Thursday, December 31, 2009

வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்

கடந்த வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் லங்காவித்தீவுக்குச் சுற்றுலா போயிருந்தோம். மலேசியாவின் மேற்குக்கடற்கரை பகுதியில் ஒரு மீனவத்தீவாகவே 70களின் இறுதிவரை தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தீவு லங்காவி.( இலங்கையை நினைவுக்கு வருகிறதா? இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருபதாகச்சொல்கிறார்கள்) விவசாய நிலமும் ஏழை மனிதர்களும் அவர்களைச்சூழ்ந்துள்ள ஏழ்மையைப்போல், கடல் அலைகள் மட்டுமே இருந்த இந்தத்தீவு இன்றைக்கு உரு மாறி, நிறம் மாறி, ஏழ்மை என்ற முள்வேலியை அகற்றிக்கொண்டு தன்னை வைரங்களாலான ஆபரங்ணங்களால்

அழகுபடுத்திக்கொண்டு கம்பீரமாகக்காட்சி தருகிறது. ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோல் சொடுக்கில் திடீரென வேறொன்றாய்க்காட்சி தரும் லங்காவித்தீவு கரையை வந்தடையும் அலகலைப்போல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கிறது.

அந்தத்தீவீன் தலையெழுத்தை மாற்றிய மந்திரவாதி வேறு யாருமல்ல. மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் தான். ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது) மகாதிர் மேல் மிகக்காத்திரமான அரசியல் சார்ந்த விமர்சனங்கள் இன்றளவும் வீசப்பட்டுக்கொண்டு இருந்தாலும், லங்காவித்தீவுக்கு ஒருமுறை சென்று வருபவர்கள் அவர் மீதான விமர்சனங்க¨ளைக்கடலின் அலைகளுக்குத்தீனியாகச் சமர்ப்பணம் செய்துவிடுவார்கள்.

1980 களின் தொடக்கத்தில் இந்த்தீவைச் சுற்றுலாத்தளமாக மாறி அமைக்க திட்டமிட்டு அதனைச் செவ்வனே செய்து முடித்தவர். தான் ஓய்வு பெற்று விட்டாலும் அதன் எஞ்சிய வேலைகள் சுணக்கம் காணாமல் நடந்த வண்ணமிருக்க முன்னேற்பாடுகள் செய்துவிட்டு வெளியேறியவர்.

நான் லங்காவியில் இருக்கும் ஒரே தோட்டத்மிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நான்கு ஆண்டு காலம் பணியில் இருந்தேன்.1992 முதல் 1995 வரையிலான தருணத்தில் இன்றைக்குப்பார்த்ததை விட முக்கால் பங்கு அதிக முன்னேற்றத்தைப்பார்க்கிறேன். லங்காவியை வெற்றிபெற்ற சுற்றுலா தளமாக மாற்ற அவர் கையாண்ட மிகச்சாதூர்யமான உத்தி அதனைத் தீர்வையற்ற(TAX FREE) சந்தையாக மாற்றியமைத்ததுதான் முகாமையானது. உலகில் எண்ணற்ற தீவுகள் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றன. தாய்லாந்தில் புக்கெட் தீவு மிகப்பெரிய சுற்றுலா மையமாகத்திகழ்கிறது. இந்தப்பக்கம் சிங்கப்பூர், இந்தோனேசியாவின் பாலித்தீவு என போட்டிகள் லங்காவியைக் குழுமி இருந்தாலும் அதனைத்தீர்வையற்ற தீவாக மாற்றியதும் தென்கிழக்காசியாவின் இன்னொரு உல்லாசப் பயணிகள் மையமாக மாறி வருகிறது லங்காவி.

மதுபான வகைகள் மிக மலிவாக விற்கப்படுகிறது. இங்கே நான் இருந்த ஆண்டுகளின் அரை லிட்டர் கேன் பியரின் விலை ஒரு மலேசிய ரிங்கிட்தான். அதே வே¨ளையில் ஒரு கேன் குளிர்பானத்தின் விலை மலேசிய ரிங்கிட் 1.20 காசுகள் விற்கப்பட்டது. குளிர் பானத்திலிருந்து மது பானத்திற்குத் தன் தரத்தை உயர்த்திக்கொண்ட பல இந்திய இளைஞர்களை அங்கே காணமுடிந்தது. பியர் குடித்தபடி மோட்டார் சைக்கில் ஓட்டிக்கொண்டு போன பல தமிழ் இளைஞர்களை நான் சந்தித்ததுண்டு. இன்றைக்கு ஒரு கேன் பீயரின் விலை 1.50 காசுதான். அவ்வளவு மலிவு. தமிழர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் லங்காவியில் இருக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். லங்காவி தமிழர்கள் வசிக்கும் தோட்டத்தில், ஒரு மலிகைக்கடையில் வீட்டுக்கான பொருட்கள் வாங்கப்போகும்போதெல்லாம், கடையின் பக்கவாட்டில் காலி பியர் டின்கள் மலைப்போல குவிந்திருப்பதைப் பார்த்து மலைத்திருக்கிறேன். (அவ்வப்போது அகற்றப்பட்டும்).

ஒரு லிட்டர் விஸ்கியின் விலை தீபகற்ப மலேசியாவை விட 60 மடங்கு மலிவு. உ.ம்: சிவாஸ் ரிகால் வெறும் 65 மலேசிய ரிங்கிட்தான். பிலேக் லேபல் மலேசிய ரிங்கிட் 85 தான். தீவின் ஆங்காங்கே பார்கள் என்னைப் ‘பார்’ என நியோன் மின் விளக்கொளியில் கண்சிமிட்டி அழைத்தவண்ணம் இருக்கின்றன. கடற்கரையின் பல இடங்களில் உல்லாச விடுதிகள் நிரம்பி வழிகின்றன. கடல் நீர் வெள்ளை நிறத்தில் வெள்ளி நீர்த்திவலைகளை அள்ளி வீசியபடி ஈர்க்கிறது. சில இடங்களில் அலைகள் எட்டடி உயரத்திற்கு வீசி பன்னீர் தெளித்து பயணிகளை அணைக்கிறது.

மேல் நாட்டுப்பணக்காரர்கள் சொந்தமாக உல்லாசக்கப்பல்களை வாங்கி கடலில் உல்லாசமாகப் பொழுதைப்போக்குகிறார்கள். அதற்கான இரண்டு துறைமுகங்களை அரசு கட்டிக்கொடுத்திருக்கிறது.

மலைத்தொடர்களுக்கு இடையே கேபல் கார்களை ஓடவிட்டு பிரமிப்பை உண்டாக்கியிருக்கிறார்கள். கடல் திட்டிலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரத்தில், ஒரு மலை உச்சிக்கும் இன்னொரு மலை உச்சிக்கும் இடையே பாலம் கட்டி கடலையும் அதன் அழகையும் ரசிக்க வசதி செய்திருக்கிறார்கள். 1000 மீட்டர் மேலிருந்து பார்த்தால் கால்கள் சில்லிட்டுக்கொள்கிறன. பால்த்தை ஒட்டினார்போல கல் மலை சரிந்து கடலை நோக்கி ஓடுகிறது. குளிர்த் தென்றல் காதலி கட்டிப்பிடித்ததுபோல இதமாக வருடுகிறது.

பெண்களை அதிகம் கவரும் வீட்டு அழகு பொருட்களும், அடுக்களை தட்டுமுட்டு சாமான்களும், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை ( கோர்னிங் வேர். பைரெக்ஸ்) போன்ற உயர்தரத்திலானவை மலிவான விலையில் விற்கப்படுவதால் பெண்களைக்கடைக்குள் இழுத்து கட்டியணைத்து வைத்துகொள்கின்றது.

லங்காவியில் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடந்தது. கடற்கரைப்பகுதிகளில் அரை வயிறு கஞ்சிக்கே கடலை நம்பி வாழ்ந்து வந்த மாலாய்ச்சமூகத்தின் மேல் வீசிய ‘சுனாமி அலைகள்’ அவர்களை விடிவதற்கு முன் கோடிஸ்வரர்களாக மாற்றிய விந்தைதான் அது. தீவின் கடற்கரை பகுதிகளில் விடுதிகளைக்கட்டிச் சுற்றுலா மையமாக மாற்ற அரசு எடுத்த நடவடிக்கையால் கடற்கரை நிலப்பகுதிகள் அகோர விலைக்கு வாங்கப்பட்டதும், மீன் தூண்டில்கள் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கோல்ப் ஸ்டிக்கோடும், உயர்தர கருப்புக்கண்ணாடியோடும் வாழ்க்கையை வேறொரு பரிமாணத்துக்கு மாற்றிகொண்டார்களாம். அவர்கள் மீன் வலையில் அடிமை பூதம் சிக்கி எது வேண்டும் கேள் மனமே என பாரதியார் வரிகளை உச்சாடனம் செய்கின்றன. அவர்கள் அதற்குப்பிறகு ஓட்டும் வாகனம் மெர்ஸடிஸ், பி.எம்.டபல்யூதான் வகையராக்கள்தான். சிலர் ஹாட்டல் கட்டிச்சம்பாதிக்கிறார்கள். என்னோடு வேலை செய்த ஒரு தலைமை ஆசிரியர் நன் நிலத்தின் ஒரு பகுதியை விற்று கோடீஸ்வரனாகி வேலையை உதறித்விட்டுபோய்விட்டார்.

கார்களின் விலையும் அங்கே 55 விகிதம் மலிவுதான். நான் லங்காவியில் இருக்கும்போது டொயோட்டா வகை கார் ஒன்று வாங்கிப்பாவித்தேன். அதன் விலை ம.ரி.30,000தான். அதே வகை கார் தீபகற்ப மலேசியாவில் ம.ரி.75000.

லங்காவித்தீவு சுற்றுலாத் தீவாக மாற்றங்கண்டதிலிருந்து வியாபார வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் பல வகையில் பிழைப்பதற்கான வழிகளும் அங்கே திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்பவர்களாகத் தெரியவில்லை. அங்கே கட்டப்பட்ட நூற்றுக்கனக்கான விடுதிகளில் தமிழர்கள் ரூம் கிளீனர்களாகவும், தோட்ட வேலை செய்பவர்களாகவும் குறைந்த வருமானத்தில் திருப்தி அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். டெக்ஸ் பிரி (தீர்வையற்ற) கடைகளில், பேரங்காடிகளில் விற்பனையாளர்களாகவே காலத்தை ஓட்டுகிறார்கள்.) போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பதனைக் கடைபிடிப்பவர்கள். இவர்களில் முக்கால் வாசிப்பேர் லங்காவியில் உள்ள ஒரே ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர்கள். இவர்கள் வாழ்ந்த சுங்கை ராயா ரப்பர் தோட்டம் மலேசியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான லோ பூன் சியூவுக்குச் சொந்தமானது. அத்தோட்டமும் சுற்றுலாதாலத்துக்கு இடம் விட்டபோது ரப்பர் மரங்களும் வீழ்த்தப்பட்டன. ரப்பர் மரம் சீவும் தொழில் இல்லாமல் போகவே வாழ்வாதாரம் தேடி ஹோட்டல்களுக்கும் கடைகளுக்குமாக வேலை மாறினார்கள். அவர்கள் பிழைக்கும் இடம் மாற்றம் கண்டதே தவிர பிழைக்கும் வழி மாறவே இல்லை. முன்பு சீன முதலாளிக்கு வேலை செய்தார்கள், இப்போது வெள்ளையர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் சொந்தமான விடுதிகளிலும் கடைகளிலும் கூலி வேலை செய்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?

முதலாளிகளுக்குக் கைகட்டி வேலை செய்து பழக்கபட்டவர்களின் எண்ணப்போக்கை மாற்றி அமைக்க வழி காட்டி அங்கே இல்லைபோலும். காலங்காலமாக முதலாளிகளையே கடவுள்களாக தரிசிக்கும் நம்மவர்களுக்கு முதலாளிக் கடவுள்கள் வரம் தருவதில்லை என்று தெரியாமலேயே இருப்பதுதான் சாபக்கேடாக இருக்கிறது. எனக்குத்தெரிந்து அத்தீவில் ஆளுங்கட்சி தேசிய முன்னணியைச் சேர்ந்த மலேசிய இந்தியன் காங்கிரஸின் ஐந்து கிளைகள் இயங்கி வருகின்றன. இளைஞர் மணிமன்றம் இருகிறது, பல்வேறு இயக்கங்களும் பேருக்காகச் செயலாற்றி வருகின்றன. இவர்களுக்குத் தொழில்துறை மேம்பாடு. வணிகத்துறை மேம்பாடு பற்றிய விளக்கக்கூட்டமும், கைதூக்கிவிட கடன் உதவியும் பெற்றுத்தர தவறி விட்டனவோ என சந்தேகம் எழுகிறது. உறங்கிக்கிடந்த மலாய்க்கார இனம் துயில் எழுந்து துள்ளி விளையாடி களம் இறங்கி வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்க, நாம் குனிந்து கும்பிட முதலாளிகளை மட்டுமே மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

லங்காவித்தீவைசார்ந்த ஒரு தொன்மக்கதை உண்டு. மசூரி ஒரு இளம் மனைவி. அவர் கணவன் வெளியூர் சென்றுவிட அவள் ஒரு பயணியோடு தகாத உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறாள். அவள் தான் தூமையானவள் என எவ்வளவு மன்றாடியும் யாரும் கேட்பதாயில்லை. அக்கிராமத்து சட்டப்படி அக்கிரமமாக , ஊர்க்காரர்கள் மத்தியில் மசூரி தண்டிக்கப்படுகிறாள். அவளை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு ஈட்டியால் குத்தி சாகடிப்படவேண்டுமென்பதே தீர்ப்பாக வைக்கிறது பஞ்சாயத்து. அந்தத்தருணத்திலும் அவள் மன்றாடுகிறாள் தான் கற்புநெறி மீறவில்லையென்று. (திருமணமான பெண் கற்புநெறி மாறாதவள் என்று எப்படி நிரூபிப்பது கற்பை உடல் சார்ந்த ஒன்றாக மதிப்பிடுவதால், சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் மறையாது போலும்) அதனைப்பொருட்படுத்தாது அவள் குத்தி கொலை செய்யப்படுகிறாள்.( அவள் உடலிலிருந்து வெள்ளை ரத்தம் வடிந்ததாம்-தூய்மையானவள் என் நிறுவ) சாகும் தருவாயில் அவள் ஒரு சாபமிடுகிறாள். லங்காவிக்கு இனி வரும் ஏழு தலைமுறைக்கு விமோசனம் கிடைக்காது என்ற சாபம்தான் ஆது. அந்தச் சாபம் பலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் 1970கள் முடிய ஏழு தலைமுறை முடிந்துவிட்டது. 80களில் லங்காவி துரித முன்னெற்றம் காணத்துவங்கி இப்போது பாலும் தேனும்( அதாவது பீயரும் விஸ்கியும்) பெருகி ஓடுகிறது. மசூரி சாபமிடும்போது தமிழர்களைத் தவிர்த்து என இரு வார்த்தைளைச் சேர்த்துக்கொண்டாளோ என்னவோ அம்னோ செய்ததைப்போல.

Tuesday, December 22, 2009

சினிமாக்காரனுக்கு ஏன் இந்தச் சின்ன புத்தி?

இரண்டு தினங்களுக்கு முன்னர் இதனை எழுத நினைத்து நான்கு ஐந்து வரிகள் எழுதி பின்னர் அழித்துவிட்டேன். எனக்கு எழுதப்பிடிக்கவில்ல. ஆனால் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் அதன் பாதிப்பால் மீண்டும் எழுதத்தூண்டியது. வேண்டாம் என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், ஏதோ ஒன்று எழுதிவிடுவதற்கான நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தச்சகதியெல்லாம் எழுதி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும் என்று முடிவெடுத்து ஒதுங்கினாலும், குறுக்கே வந்து எழுதித் தொலைப்பதற்கான ஆதங்கத்தை மேலோங்கச்செய்தது. இப்போதும் சொல்கிறேன் நான் எழுதவில்லை, எனக்குள் புகுந்த ஒன்று தீய சக்தியைப்பற்றி எழுத வைக்கிறது. மலத்தை 24 மணிநேரத்துக்குமேல் உடல் வைத்திருக்க விரும்புவதில்லை. இல்லையா?ஒரு வாரத்துக்கு முன்னால் நடிகர், சூப்பர் ஸ்டார், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினியின் பிறந்த நாள். தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சிவாஜி கணேசன் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி இடுப்பை ஆட்டிக்கொண்டு கைகளை மூன்னும் பின்னுமாக (கொசு விரட்டும் மாட்டின் வாலைப்போல) வீசி வீசி வசனத்தை நாக்கில் படாமல் பேசுவது என்ற வித்தையை தமிழ்ச்சமூகத்துக்கு எடுத்துக்காட்டியவர். தன் அறுபதாவது பிறந்த நாளைக் கட் ஒவுட் செய்து கொண்டாட வைத்தவர். கட் ஒவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து புண்ணியத்தைத் தேடிக்கொண்டவர்.

ரசிகர்கள் நடிகர்கள் மேல் ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்ற பொழுதுபோக்கின் மேல் கவனம் செலுத்தாதவர்கள் நாலாந்தர சினிமாவினாலும் நாலாந்தர நடிகராலும் ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். படங்கள் புத்தி சுவாதீனத்தோடு எடுக்கப்படுகிறதா என்பதை ஆராய்வதற்கான அறிவு அவர்களிடம் இருப்பதில்லை. புத்தகம் படிக்கும் பழக்கமில்லாதவர்கள். சினிமா விமர்சனங்களைப்படிப்பதில்லை. எனவே நல்ல சினிமாவைத் தேடிப்பார்த்து ஒப்பீடு செய்யும் அறிவு இவர்களுக்கு இருப்பதில்லை. நாயக பாத்திரத்தை முதன்மையாக வைத்து ஒரு போலியான பிம்பத்தை ரசிகன் மனதில் திணிக்கிறார்கள். நாயகனின் சாகசங்காளால் கவரப்பட்டவர்களாக ரசிகர்களை மாற்றும் வித்தையை வெகுநாட்களாகவே படம் எடுத்துவருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். பட முதலாளிகள் எப்படி ஏழைச்சனக்களில் அற்றைக்கூலிப்பணத்தைப் அடி வயிற்றில் அடித்துப் பிடுங்கித்தின்னும் சுரண்டலில் தேர்ந்தவர்கள்.

ரஜினிக்கு 60 வயது. ஆள் எழுபது வயதை எட்டியவர் போன்ற தோற்றத்தை அடைந்துவிட்டவர். சிவாஜி படத்தை உன்னிப்பாகப்பார்த்தவர்கள் ரஜினியால் ஒரு கழியைக்கூட ஆண்மைத்தனத்தோடு தூக்கமுடியாமல் இருப்பதைக் கவனித்திருக்கலாம். எடிட் செய்தவன் என்ன பாடுபட்டிருப்பானோ தெரியாது. அங்கே வெட்டி இங்கே வெட்டி கண்டதெல்லாம் ஒட்டி ரஜினியை ஒரு 20 வயது ஹீரோ மாதிரி காட்டியிருக்கிறார். கிராபிக் தொழில் நுட்பம் இல்லையென்றால் ரஜினியால் இன்று வரை தாக்குப்பிடிப்பது முடியாத ஒன்று. எந்திரன் என்று வரப்போகும் படத்துக்குச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். கிராபிக் நுட்பம் கொண்டு ரஜினியை எந்திரமாகத்த்தான் காட்டப்போகிறார்கள். ரசிகர்களெல்லாம் இப்போதே ரோபோட்டாகத் தயாராகிவிடுங்கள்.(பலர் எப்போதோ ரோபோட்டாகவே மாறிவிட்டார்கள்- சொச்ச ரசிகர்களுக்குச் சொல்கிறேன்)

தமிழகம் ஒரு அறிவுச்சுரங்கம். அங்கே இருக்கும் தமிழ்ச்சினிமா ரசிகர்கள் ஏன் சுரங்கத்துக்குள் இருக்கும் கரியாகவும் கசடாகவும் இருக்கிறார்கள். 30 40 அடி கட் அவுட்டுகள் செய்து அதற்குப்பாலாபிஷேகம் செய்யும் பைத்தியக்காரத்தனம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். அது வெறும் பலகைதான் என்ற பிரக்ஞைகூடக் கிடையாது. ரஜினியின் வாழ்க்கையில் தேனும் பாலும்தான் ஓடவைத்துவிட்டார்களே தமிழ் ரசிகர்கள். கட் அவுட்டுக்கு வேறு அபிஷேகம் செய்ய வேண்டுமா? தமிழ் நாட்டில் ஏழைக்குழந்தைகள் பாலில்லாமல் கதறும் சத்தம் இவர்களுக்குக் கேட்பதில்லையோ? அவ்வளவு பெரிய மடையர்களா இவர்கள்? இந்தக்கஸ்மாலத்தை உலகுக்குப் போட்டுக்காட்ட தமிழகத்தொலைக்காட்சிகள் போட்டி வேறு போடுகின்றன.

அப்புறம் கூட்டம் கூட்டமாகக்கூடி ரஜினிக்காக அனைவரும் கேக் வெட்டி அல்லோலகல்லோலப் படுத்துகிறார்கள். அன்றைக்கு வெளியே வந்து தன் பக்தர்களுக்குத் தரிசனமே தரவில்லை ‘சுவாமிகள்’. எந்தக் கொண்டாட்டத்திலும் கலந்துகொள்ளவும் இல்லை. எப்படிப்பட்ட அவமானமும் உறைக்காத ரசிகக்கூட்டம்! வீட்டில் நாள் முழுதும் “தியானம்” இருந்தாராம்- ஊடகங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு நாளும் சாயுங்கால வேலையில் தீவிர “தியானம் “ இருக்கும் நல்ல பழக்கம் ரஜினிக்கு உண்டு. தீவிரமான சமய ஈடுபாடு உண்டு என்ற செய்தியை ஊடகங்கள் ஒலிபரப்பி ரஜினியின் புனிதத்தன்மையை ஒளிவட்டம்போட்டுக்காட்டி ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் பிம்மபத்தை அந்தி வெயில்¢ல் விழும் நிழல் போல அமானுடம் செய்துவிடுகிறார்கள். ஆன்மீக அறிவு அவருக்கு அபாரமாக் இருப்பதாகத்தெரியவில்லை. அவர் மேடையில் பேசியதைக்கேட்கும்போது குட்டு வெளியாகிவிடுகிறது. பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி நடிக்கும் நடிகர் அல்லவா?

ரஜினி தமிழ் மக்களுக்கு என்னதான் செய்துவிட்டார் என்று தெரியவில்லை. சந்தனக்கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்துக்கொண்டு தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க நெருக்கடியைக்கொடுத்தார். நம்ம ரஜினி இன்று வரை வாயே திறக்கவில்லை. ராஜ்குமாரை வீரப்பன் கடத்திக்கொண்டுபோய் வைத்திருந்த போது தான் காட்டுக்குப்போய் ரஜ்குமாரை மீட்டு வருவேன் என்று வீரவசனத்தை உதிர்த்தார். என்ன தேச பக்தி! நல்ல காலம் அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை ரஜினிக்கு? மழைக்காலத்தில் வெள்ளமும் வெயில் காலத்தில் வரட்சியும் எதிர்நோக்கும் தமிழகம் எவ்வளவு காலத்துக்குத்தான் தண்ணீர் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கும் கர்நாடகத்திடம் , ரஜினி வாயைத்திறந்து கேட்டால் என்ன? தனக்குச் சோறுபோட்ட இடம் தமிழகம் என்று பேசினால் மட்டும் போதுமா? ஏன் கேட்கவில்லை? கர்நாடகத்தின் கொள்கையோடு ஒத்த சிந்தனையில்லாத ரஜினியின் படம் அங்கே ஓடாது என்பதற்காக. எல்லாம் பணம் பண்ணும் எண்ணம்தான்.

ஒருமுறை தண்ணீர் கேட்டுத் தமிழ் நாட்டு நடிகர் கூட்டம் நெய்வேலியில் போராட்டம் நடத்தியது. பாவம் தர்மசங்கடத்தோடு ரஜினியும் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம். அந்தக்கூட்டதில் கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் தரவேண்டும் என்று பேசிவிட்டு, மறு வாரமே கர்நாடகத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பல்டி அடித்தார் . நடிகர்கள் சிலர் கேட்டதற்கு ஏதோ சொல்லி சமாளித்தார். இங்கேயும் இரண்டு வேஷம்! ரஜினி எவ்வளவு பெரிய நடிகர் ? (இதற்கெல்லாம் டூப் போடாத நாயகன்).

ஆமாம்..... ரஜினி தமிழ்நாட்டு ரசிகர்கள் பையிலிருந்து களவாடும் பணம் பெருவாரியாக எங்கே முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா?. ரஜினியின் சிறுமைகள் பற்றி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராம்தாஸ் ஆனந்தவிகடனில் ரஜினியின் வண்ட வாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார். அவர் எழுதிய கட்டுரை தொடர்ந்து பல வாரங்கள் வந்தது. அந்தக்கட்டுரையில் ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதிக்கும் பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக போட்டு உடைத்திருந்தார்.ரஜினி வாயில் அப்போதெல்லாம் கொலுகட்டை வைத்திருந்தார் போலும். தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு எப்போது புத்தி வரப்போகிறது என்றுதான் தெரியவில்லை. ரஜினி நினைத்திருந்தால் எத்தனையோ ரசிகர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். அடுத்த ஆண்டும் கொண்டாடுங்கள் அறுபது அடிக்கு கட் அவுட் வையுங்கள், கேக் வெட்டுங்கள் அதனை வெட்கமில்லாமல் ஒலிபரப்புங்கள். அவருக்குச்சிலை எழுப்புங்கள் பின்னர் சிறு தெய்வமாக மாற்றி கொஞ்ச காலத்தில் சிவனுக்குப்பக்கத்தில் அமர்த்தி பெரிய தெய்வமாக்கிவிடுங்கள். யார் வேண்டாமென்று சொல்வார்.

என்னை எழதத் தூண்டிய இன்னொரு விஷயத்துக்கு வருவோம்.

கலைஞர் தொலைக் காட்சியில் சினிமா இசை சார்ந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒலி பரப்பினார்கள். பாடகர்கள், இசைக்கலைஞர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்ற இசை சார்ந்த கலைஞர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய விருது வழங்கும் நிகழ்வு அது.

அதில் ஒரு அங்கமாகப் பாடலாசியருக்கான விருது. பரிசைத்தட்டிச்சென்றவர் அடுக்குத்தமிழில் நெற்றிமுடியைச் சிலுப்பிச் சிலுப்பி 2 கிலோமீட்டர் நீள நீளமான வசனத்தைப்பேசி நடித்த டி. ராஜேந்திரனின் லிட்டர் சுப்பர் ஸ்டார் சிம்பு. ஆம் சாத் சாத் அவரேதான் தூய தித்திக்கும் தமிழில் பாடலெழுதிப் பரிசத்தட்டிச்சென்றவர். சங்கால இலக்கியமெல்லாம் புறந்தள்ளும் தஙக்காலத்தமிழ்ப்பாட்டு அது. அதனையும் தேர்ந்த்தெடுத்த நடுவர்களைப்பற்றி எப்படிப் பிரஸ்தாபிக்க?என்ன பாடல்னு கேக்கறீங்க.

Where is the party

எங்கம்மா வீட்ல party

அப்படித்தான் போகும் அந்த சாங்கு (song). தமிழுக்கு சங்கு ஊத வந்த சாங்கு.

ஆங்கில மோகம் எந்த அளவுக்கு நீண்டுவிட்டது பார்த்தீர்களா? எங்கேயாவது கோயிலில் போய் முட்டிக்கொள்ளலாம்னா, எங்க ஊர்ல உள்ள கோயில ஒன்னு ஒன்னா இடிச்சுப்புடுரானுங்க. முட்டிக்கிறதுக்குன்னே ஒரு கோயில கட்டணும் போல இருக்கு.

விருது கொடுக்க ஒரு தமிழ் பாடல் கிடைக்கவில்லையா?

சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் ஒரு லட்ச ரூபாய் தருகிறது தமிழக அரசு.

தமிழில் பேசினால் தங்கக்காசு தருகிறது மக்கள் தொலைகாட்சி.

இதெல்லாம் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்கர்களுக்குத் தரவில்லை தமிழ் நாட்டில் தமிழருகுத்தான் தருகிறது.

தன் பேரன் sun tv நடத்துகிறாரே அவருக்கு எவ்வளவு பணம் தந்து தமிழுக்குப் பெயரை மாற்றப்போகிறார் கலைஞர்?

தமிழில் பாட வட நாட்டுப்பாடகர்களையும், தமிழில் நடிக்க வட நாட்டு நடிகைகளையும், கொண்டு வந்தவர்கள் தமிழ் படத்துக்குப்பாட்டெழுத ஆங்கிலக்கவிஞர்களைக் கொண்டு வந்து விடுவார்கள் வெகு சீக்கிரத்திலேயே!Ko.punniavan@gmail.com

Sunday, December 20, 2009

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லை

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லைகடந்த 18.12.09 ல் அரக்கப்பரக்க ஆரம்பித்ததுதான் சுங்கைப்பட்டாணியில் spm தமிழ் மொழி, தமிழ் இலக்கியப்பாடம் சார்ந்த கவன ஈர்ப்புக்கூட்ட்டம். இரண்டே நாட்கள் அவகாசத்தில் எப்படி மக்களைத்திரட்டுவது என்ற மலைப்பே என்னை இயங்க வைத்தது. 2010 ல் நடப்புக்கு வரப்போகும் புதிய 10 பாட அமலாக்கத்துக்கு முன் விரைந்து செயல்படவேண்டிய கட்டாயம். நடப்புக்கு வந்துவிட்டால் மாற்றுவதற்கு மேலும் சிரமத்தை எதிர் நோக்கவேண்டி இருக்கும்.

நமக்கு இருக்கவே இருக்கிறது நூதன தொடர்புத் தொழில் நுட்பம். குறுந்தகவல், தகவல் தெரிவிக்க பத்திரிகை வழி சுற்றறிக்கையைத்திணித்து அனுப்புவது, விரைவாகப் பதாகைகளைத்தயார் செய்து சுங்கைப்பட்டாணியின் நாலு திசைகளிலும் ஒட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க என அனைத்து வகையான பணியிலும் ஈடுபட்டேன். யாரையும் துணைக்கு அழைக்கலாம் என்றால் என்னைப்போல பணி ஓய்வு பெற்றிருந்தால் பரவாயில்லை. எல்லாருமே வேலை செய்பவர்கள். அதிலும் மொழி மீது பற்று இருத்தல் அவசியம். சும்மா இழுத்துக்கொண்டுபோனால் நிழல்போலத்தான் கூடவே இருப்பார்கள். நம்முடன் இருக்கும் தருணங்களில் அவரை அழைத்துவராமல் இருந்திருக்கலாமே என எண்ணத்தோன்றும். நம்மால் பிறருக்கு ஏன் அனாவசிய சிரமம் ஏற்படவேண்டும்? யாரையும் துணைக்கு அழைக்க கால அவகாசமும் போதாது. அரசு அறிவிப்பினை எதிர்த்து மொழிக்காகப் போராட கொஞ்சம் துணிச்சல் வேண்டும். அரசின் கொள்கைக்கு எதிர்மறையாகச் செயல்படும் பலர் ஐ.எஸ்.ஏ என்று சொல்லக்கூடிய உள்நாட்டுப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து, கேள்வி முறையின்றி இரண்டு ஆண்டுகள் கமுந்திங்கில் (ஒரு ஊர்) அடைத்துவைத்து விடுவார்கள். நான் ஒரு சிறு துரும்புதான் என் குரலுக்கு ஆயிரமாயிரம் மக்கள் வந்துவிடப்போவதில்லை. மக்கள் கொந்தளித்து நாட்டுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பப்போவதுமில்லை. என்னை யாரென்றே காவல் இலாகா அறியாது. எனவே நான் அஞ்சவேண்டிய அவசியமில்லை.( மொழிக்காகக் கவிதை ஒன்றை எழுதி ஏற்கனவே பதவி இறக்கம் செய்யப்பட்டேன்.) இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டதால் என்னை பதவி ஏற்றமும் செய்ய முடியாது இறக்கமும் செய்ய முடியாது. எனவே ஒற்றை ஆளாய் களத்தில் இறங்கினேன்.

கூட்டத்துக்கு ஆள் சேர்க்க என்னால் ஆன எல்லா வேலைகளும் செய்து கொண்டிருந்தேன். பத்திரிகை வழி செய்தி போடச்சொல்வோமே என் மின்னஞ்சல் வழி இரண்டு நாளிதழுக்கு செய்தி அனுப்பி தொடர்ந்து மூன்று முறை தொலைபேசியிலும் தொடர்புகொண்டு செய்தியைப்போடச்சொல்லி கேட்டுக்கொண்டேன். கோயில் மாடு ஆமாம் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினார்கள். பத்திரிகைகளுக்கு நிறைய சிறுகதை களையும் கவிதைகளையும் 30 ஆண்டுகளாக இலவசகாகவே கொடுத்து வந்திருக்கிறேன். மலேசியத்தமிழ் பத்திரிகைகள் எழுத்துக்கூலி என்றால் என்ன என்று கேட்பவர்கள். பிறகு பத்திரிகை முதலாளிகள் மெர்சிடிஸ் பாவிப்பது எப்படி? மாளிகையில் வசிப்பது எப்படி? பாவமில்லையா அவர்கள்? இவர்கள்தான் உண்மையான தமிழ்மொழி விற்பன்னர்கள். ( இலக்கிய அக்கறையுடன் நடத்தும் சில இதழ்களைத்தவிர்த்து)18.12.09 இரு பத்திரிகைகளயும் ஆவலோடு திருப்பிப்பார்க்கிறேன் (நம்புங்கள் - நாளிதழ்கள் திருப்பிப்பார்க்கும் நிலையில்தான் இருக்கும்) செய்தி வரவில்லை. எனக்கு அப்போதே மன அழுத்தம் கூட ஆரம்பித்துவிட்டது. நாளிதழில் செய்தி வரும் என்று நம்பியது எனது எவ்வளவு நன்றிகெட்டத்தனம்? நிகழ்ச்சிக்கு 50 பேரைக்கூட எதிர்ப்பார்ப்பது அறிவீனம் எனத்தோன்றியது. நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பலர் நாளிதழில் செய்தி பார்த்துவிட்டுத்தான் வருவதாக சொன்னது நினைவிலிருக்கும்போது செய்தி வரவில்லையென்றால் என்னாவது?

( தொடர்புத்தொழில் நுட்ப முன்னேற்றமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... ஆனால் அதற்கு ஈடான வேகத்துக்கு மனிதர்களையும் மாற்றும் அறிவியல் உபாயம் இருந்தால் தேவலாம்)

எனக்குள் இருந்த ஆர்வம் கைப்பணம்போல மெல்ல கறைய ஆரம்பித்தது. என் பின்னடைவின் முதல் கட்டமாக 50 பேருக்குமேல் தேனீர் தயார் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிறகு வேண்டா வெறுப்போடு ஒலி பெருக்கிச்சாதனத்தைப் பொருத்த ஆரம்பித்தேன். இரண்டு ஸ்பீக்கரையும் காரிலிருந்து மேடைக்குத் தூக்கிக்கொண்டு போவது என் வயதை மீறிய செயல்.

வீட்டுக்குத்திரும்பி குளித்துவிட்டு மண்டபத்துக்கு நுழையும்போது மணி 7.25. 7.30க்கு நிகழ்ச்சி துவக்கம். நான்தான் முதல் ஆளாக இருந்தேன். ஒரு கால் மணிநேரம் வரை வேறு யாரையும் காணவில்லை. இன்றைக்கு நிகழ்ச்சி நடந்தபடிதான் என்று ஆதங்கம் மேலோங்கத் துவங்கியது.

300க்கு மேற்பட்ட காலி நாற்காலிகளும் முனகிக்கொண்டிருந்தன. மண்டபம் நிர்வாணமாகிக் கொண்டிருப்பதுபோன்று இருந்தது. 7.45 வாக்கில் இரண்டொருவர் நுழைய கொஞ்சம் மூச்சு விட்டேன். பிறகு மெல்ல ஐம்பதுக்குமேல் வர ஆரம்பித்தனர். 8.00 மணிக்குள் மக்கள் கூட்டம் 100ஐத்தாண்ட ஆரம்பித்தது. 8.10க்குள் 200 எட்டியது. காலியாகக்கிடந்த நாற்காலிகள் உயிர் பெற்றுவிட்டன போன்ற ஜீவத்துடிப்பு கேட்டது. நிர்வாணமாக்க்கிடந்த மண்டபம் ஆடை உடுத்திக்கொண்ட கம்பீரத்தோடு மிதந்தது.

நிகழ்ச்சி சுங்கைப்படாணி சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் நடைபெற அதன் மண்டபத்தை இலவசமாக தந்தனர். கோயில் தலவர் திரு.துரைசிங்கம் மொழி சார்ந்த நம் சிந்தனை தூர்ந்துபோய்விடக்கூடாது எனப்பேசினார்.மணி ஆட்டவும் சாமி கூட்டமாகக்கூடி கொண்டாட்டம் போட மட்டும் கோயில் இருக்கக்கூடாது என்று அவ்ர் பேசியது எல்லாத்தலைவர்களுக்கும் சொன்னதுபோல இருந்தது. தமிழ்ச்சமூகம் சார்ந்த எந்த நிகழ்வுக்கும் கோயில் மணடபத்தை இலவசமாகவே கொடுக்கும் என்றார். தமிழ்மொழிக்கு கோயில் செய்யும் மிகப்பெரிய செயல் அது.

பிறகு எழுத்தாளர் நான் பேசினேன். தமிழ்ப்பள்ளிகள் விடுதலைக்கு முன்னும் பின்னும் எத்தனை காணாமற்போய்விட்டன என்ற வரலாற்றைக்கூறினேன். எண்ணிக்கையில் 1500க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன. விடுதலைக்குப்பின்னர் அதன் எண்ணிக்கை தோட்டத்துண்டாடல் காரணமாகவும், மேம்பாட்டுத்திட்டங்கள் காரணமாகவும், பாட மாற்றத்தாலும் (கணிதமும், அறிவியலும் இனபேதமில்லாமல் எல்லா மாணவர்களூம் ஆங்கிலத்தில் கற்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவாலும்) தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் குறைந்து விட்டதைக்கூறினேன். இன்றைக்கு நாட்டில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 40 விகிதம்தான் எனவும், தமிழ் தமிழ் இலக்கியம் மதிப்பெண்கள் பட்டியலில்(சான்றிதழில்) சிறந்த 10 பாடத்துக்குள் சேராது என்ற காரணத்தால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்து நாளடைவில் அறவே இல்லாமலும் போய்விடும் ஆபத்தும் உண்டு என மேலும் கூறினேன் . இன்றைக்கு இருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் சுமார் 20000 பேர் என்று வைத்துகொண்டால்.. தமிழ்ப்பள்ளி இல்லாமல் போனால் இந்த 20000 அரசு வேலை இல்லாமல் போய்விடும். அது மட்டுமா தமிழ் சார்ந்த பிற துறைகளிலும் ஆசிரியர் பயிற்சிகல்லூரி, பல்கலைக்கழகம், தமிழ் வானொலி, பல்கலைகழகத் தமிழ்ப்பிரிவு, மொழிபெயர்ப்புப்பிரிவு என் எல்லாத்துறையும் தமிழ் இல்லாமல் வரண்டு விடும். எனவே அரசு எஸ்.பி.எம் சோதனையில் 12 பாடங்களில் சிறந்த 10 பாடத்தின் மதிப்பெண்களாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தினேன். அவை உபகாரச்சம்பளம் பெறும் பாடங்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக்கூறினேன்.

பின்னர் வடமலேசிய தமிழ்மொழி மீட்புக்குழுவைச்சேர்ந்த ASP முத்துசாமி SPM பாடப்பிரச்சினையை முன்னிட்டு பினாங்கு தண்டாயுதபாணி ஆலயத்தில் சிறப்புப்பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 20000 பேர் கூடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.( அவர் ஒரு போலிஸ் அதிகாரி தோரணையில் பேசுவதைக் நிறுத்திக்கொள்ளவேண்டும்) இது சாதாரணப் பிரச்சினைதான். இதற்குத்தீர்வு காண கடவுளின் சன்னிதானத்துக்குப் போக வேண்டியிருப்பதுதான் மிகப்பெரிய கொடுமை. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும். எல்லா முயற்சியும் எடுத்தாயிற்று பிரதமரைச் சந்திப்பது தவிர. பிரதமரிடம் சென்று முறையிட்டால் தமிழர் எண்ணம் உறுதியாய் நிறைவேறும். அவர் மட்டுமே 1 மலேசியக்கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் மும்முரமாக இருப்பதுபோலத் தெரிகிறது. மற்ற அமைச்சர்கள் இனவாத அரசியலிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை எனத்தோன்றுகிறது. எனவே பிரதமரைச் சந்திப்பது நடக்கவேண்டும். காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.......

Friday, December 18, 2009

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்நேற்றைய தொடர்ச்சி........மனிதர்கள் அணிந்து திரியும் எண்ணற்ற முகமூடிகளும்இந்த உலகம் ஒரு நாடகமேடை,நாமெல்லாம் அதன் நடிகர்கள் என்கிறார் அறிஞர் ஷேக்ஸ்பியர்.என்ன தீர்க்க தரிசன நடப்பியல் உண்மை.நம்முடைய குணத்தை, உற்று கவனித்தால் நாம் எத்தனை பெரிய நடிகர்கள் என்று புரியும்.நாம் எப்போது அசலான நாமாகிறோம், என்று மனசாட்சியை கேட்டுப்பார்த்தால் அநேகமாக பதில் கிடைக்காது.மனசாட்சியும் குழம்பிய நிலைக்கு உள்ளாகும்.எல்லாரும் கண்ணுக்குப்புலப்படாத ஆயிரக்கணக்கான முகமூடிகளை வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாற்றி மாற்றி அணிந்துகொண்டு திரிகிறோம். சுயநலமிகளின் உலகமல்லவா இது! வேறெப்படி இருக்கும்?வேலைக்குச்செல்லும்போது

நண்பர்களைச்சந்திக்கும்போதும்

உறவினர்களைத்

திடீரெனச்சந்திக்க நேர்ந்தால்

வடிவமைத்துக்கொள்கிறோம்

பல முகமூடிகளை (பா.அ.சிவம் - மௌனம்)வழிப்போக்கனின் முகத்தைப்

பொருத்திக்கொண்டு

வீதி வழி போகையில்

வியர்த்தலுக்குப்பின்

அதுவும் அலம்பப்படும்

என்பதை முன்பே தீர்மானித்திருந்தேன் (ஏ. தேவராஜன் - மௌனம்)ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதும் என்ன முகமூடி அணிந்துகொள்வது என்று திட்டமிட்டு செயல்படுகிறோம் என்கிறார் கவிஞர்.ஒருவரைச்சந்தித்த பின், பிறிதொருவரைச் சந்திக்கும் இடைவெளியில் முன்னவரைச் சந்திக்கப்பயன் படுத்திய முகத்தை அலம்பிக்கொள்வாராம்.என்ன கற்பனை பாருங்கள்.ஆழ் மனத்தில் உலவும் நுண் உணர்வின் பிரதி பிம்பமாக தன்னை எழுதிக்கொள்கிறது கவிதை.கைக்குலுக்கி விடைபெற்று நடந்து

மீண்டும் முகம் திருப்புகிறோம்

முகத்திலிருந்து கழற்றப்பட்ட ஏதும்

தென்படுகிறதாவென

மற்றவர் கைகளில் தேடுகிறோம் (ந.பச்சைபாலன் - மௌனம்)ஒருவரோடு பேசிவிட்டுத்திரும்பும் தருணத்தில் கைகளில் ஏதும் முகமூடி வைத்திருக்கிறானா என்று தேடுவதாக அமைந்த கற்பனை அபாரம்.எனக்கென்று புறப்பெயர்

மட்டுமே உள்ளது

இதயத்துக்குள் இருக்கும்

முகங்களுக்கு

எது புனைப்பெயர் ? (சை.பீர் முகம்மது- மௌனம்)நம் கண்ணுக்குப்புலப்படாத அரிதாரத்தைப் பூசிக்கொண்டுதான் பிறரோடு பழகுகிறோம்.நாம் சந்தித்துப்பேசப்போகும் மனிதரின் எதிர்பார்ப்பையும்,நம்முடைய எதிபார்ப்பையும் நிவர்த்தி செய்யக்கூடிய அரிதார முகம் ஒன்று நமக்கு எப்போதுமே தேவைப்படுகிறது.இந்த ஒப்பனை முகங்கொண்டும் ஒப்பனை அகங்கொண்டும், அவரிடமிருந்து நமக்குக்கிடைக்கூடிய பயனின் குறிப்பறிந்து பாவனை செய்வதில், ஒத்திகையில்லாமலேயே பல சமயங்களில் நம்முடைய நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிவிடுகிறோம்.அதன் பயனையும் அடைந்து விடுகிறோம்.நம் புறத்தோற்றத்துக்கு ஒரு பெயரைச்சூட்டிக்கொண்டதுபோல அந்த முகங்களுக்கெல்லாம் என்ன பெயர் வைப்பது? அப்படி வைத்தால் எத்தனை பெயர் வைப்பது? சிக்கலான மனிதர்கள்தாம் நாம்!நகர வாழ்வு - வணிகம் வளர்த்த வன்முறைஅவன் சுமந்திருந்த புனிதம்

சுருள் சுருளாக மிதந்து

நகரத்தின் பெரு துவாரத்தை

உற்பத்தி செய்து கொண்டது..

துவாரத்திலிலிருந்து

கடவுள்கள் வெளிப்பட்டார்கள்

நகரம் மனித ஒழுக்கக்கேடுகளை

விழுங்கிக்கொண்டு

கடவுள்களின்

புனித சேட்டைகளால்

நிரம்பிக்கொண்டிருந்தது (கே.பாலமுருகன் - மௌனம்)இருண்மை வடிவத்திலான கவிதை இது.கவிதையை மறு வாசிப்புகளுக்கு எடுத்துக்கொண்டபோது பிரமிப்பான கருத்தாக்கங்களை முன் வைக்கிறது.மனிதர்கள் சீரழிந்து போவதற்கு நகரத்தின் பங்களிப்பு அதீதம்.எது வேண்டும் கேள் மனமே என்ற கிளர்ச்சியை உண்டுபன்ணும் வினாவோடு பயணியை எதிர் கொள்கிறது நகரம்.. கேட்டதெல்லாம் கொடுக்கும் அலாவுதின் விளக்குப் பூதமாக, அட்சய பாத்திரமாக திகழ்கிறது நகரம். இதனால் நகரத்துக்குள் நுழையும் ஒரு மனிதன் தன் சுயத்தை இழக்கும் நிலைக்குத்தள்ளப்படுகிறான்.கடவுள்கள் என்ற மனிதரைக் குறிக்கும் அவரின் குறியீடு மிகப்பொருத்தமாய் அமைகிறது.மனிதன் பிறப்பால் கடவுள் போல புனிதமானவன் தான்.குழந்தையும் கடவுளும் குணத்தால் ஒன்றுதானே! அவன் வளர வளர தீயவற்றுக்கு ஆட்படுகிறான். அதிலும் நகரம் விரித்து வைத்திருக்கும் வலைக்குள் அவன் சிக்கிச்சீரழிவதை வன்மையோடு சொல்கிறது கவிதை.நகர வாழ்வில்

மூழ்கித்தொலைத்த

இயல்புகளைத்தேடப்போகிறேன்

என் தாய் மடியில்

...............

..................

என் சூன்யத்தை

நிரப்பிக்கொள்ள (தினேஸ்வரி -மௌனம்)பரபரப்பான நகர வாழ்வு எப்போதுமே தனிமாயாளனை உள்வாங்கிகொள்வதில்லை.அது அவனை அவன் சொந்த இடத்துக்கே விரட்டியவண்ணம் இருக்கும்.சொந்த இடத்தின் காற்று,மண் வாசம், தாய் மடியின் சுகானுபவம், இவற்றின் ஸ்பரிசத்திற்காக ஏங்குகிறது. அது கிடைக்கும்பட்சத்தில் அதனை ஏந்திக்கொண்டு அதன் நினைவலைகளில் இன்புற ஆசைகொள்கிறது. தாய்க்கும் மகளுக்குமான பிணைப்பையும், நகரம் அவர்களைப்பிரித்துப்பார்க்கும் அழகியலையும் படிம நேர்த்தியோடு வெளிப்படுத்துகிறது கவிதை.இன்றைக்கான நவீன கட்டமைப்பு கொண்ட கவிதை அகவய வெளிப்பாடாகவே தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது. அதன் உட்சரடு பின்னிப்பிரித்தெடுக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது.கவிஞனின் உள்மனப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகவே கவிதைகள் உருப்பெறுகின்றன. முழுக்க முழுக்க உணர்வுத்தளத்தில் இயங்கி தன்னை வாசகனோடு சமரசம் செய்துகொள்ளகூடாத சர்வாதிகாரத்தன்மையோடு இயங்குகிறது.அதனால் கவிதையின் உள்ளுறையும் பொருளை முதல் வாசிப்பில் புரிந்துகொள்ளமுடியவில்லை.அவன் குறியீடுகளுக்கு உருவம் கொடுக்க முடியவில்லை. அவன் கையாளும் சொற்களின் உட்பொருளை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.இறுக்கமான மொழியில், மிகுந்த இருண்மை வடிவங்கொண்டு பயமுறுத்துகிறது.அதனைப்புரிந்துகொள்ள அக்கவிஞனின் ஒத்த வாழ்வனுபவத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்.இது அசாத்தியமானது.அவன் சேமித்து வைத்துள்ள நுண் உணர்வுக்கும்,அறிவுக்கும் ஈடான அறிவை நாம் அடைந்திருக்க வேண்டும்.அப்படி இல்லையெனில் கவிதை கவிதையாகவே ஸ்தம்பித்துவிடுகிறது. சாதாரண வாசக மனத்துக்குள் மேற்கொண்டு பயணிப்பதில்லை.

கவிஞன் என்ன பாடுபொருளை உள்ளீடாக வைத்துப்பின்னினானோ அதனை அப்படியே புரிந்துகொள்ளவேண்டும் என்கின்ற அவசியமில்லை.வாசகன் அதனை படைப்பாளனின் பிரதியாகப் புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினால், அவன் அறிவுநிலைக்கேற்ப எப்படி உள்வாங்கிக்கொள்கிறானோ அப்படியே புரிந்துகொள்ளட்டும் .வாசகனின் வாழ்வனுபவத்தையும்,அறிவையும் பொருத்ததாகவே இருக்கட்டும் கவிதையைப்பற்றிய அவனின் புரிதல், என்பதான வசதியைக்கொடுக்கிறது, இன்றைய விமர்சகர்கள் கூற்று.கவிதைசொல்லி தரமுனையும் ஒற்றைப்பொருளையும் விஞ்சும் வகையில், வாசகனின் புரிதலில் பல்வேறு பரிமாணங்களை உண்டாக்குவதும், புதிய திறப்புகளை உருவாக்குவதும், ஒரு வகையில் அவன் லாபக்கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்தானே !

( முற்றும் )

Wednesday, December 16, 2009

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்நேற்றைய தொடர்ச்சி........தாய்மொழி- காலனித்துவம் சிந்திவிட்டுப்போன கசடுகள்தாய் மொழி சார்ந்த உணர்வும் கவிதையின் பாடு பொருளாகப்பரிணமித்தது.மொழிக்கு ஊறு நிகழும்போது யார்தான் தட்டிக்கேட்பது? பின்னர் எதற்கு படைப்பாளன்?உங்கள் சாய்ஸ்

சண்டே சமையல்

சன் டிவி

டாப் டென்

தமிழை இங்கே பிறர் கொல்கிறார்கள்

தமிழ் நாட்டில்

தமிழனே கொல்கிறான்பிலீஸ் பிரதர்

லவ் டமில் (ஓவியன் - தலைநகர்)தமிழ் நாட்டில் ஆங்கிலக் கலப்பு, ‘செம்புலப்பெயல் நீர் போல ஆங்கில மொழியும்தான் அழுத்தமாகக் கலந்ததுவே’ என்றாகிவிட்டது விட்டது.அதனைப்பிரித்து எடுத்து, ‘இந்தா - டெட்டோல் போட்டு கழுவிய தமிழ்,’ என்று கொடுப்பதென்பது கொக்குக்குக் கொம்பு முளைத்தால்தான் ஆயிற்று.கவிதையில் என்ன அங்கதம் பாருங்கள். ‘பிலீஸ் பிர்தர் லவ் டமில்’ என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் அவர்களுக்குப்புரியும் என்ற நிலை அங்கே! இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்?மலாய் ஆங்கிலம் தமிங்கலம் எல்லாம் கேட்கும் எங்கள் தனியார் டமில் வானொலியில். தமிழில் இருக்கிற கலப்பு போதாதென்று ‘புதிது புதிதான கலைச்சொற்களை’ சேர்ப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள் நம் ‘திமிங்கல’ தனியார் அறிவிப்பாளர்கள்.பேரினவாதம் - ரத்தத்தோடு கசிந்து வரும் கவிதைகள்கடலும் எல்லைக்கோடுகளும் ஒரு நாட்டின் இறையான்மையும் வரம்பை விதித்திருக்கவில்லையென்றால்,தூரதேசத்தில் நிகழ்த்தப்படும் அப்பாவித்தமிழனைக் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டியிருப்பான் கவிஞன்.இப்போதைக்குத் தன் கோபத்தைக்கட்டுப்படுத்த கவிதை கூடியபட்ச வடிகாலாக விடுகிறது.எழுதமுடிந்தவனுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.மனதில் துடித்துக்கொண்டிருக்கும் பீதி,குற்றவுணர்வு,அருவருப்பு, கழிவிரக்கம், கோபம், கசப்பு, போன்றவற்றை கவிதை வழியாக வெளியே அவனிடமிருந்து விடுபட்டு வெளியே வருகிறது. கஞனின் உக்கிரம் கவிதையில் குதிக்கிறது இப்படி,இன்றில்லாவிட்டால்

ஒருநாள் பயப்படப்போகிறாய்

என்னைக்கண்டு

எழுதுகோலுக்குப்பதில்

கோடரியை ஏந்தும்போது

அலரி அலரி

துடிக்கப்போகிறாய்

உன் சதைகளைப்பிடுங்கும்

என் நகங்களைக்கண்டு

உன் குருதியை

கொட்டச்செய்து

படையலாக்கப்போகிறேன் (ப.ராமு- நயனம்)பிஞ்சுகளை நச்சுக்குண்டு வீசிக்கொள்வதா

கடவுள் கண்ணை மூடிவிட்டாரென

நெற்றிக்கண்களைத்

திறந்துவிட்டார்கள்

அரசாளும் எமகாதகர்கள் (ஏ.எஸ்.பிரான்சிஸ்-நயனம்)

பேரினவாதம் செய்யுக் கொடுமை இளைப்பாறலுக்கு இடம் தராத பாலையாக நாடு மாறிவிடுவது மிகப்பெரிய கொடுமை.

இன்று காயங்கள் காயங்களாகக்

குருதியை மட்டும்

சுமந்தபடி......

எதையும் விட்டுச்செல்ல முடியாமல்

கொஞ்ச உயிர்கள்

இன்னும் எஞ்சி இருக்கின்றன

அந்த நாட்டில்

தன் உயிரை விதைத்தபடி.. (பூங்குழலி வீரன்- மௌனம்)போர்க்காலத்தில் எதை விட்டுச்செல்வது?இனி இருக்கமுடியாது என்றானவுடன், பல காலம் குடியிருந்த வீட்டை விட்டுச்செல்லலாம், பழகிய நண்பர்களை விட்டுச்செல்லலாம்,சேமித்த பொருளை விட்டுச்செல்லலாம் மனச்சுமையோடு, எங்காவது பிழைப்பு நடத்தி இதையெல்லாம் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்தான், ஆனால் அதற்கு நாடு வேண்டுமே.சொந்த நாட்டைவிட்டு எங்கே செல்வது?

வேறு வழியில்லை எல்லாவற்றையும் பறிகொடுத்ததுபோல உயிரையும் பணையம் வைத்துவிடத்தான் வேண்டும் என்ற கையறு நிலையில்,பல முறை இறந்து இறந்து, உயிரோடு போராடும் அவலத்தை எழுதிச்செல்கிறது கவிதை.

தமிழன் பொம்மைகள்

எவன் கையிலும் ஆடும்

தன் முன் அழியும்

தனது இனம் கண்டு

பொம்மைகளால்

எதுவும் செய்துவிடமுடியாது

ஆட்டுங்கடா ஆட்டுங்கடா

இந்தத்தமிழ் பொம்மைகளை

எப்படி வேண்டுமானாலும்! (சை.பீர் முகம்மது- மௌனம்)

ஒரு பக்கம் தன் தாய்நாட்டைப்பாதுகாக்கப் போராளியாக மாறி உதிரம் சிந்தும் தமிழர்கள்.இன்னொரு பக்கம் தன்னைச்சுற்றி எதுவுமே நடவாததுபோலவும் எல்லாமே இயல்பாய்த்தான் நடப்பதாக பாசாங்கு செய்யும் மனிதன். இப்படி அக்கறையற்ற தமிழனை நக்கல் செய்கிறது கவிதை.படிம உத்தியில் மரணம்நாதன் கடைவாசலில் டீ குடிக்க

காத்திருக்கும் மூளை பிசகிய

இவனது பால்ய கால சிநேகிதன்

எல்லாமும் நேற்று

வாகனப்பாதங்களில் துவம்சமாகி

இரத்த பிண்டமாய்

இவனை அள்ளிப்போனதை..

காத்திருக்கும் காற்றுக்கும்

பறவைக்கும்

நாய்க்குட்டிக்கும்

ரோஜாவுக்கும்

பால்ய சிநேகிதனுக்கும்

இன்று யார் சொல்வது? (சீ.முத்துசாமி - மௌனம்)திடீரென ஒருநாள் விபத்தில் இறந்துபோன ஒருவனை பெற்றோர்கள்,உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் சிந்தி மறந்து விடலாம். அவன் இல்லையென்ற நிதர்சனத்தை உணர்ந்து அவனின் மரணத்தை கவலையோடு உள்வாங்கிக்கொள்ளலாம்.மகிழ்ச்சி கொள்வதும் கவலையடைவதும் மனிதமனத்தின் இயல்பான குணம். ஆனால், அவனுக்காகக் காத்திருக்கும் நாய்க்கும், பறவைக்கும்,காற்றுக்கும், ரோஜாவுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக,அவன் வாங்கித்தரும் டீயைக் குடிக்கக் காத்திருக்கும் மூளைபிசகிய இறந்தவனின் பால்யகால சிநேகிதனிடமும் எப்படிச்சொல்லி விளக்குவது இவன் மரணமுற்றதை?

கவிதையில் காட்சி அடுக்குகள் வண்ணத்துப்புச்சியின் சிறகென கண்முன் விரிகிறது. அந்தக்காட்சிகள் படிம நேர்த்திகொண்டு இயங்கி நமுக்குள் சோகத்தைக்கசியச்செய்து விடுகிறது. கடைசி வரியிலிருந்து இக்கவிதை மீண்டும் வாசகனுக்குள் பயணிக்கிறது சோக கீதத்தைப்பாடியவாறு.கருமை- வெண்மையின் விதியை எழுதிவிடுமோ?அடிமைச்சங்கிலியோடு ஆப்பிரிக்கக்காடுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட கருப்பர்களின் குரல் அமெரிக்காவில் உரக்க ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை மட்டுமல்ல எட்டாத அதிசயமாய்,எட்டாவது அதிசயமாய் வியக்கவைத்தது ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாய் ஆனது.

புறக்கணிக்கப்பட்ட கருப்பும்

புறட்டிப்போட்டிருக்கிறது ஆட்சியை

கடல் கடந்து வந்தாலும்

எங்கள் கண்களை

உனக்கு வானமாக்குகிறோம்

எப்போதும்

நீ நிலவாய் காய்வதற்கு (கா.இலட்சுமணன் - தென்றல்)

ஒபாமா கருப்புத்தோளில் இருக்கும் வெள்ளைகாரன் என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்ப்வையாளர்கள்.ஆமாம் அவர் உலக்கசட்டாம்பிள்ளை அமெரிக்காவின் அதிபர் என்பதை எப்படி மறுதலிப்பது? இருப்பினும், ஒபாமா நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிர்ந்திருப்பது கருப்பு இனத்திற்கு ஆறுதலான விஷயம்தானே!பெண்ணியம்- போராட்டத்தை நசுக்கும் வர்க்கம்கோட்பாடு சார்ந்த இலக்கியம் இங்கே படைக்கப்படுவதில்லை என்ற குறைபாடு இருந்துவருகிறது.சாதிப்பிரிவினையோ, நிறப்பிரிகையோ, சாதி,சமூகச்சண்டையோ, பெண்ணடிமையோ,சுரண்டலோ, தனித்தனியே பாடுபொருளாக அடையாளம் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் கவிதைகளில் கோட்பாட்டுக்குரல் ஒரு ஓரமாய் இருந்து ஒலிப்பதுண்டு. அதிலும் பெண்ணியம் சார்ந்த கவிதைகள் இப்போது தன்னை தனியாகக்காட்டிக்கொள்ள விழைகிறது.இன்று முளைத்திருக்கும் புதிய கவிஞர்கள் பெண்ணடிமைத்தனத்தைப் பாட வருகிறார்கள் என்பது ஆரோக்கியமான வளர்ச்சி.உன்னைத்தலையில் சூடினால்

பாவமென்கின்றனர்

ஆனால் உன்னைச்சூடாத

அந்தப்பெண் பாவமில்லையா? (கவிதா வீரபுத்திரன் காப்பார் - நயனம்)

பூவைப்பார்த்தா கேட்கிறார் கவிஞர்? பூவைச்சூட மறுக்கும் சமூகக்கோளாறுகளை நோக்கிய கரிசனக்குரல் இது.கவிதை 1மாங்கல்யம் நம் உறவின் சாசனம்!

சம்பிரதாயச் சங்கிலியால் அறுத்தெறிய முடியாமல்,

தினமும் எனக்குள் யுகவேதனை

சோகங்களில்

ஆழ்ந்து கிடக்கும் போதெல்லாம்,

உன் நெருப்பு வார்த்தைகளின்

சவுக்குச்சொடுக்கில்

பிடறி சிலிர்த்து

என் ரோஷக்குதிரை

விவாகரத்துப்பாதையில் ஓடினாலும்

மீண்டும் மீண்டும் பவித்திரமான்

உணர்வுடன்

ஒரு கூட்டுப்புழுவாய்

நம்பிக்கைக்குமிழுக்குள்

குறுகிவிடுகிறது.

உன்னைத்தொடர்வது

எனக்கு வலியாய் இருந்தாலும்

என் வழியாகிப்போனது!பெண்ணடிமையின் மிக வலிமையான அடிமைச்சின்னம் மாங்கல்யம்.மூன்று முடிச்சுப்போடப்பட்டதால் அவள் பலரின் அடிமைச்சாசனத்தில் கையொப்பமிடவேண்டியுள்ளது.கணவனுக்கு,மாமியாருக்கு, கணவரின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கு, அவள் மண வாழ்வுடன் கொஞ்சமும் சம்பந்தப்படாத இந்தச்சமூகத்துக்கு, அது விதித்துள்ள சம்பிரதாயங்களுக்கு, எனக்கணக்கில்லாமல் நீள்கிறது பட்டியல்.

இந்தப்பாழாய்ப்போன மாங்கல்யத்தால் என்னால் சுதந்திரமாகச் சுவாசிக்கமுடியவில்லை என் குமுறுகிறது ஒரு பெண் குரல்.விலங்கு கைகளிலும் கால்களிலும் மட்டுமே பூட்டப்படவேண்டுமா என்ன?அன்பில்,அழகில்

பணிவில் பொருள் ஈட்டுவதில்

பட்டை தீட்டப்பட்டதுபோல்

முன்னூற்று அறுபது

கோணத்திலும்

பிசிறியடிக்கையில்

‘வைரம்” எனப் போற்றப்படுவாள்.....

பின்னொரு நாளில்

இது வெறும் ஒளிமிகுந்த கரியென’த்

திருத்தவும் படலாம் (மீராவாணி - மௌனம்)கவிதையில் ஒலிக்கும் குரல் பெண் குரலாக ஒலிக்கிறது.இவள் உனக்குப்பொருத்தமானவள்.அழகு அன்பு குணம் எல்லாம் உண்டு.நல்ல வருமானம் பெறும் கல்வியும் உண்டு.குடும்மபத்தைக் கட்டிகாக்கவும் முடியும் என்று பாராட்டிய அதே வாய் பின்னொரு நாளில், ஏதோ ஒரு காரணத்தால் இவள் வேண்டாதவளாகி, ‘இவளை வைரமென்று நினைத்தேன்,ப்பூ வெறும் கரி என்று இப்போதுதான் தெரிகிறது,’ என்ற வார்த்தைகளால் அவளை ஊதி அணைத்துவிடவும் தயங்குவதில்லை.குளித்த பின்னர்

கல்யாண சேலையணிந்த பின்னர்

பெரிதாய் ஒரு பொட்டு

வளையலென அலங்காரம் கொஞ்சம்

செய்து கொண்ட பின்னர்

ஏனென்று தெரிந்துகொள்ள விரும்பா

சடங்குகளுக்குப்பின்னர்

இறுதியாய் ஒரு முறை

பார்த்துக்கொண்டபின்னர்

அம்மாவின் பெட்டி மூடப்பட்டது.

.....................

கணம் ஒவ்வொன்றையும்

பொருள் ஒவ்வொன்றையும்

செயல் ஒவ்வொன்றையும்

சார்ந்த ஒவ்வொன்றையும்

அம்மாவின் சாமியின்

பாவநிழல்கள்

சதா துரத்திக்கொண்டிருக்கிறது

சொல்லிமாயாதினி...... (பா.அ.சிவம் - அநங்கம்)அம்மாவைப்பற்றிய துர்கதை பால்ய வயது கொண்ட மகனைச் சதா துரத்திக்கொண்டே இருக்கிறது. அம்மா இறந்தபிறகு வீட்டில் அவன் காணும் ஒவ்வொன்றிலும் அவளின் இருப்பு பிம்பங்களாக காட்சி தருகிறது.அதுமட்டுமல்ல அம்மாவின் இறப்புக்குக்காரணியாக இருந்த அம்மாவின் சாமியின் (அப்பா)பாவ நிழல்களும் படிந்தவண்ணம் இருக்கிறது.

அம்மா இறந்து போன காட்சி, அம்மாவின் பெட்டி மூடப்பட்டது என்ற வரியில் மனதை கனக்கச்செய்கிறது.பிணத்தைக் குளிபாட்டியதிலிருந்து பெட்டியில் கிடத்தும் வரையிலான படிமம் மனதை என்னவோ செய்கிறது.அம்மாவைப்பற்றிய நினைவுகள்,அடுத்த கண்ணியில் உயிர் பெறும்போது அம்மாவின் சாமிமேல் நமக்கு கோபம் பீறிடுகிறது.ஒரு வாசகனின் அடி மனதில் பெரும் அசைவையும், பச்சாதாபத்தையும் கசியவைக்கும் இக்கவிதை காட்சிப்படுத்துதலில் மிகுந்த வெற்றிபெறுகிறது

தொடரும்...........

Tuesday, December 15, 2009

நேற்றைய தொடர்ச்சி, கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்

காதலைப்பற்றி இன்னொரு கவிஞனின் பதிவு இது.யதார்த்த நிழலில்

கடந்து செல்லும்

காற்றினுள்கூட

பயணிக்கும்

உன்னோடு பேசும்

என் வார்த்தைகள்

...........

என்னோடு

நீ நடந்த தெருக்களில்

நிறம் அறியா அறியாத

சுவடுகளாய்

பதிந்து கிடக்கிறது

உயிர்ச்சிதறல்உன்னில்

ஊடுறுத்துச்செல்லும்

நினைவுகளினூடே

உயிரும் வருகிறது

பத்திரப்படுத்த

வரவேண்டும் நீ (ப.ராமு- நயனம்)இந்தக் கவிதையின் வழியாக கசியும் பொருளைப்பாருங்கள்.சொல்ல வந்தது அப்படியே சொல்லிலும் விழுந்திருக்கிறது. உயிரின் நிறம் என்ன? அறிய முடியாத நிறம்.அந்த நிறம் அவளோடு நடந்த தெருக்களில் இன்னும் சிதறியே கிடக்கிறதாம். தன் நினைவாலேயே உயிரும் உடன் வருகிறது.அது காணாமற்போகாமல் இருக்க, நீதான் பக்கதுணையாய் வரவேண்டும் என்கிறான் கவிஞன்.

இந்தக்கவிதை முழுக்க முழுக்க உணர்வுத்தளத்தில் இயங்குகிறது.இது உயிர்ப்புடன் இயங்குவதற்கு அவர் கையாண்ட அற்புதமான படிமம் ஒரு காரணம் .கவிதையில் காணும் சொற்கள் முழுக்க முழுக்க படிமத்திலேயே ஜீவிக்கிறது.

பல சமயங்களில் காதல் தோல்விகள் நல்ல கவிதைகளைப் பிரசவித்து விடுகின்றன. மாறாக வெற்றி பெற்ற காதல் கவிதைகளைத் தருவதில்லை.இது நடைமுறை நிதர்சனம்.எனவே காதல் தோல்விகளையே நான் ஆதரிக்கிறேன்.காதலை உணரும் முதல் ஊடகம் கண்தான். அவளையோ அவனையோ பார்த்தபிறகு ஏதோ மின்சாரம் பாய்ந்ததுபோன்ற பிரமிப்பு ஏற்படும். அந்தப்பிரமிப்பு காதலில் முடிகிறதோ இல்லயோ ஒருதலைக்காதலாக வளர்ந்துகொண்டே இருக்கும்.சில சந்தர்ப்பங்களில் பழகும் சந்தர்ப்பமும் வாய்க்கும்.அப்படி வாய்க்காத தருணங்களில் எனக்கு அவளைப் ஒருமுறை பார்த்தாலே போதும், நான் இப்பிறவியின் பயனை அடைந்துவிடுவேன், என்கிறான் ஒரு கவிஞன் தன் கவிதைமொழியில் இப்படி,

மேற்கொண்டு விவரிக்க எதுவுமில்லைநாம் சந்தித்துக்கொண்டது எல்லாம்

விடிவதற்கு முன்பாகத்தான்

அவசர அவசரமாய் வருவாய்

அவசர அவசரமாய் பழகுவாய்

அவசர அவசரமாய் செல்வாய்

விடிவதற்குள் கருகி உதிர்ந்துவிடும்

எனது அனிச்ச மலர்கள்

சூரிய வெளிச்சத்தில்

எஞ்சியது

நிலவில் காயாத ஈரமும்

துயிலாத கனவுகளும்தான்.மேற்கொண்டு வாழ எதுவுமில்லை. (பா.அ.சிவம் - நயனம்)நான் சற்று முன் சொன்னது சரிதான் என்பதை இக்கவிதை கட்டியங்கூறுகிறது.காதல் காதலில் தொடங்கி காதலில்தான் முடியவேண்டும். இப்படியே பார்த்து பழகியவாறு இருந்தாலே உவப்பானது என்கிறான். இறுதியில் கவிஞன் கூறும்- மேற்கொண்டு வாழ எதுவுமில்லை என்ற வரிதான் காதல் சுகானுபவத்தின் உச்சம்!மார்க்சியம்- அடக்குவோரும் என்னாளும் அடங்குவோரும்இந்த உலகம் எப்போதும் அடக்குவோரையும் அடங்குவோரையும் படைத்துக்கொண்டே இருக்கிறது.எடுத்துக்காட்டுக்கு எங்கும் அலையவேண்டாம்.தமிழ் சமூகமே நல்ல சான்று.சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே அடிமைத்தளத்தில் அகப்பட்டு மீளமுடியாமல் தவிக்கும் சமூகம். அடிநாட்களில் அரசர்களிடமும்.பின்னர் நில பிரபுக்களிடமும் தொடர்ந்து கலனித்துவ வாதிகளிடமும், முதலாளிகளிடமும்,இன்றைக்கு இனவாதிகளிடமும் சிக்கிப்போராடிக்கொண்டிருக்கிறது. இதனை சில கவிஞர்கள் உற்று நோக்குகிறார்கள்.

வீணர்கள் ஆனதற்கு யார் காரணம்

கல்வியின்றி வேலையின்றி

விழிபிதுங்கும் பிள்ளைகளை

பதில் சொல்லுங்கள்

வாழைக்கன்றுகளாய்

வெட்டிப்போட்டால்

விளச்சல் எங்கிருந்து வரும்?

வறுமையில் வாடித்தவிக்கும் எங்களை

வாழத்தகாதவனென்று

சுட்டுப்போட்டால்

உங்கள் சூரத்தனத்தை

சுடுகாடும் கேள்வி கேட்கும். (வெ.தேவராஜுலு பினாங்கு-மக்கள் ஓசை)மனித உரிமை போராளி சேகுவாரா பற்றிய நினைவுகளைக் இக்காலச் சூழலோடு ஒத்திசைத்துப்பார்க்கிறார் ஒரு கவிஞர்.

அந்த நூற்றாண்டின்

புரட்சியின் நிழல்கள்

இந்த நூற்றாண்டிலும்

விழுகிறது

நிழலின் நிஜம்

மரபாணுவால்

சாத்தியமாகும்

எனும் நம்பிக்கை

எம்மில் துளிர்கறது (செ.குணாளன் பட்டர்வர்த்-தென்றல்)மார்க்சியக் கொள்கையின் பிரதிபலிப்பாகக் கவிதை கனன்று வருகிறது. மரபணுவால் சாத்தியமாகும்

என்ற சொற்கள் கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது. மரபணு என்ற வார்த்தயை போராட்டத்தின் குறியீடாக்காட்டுகிறார்.மேற்கண்ட இரு கவிதைகளும் கச்சா பொருளாகக் கையாளப்பட்டாலும், சொல்லாட்சியால் அதன் வீர்யம் மட்டுப்படவில்லை.

இதோ பல நூற்றாண்டுகளாய்

உலகின் பல பாகங்களில்

நாங்கள் தலையாட்டியே வாழ்ந்தவர்கள்

எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

மன்றாடிய தமிழன்

விரித்துப்போட்டான்

வரலாற்று ஏட்டை

மொழி,பண்பாடு,அரசியல்,சமயம்,அமூக மதிப்புகள்

என இவனது தலையாட்டும் பட்டியல்

நீண்டு பரந்து கிடந்தது...... (ஆ.குணநாதன் - மௌனம்)

அடிமைத்தளத்தில் வாழ்ந்து பழகிவிட்டவனை யார் தட்டி எழுப்புவது.இன்னொரு சேகுவாரா, கவிஞன் அவதாரம் எடுக்கிறான். கவிஞனின் குரல் அங்கதத்தோடு உரத்து ஒலிக்கிறது கவிதையில்.

கடனுக்கும் லெவிக்கும் கட்டவே

சதா எரியும் அடுப்பு நெருப்பருகில்

உடல் நோக வெந்தும்

உயிர் நோக நொந்தும்

உழைத்ததெல்லாம் போகுமென்பது

எனக்கென்ன தெரியும்காய்ச்சலில் கிடந்த ஊர்க்காரரின்

காதில் சொல்லிச்சென்றது

டிங்கிக்கொசு

தன் சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் வேறு தேசத்துக்கு வந்து முதலாளித்துவத்தின் பிடிக்குள் சிக்கித்தவிப்பது மட்டுமின்றி, உயிர்க்கொல்லும் ஏடிஸ் கொசுவால் கடிக்கப்பட்டுவிடுகிறான்.கடித்த கொசு அவனின் நிலை உணர்ந்து பேசுவதாக அமைகிறது கவிதை.கொசுக்குத்தெரியாது தான் செய்த பாவம். காய்ச்சலில் படுத்துக்கிடப்பவனுக்கு அக்காள் தங்கை இருப்பதும், மனைவியில் தாலியை அடமானம்வைத்து கப்பலேறியதும்,குழந்தை இருப்பதும் !ஆனால் ஏஜண்டுக்கும், முதலாளிக்கும் கண்டிப்பாய்த்தெரியும்.அதைப்பற்றி அவர்களுக்கென்ன கவலை.அவன் வங்கி பாக்கியைப்பற்றியும்,எந்த ஊருக்கு மனைவி குழந்தைகளை உல்லாசப்பயணத்துக்கு அழைத்துப்போகலாம் என்பது பற்றியும், அடுத்து எங்கே நிலம் வாங்கிப்போடலாம் என்பதுபற்றிய கவலைகள் இருக்கும்போது, தனக்கு உழைத்த மனிதர்களைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?தொடரும்......

Monday, December 14, 2009

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்வாசகனுக்குக் கவிதையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எது முகாமையான காரணியாக அமைகிறது?

கருவியா? கருப்பொருளா?

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னால் புதுக்கவிதை நம் நாட்டில் கால்பதித்தபோது அது ஏற்படுத்திய மிக முக்கியமான வினா இது?அப்போதைக்கு இதற்கான பதிலைத்தரமுடியவில்லை.ஏனெனில் மரபுக்கவிதை தன் அகன்ற சிறகை விரித்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தது.ஆனால் காலம் செல்லச்செல்ல இதற்கானச் சரியான பதில் கிட்டியது என்பது படைப்பிலக்கியத்துறையைக் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்குத்தெரியும்.கருவியைப் பின்தள்ளிவிட்டு கருப்பொருள் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டது. இருப்பினும் நம் நாட்டில் புதுக்கவிதை பிறப்பெடுத்த காலத்தில் இருந்த அதன் வீச்சு பிற்காலத்தில் சூம்பிப்போனது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள் ஆய்வாளர்கள்.புதுக்கவிதை எழுதுவதற்கு எந்தக்கட்டுப்பாடும் தேவையில்லை என்று படைப்பாளன் சிந்தித்ததன் பலனாக கவிதை ஆற்றினுள் கசடுகள்போல மிதக்க ஆரம்பித்ததன.இப்படி வரும் கவிதைகளை காகித ஊடகங்கள் பிரசுரத்ததின் பாதிப்பாகவே இன்றைக்கு கோப்பை நிரம்பி வழிந்தோடும் அளவுக்கு, குடும்பக்கட்டுப்பாடு செய்யாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் மாதிரி வத வத வென கவிதைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. சீடுக்கட்டு மாதிரி வார்த்தைகளை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிவைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடும், என்ற புதியவர்களின் சுய கருத்தாக்கம்தான், புதுக்கவிதைகள், கண்டுகொள்ளப்படாத பழமரத்திலிருந்து புளித்த பழங்கள்போல பொலபொலவென்று கொட்டி சிதறி மிதி படுவதற்குக் காரணமானது.

இதற்கு ஒரு சின்ன உதாரணத்ததைச்சொல்லிவிட்டு ஆய்வைத்தொடரலாம் என நினைக்கிறேன். நாவல், சிறுகதை, கட்டுரை போன்றவற்றுக்கு உரைநடை தன்மை எவ்வளவு முக்கியமோ,அவ்வளவு முக்கியம் கவிதைக்கு கவித்துவம். பெரும்பான்மையினர் புனையும் கவிதையில் கவித்துவம் கடுகளவுக்குக்கூட இருப்பதில்லை.உரைநடைத்தன்மையிலேயே கவிதையும் இயங்குகிறது என்பதை இங்கே கவிதை ஆர்வலர்களுக்குச் சொல்லத்தான் வேண்டும்.இந்தக்கவிதையைப்படியுங்கள்.மலேசியர்கள்

நூறு ஆண்டுகளுக்கு

முன்பு

கள்சுமந்து

கட்டிய

ரயில்

முனையங்கள்

அரசாங்கக்

கட்டங்கள்

இப்போதைய

புதிய தலைமுறையினருக்குத்

தெரியவில்லை

காரணம்

அன்று

வெள்ளையர்கள்

எழுதிய

சரித்திரத்தில்

இன்று

கருப்புமை

அடிக்கப்பட்டு

விட்டது.

இதே போன்று இன்னொரு வார்த்தை வரிசை வலது பக்கம் இருந்தால் இதுவும் ட்டுவின் டவராகிவிடும்.இதில் உரைநடையில் இயங்குகிறது.கவித்துவம் காணவில்லை.இதனை வாசித்து முடித்த வாசகனுக்கு சொற்கள் தரும் வெற்றுப்பொருளைத்தவிர வெறெந்த உணர்வையும் எற்படுத்தாது.அதற்குமேல் வாசகனின் சிந்தனை நகராது.கவிதை அவனுக்குள் பயணம் மேற்கொள்ளாது.நடு வழியில் பழுதாகிப்போன வாகனம் மாதிரி முடங்கிப்போய்விடும்.

ஒரு நல்ல கவிதை எப்படி இருக்கும்?மூன்று முனையிலே

மூனு குளம் வெட்டிவச்சேன்

மூனுல ரெண்டு குளம் பாழ்

ஒன்னுல தண்ணியே இல்ல.ஆரவாரமற்ற எளிய சொற்களால் புனையப்பட்ட கவிதை இது.இக்கவிதை அர்த்தத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, உணர்ச்சியை மிகநேர்த்தியாக பதிவு செய்கிறது. ஏழை விவசாயி, தண்ணீர் காணாத கிராமம், வரண்ட பூமி, அவனைச்சுற்றி வாடும் காய்ந்த வயிறுகள், அவனின் இருண்ட எதிர்காலம் என அடுக்கடுக்கான பரிமாணங்களில் வாசகனை முற்றிலும் உணர்வுத்தளத்தில் இயங்க வைத்துவிடுகிறது. இந்தச்சொற்ப வார்த்தைகளிலிருந்து சொட்டும் சோகம், கவிதையை வாசித்து முடித்த பின்னரும் அவனை கவிதையிலிருந்து நகரவிடாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. இதைத்தான் நாம் கவித்துவம் என்கிறோம்.

காதலில் - சொல்ல வந்ததும் சொல்லில் வந்ததும்புதுக்கவிதை தளத்துக்குள் புதிதாய் நுழையவரும் படைப்பாளர்கள், பெரும்பாலும் காதலையே பாடுபொருளாக எடுத்துக்கொள்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை.மனித உணர்வுகளிலேயே காதல் மனிதன் வாழும் எல்லாக்காலத்திலும் மேலோங்கிநிற்கும் .”எனக்கு காதலிக்கும் எண்ணமே வரவில்லை,” என்றால் அவனிடன் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்.பருவ வயதை அடைந்தவுடன் காதல் உணர்வு கட்டவிழ்ந்து உதிர ஆரம்பிக்கிறது.அது உதிரும் தருணத்தில் காதலைக் கவிதையாகவும் சிலர் தரிசிக்கிறார்கள்.காதலாகிக்கசிந்து கண்ணீர்மல்கி உருகும் வார்த்தைகளில் காதலைப் புனைகிறார்கள்.அப்படி புனையும்போது அவனிடம் இருக்கும் சொற்ப வார்த்தைகளைக்கொண்டே கவிதை உதயமாகிறது.அதனைப்புனைந்தவன் மட்டுமே அதன் அதீத உணர்ச்சியில் லயித்து மகிழ்வானே தவிர, வாசகனிடம் அசைவையோ,அலையையோ உண்டாக்குவதில்லை. அவன் உணர்ந்ததை உணர்ந்தவாறு சொல்ல வரவில்லை.சினிமா மொழியில் சொன்னால் ‘வரு....ம்..... ஆனா வரா....து .“இது ஏன் உண்டாகிறது. தன் சொல்வங்கியில் சேமித்து வைத்துள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை அவ்வளுதான்.திவாளாகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சொல்வங்கியிலிருந்து எடுதுக்காட்டாக ஒரே ஒரு பருக்கை.

என் இதயத்தில்

உனக்கு அமைத்திருக்கிறேன்......

ஒரு சிம்மாசனம்

என்று வந்து அமரப்போகிறாய்

சொல் நிலவே.

சிம்மாசனம், நிலவு, இதயம் என்பதெல்லாம் காதலுக்கு மிகப்புராதனக்குறியீடுகள்.சொற்ப எண்ணிக்கையிலான சொற்களின் மூலதனத்தில்,கவிதை எழுத வந்தால்,அது பலவீனமான ,ரத்தச்சோகை கொண்ட சொற்கூட்டமாகத்தான் அமையும்.

காதல் கடவுளின் முகவரி என்றார் கவிக்கோ அப்துல் ரஹ்மான்.கடவுளின் முகவரியை கிழித்தெறியலாமா? காதலைக் கசக்கிக் கசக்கி பிழிந்து கடைசியில் கசக்க வைத்துவிட்டார்கள் நம் படைப்பாளர்கள்.

சில நல்ல எடுத்துகாட்டுகள்:

முந்தைய தினங்களில்

வெளிச்சம் வீசிய

எனது வானத்தில்

நீ பூசிச்சென்ற

கருமையில்

நிலவும் நட்சத்திரமும்

தோன்றாமல்

உன் முகம் மட்டுமே

தெரியவேண்டுமென்பதுதான்

உனக்கான

எனது யாசகங்கள். (ப.ராமு- நயனம்)

...................................................பத்து பதினொன்று இருபது ஐம்பது

என ஏறிக்கொண்டே போகிறது

எழுத இயலாத எண்ணிக்கைகள்காகிதங்கள் யாவையும் கிழித்துப்போட்டுவிட்டு

புறப்பட்டுவிட்டேன் ஒரே ஒரு முத்தத்தோடு (உமா- தென்றல்)இவளுடைய காதலை வெற்று வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை.உணர்ச்சிப்பிழம்பாய் மாறிவிட்டபோது சொற்களில் அவற்றைக்கொண்டு வரமுடியவில்லை. ஒரே குறுக்கு வழி, ஓடிச்சென்று முத்தமிட்டுவிடுவது.(அதன் அடுத்த விளைவுகள் பற்றி கவிஞருக்குக் கவலையில்லை.)காதலில் தோற்றுப்போனவளுக்குக் கரிசனக்குரலாய் ஒலிக்கிறது இந்தப்பாடல்.அறிவு மங்கிப்போனபோதுதான்

இந்த மனதை

இருட்டு இழுங்கிவிட்டது.

காணாமற்போன

உன் காதலை

இந்தக்கருக்கிருட்டில்தான்

நீ இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறாய் (கனலன் - தென்றல்)

இக்கவிதையில் இருட்டு என்ற சொல் பொருத்தமான படிமமாய் விழுந்திருக்கிறது.நீ தொடாதவரை

சாணைப்பிடிக்காத

கத்தியாய்க்கிடந்தேன்

தொட்டவுடன் தெரிந்துகொண்டேன்

எனக்குள் எண்ணிலடங்கா

கூர்மைகள் (துரைராஜ் முனியன் - தென்றல்)

இக்கவிதையில் குறியீடு படிம உத்திகள் சரியாகக்கையாளப்பட்டுள்ளன. சொற்சிக்கனம் கவிதைக்கான பல பரிமாணங்களை உருவாக்கும்.’தெரிந்துகொண்டேன்’ ‘எனக்குள்’ போன்ற வார்த்தைகளை நீக்கியிருந்தால் கவிதை இன்னும் பரிமளித்திருக்கும்.

...............................

இந்த ரோஜா அறியுமா

அதன் நிறத்திற்கு

எனது ரத்தமும்

அதன் மென்மைக்கு

எனது உயிர் மூச்சும்

எவ்வளவு முக்கியம் என்று. (அனு கோலாலம்பூர்- நிலா)

தன் காதலியை ரோஜாவாக உருவகப்படுத்தி காதலை மலரவைத்த சுமாரான கவிதை இது.எனக்குப்பிடித்த எதுவும்

அவளுக்குப்பிடிக்கவில்லை

அவளுக்குப்பிடித்த எதுவும்

எனக்குப்பிடிக்கவில்லை

இருந்தபோதும்

வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

ஒருத்தொருக்கொருத்தர்

பிடித்து (சந்துரு- தென்றல்)காதல் வெகு விரைவில் நீர்த்துப்போகாமல் இருப்பதற்கு எது காரணம்.விட்டுக்கொடுத்தலும் சகிப்புதன்மையும்தான்.உணர்ச்சிவயப்பட்டு வீசி எறியப்பட்ட வெற்று வார்த்தைகளால் எத்தனையோ காதல் கடை தேறாமல், எத்தனையோ குடும்பம் கரை சேறாமல் முறிந்து தொங்குவதை நாம் பார்க்கிறோம். அவனோ அவளோ முகத்துக்கு நேரே வெடித்த வார்த்தைகளின் வீச்சத்தை சதா சர்வ காலமும் சுமந்து கொண்டு திரிவதால் இந்தப்புனித உறவில் உடைப்பு நேர்ந்துவிடுகிறது. மிகைஉணர்ச்சி வயப்பட்டு உதிர்ந்த வார்த்தைகள்தானே, இதற்கு ஏன் அதிகபட்ச கனத்தைத்தரவேண்டும் என்ற தார்மீக சிந்தனை நமக்கு வருவதில்லை.ஆனால் மிதமான சிந்தனை கொண்டவன் வாழ்வு சொற்களால் தொலைந்து போகாமல் இருப்பதற்குப் புரிந்துணர்வைப் பகிர்ந்துகொள்வதற்குப் பாதை காட்டுகிறான். உனக்கும் எனக்கும் வெவ்வேறு ஆசைகள் இருக்கலாம்.வெவ்வேறு கொள்கைகள் இருக்கலாம், நாம் வெவ்வேறு உணர்ச்சிகளால் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம்! அதனால் என்ன? உனக்கு என்னையும், எனக்கு உன்னையும் எப்போதுமே பிடித்துப்போகிறது! அது போதும் நம் காதல் ஜெயிக்க.அது போதும் நம் வாழ்வு சுகிக்க, என்கிறான் கவிஞன்.அறிவுப்பூர்வமான வரிகள். (தொடரும்.........)

Wednesday, December 9, 2009

தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம் கோ.புண்ணியவான்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக் கல்விச்சான்றிதழ் (spm) சோதனையில் 2010 முதல் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என அரசாங்கத்தின் அதிரடி முடிவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களின் மேலான மாணவர்களின் ஆர்வம் சிதைவுறும் கட்டத்தை அடைந்ததுள்ளது எப்போதுமே தமிழ் மொழி தமிழ் கற்ற பலருக்குச் சோறுபோடும் மொழியாக இருந்தது கிடையாது.( தாய் மொழியை அப்படிப் பார்ப்பதால்தான் அதன் சிதைவுக்கும் அழிவுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்) மலேசியாவில் மட்டுமல்ல , சிங்கப்பூர், தமிழர்களையே கொன்று குவித்த சிரி லங்கா, ஏன் தமிழ்நாடும் அதே நிலையைத்தான் எதிர்நோக்குகிறது. தமிழ் மொழி செம்மொழி தகுதியை அடைந்த பின்னரும் தமிழகத்திலும் அதன் தலயெழுத்தை மாற்றமுடியாது இருப்பதானது தமிழுக்கே இருக்கும் தனித்த பெருமை.மலேசிக் கல்விச் சான்றிதழ் சோதனையில் கூடிய பட்சம் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற அரசின் அறிவிப்பையொட்டி, 12 பாடங்களாக உயர்த்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு 12 ஆக உயர்த்தியது. மேல் முறையீட்டுக்குப் பிறகு வந்த இரண்டாவது அறிவிப்பு தமிழ்க்கல்வியின் வயிற்றில் பாலை வார்த்தாலும் கூடவே நஞ்சையும் கலந்திருக்கிறது என்பதுதான் இந்த மாற்றத்தினால் நேர்ந்த பாதிப்பு. 12 பாடங்களாக எண்ணிக்கையில் மட்டுமே உயர்த்தியிருக்கிறதே தவிர அதனை மீண்டும் செயற்கை பிராணவாயு கொண்டே ஜீவிக்கவேண்டிய மீண்டுமொரு சோதனயான கட்டத்துக்கு ஆளாகியிருகிறது நம் தாய்மொழி. அரசு நிர்ணயித்த 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், கோரிக்கைக்குப்பிறகு கூடுதலாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு பாடங்கள் மதிப்பீட்டுக்கு உதவாது என்று அறிவித்து நம் போராட்டத்தை வேறு கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. மலேசியாவில் தமிழ் மொழிக்காகப் போராடுவது அனுமனின் வாலென தொடர்கதையாகவே இருந்துவருகிறது.சோதனையின் முடிவுகளையே முன்னீடாக வைத்து நகர்த்தப்படும் கல்விக்கொள்கைக்குத் தமிழ் மொழிப்பாடமும் தமிழ் இலக்கியப் பாடமும் புறந்தள்ளப்பட்டுள்ளதானது அதன் உயிர் இயக்கத்துக்குப் பெரிதும் முரணான ஒன்று என்றே கருதுகிறார்கள் தமிழர்கள். பெற்றோரின், மாணவர்களின், ஆசிரியர்களின் மனப்போக்கு சோதனைகளின் முடிவுகளை நோக்கியே முடுக்கப்பட்டுள்ளது என்பது இன்றைய கல்விகொள்கையின் சாபக்கேடு. முக்கியத்துவம் அளிக்கப்படாத இரண்டு பாடத்தையும் சோதனையில் எடுக்கப் பெருவாரியான மாணவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது உறுதி. ஏனெனில் இது சோறு போடாத மொழியாக உறுதிப்படுத்தப்பட்டதே காரணம்.மலேசியாவில் தமிழ் மொழி மிகச் சிறுபான்மைத் தமிழருக்குச் சோறு போட்டுத்தான் வந்திருக்கிறது. இன்றைக்கு மலேசியாவில் இயங்கும் 532 தமிழ்ப்பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் , இடை நிலைப்பள்ளியில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப்போதிக்கும் ஆசிரியர்களுக்கும், தமிழ் மொழியை ஒரு பாடமாகப்போதிக்கும் ஒரு சில ஆசிரியர் பயிற்சி கால்லூரி விரிவுரைஞர்களுக்கும், ஐந்தாறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் தமிழ் சோறுமட்டும் போடவில்லை பந்தி போஜனமே கொடுத்து வருகிறது. இது சோறுபோடும் மொழி என்று அரசு கருதினாலுமே போதும்.சமூகம் உரத்த குரல் கொடுத்தததும் மேற்கொண்டு இரண்டு பாடங்களை கொடுத்து, அதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கத்தவறியதானது பறவையின் இரண்டு சிறகையும் நீக்கிவிட்ட அவல நிலைக்கு ஒப்புவமை கூறலாம்.பேருக்குத்தான் தமிழ் சார்ந்த இரண்டு பாடங்கள் சேர்க்கப்ட்டுள்ளது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, நாளடைவில் அதனால் வரப்போகும் பாதிப்பு பாரிய அளவில் தமிழ் மொழி சார்ந்த வாழ்வாதாரத்தையும், அதன் தொன்மையான கலாச்சார மேதமையையும் அழித்தொழித்துவிடும் வித்துக்களைக்கொண்டது.ம.க.சா கல்வியில்தான் (இங்கிருந்துதான் தொழிற் கல்வி வாய்ப்பையும், பல்கலைக்கழகம் நுழைவதற்கான வாயிலையும், மற்றும் மேற்கல்விக்குமான வழித்தடத்திற்குக் கடந்து செல்ல முடியும்) மாணவர்களின் மிக முக்கியமான கல்வியை மேற்கொள்ளும் பருவத்தில் தமிழ் சார்ந்த இரு பாடங்களின் முக்கியத்துவத்தை நீக்கியதானது அதன் அடி மடியில் கை வைத்த கதையாக முடிந்துவிடும்.ம.க.சா சோதனையிலேயே தமிழுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படவில்லையே நான் ஏன் தமிழ் எடுக்க வேண்டும்? அதற்குப்பதில் தொழில் வாய்ப்பை நல்கும் பாடத்தை எடுத்துப்பயன் பெறலாமே என்ற எண்ணம் உதிக்கும். இப்படிப்பட்ட எண்ணம் தமிழ்க்கல்விக்கு மிக பயங்கரமான பின்விளைவை பிரதிபலிகக்கூடியது.தமிழ் மொழியில் அடிப்படைக்கல்வியாகப் பயில இன்றைக்கு 532 ஆரம்பப்பள்ளிகள் நாட்டில் உள்ளன. 50 ஆண்டு காலக்கட்டத்தில் இதன் எண்ணிக்கை 800 லிருந்து குறைந்து இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது என்பதே ஒரு சோகச்செய்தி. அரை நூற்றாண்டு கால எல்லைக்குள் மூன்றில் ஒரு பங்கு தமிப்பள்ளியை நாம் இழந்ததற்கான காரணம் பற்பல உண்டு.1. சிறு சிறு ரப்பர்தோட்டங்கள் சீனர்களுக்குச் சொந்தமாக இருந்து வந்தன. விரைவுப் பணக்காரர்காளாக ஆவதற்கும், தொழில் துறையில் தங்கள் பணவேட்டையாடலைத் தொடரவும் இந்தச்சீனத் தவுக்கேகள் (முதலாளிகள்) தங்களுக்குச் சொந்தமான ரப்பர்த் தோட்டங்களைத் துண்டு போட்டு விற்று பெரிய ஆதாயத்தை அடைந்தனர்.( உலகச்சந்தையில் ரப்பரின் விலை வீழ்ச்சியின் காரணத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்) இதனால் ஆயிரமாயிரம் தமிழர்கள் தாங்கள் நம்பி வாழ்ந்த ரப்பர் தோட்ட கூலி வேலையையும் இழக்க நேரிட்டது. மூட்டை முடிச்சுகளைக்கட்டிகொண்டு வேறு வாழவிடத்தை நோக்கிப் பயணமானார்கள். இதன் காரணத்தாலும் பல தோட்டத்தமிழ்ப்பள்ளிகள் மூடு விழா கண்டன என்பது தமிழுக்கு உண்டான சோகச்செய்திகளில் ஒன்று.2. நாடு தொழில்துறையில் மேம்பாடு கண்டுவரும் நிலையில் புறநகர்ப்பகுதிகளில் இயங்கிவந்த தமிழ்ப்பள்ளிகள் தொழிற்பேட்டை மேம்பாட்டுத்திட்டங்களுக்கு வழிவிட வேண்டியதாயிற்று. தொழில் பேட்டைகள் அதிகரிக்க அதிகரிக்க ரப்பர் செம்பனைத்தோட்டங்களில் வேலை செய்யத் தமிழர்கள் தொழிற்பேட்டைகளுக்குத் தொழில் மாற்றம் காணத்துவங்கி பெரும்பான்மையான தமிழர்கள் பட்டணப்புறங்களுக்கும் புறநகர்ப்பகுதிக்கும் இடம்பெயர்ந்தனர். ரப்பர் செம்பனைத்தோட்டக் கூலிவேலைக்கும் ஆபத்து எற்பட்டுவிட்ட நிலையில், தோட்ட மக்கள் குடி பெயரத்துவங்கினர். தோட்டப்புறங்களில் இயங்கிவந்த தமிழ்ப்பள்ளிகளும் மாணவர்களின்றி மூடப்படும் நிலையையும் எதிர்கொண்டது.3. பல்லின மக்கள் வாழும் மாலேசியாவின் கொள்கை தேசிய நீரோட்டத்துடன் இணைத்து இன ஒற்றுமையை நிலைநாட்ட தேசியக்கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது. இதன் அடிப்படையில் மலாய்ப்பள்ளி செல்லக்குழந்தையாக அரசால் கருதப்படுகிறது. மலாய் மொழி வேலை வாய்ப்புக்கும், உயர் கல்விக்கூடங்களில் நுழைவதற்கான கடவுச்சீட்டாகவும் ஆக்கப்பட்டதால், தமிழ் மொழி தமிழ்க்கல்வி மேல் தமிழர்கள் நம்பிக்கை இழந்தனர். பெரும்பான்மையான தமிழர்கள் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மலாய்ப்பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர். மொழிமீதான இந்தபுறக்கணிப்பு தமிழ்ப்பள்ளிகளை வலுவிழக்கச்செய்தன.4. அவ்வப்போது பாடத்திட்டத்தில் பல்வேறு மற்றங்களைக் கொண்டு வரும் பட்சத்தில் கடை மொழியாகக்கருதப்படும் தமிழ் மொழியின்மேல் கைவைத்துவிடுகிறார்கள். ஆரம்ப காலம் தொட்டு தமிழ் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் மலாய் மொழி தவிர்த்து மற்ற பாடங்கள் தமிழிலேயே போதிக்கபட்டு வந்தன. ஏழாணடுக்கு முன்னர் இருந்துதான் கணிதமும் அறிவியலும் எல்லா ஆரம்பப்பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் போதிக்கபடவேண்டுமென அரசு புதிய திட்டத்தைப் பல எதிர்ப்புகளூக்கு இடையே அமலாக்கம் செய்தது. ஆங்கிலத்தில் போதிக்கபடும் இரண்டு முக்கிய பாடங்களிலும் மலாய்ப்பள்ளிகளிலும்தான் போதிக்கிறார்களே தம் பிள்ளைகள் அங்கே படித்தால் நல்லது என் பல பெற்றோருக்கு எண்ணம் தோன்றியபோது பிள்ளைகளை மலாய்ப்பள்ளில் பதிய ஆரம்பித்தனர்.5. மலாய்ப் பள்ளிக்கூடங்கள் தமிழ் பள்ளிக்கூடங்கள் போலல்லாமல் எல்லா வசதிகளையும் கொண்டது. இவை அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற பள்ளிகளாக இருப்பதால் (கட்டட வசதி முதற்கொண்டு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பள்ளிகளாக இருக்கிறன்றன). மலாய்க்காரர்கள் வாக்கு வங்கியாகத் திகழ்வதால் அரசின் கவனம் அவர்கள் பக்கமே திரும்புவது நிதர்சனமானது. தமிழ்ப்பள்ளிகளில் பல, இன்னமும் பலகைப்பள்ளிகளாகவும், சொந்தக்கட்டட வசதியின்றி தோட்டப்புற கோயில்களிலும் இயங்கி வரும் பள்ளிகளாகவும் இருக்கின்றன. வசதியான பள்ளிக்குத்தானே பெற்றோர்களின் கவனம் திரும்பும். ஆகவே மலாய்ப்பள்ளிகளில் 60 விகிதம் தமிழ்க்குழந்தைகள் படிக்கின்றனர். ஏழையின் பிள்ளைகள் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிலரின் பிள்ளைகள் மட்டுமே தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர். (தமிழ்ப்பள்ளியைத் தீண்டத்தகாத இடமாகக்கருதுவதால் மேல்தட்டும் நடுத்தர வர்க்கமும் இதனைத் தள்ளிவைத்தே பார்க்கிறது) தமிழர்களில் 40 சதவிகிதம் மட்டுமே தமிழ்ப்பள்ளியில் படிக்கிறார்கள் என்பது நம் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவின்மையைப் புலப்படுத்துகிறது.இவ்வாறான கரணத்தால் தமிழ் மொழியின் நிலை பின்னடைவை எட்டி வருகிறது.இது போதாதென்று இன்றைக்கு இருக்கும் 40 விகித மாணவர்களில் எண்ணிக்கையயையும் இந்த இரண்டு முக்கியமற்ற பாடங்கள் ஈர்க்காது. இந்தப்புதிய அமலாக்கத்தால் என்னென்ன பாதிப்பெல்லாம் உண்டாகும் என்பதுதான் தமிழ் மொழி, தமிழ்க்கல்வி பற்றாளர்களின் கவலை.ம.க.சா சோதனையின் தமிழ் மொழியின் நிலை நம்பிக்கையற்ற பிம்பத்தை உண்டாக்குவதால் மாணவர்கள் தமிழ் பள்ளியில் குறைய ஆரம்பித்து பின்னர் மூடும் நிலைக்குத்தள்ளப்பட்டு விடும். நாட்டில் தமிழ் மொழி தழைக்காது.( தமிழ் மொழி சார்ந்த கல்விக்கூடங்கள் செயலிழந்துபோகும். ஆசிரியர் பயிற்சிகல்லூரிகள், பலகலைக்கழக தமிழ்ப்பிரிவு என அதன் அழிவுப்பட்டியல் நீளும். நாட்டில் மொழி சார்ந்த கலை பண்பாடும் வேரறுத்துக்கொள்ளும். மலேசியாவும் மொரிசியஸ், பிஜி, தென்னாப்பிரிக்கா போன்றே தமிழைத் தாரைவார்த்த நாடாகிவிடும். தமிழர்கள் இருப்பார்கள் பெயரளவில்- தமிழ் இருக்காது. இந்தப் பாவமெல்லாம் 2000த்தாம் ஆண்டில் வாழ்ந்த தமிழர்களைத்தான் சேரும். சரித்திரம் அதனைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளும் (கொல்லும்).

Monday, December 7, 2009

அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்

கோ.புண்ணியவான்

மலேசியாவின் நான்காவது பிரதமராக அரியணையமர்ந்த மஹாதிர் முகம்மது 20ம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியின் உயரிய பீடத்தில் இருந்து 2003 ஆண்டு பதவியிலிருந்து “விருப்ப” ஓய்வு பெற வேண்டியிருந்தது. மலேசியப் பிரதமர்களில் அதிக காலம் பதவியில் இருந்தவர் இவர்தான். பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயாவுக்கு விடுதலைபெறும் முயற்சியில் ஈடுட்ட முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுடன் கருத்து மோதல் காரணமாக பலம் வாய்ந்த மலாய் இனக்கட்சியான அம்னோவிலிருந்து (UMNO-United Malayan National Organisation) நீக்கப்பட்டவர், பின்னர் பீனிக்ஸ் பறவையாய் சாம்பலைத்தட்டிவிட்டு உயிர்த்தெழுந்து மீண்டுவந்து, மிகச்சாதூர்யமான ஆளுமையாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டு மலேசியாவின் பிரதமராக 20 ஆண்டுகாலம் நீடித்த பெருமை இவருக்கு உண்டு. பதவிலிருந்தபோதும் அவரின் குரல் வலிமையான பலமுடையதாக இருந்ததால் மலேசியா தொழில்நுட்பத்துறையில் துரித முன்னேற்றம் கண்டது.ஓய்வு பெற்ற பிறகும் அவரின் அதிகாரக்குரலின் வலிமை நீர்த்துப்போகாமல் இருப்பது மலேசிய அரசியல் இதுவரை சந்திக்காத ஒன்று. மஹாதிருக்குப்பிறகு பிரதமராக இருந்து, குறுகிய காலத்தில் நாற்காலியைக் காலி செய்த அப்துல்லா படாவி இன்றைக்கு இருக்கிற இடம் தெரியவில்லை. என் பதவி ஓய்வுக்குப்பிறகு நான் என்னை ஆலோசனை கேட்டால் ஒழிய, அரசியல் விவகாரங்களில் தலையிடமாட்டேன் என்று உறுதியளிததவர் இதுநாள்வரை கொடுத்த வாக்கைக்காப்பாற்றி `வர, மஹாதிர் அதற்கு முரணான கொள்கையுள்ளவர் என்பதை பல விசயங்களில் தலையிட்டு தன் மேதைமையை நிரூபித்து வருகிறார்.

1998 ஆண்டு அப்போதைய துணைப்பிரதமராக இருந்த அன்வர் இப்ராஹிமுக்கு மஹாதிருக்கும் கொள்கையளவில் உண்டான முரண்பாடு உட்பூசலாக பரிணமித்ததால் அன்வரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கினார் மஹாதிர். மக்களிடையே மஹாதீரைவிட அதிகச் செல்வாக்குடன் நாட்டின் உயரிய பதவியில் இருந்த அன்வாரை நீக்கியதற்கான காரணம்தான் பலரை வியப்பில் ஆழ்த்தி நம்பகத்தன்மையற்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டிருந்தது. அன்வர்மீது அவர் கொண்டுவந்த ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு அவரை 13 ஆண்டுகாலம் சிறைக்குள் தள்ளியது. அதிகாரத்துவத்தின் உச்சபட்ச நீட்சி இது என வர்ணிக்கப்பட்டாலும், அப்போதைக்கு அவரை எந்த எதிர்ச்சக்தியாலும் அசைக்கமுடியவில்லை.

அன்வாரை சிறைக்கு அனுப்பிய ஓரிரு ஆண்டுகளில் மஹாதிருக்கு ஏழரை நாட்டுச்சனியன் வந்தமர்ந்துகொண்டது. கட்சியிலும் ஆட்சியிலும் பாரிய அளவில் நம்பிக்கை நட்சத்திரமாக முத்திரை பதித்த அன்வார் ஆதரவாளர்களின் நெருக்கடியால் மஹாதிர் 2003ஆம் ஆண்டு UMNO பேரவையில் பேராளர்கள் அதிர்ச்சியுறும் வகையில் தான் “ஓய்வுபெறுவதாக” கண்ணீரோடும் சுயகௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டும் விடைபெற்றார்.

தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்ந்திருந்த நாற்காலியை விட்டுக்கொடுத்த பின்னரும், தான் முன்வைக்கும் வலிமையான கருத்துக்களின் பின்விளைவுகள் அசாதாரணமாகவும், சில சமயம் ஆட்சியிலிருந்தவர்களை ஆட்டிப்படைக்கவும் செய்து வருகின்றது.

தனக்குப்பிறகு பிரதமராக வந்த அப்துல்லா படாவி, 2004 ஆம் ஆண்டு தேர்தலில் வரலாறு காணாத வெற்றிபெற்றாலும். அதனை அடுத்த வந்த 2008 ஆண்டு தேர்தலில் வரலாறு காணாத வெற்றியில் தோல்வியும் தழுவினார். மலேசியா விடுதலை அடைந்த காலந்தொட்டு , பலம்வாய்ந்த மூவினக்கட்சியின் கூட்டமைப்பாக (மலாய், சீன, இந்திய) இருக்கும் தேசிய முன்னணி ஆளுங்கட்சி மிகச்சௌகர்யமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தொடர்ந்து வெற்றி கண்டு வந்தது. ஆனால் பாடாவி ஆட்சிக்கு வந்து ஒரே தவனையில் அந்தப் பெரும்பான்மையை இழந்து, வெற்றியைத்தக்க வைத்துக்கொள்ளாமல் மக்களின் ஆதரவை எதிர்க்கட்சிக்குத் தாரை வார்த்தது. படாவியின் ஆட்சியின் கீழ் அடைந்த சரிவு ஆளுங்கட்சியின் ஆளுமையை கேள்விக்குட்படுத்தியது. (உள்ளபடியே மஹாதிர் ஆட்சியின் நீட்சிதான் இந்தச்சரிவுக்கும்

ஒரு காரணம்.)

பாடவியின் ஆளுந்திறனை வேலிக்கு வெளியில் இருந்து கூர்ந்து கவனித்துவந்த மஹாதிர், படாவி முன்மொழியும் பொருளாதாரச் சமூக மூன்னேற்றத்திட்டங்களின்மேல் நம்பிக்கையற்று கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கத்துவங்கினார். மக்களை ஈர்க்கும் செய்திப்பசிக்குப் அலையும் ஊடகங்களுக்கு மஹாதிரின் கருத்தாக்கங்கள் பெருந்தீனியாக அமைந்தன. படாவி எதிர் நீச்சல் போடமுடியாமலும், மீள்வதற்குப் பற்றிக்கொள்ள மிதவையைக் கணாதும் தத்தளிக்க ஆரம்பித்ததார். 2008 ஆம் ஆண்டுத்தேர்தலின் தோல்வியை அப்துல்லா படாவிதான் ஏற்கவேண்டும். எனவே அவர் உடனடியாகப்பதவியை விட்டு விலகவேண்டுமென பகிரங்கமாகக் குரல்கொடுத்த வண்ணமிருந்தார். புதிய பிரதமராக இன்றைக்குத் துணைப்பிரதமராக இருக்கும் நஜிப் ராசாக் வரவேண்டுமென்றும் வெளிப்படையாகக் கருத்துக்கூறினார். இது ஒரு அத்துமீறலான அபிப்பிராயமாக் இருந்தாலும், அவரின் குரல் UMNOவின் பிரதிபிம்பமாக உருவெடுக்க ஆரம்பித்தது. பின்னர் நெருக்கடியைத்தாங்க முடியாத படாவி தான் பதவியிலிருந்த் மார்ச் மாதம் விலகுவதாக அறிவித்தத்துமின்றி, நஜிபே தன் வாரிசு எனவும் ‘வழிமொழிந்தார்.’ நாற்கலியோ, நாட்டளுமன்ற பதவியோ இல்லாமல் சாமான்ய குடிமகனாக இருந்த மஹாதீரின் செல்வாகுக்கும் சொல்வாக்கும் செய்த அசகாய சாதனை இது. படாவியிமேல் உண்டான மஹாதிர் கொண்ட தார்மீகக் கோபத்துக்குப்பின்னால், சுயநல ஆத்திரமும் மாஹாதீருக்கு இருக்கத்தான் செய்தது. மலாய்க்கார அரசியலில் சக்திவாய்ந்த UMNO இளைஞர் பதவிக்குப் போட்டியிட படாவியின் மருமகனான கைரியும், மஹாதிரின் மகனான முக்ரிசும் களத்தில் குதிக்கத் தயாராக இருந்தனர். படாவியின் ஆட்சியின் போது அடையாளம் காணப்பட்ட பின்னடைவுகளை மக்கள் முன்னிலையில் போட்டுடைப்பதன் மூலம் கைரி பலவீனமடையக்கூடும் என மஹாதிர் எண்ணமாக இருந்ததைச் சொல்லித்தெரியவேண்டிய அவசியமற்றது. படாவிக்கு முக்கிய ஆலோசனைகளைக் கைரிதான் சொல்லிவருகிறாரென ஊடகங்களுக்குக்கூறி படாவியைச் சிறுமைப்படுத்தவும் மஹாதிர் தவறியதில்லை. மாஹாதிரின் சொல்லம்புகளின் ரணத்தைத் தாளமுடியாமல் இறுதியில் நாற்காலியைக் காலிசெய்துவிட்டு உம்ராவுக்குக் கிளம்பிப்போய்விட்டார் படாவி. ( இங்கேயும் குடும்ப அரசியல் குடுமியைப்பிடித்து ஆட்டித்தான் வருகிறது பாருங்கள்)

ஆளுங்கட்சியில் இன்னொரு பலம்வாய்ந்த ஒன்றாக இந்தியர் சார்ந்த அரசியல் கட்சியாக மலேசிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.க) விளங்கி வருகிறது. இதன் நீண்டகாலத்தலைவராக டத்தோ சிரி சாமிவேலு பதவியைக்கெட்டியாக பிடித்தவண்ணமிருக்கிறார். 2008 தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி கண்டதற்கு ம. இ.கவும் ஒரு காரணமெனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக நெடுங்காலமாக ம.இ.கவின் தலைவராக இருக்கும் சாமிவேலு கட்சி நிலைகுலைந்ததற்கும் அவரின் கட்சியை வழி நடத்திச்செல்லும் முறை அதிகாரத்தோரணையுடையது எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. மக்களின் குறையைக் கரிசனதோடு அணுகாமல், காத்திரத்தோடு முன்னெடுப்பதால் தோல்விக்கான முகாந்திரக்காரணமென மஹாதிர் சொல்லிவந்தார். மஹாதிர் ஆட்சியிலிருந்த போது கட்டுப்பட்டு வந்த சாமிவேலு, அவரின் பதவி துறப்புக்குப்பிறகு தன்னைப்பற்றி அவர் வெளியிட்டு வந்த கருத்துக்களுக்கு பதலடி கொடுக்கத்தவறவில்லை. பல தருணங்களில் சாமிவேலுவின் விசுவாசிகள் தன் தானைத்தலைவரைப்பற்றி விமர்சிப்பதைத்தாங்க முடியாது, மாஹாதிருக்கு எதிர்வினைகளாற்றத் துவங்கினர். கடந்த ம.இ.க பேரளர் மாநாட்டில், ஒரு பேராளர் தன் தலைவன் மீதான விசுவாசத்தை நிரூபிக்க, தன் கருத்தை முன்வைக்கும்போது சாமிவேலுவை பதவி விலகச்சொல்லும் மாஹாதிரின் நிழல் படத்துக்குச் செருப்பு மாலை போடவேண்டுமென்று வன்மையான குரலின் சொல்லியிருக்கிறார். (இராக்கிய நிருபர் புஷ்ஷை செருப்பால் தாக்க முயன்றது போன்றோ, இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் மீது வீசியது போன்ற வீச்சுகளில் இறங்காமல் நல்லகாலமாக வாய்வீச்சோடு நின்றுபோனது )

இந்தச்செய்தியை வெகு ஜன ஊடகங்கள் அவர்களின் பிரச்சினைகளுக்கான கிரியா ஊக்கிகளாக வடிவமைத்துக்கொடுத்தன. UMNO வைச்சேர்ந்த அரசியல்வாதிகள் இதனை ஊதிப்பெருக்கினர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, மஹாதிர் இதற்கு எதிர்வினையாற்றியதுதான் அனுபவமிக்க ஒரு நாட்டுத்தலைவரிம் மேதைமையை நிரூபித்தது. நிருபர் ஒருவர் தொடுத்த வினாவுக்கு “என் படத்துக்கு செருப்பு மாலை போடவேண்டுமென்று சொன்னவர்மேல் எனக்குக்கோபமில்லை, அவரின் வார்த்தைக்குப்பின்னால் இருக்கும் சாமிவேலு மீதுதான் நான் கோபமுறுகிறேன்,” என்றார். “ம. இ.க இந்த அளவுக்குச் சீர் கெட்டுப்போனதற்கு சாமிவேலுதான் காரணம், எனவே அவர் பதவி விலகுவது நாட்டுக்கும் நல்லது, அது சார்ந்த ஆளுங்கட்சிக்கும் நல்லது, 2008 தேர்தல் பின்னடைவுக்குச் சாமிவேலுவும் பொறுப்பேற்கவேண்டு” மெனவும் ஒரு போடு போட்டார். அவர் கொடுக்கும் நெருக்கடி தாங்க முடியாமல், பிரச்சினையை ஆறப்போடும் பொருட்டு “நான் இரண்டு மாதம் விடுமுறையில் போகிறேன்” என்று அறிக்கை விட்டார் சாமிவேலு.

“இரண்டு மாதமென்ன இருபது வருடம் விடுமுறையில் போகட்டும்,” என்று நக்கலடித்தார் மஹாதிர். இப்போது சாமிவேலு தான் 2011 ஆண்டு பேராளர் மாநாட்டுக்குப்பிறகு பதவி ஓய்வு பெறுவேன் என்று வருத்தத்தோடு உறுதியளித்திருக்கிறார். இந்தப்பெருமை யாரைச்சேரும்?2008 தேர்தலுக்குப்பிறகு ஆளுங்கட்சியான தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பானமையை இழந்ததற்கு இன்னோரு காரணம் மக்களிடையே உண்டான அரசியல் விழிப்புணர்ச்சி. மாஹாதிர் காலத்தில் துணைப்பிரதமராக இருந்து, மஹாதிரின் மிகப்பெரிய வைரியான அன்வர் தலைமையிலான எதிர்க்கட்சி கட்சி கூட்டணி அமைத்தது ஒரு முக்கியக்காரணம். இங்கே இந்தியர் சார்ந்த புகழ்பெற்ற 2007ஆம் ஆண்டு மக்கள் சக்தி போராட்டத்தையும் ஒரு காரணமாகச்சொல்லலாம்.அன்வர் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் மட்டுமல்ல தேர்ந்த சமயத்தலைவரெனவும் மதிக்கப்படுபவர். என்னதான் பல ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் அவரின் பழைய செல்வாக்கு மக்களிடையே நீர்த்துப்போகாமல் இருந்துவந்தது. அதனடிப்படையில் அவர் தலைமையிலான எதிர்க்கட்சி பல மாநிலங்களை வென்றது. மூன்றில் ஒரு பெரும்பான்மையின் தினவோடு நாடாளுமன்றத்தில் அமர்ந்தது. அதனால் அன்வரின்மேல் மஹாதீருக்கு இருந்துவந்த காழ்ப்பு சற்றும் குறைந்தபாடில்லை. அவ்வப்போது அவரைக் கிண்டலடித்தபடி இருக்கிறார் 80 வயதைத்தாண்டிய மஹாதிர்.சிலாங்கூர் மாநிலம் அன்வர் தலைவராக இருக்கும் கூட்டணியின் தயவில் ஆட்சியைப்பிடித்தது. இன்றைக்கு அதன் முதல் அமைச்சராக இருக்கும் டான் சிரி காலிட், அன்வரை ஒரே ஒரு மலேசிய ரிங்கிட் சம்பளத்துக்கு மாநில பொருளாதார ஆலோசகராக நியமித்தார். மஹாதிர் சும்மா இருப்பாரா?

“ஆமாம், அன்வர் ஒரு ரிங்கிட் மட்டுமே சம்பளம் வாங்கத்தகுதியானவர்தான். அவர் நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது நாட்டின் நிதிநிலைமை எந்த அளவுக்கு ‘முன்னேற்றமடைந்தது’ என்பதைத் உணர்ந்துதான் அவருக்கு இந்தச்சம்பளம் கொடுக்கப்படுகிறது,” என வஞ்சப்புகழ்ச்சி செய்தார்.UMNO வின் மகளிர் பிரிவு தலைவியாகவும், வெளிநாட்டு வணிகத்துறை அமைச்சராகவுக் இருந்தவர் ரபிடா அஸிஸ். விலையுயர்ந்த கார்கள் வாங்கி விற்கும் அளிப்பாணையைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது சுமத்தினார் மஹாதிர். மஹாதிர் பதிவி ஓய்வுபெற்றுவிட்டபடியால் அம்மையாருக்குக் கோபம் பொங்கிவிட்டது. மாஹாதிருக்கு ‘ஞாஞோக்’ கண்டுவிட்டது அதனால் தான் உளறி வருகிறார் என்று கூறிவிட்டார். மலாய் மொழியில் ஞாஞோக் என்றால் தள்ளாமையால் உண்டாகும் மறதி, உளறல் என்று பொருள் கொள்ளலாம். தான் பார்த்து அரசியலில் வளர்ந்த பிள்ளைகள் தன்னையே பதம் பார்ப்பதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நபரல்ல அவர்.

“ நான் உளறுகிறேனா, நீ உளறுகிறாயா?” என தான் கூறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களைப்புட்டு புட்டு வைக்க, அம்மையார் வெள வெளத்துப்போய்விட்டார். அதன் பிறகு நடந்த UMNO மகளிர் தேர்தலில் தோல்விகண்டு, அரசியலை விட்டு விலகியது மகாதீரோடு சரி சமமாக சமருக்கு நின்றதில் உண்டான பிரதிபலனாக அமைந்தது.

பதவியிலிருந்து ஓய்வுபெற்றாலும் அரசியல், சமூகவியல் மைய நீரோட்டத்திலிருந்து தன்னை இன்னும் ஐக்கியப்படுத்திக்கொண்டு இயங்கி வருகிறார். தன் ஆலோசனையையும், விமர்சனத்தையும் விரும்புகிறார்களோ இல்லையோ அதனை தயங்காமல் கூறி வருகிறார். இவர் வாயில் விழுந்தவர்கள் விழுங்கப்பட்டு வருகிறார்கள் என்பதை நாடு உணர்ந்தே இருக்கிறது. எனவே மகாதிரூக்கு எதிரான வாய்ச்சவடால் இப்போதெல்லாம் அருதியாகிவிட்டது.ko.punniavan@gmail.com

Thursday, December 3, 2009

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்


கோ.புண்ணியவான்

இறுதிப்பகுதிஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியர்கள் மலேசியாவுக்கு ஒப்பந்தக்கூலிகளாகக்கொண்டு வரப்பட்டார்கள் என்பது பழைய செய்தி. இன்றைக்கும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது வேறொரு தளத்தில். தொழில்துறையில் துரித மேம்பாடு கண்டு வரும் மலேசியாவுக்கு உடல் உழைப்புத்தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத்தேவையை நிவர்த்தி செய்ய ஆசியாவிலிருந்து நிறைய பேர் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் தொழிலாளர்கள் முதலாளிகளால் இங்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அன்றைக்கு காலணித்துவ வாதிகள் அதனைச்செய்தார்கள். இன்றைக்கு சொந்த இனமே இவர்களைக்கொண்டு வந்து சுரண்டிக்கொண்டிருக்கிறது.

‘சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே’ என்று பாரதி பாடியது போலவே, மலேசியாவிலும் ஒரு கவிஞர் இந்த தமிழ் நாட்டுத்தோழர்கள் படும் வேதனையைய்பாடுகிறார்.கடனுக்கும் லெவிக்கும் கட்டவே

சதா எரியும் அடுப்பு நெருப்பருகில்

உடல் நோக வெந்தும்

உயிர் நோக நொந்தும்

உழைத்ததெல்லாம் போகுமென்பது

எனக்கென்ன தெரியும்காய்ச்சலில் கிடந்த ஊர்க்காரரின்

காதில் சொல்லிச்சென்றது

டிங்கிக்கொசு

(மா.சண்முக சிவா)அகவயப்பயணம்

புதுக்கவிதை எழுதிக்கொண்டிருந்த படைப்பாளர்கள் பலர் இன்றைக்கும் அதிலேயே தேங்கி நின்றுவிட்டார்கள். இன்றைக்குக் கவிதை நவீன களத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை அவர்களால் அவதானிக்க முடியவில்லை. நவீன சிந்தனை அகவய வெளிப்படாக அமைந்துவிடுவதே அதற்குக் காரணம். படைப்பாளனுக்கே உரிய அகத்தின் தர்க்கமாக, அதன் முரண்பாடுகளோடும், கலை நுட்பத்தோடும் புதிய திசையை நோக்கிய பார்வையாகப் பதிவாகிறது நவீனக்கவிதைகள். வாசகனோடான சமரசத்துக்கே இடம் தராத அரசியலோடு கவிதைகள் எழுதப்படுவதால் புதுக்கவிதை எழுதிக்கொண்டிருக்கும் பலரால் நவீன தளத்தில் இயங்க முடிவதில்லை. மலேசியாவில் இயங்கும் வாசகப்பரப்பு வெகுஜன படைப்பை நோக்கியே நகர்கிறது. இறுக்கமான மொழி நடையைக்கொண்ட கவிதையை மீள்வாசிப்புக்கு கொண்டுவந்து நுகரும் பக்குவம் இவர்களிடையே கிடையாது. இருப்பினும் நவீன கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்ட சிலர் புதுகவிதையைத்துறந்துவிட்டு நவீனத்துக்குப் புலம் பெயர்ந்துவிட்டார்கள். ம.நவீன், மகாத்மன், பா.அ.சிவம், சந்துரு, கே.பாலமுருகன், ஏ.தேவராஜன், மீராவாணி, வீ.மணிமொழி, தினேசுவரி, ந.பச்சைபாலன், சை.பீர்முகம்மது, பூங்குழலி வீரன், யோகி, தோழி, கருணாகரன், சீ.அருண், கோ.புண்ணியவான், கோ.முனியாண்டி ஆகியோரை நவீன களத்துக்கான பங்களிப்பைச்செய்கிறார்கள் எனக் குறிப்பிட்டுச்சொல்லலாம்.

நவீனக்கவிதைகளுக்குப் புள்ளையார் சுழி போட உதயமான காலாண்டிதழ் காதல். தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச்செல்லும் முயற்சியாக இது ஆரம்பிக்கப்பட்டது. இளம் எழுத்தாளர்கள் இதனைத்தீவிரப்படுத்தியும் இது ஓரண்டுகாலமே களம் கண்டபின் இயற்கையின் விதிக்கு ஆளானது. இருப்பினும் இதன் நீட்சியாக ‘வல்லினம்’ இலகிய இதழ் வரத்துவங்கியது. காதலில் ஈடுபட்ட அதே இளைஞர் அணியான ம.நவீன்,பா.அ.சிவம்,சந்துரு ஆகியோர் இந்தக்காலாண்டிதழ் தழைப்பதற்கான உழைப்பை வழங்கி வருகின்றனர். இதன் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று நவீனக் கவிதைக்கான களம் அமைத்துக்கொடுப்பதாகும். அது இதுநாள் வரை செவ்வனே நடந்து வருகிறது. ( இன்றக்கு வல்லினம் காகித ஊடகமாக இல்லாமல் மின் இதழாக வருகிறது) வல்லினம் இதழில்,

அகவய மொழியில் பதிவான ஒரு கவிதை இது.எதிரெதிர் நின்றாலும்

கடந்தேகிச்சென்றாலும்

யாரோ!யார்?யாராகவோவென

மொழியறியாக்காற்றாகி

விலகுகிறோம்

யிருவருக்குள்ளும் யிருவரும்

பதிவாகியிருப்பதை

யறிந்தும்கூட கோ.முனியாண்டி

நவீனக்கவிதைகளின் தாக்கம்தமிழநாட்டில் நவீனக்கவிதைகளின் வரவு மலேசியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மரபு சார்ந்த கவிதையின் பாடுபொருள்களை நவீனம் உடைத்துக்காட்டியது. அதன் உள்ளடக்கத்தில் புதுமைகளைச்செலுத்தின.எடுத்துக்கட்டாக ஒரு கவிதை:அது கூட இல்லைஇரண்டாவது முறை இறப்பது

அத்தனை எளிதல்ல

இரண்டாவது முறை இறப்பதற்கு முன்

இரண்டாவது முறையாக

பிறர் நம்பும்படி வாழ்ந்தாக வேண்டியுள்ளது

பிறர் நம்பும்படி சிரிக்கவும்

பிறர் நம்பும்படி பேசவும்

பிறர் நம்பும்படி அன்பு செலுத்தவும்

வேண்டியுள்ளதுஇரண்டாவது முறை இறக்கையில்

நம்மைச்சுற்றி உள்ளவர்கள்

அழாமல் போகும் அபாயம் உண்டு

இன்னும் கொடூரமாய்

நாமே இறப்பது பற்றி

கவலைப்படாமல் போகலாம் (ம.நவீன்)‘மௌனம்’ பேசிய கவிதை மொழி.2009 ஆம் ஆண்டுத்துவக்கத்தில் மௌனம் என்ற முழுக்க முழுக்கக் கவிதைக்கான சிற்றிதழைக்கொண்டு வருகிறார் கவிதைப்பிரியர் ஜாசின் தேவராஜன்.இதற்கு முன் சீ.அருண் அருவியையும் கவிதை இதழாகவே அறிமுகப்படுதியதைக்குறிப்பிட்டு அதன் நீட்சியாக இதனைத்தொடர்வதாகக் குறிப்பிடுகிறார் தேவராஜன். எல்லாச்சிற்றிதழுக்கும் நேர்ந்த அதே முறிவால் அருவியும் பொருள் மழை பெய்யாது வற்றிவிட்ட நிலையில், மௌனம் நின்று பிடிக்கும் என்ற பிடிவாதத்தோடு இன்றைக்கு ஆறாவது இதழ்வரை தன்னுடைய கவிதை யாத்திரையைத் தொடர்ந்திருப்பதானது, நமக்கு அதன் நீண்ட ஆயுளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைக்கிறது.முழுக்க முழுக்க நவீனக் கவிதைகளுக்கே தாரை வார்க்கப்பட்ட இவ்விதழில் எழுதும் கவிஞர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே வெகுஜனப்பதிரிகைக்கு எழுதிவந்தவர்களெனினும் நம்பிக்கையூட்டும் புதியவர்கள் சிலரை அறிமுகப்படுத்துகிறார். ந.தமிழ்ச்செல்வி.,தினேஸ்வரி,மகேந்திரன் நவமணி,ரிவேகா,மீராவாணி,புவனேஸ்வரி, முனீஸ்வரன் என்ற புதிய பட்டியல் நமக்குக்கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.முடிவுரை

இங்கு நவீன கவிதைகளை நிறுவுவதற்கான போராட்டம் நடந்தவண்ணம் இருக்கிறது.மலேசிய எழுத்தாளர் சங்கம் கவிதை வளர்ச்சிக்கு மிகுதியாக உழைக்கிறது.கருத்தரங்கங்களையும் போட்டிகளையும் நடத்துகிறது.தனியார் நிறுவனமான தேசிய நிலநிதிக்கூட்டுரவு சங்கம் ஆண்டு தவறாமல் நடத்தும் இலக்கிய போட்டிகளில் புதுக்கவிதையையும் சேர்த்துக்கொண்டு பரிசுத்தொகையாக மலேசிய ரிங்கிட் 5000த்துக்கும் கூடுதலாகச்செலவு செய்கிறது.மலேசிய ஏடுகள் புதுக்கவிதையை வளர்த்தெடுக்க பிரசுரித்து ஊக்கம் அளித்து வருகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதிய கவிஞர்கள் தோன்றத்தான் செய்கிறார்கள். ஆறு ஆண்டு வரைக்குமே வரையறுக்கப்பட்ட தமிழ்க்கல்வி அறிவை வைத்துக்கொண்டுதான் பெரும்பாலோர் கவிதை எழுத வருகிறார்கள். வாசிக்கும் பழக்கம் இவர்களின் கவிதைகளைப் பட்டைத்தீட்டுகின்றன.ஆனால் தரமான கவிஞர்களின் எண்ணிக்கை மிகச்சிறியது. இருப்பினும் காரம் மாறாத கடுககளாகவே இவர்கள் இருப்பதானது, மலேசியாவில் கவிதை வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைக்கிறது.2007க்குப்பிறகு வெளியான கவிதை நூல்கள்மலேசியாவில் 2006 வரை 58 புதுக்கவிதை நூல்கள் வெளியாகி உள்ளன.2007 தொடங்கி வெளிவந்த நூல்களின் பட்டியல் இது:-

1. சுடர் மின்னல் பொன்.நாவலன்.

2. தமிழே உன்னைக்கண்டேன் ரா.அந்தோணிசாமி

3. மக்கள் சக்தி ஏ.எஸ்.பிரான்சிஸ்

4. என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் ந.பச்சைபாலன்

5. கடவுள் அலையும் நகரம் கே.பாலமுருகன்

6. இரணங்கள் ஜமுனா வேலாயுதம்

7. ம.நவீனின் கவிதைகள் ம.நவீன்

(5/6 ஜூன் திங்கள் 2009ல் மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாட்டில் தஞ்சைப்பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Wednesday, December 2, 2009

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்


கோ.புண்ணியவான்

பகுதி 5அந்த மழை பொழுதில்தானே

தோட்டத்தின் முச்சந்தி மரம்

கிளைகளை உதிர்த்திருக்கும்?

மரத்தில் அமர்ந்திருந்த

குருவிகள்

பறந்தோடிய ஓசையை

மழை சிதறலின் ஓசையைவிட

உன்னிப்பாகக் கேட்க முடிந்ததே!

(கே.பாலமுருகன்)

தமிழ்க்கல்வியைத் துடைத்தொழிக்கும் கொள்கைமலேசியா தொழில் துறை நாடாக மாறிக்கொண்டிருப்பதாலும், தொழில் நுட்பத்துறை ஆங்கிலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாலும் அறிவியல் கணிதம் போன்ற பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பது அவசியமென உணர்ந்த முன்னால் பிரதமர் மகாதிர், ஆரம்பக்கல்வித்தொடங்கி பலகலைக்கழகம் வரை அப்பாடங்கள் ஆங்கில கற்றல் கற்பித்தலுக்கு மாற்றப்பட வேண்டும் என மக்கள் கவனத்தைத்திருப்பினார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆரம்பப்பள்ளிகளில்( அடிப்படைக்கல்வி முதல் ஆறு ஆண்டு வரை) மலாய், ஆங்கிலப் பாடங்களைத்தவிர்த்து பிற பாடங்கள் தாய்மொழியிலேயே போதிக்கப்பட்டு வந்தன. தாய்மொழியின் மீது பற்று கொண்டவர்கள் பிரதமரின் இத்திட்டம் தமிழ் சீனம், மலாய் போன்ற மொழிகள் பேசுவதும் எழுதுவதும் குறைந்துவிடும் எனவும் மரபு சார்ந்த அதன் கலாச்சார தொன்மங்களும் அழிந்தொழிந்துவிடும் என்று முடிவெடுத்து, அக்கொள்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.அப்படி வந்த கவிதைகளில் ஒன்று இது.தமிழ் மொழிக்கு

ஊறு விளைவித்தக்

கூட்டுச்சதி இந்நாள்மொழிக்கு முள்கிரீடம்

அணிவித்த

பாவிகள் நாம்

ஒரு வகையில்

நாமும் யூதாஸ்கள்தாம்.

தமிழ்த்தாய் மகுடத்தை

மண்ணில் தட்டிவிட்டு

கொடும்பாவி எரிக்க

தீப்பந்தம் கொடுத்த

கருப்பு நாள் இது ( கோ.புண்ணியவான்)

மலேசியச் சரித்திரத்தில் 2007 நவம்பர் 25ம்நாள் தமிழர்களின் எழுச்சி தினமாகக் கருதப்படுகிறது. மலேசியா விடுதலை அடைந்து ஐம்பது ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டுவந்த சமூகம் அன்றைய தினத்தில் தங்கள் உரிமைகளுக்காகப்போராட தலைநகரில் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டனர். மக்கள் தொகையில் எட்டு சதவிகமாக இருக்கும் இந்தியர்களின் சொத்துடமை இந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு சதவிகிதத்தைக்கூட எட்ட முடியாத அவல நிலையில் இந்த தார்மீகக்கோபம் புரட்சியாக வெடித்தது.அரசு வேலை வாய்ப்புகளில், உயர் கல்விக்கூட கல்வி பயிலும் வாய்ப்புகளில், வணிக லைசன்ஸ் பெறுவதிலும்,வணிகத்துக்காக அரசு கடன் பெறுவதிலும் மாலாய்க்கார இனத்தோடு ஒப்பிடும்போது பெரிய ஏமாற்றத்தையும் சரிவையும் நம் இனம் அடைந்து வந்தது. ஆளுங்கட்சியோடு இணைந்திருந்த இந்தியர் சார்ந்த கட்சிகளும், அரசு சாராத பொது இயக்கங்களும் இந்தியர்களின் பின்னடைவை முன்வைத்து அதற்கான தேவைகளை முன்மொழிந்தும் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்ககான கதையாகவே ஆனது. ஐம்பது ஆண்டுகளாய் இதுபற்றிய கோரிக்கைகள் எழுப்பியும், மகஜர்கள் அனுப்பியும், பெரிதாய் ஒன்றும் சாதித்துவிட முடியவில்லை. இதனால் மற்ற சமூகங்களோடு ஒப்பிடும்போது இந்திய சமூகம் ஒரு பின்தங்கிய சமூகமாகவே கட்டமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலை நீடித்தால் மலேசியா வளர்ந்த நாடாகிவிட்ட நிலையில் இந்த சிறுபான்மை சமூகத்தின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மேலோங்கிய வண்ணம் இருந்தது. ஆளுங்கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு முக்கிய உருப்புக்கட்சியாக இருந்துவரும் ம.இகா இந்தியர் கல்வி சமூக நலன்களில் அக்கறை காடுவதான பாவனையிலேயே காலத்தைக்கழித்தது. பெரும்பான்மை இனமான மலாய் சமூக முன்னேற்றத்தின் மேலேயே ( 60 சவிகித வாக்கு வங்கி உடைய சமூகம்) ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வந்தது. சிறுபான்மை இனத்தின்பால் போதுமான அக்கறை செலுத்தாமலிருந்ததால், இந்திய சமூகம். கல்வி பொருளாதார மேம்பாட்டில் பின்னடைவு கண்டது. இதனாலேயே பெட்டிப்பாம்பாய் இருந்த சமூகம் 2007 நவம்பர் 25ல் உரிமைக்கேட்டு போராட்டத்தில் குதித்தது. இதனை உலகம் மக்கள் சக்தி போராட்டமென்றே கருதுகிறது. இந்தியசமூகத்துக்குச் சோதனை நிறைந்த காலக்கட்டமாகக் கருதிய நம் கவிஞர்களுக்குக் கற்பனை கரை புரண்டது.அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது!சுவைபான கோப்பையில்

தெரிந்தே விழுந்திருக்கலாம்

ஈக்குஞ்சுகாப்பாற்ற விரைந்து

பின்பு பின்வாங்கிய விரல்கள்

அதன் மரணத்தில்

மெளனமாய்ச் சிரிக்கின்றனகோப்பைக்கு வெளியே

ஈக்குஞ்சுக்கு என்ன கிடக்கிறது?விரட்டலுக்கும் துரத்தலுக்கும்

இன்னும் அடித்தலுக்கும்

இலக்காக்கிக் கொண்டு

சொற்ப வாழ்வின்

இடுக்குகளில்

சிதறுண்டு போவதைத் தவிர... ஏ.தேவராஜன்,சமூக எழுச்சிக்கு வித்திட்ட இந்தப் போராட்டத்துக்கு ஐவர்(அவர்களுள் நால்வர் வழக்கறிஞர்கள்) முன்னின்றனர்.இதன் காரணமாக ஒடுக்குமுறை சட்டமான, உள்நாட்டுப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இவர்கள் சிறை வைக்கப்பட்ட பாதிப்பை ஒன்பதாவது பொதுத்தேர்தலில் அரசே உணரும்படியான வரலாறு காணாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது.முதல் முறையாக இந்தியர்கள் பெரும்பான்மையான வாக்குகளை எதிர்கட்சிக்கு சேர்ப்பித்தன.கேள்வி முறையின்றி தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய கவிதை இது.கருப்புக்காகிதத்தில்

வெள்ளை மையிட்டு எழுதுங்கள்

இவர்கள் அஞ்சாத வாசம் கொண்ட

புதிய பஞ்சபாண்டவர் என்றுநீண்டு இருக்கும் வரைதான்

இவை விரல்கள்

இறுக இணைந்திருப்பின்

இவை......இவர்கள் ஐம்பொறிகள்

இந்தச்சமூகத்தின் ஜீவன்கள்

இவர்கள் ஐம்பூதங்கள்

எங்களின் மூல இயக்கம்

....................

................... ...... கோ.புண்ணியவான்எனத்தொடரும் இக்கவிதை சமூகம் எந்த அளவுக்கு இந்த ஐவரையும் கொண்டாடினார்கள் என்பதற்கான சிறிய உதாரணமாகத் திகழ்கிறது.கோயில் உடைப்புஉள் நாட்டுப்பாதுகாப்புச் சட்டத்தை தன் கைவசம் வைத்திருக்கும் அரசு சிறுபான்மை மக்களுக்கெதிரான தன் சித்து வேலைகளைப் பல காலமாகச்செய்து வருகிறது. மேம்பாட்டுதிட்டம் என்ற போர்வையில் மக்களின் வழிபாட்டுத்தளங்களை, குறுகிய கால அறிவிப்பைக்கொடுத்தோ அல்லது முன் அறிவிப்பு இன்றியோ இவை பதிவு பெறாதவை எனக் குற்றஞ்சாட்டி கோயில்களை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது அதில் ஒன்று. இதனால் கொதிப்படைந்த இந்துக்கள் இந்த உடைப்புக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.சில சமயங்களில் கோயில் வாளகத்திலே ஆயிரக்கணக்கில் முற்றுகை இட்டு மனிதச்சங்கிலியாக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க முனைந்தனர். (புதிய பிரதமர் நஜிப் பிரதமராகப்பொறுப்பேற்ற பிறகு கோயில் உடைப்பு குறைந்துவருகிறது) அதனைப்பிரதிபலிக்கும் கவிதைகள் பல புனையப்பட்டன.அதில் ஒன்று இது.என்னடா செய்வீங்க?முனீஸ்வர சாமி நெனவு தெரிஞ்ச நாளா

எங்க குடும்பமே கும்ம்பிட்டு வர எங்க குலசாமி

சாம்பிராணி புகையிலே

முண்டாசு, முறுக்கிய மீச, கையில அருவா

கம்பீரமா இருக்கும் எங்கள் காவல் தெய்வம்

துடியான தெய்வம்னு எங்க தாதா சொல்லுவாரு

காய்ச்சல்ல கெடந்த என்ன காப்பாத்தினது இந்த

ஐயனாரு தான்

அப்பத்தா சொல்லும் அடிக்கடி

கடப்பாறயில அவர இடிச்சி

கோயில தர மட்டமாக்கி

லோரியில தூக்கிப்போட்டு

போனான்ங்க அவனுங்க

“எங்க கடவுள காப்பாத்துங்களே:னு

கதறுனா எங்க தங்கச்சி

அன்னிக்கி திலஞ்சி போன சாமி

இன்னிக்கி வந்தாருதண்ணி அடிச்சாணுங்க சுத்தி பொகையா

கெலம்ப்பிச்சி

எல்லோரும் ஓடுனாங்க

நா ஓடுல

முண்டாசு, முறுக்கிய மீச

கையில அருவா

முனீஸ்வர சாமி இப்ப எனக்குள்ள

“டேய்ய் இப்ப வாங்கடா.....

என்னடா செய்வீங்க...........?

(பத்தாங்கட்டை பத்துமலை)

............தொடரும்

Tuesday, December 1, 2009

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.

பகுதி 4கருத்தரங்குகள் வழி புதுக்கவிதை படைபிலக்கியத்தை மீட்டெடுத்தல்முதல் புதுக்கவிதை கருத்தரங்குக்குப்பிறகு புதுக்கவிதை படைப்பிலக்கியம் ஒரு தேக்க நிலையை அடைந்தது.

இதற்குச்சில காரணங்களை முன்வைக்கலாம்:

1. மலேசியாவில் தமிழ்க்கல்வி முதல் ஆறு ஆண்டுகள் வரைதான்

போதிக்கப்படுகிறது.ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் சிலவற்றிலும்,

மலாயாப்பல்கலைக்கழகத்துலும் தமிழ் போதிக்காப்பட்டாலும்,அங்கிருந்து

இலக்கியப்படைப்பாளிகள் உருவாவது மிக அரிது.

2.புதுக்கவிதை எழுத வந்தவர்கள் அதன் நுணுக்கங்களைப்புரிந்து

கொள்ளாமை.

3.புதுக்கவிதைகளை வளர்ப்பதாக எண்ணி தரம் பாராமல் வார மாத ஏடுகள்

அவற்றைப்பிரசுரித்தது.

4.புதிதாக எழுத வருபவர்களின் ஆர்வக்கோளாறு.

5. விரிவான வாசிப்பு அனுபவம் இல்லாமை. ( நல்ல நூல்களை வாங்கிப்படிக்காமையும், தேடிப்பிடித்து படிக்காமையும்) எனப் பல காரணங்களை

முன்வைக்கலாம்.

புதுக்கவிதை எதிர்நோக்கிய இந்தச்சரிவை நேர் செய்ய முதல் கருத்தரங்கையைக்கூட்டியவர்கள் மீண்டும் புத்தெழுச்சிபெற்று எழுந்தனர்.

கோ.முனியாண்டி,எம்.ஏ.இளஞ்செல்வன், கோ. புண்ணியவான், துரை.முனியாண்டி, அருள்தாஸ், ஆகியோர் 1988ல் நவீன இலக்கியச் சிந்தனையை அமைத்து, கூலிமில் மீண்டும் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர். அன்றைய கண்ணீர்ப்பூக்களால் இளைஞர்களின் கனவுக்கவிஞராக வலம் வந்த மு.மேத்தா அந்தக்கருத்தரங்கில் கலந்துகொண்டதானது புதுக்கவிதைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது.

ஏழாண்டுகள் கழித்து,அதாவது 1995ல் கோ.முனியாண்டியின் ஏற்பாட்டில் சித்தியவான் நகரில் மீண்டும் ஒரு கருத்தரங்கைக்கண்டது நவீன இலக்கியச்சிந்தனை அமைப்பு.

அன்றைக்கு மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாலராக இருந்த பெ.ராஜேந்திரன், விட்டு விட்டுத்தொடரும் கருத்தரங்கு தொடர்ந்து நடப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, எழுத்தாளர் சங்கத்தி வழி, அதற்கு புது ரத்தம் பாய்ச்சும் வண்ணம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கைக்கூட்டினார். அந்தந்த பகுதியில் வாழும் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ளும் பொருட்டு இந்தக்கருத்தரங்குகள் ஏதுவாக இருந்தன. மூன்று மாதத்தில் எல்லாப்பத்திரிகைகளிலும் வெளியான புதுக்கவிதைகளின் ஆய்வு, அவற்றில் சிறந்தவற்றுக்குப்பரிசு, புதிய கவிஞர்களை அடையாளம் காணுதல், திடீர்க்கவிதை போட்டி எனப் புதுக்கவிதையின் வளர்ச்சியை நோக்கிய இலக்காக அதற்குக் களம் அமைத்துக்கொடுத்தது. புதுக்கவிதை வளர்ச்சியில் மிகுந்த அக்கறையும், ஆற்றலும் கொண்ட பேராசிரியர் வெ.சபாபதி எல்லாக்கருத்தரங்குகளின் போதும் புதுக்கவிதை படைப்பிலக்கிய நுணுக்கங்களைப்போதித்தது அதனை மீட்டெடுப்பதற்கான பெரு முயற்சியாகவும் அமைந்தது. தொடர்ந்து பதினைந்து கருத்தரங்கைக் கண்டவர் அதற்கான ஆதரவு மட்டுப்பட்டதால் அது மீண்டும் தொய்வு நிலைக்குத்திரும்பியது.

ஆனால் மீண்டும் 2009ல் ஏப்ரல் திங்களில் பினாங்குத் துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒரு கருத்தரங்கு கூட்டப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் சி.மோகன் இதில் கலந்து கொண்டு பேருரையாற்றினார். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் கருத்தரங்குகள் மையமிடும் என இன்றைய தலைவர் பெ.ராஜேந்திரன் சூளுரைத்தார்.

புதுக்கவிதையின் பாடு பொருள்கள்சாதியம்

கோட்பாடு சார்ந்த இலக்கியப்படைப்புகள் மலேசியாவில் இல்லை என்று சொல்லி விடலாம். ஆனாலும் மார்க்சியம்,சாதியம்,பெண்ணியம், போன்ற இசம் சார்ந்தவை கவிதைகளுக்குள், ஊடும் பாவுமாகக்காணமுடியும். இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒன்று சாதி சார்ந்த சிந்தனைச் சொல்லோவியங்கள்.காதல் சதிய வழக்கத்தை வேரறுத்து வருகிறது என்று சொல்லலாம்.ஆங்காங்கே சாதிய அமைப்புகள் தங்கள் சாதியைக்கட்டிக்காத்து வருகின்றன.சாதியின் பெயரை முன்வைத்து ஓட்டு வாங்கும் பழக்கம் மிக ரகசியமாக நடந்தேறுகிறது. குறிப்பாக அரசியல் களங்களில் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தைக்கண்டுபிடிக்க முடியவில்லை! அதன் வியாபகம் இன்றும் புற்றுப்பாம்பென அடங்கி இருப்பது போன்ற பாவனை தெரிகிறதே ஒழிய அது சமயங்களில் புற்றைவிட்டு வெளியேறி படமெடுத்து ஆடவும் செய்கிறது .இதனை ஒரு கவிஞர் இப்படி பதிவு செய்கிறார்.ஜாதி

கிளைத்தேர்தல் நடந்தது

இறுக்கத்துடன் உறுப்பினர்

பரபரப்புடன் ஓட்டுப்போட்டனர்

வெற்றிபெற்றது சாதி

தோல்வியுற்றது நீதி

செ.குணாளன்அப்புறபடுத்தப்பட்டுவரும் தோட்டப்புறம்காலணியவாதிகளால் சஞ்சிக்கூலிகளாக மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்களின் வரலாறு தோட்டப்புறத்தில்தால் அதிகம் தேங்கிக்கிடக்கிறது.காடுகளாக இருந்த மலயா மண்ணை சீர்படுத்தி ரப்பர்,தேயிலை,செம்பனை நடுவதற்கு உகந்த இடமாக மாற்ற அடிமைப்போக்கும் உடல் உழைப்புக்கு சற்றும்தயங்காத மனோபாவமும் கொண்ட தென்னிந்தியர்கள் மிகப்பொருத்தமான இனமாக வெள்ளையர்களால் அடையாளம் காணப்பட்டார்கள்.பின்னாளில் அவர்களாலேயே உருவாக்கப்பட்ட ரப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.சுரண்டலுக்குப் பேர்போன காலனியவாதிகள் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்புரட்சிக்குத் தேவைப்பட்ட மிக முக்கிய மூலப்பொருளான ரப்பரைத் தேக்கமில்லாமல் உற்பத்தி செய்வதற்கு இவர்களின் அடைமைத்தனம் பெரிதும் உதவியது. இதனைச் சாதகமாகப்பயன்படுத்திய பிரிட்டிசார் மேலும் மேலும் தோட்டப்புறங்களை நிறுவி தென்னிந்திய குடும்ப சந்ததியினர் தொடர்ந்து தோட்டப்புறத்திலேயே வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை செய்து தந்தனர்.அவர்கள் வழிபடும் மாரியம்மன், முனீஸ்வரர் கோயில்கள் ,தமிழ் தெலுங்கு மலையாளப்பள்ளிகள், ஆயாக்கொட்டகைகள் என்று சொல்லப்படும் குழந்தைக்காப்பகங்கள்,சில இடங்களில் சினிமா கொட்டகைகள்,கள்ளுக்கடைகள் போன்றவை நிறுவப்பட்டன.தோட்டப்புற மக்களுக்கு வெளி உலகத்தைக்காட்டினால் ரப்பர், தேயிலை, செம்பனை உற்பத்தியில் பாதிப்பு வந்துவிடும் என்று கருதிய பிரிட்டிசார் இவர்கள் தோட்டப்புறத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கான தந்திரமாகவே இவ்வாறான வாழ்வை அவர்களுக்காகக் கட்டமைத்துக்கொடுத்தனர். வெள்ளையர்களால் ஓட்டிவரப்பட்ட தென்னிந்தியர்களின் மூன்று தலைமுயினரின் பெரும்பாலோர் தோட்டப்புறங்களிலேயே தங்கள் வாழ்நாளைக்கழித்தனர்.ஆனால் இன்றைக்கு அந்த நிலை மாறி வருகிறது.மலேசியா தொழில் துறையில் கவனம் செலுத்திய நாளிலிருந்து தோட்டப்புறங்கள் மலேசிய நிலப்படத்திலிருந்து காணாமற்போய்க்கொண்டிருக்கிறது.தோட்டப்புற மக்கள் தொழில் துறைக்கு மாற நேர்ந்தது.இதனால் தோட்டப்புறக் கலாச்சாரம் கை நழுவிப்போகும் அபாயத்தை எட்டியது.தோட்டப்புறச்சூழலின் வாழ்வனுபவத்தை கவிஞர்கள் பதிவு செய்தும் வைத்துள்ளனர்.தோட்டத்திலுள்ள பழைய வீட்டுக்குத்

திரும்ப வேண்டும்

பார்வைக்குத்தென்படாதெனினும்

உள் நுழைந்தால் உணரமுடியும்

எரிக்கப்பட்ட கித்தா கொட்டைகளின் தணலை

வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது

உள்ளேயே அடைந்து வாழ்ந்து

மக்கிப்போன

தாய்தந்தை தமக்கையின்

ஆகக்கடைசி சொற்களைப் பொறுக்குவதற்கு

திரும்பியே ஆகவேண்டும்

அதற்குபின்னர்

என்ன வாழ்வு. (ப.அ.சிவம்)எரிக்கப்பட்ட கித்தா(ரப்பர்)கொட்டைகளின் தணலை, உள்ளேயே அடைந்து வாழ்ந்த மக்கிப்போன வாழ்வு, என தோட்டப்புற வாழ்வுத்துயரத்தின் குறியீடாக கசியும் சொற்களின் சோகத்தை அங்கு வாழ்ந்தவர்கள் மட்டுமின்றி, இதனை வாசிப்பவகளும் உணரமுடிகிறது. இதனைக்கட்டியங்கூறுகிறது இன்னொரு கவிதை. .......தொடரும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோர் ஆரம்பத்தில் அடியெடுத்துக்கொடுத்த முன்னோடி தலைமுறையினரோடு கைகோர்க்கத்துவங்கினர். அதன் பின்னர் புதுக்கவிதை மேலும் பரிணமிக்கத்துவங்கியது.மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூல் எம். ஏ. இளஞ்செல்வனின் நெருப்புபூக்கள், மே மாதம் 1979 வெளிவந்து மற்ற புதுக்கவிதை நூல்கள் வெளி வருவதற்கான நம்பிக்கையையும்,களத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.அதே ஆண்டில் டத்தோ சிரி சாமிவேலு பொன்விழா இலக்கியபோட்டியில் பிற இலக்கிய வடிவத்தோடு சேர்த்து, புதுக்கவிதையிக்கும் இடமளித்ததானது அதற்கான மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மலேசியாவின் முதல் புதுக்கவிதைக் கருத்தரங்கை 1979ல் சீ.முத்துசாமி,நிலாவண்ணன் எம்.ஏ.இளஞ்செல்வன் ஆகியோர் சுங்கைப்பட்டாணியில் நடத்தினர். எழுத்துத்துறையில் ஏற்கனவெ முத்திரை பதித்த டாக்டர் ரெ.கார்த்திகேசு,பைரோஜி நாராயணன் போன்றோரின் பக்க பலம் இதற்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது.முதல் தலைமுறையினர் போட்டுத்தந்த பாதையில் துணிச்சலோடு களம் காண்கிறார்கள் இரண்டாவது தலைமுறை எழுத்தாளர்கள். சிரி ரஜினி, கனலன்.சு.கமலா,ஏ.எஸ் பிரான்சிஸ், மனஹரன்,நாகராஜன்,ப.ராமு,கு.கோபாலன்,கோ.புண்ணியவான்,த.விஜயநாதன்,க.உதயகுமார் போன்றவர்கள் படையெடுப்பு புதுக்கவிதைக்கான அழுத்தமான அங்கீகாரத்தைப் பதிவு செய்கிறார்கள்.

இவர்கள் காலக்கட்டத்தில் புதுக்கவிதைத்துறை புதுவேகமும் புத்தெழுச்சியும் உண்டானது. சீர்கேடுகளை மிகக்காத்திரமான பார்வையோடும், தார்மீக்கோபத்தோடும்,அங்கத நோக்கோடும், கண்டிக்கும் தோரணையோடும் பல தரமான கவிதைகள் புனையப்பட்டன.

இன்றைக்கு மலேசியா அனுபவிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்குத் தொழில் துறை வளர்ச்சி பெரிதும் உதவியது. இந்தத் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது ரப்பர் மரங்கள்தான்.இந்தச்செழிப்புக்கு மிக முக்கிய காரணியாக அமைந்தது சஞ்சிக்கூலிகளாக தர்ம ஆர்டரில் வந்த தமிழர்கள்தாம்.நாடு முன்னகர்ந்துவிட்டது.ஆனால் அதற்காக ரத்தம் சிந்தியவர்கள் பின்தள்ளப்பட்ட நிலையை சித்தரிக்கும் கவிதையைப்பாருங்கள்.தமிழன்

இவன் நட்ட மரங்கள்

நிமிர்ந்து விட்டன

இவன் நடும்போது

குனிந்தவந்தான்

இன்னும் நிமிரவே இல்லை.

(கோ.புண்ணியவான்)சயாமிலும் மலேசியாவிலும் ரயில் தண்டவாளங்களை அமைப்பதற்கு உடல் உழைப்புத்தொழிலுக்கு மிக உகந்தவனாக தமிழன் அடையாளம் காணப்பட்டான். குறிப்பாகச் சயாமில் ரயில் தண்டவாளங்கள் போடப்பட்ட சரித்திரம் தமிழனின் நரகவேதனை அனுபவித்ததைப் பறைச சாற்றும் ஒன்று. இந்தக்கவிதை இந்த அல்லலைச் சொல்லால் குத்துகிறது.இணைக்கோடுகளாய்

ஓடும் தண்டவாளங்கள்

இரும்புத்துண்டுகளா ?

இல்லை....

எங்கள் எலும்புதுண்டுகள்.! (காசிதாசன்)மலேசியா பிரிட்டிசாரிடமிருந்து சுதந்திரம் பெற, மலாய் சீன இந்திய சமூகங்களின் ஒற்றுமை தேவைப்பட்டது.சுதந்திரத்திற்குப்பிறகு குறிப்பாக மே 13 இனக்கலவரத்திற்குப்பிறகு மலாய் இனத்தவரை முன்னேற்றுவதற்கான புதிய சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. ஆனால் இந்த நாட்டின் முழு குடிமகனாக அங்கீகரிக்கபடுவதற்கும்,அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கும் நீல வண்ண அடையாளக்கார்டை உடையவராக இருக்கவேண்டும்.இந்தியாவில் பிறந்தவருக்கும்,அவர்களுக்குப்பிறந்த பிள்ளைகளுக்கும் சிவப்பு அடையாளக்கார்டு கொடுக்கப்பட்டு வந்தது.சிவப்பு முழுக்குடியுரிமைக்கான அடையாளம் அல்ல.அதனை நீளமாக மாற்றுவதற்கான வழிவகைகள் இடர்பாடுகள் கொண்டது.இருப்பினும் தன்னை இந்த நாட்டின் குடிமகனாகவே கருதி நாட்டின் நலனுக்காக உழைத்தவனை இந்தக்கவிதை எள்ளல் செய்கிறது.

‘மெர்டேக்கா’

என்று அடித் தொண்டையில் கத்தி

குனிந்து

தேசியக்கொடியைத்

தூக்கிப்பிடித்தேன்

ஜோப்பிலிருந்து

சிவப்பு அடையாளக்கார்டு

கீழே விழுந்து

கெக்கென்று சிரித்தது. ( இரா.ஜெக வீர பாண்டியன் )மெர்டேக்கா: விடுதலை

ஜோப்பி : சட்டைப்பை .................தொடரும்