிந்ததாய்க்
................
................
எதிரொலித்துக்கொண்டே இருந்தன
உங்கள் பேச்சொலிகள்.

சமூகவியல் அக்கறையைத் தூக்கலாகவும் வெளிப்படையாகவும் ஒலிக்குவைக்கும் கவிதை இது.
கைத்தட்டலோடு கடமை முடிவடைந்துவிடுவது எவ்வளவு பெரிய சுயநலம். பிற சமூகத்தின் முன்னேற்றத்தை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது நாம் அடைந்த பின்னடைக்குக் காரணம் திட்டங்களை அமல்படுத்தாமையும், சமூகத்தைக் கைத்தூக்கிவிடாமையும்தான்.
இன்றைக்கு வாசகனின் வாழ்வனுபவமும், அவனின் வாசிப்பு ஆழமும் கவிதைகளின் பொருளைக் கண்டடைய உதவுகிறது. சில சமயம் படைப்பாளன் கூற வராத வேறொரு பரிமாணத்தையும் வாசகனுக்கு வாய்த்துவிடுவதைத் தவிர்க்க இயலாது. இது நவீன கவிதைகளின் இயல்பு. என் வியாக்கியானம் உங்கள் சொற்சித்திரத்தை மீறி இருந்தால் அது என் பிரச்னை இல்லை.
மௌனத்தில், கவிதையை மீட்டெடுக்கும் முயற்சி சுகமானதா, பெரும் சுமையானதா என்பதைச்சொல்ல எனக்குத்தகுதி இல்லை. இரண்டுமேதான் என் தேவா ஆமோதித்தால் சுமையை இறக்கி வைக்க கவிஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது, ஆரோக்கியமானதும் கூட.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின